Friday, February 28, 2014

8 வேட்பாளர்களை ஜெயலலிதா திரும்பப் பெற வேண்டும்: ராமதாஸ் பேச்சு



கடலூர் மாவட்டம் கூத்தப்பாக்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாமக மகளிர் அரசியல் எழுச்சி மாநாட்டில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில்,
கடலூர் உட்பட 10 தொகுதிகளில் பாமக தனது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. ஜெயலலிதா வன்னிய சமுதாயத்தினருக்கு எதிராக செயல்படுகிறார். இந்தநிலையில் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில் 8 பேர் வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை அறிவித்துள்ளார்.
வன்னியர்களை அறவே வெறுக்கும் ஜெயலலிதா, அறிவித்துள்ளள 8 வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த வேட்பாளர்களைத் திரும்பப் பெற வேண்டும். அதிமுக சார்பில் மாற்று சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை நிறுத்தி போட்டியிட வேண்டும் என்றார்

Monday, February 24, 2014

வேளாண் தொழில் ஊக்குவிக்கப்படவில்லை! தமிழக அரசு மீது ராமதாஸ் குற்றச்சாட்டு!



கர்நாடகமும்  ஆந்திரமும் வேளாண் துறையில் உண்மையாகவே புரட்சி செய்துவரும் நிலையில், தமிழ்நாட்டில் வேறு வகையிலான ‘புரட்சிகள்’ தான் நடத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில் வேளாண் தொழில் ஊக்குவிக்கப்படாததால், விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்து  தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்பட்டிருக்கிறது என்று ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வேளாண் விளைபொருட்களுக்கு விவசாயிகளே விலை நிர்ணயம் செய்யும் வகையில் விளை பொருட்கள் விலை நிர்ணய ஆணையம் அமைக்கப்படும் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா அறிவித்திருக்கிறார். விவசாயிகள் நலனைக் காப்பதற்கான இந்த நடவடிக்கை வரவேற்கத் தக்கது.
உழவன் சேற்றில் கால் வைத்தால் தான், மற்றவர்கள் சோற்றில் கை வைக்க முடியும். ஆனால், அனைவருக்கும் உணவளிக்கும் உழவர்களின் சமூக பொருளாதார நிலை மிகவும் மோசமாக உள்ளது. குண்டூசி தயாரிப்பவர் கூட அவரது உற்பத்திப் பொருளுக்கு அவரே விலை நிர்ணயிக்கும் நிலையில், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு மட்டும் இடைத்தரகர்களும், விவசாயத்தைப் பற்றி எதுவுமே தெரியாதவர்களும் கூட்டணி அமைத்துக் கொண்டு விலை நிர்ணயம் செய்யும் அவலநிலை நிலவுகிறது.
வேளாண் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் வேளாண்துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்திவரும் பாட்டாளி மக்கள் கட்சி, கடந்த 2008-09 ஆம் ஆண்டிலிருந்து  வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையையும் வெளியிட்டு வருகிறது.
விவசாயத்தை லாபம் தரும் தொழிலாக மாற்ற வேளாண் விளைபொருட்களுக்கு விவசாயிகளே விலை நிர்ணயம் செய்ய வசதியாக வேளாண் விலை நிர்ணய ஆணையத்தை அமைக்க வேண்டும் - உழவர் ஊதியக் குழு அமைக்க வேண்டும் - வேளாண்மை சார்ந்த திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்த தனி அமைச்சரவைக் குழு ஏற்படுத்தப்பட வேண்டும்  என்று கடந்த 12 ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வெளியிடப்படும் பொது நிழல் நிதிநிலை அறிக்கையிலும் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையிலும் நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

இந்த ஆலோசனையை தமிழக அரசு காது கொடுத்து கேட்காத நிலையில், கர்நாடக அரசு கடந்த சில ஆண்டுகளாக வேளாண்துறைக்கென தனி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வருவதுடன், தனி அமைச்சரவைக் குழுவையும் ஏற்படுத்தியிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக இப்போது வேளாண் விலைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய வேளாண் விலை நிர்ணய ஆணையத்தை அமைக்கப்படும். இதுதவிர அன்றாடம் சந்தையில் விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதற்காக புதிய விளைபொருள் சந்தைக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படும் என கர்நாடக முதல்வர் சித்தராமய்யா அறிவித்திருக்கிறார். இதற்காக கர்நாடக முதலமைச்சரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
சித்தராமய்யா அறிவித்துள்ள இந்தத் திட்டங்களால் கர்நாடக விவசாயிகளின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுவது உறுதி. ஒரு காலத்தில் ஆந்திர விவசாயிகள் தொடர்ந்து இழப்புகளையும், பாதிப்புகளையும் எதிர்கொண்டு  வந்த நிலையில், அங்கு 2004ஆம் ஆண்டில் முதலமைச்சராக பொறுப்பேற்ற இராஜசேகர ரெட்டி, ரூ.65 ஆயிரம் கோடியில் ‘ஜலயாக்னா’ என்ற திட்டத்தை செயல்படுத்தி ஒரு கோடி ஏக்கர் பரப்பளவிலான நிலங்களுக்கு பாசன வசதி செய்து தந்ததால் அங்கு விவசாயம் இலாபம் கொழிக்கும் தொழிலாக மாறிவருகிறது.
கர்நாடகமும்  ஆந்திரமும் வேளாண் துறையில் உண்மையாகவே புரட்சி செய்துவரும் நிலையில், தமிழ்நாட்டில் வேறு வகையிலான ‘புரட்சிகள்’ தான் நடத்தப்படுகின்றன.
தமிழ்நாட்டில் வேளாண் தொழில் ஊக்குவிக்கப்படாததால், விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்து  தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இனியும் இழப்புகளை தாங்க முடியாது என்பதால் பல விவசாயிகள் தங்களின் நிலத்தை வந்த விலைக்கு ரியல் எஸ்டேட்காரர்களிடம் விற்று விடுகின்றனர். இதனால், தமிழ்நாட்டில் நெல் பயிரிடப்படும் பரப்பு 2000 ஆவது ஆண்டில் இருந்ததைவிட குறுவை பருவத்தில் 6.6 விழுக்காடும், சம்பா பருவத்தில் 15 விழுக்காடும் குறைந்து விட்டது. மேலும்  தமிழகத்தின் வேளாண்துறை வளர்ச்சி கடந்த 2012&13 ஆம் ஆண்டில் -12 (மைனஸ் 12)  விழுக்காடாக குறைந்து விட்டது. இதற்கெல்லாம் அடிப்படை காரணம் வேளாண்மையில் இலாபம் கிடைக்காதது தான்.
எனவே, இனியாவது தமிழ்நாட்டில் விவசாயத்தை இலாபம் தரும் தொழிலாக மாற்ற, கர்நாடக அரசை பின்பற்றி வேளாண் விளைபொருட்களுக்கு உழவர்களே விலை நிர்ணயம் செய்யும் வகையில் அவர்களை உறுப்பினராகக் கொண்ட ஆணையத்தை அமைக்க வேண்டும்; சந்தைகளில் இடைத்தரகர்களுக்கு பதில் விவசாயிகள் கூட்டணி அமைத்துக் கொண்டு தங்களின் விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் நிலை ஏற்படுத்தப்பட வேண்டும். மேலும், விவசாயத்திற்கு தனி நிதிநிலை அறிக்கை வெளியிடுவதுடன்,  முதலமைச்சர் தலைமையில் தனி அமைச்சரவைக் குழுவையும் ஏற்படுத்த வேண்டும்.

ஆசிரியர் தகுதி தேர்வில் உடனடியாக இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்: ராமதாஸ்



பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையிலான ஆசிரியர் நியமன முறையை 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழக அரசு இரத்து செய்தது. அதற்கு மாற்றாக இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித் தேர்வு அடிப்படையிலும், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் போட்டித் தேர்வு அடிப்படையிலும் நியமிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்தது.
ஆசிரியர் நியமனத்தில் புதிய நடைமுறையை தமிழக அரசு அறிவித்ததுமே அதற்கு நான் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தேன். இந்த புதிய முறை ஊழலுக்கும், முறைகேட்டுக்கும் தான் வழிவகுக்கும் என்று நான் அப்போதே கூறியிருந்தேன். அதைப்போலவே தகுதித் தேர்வில் இட ஒதுக்கீடு மறுப்பு, போட்டித்தேர்வில் வினாத்தாள் குளறுபடிகள், ஆசிரியர்கள் நியமனத்தின்போது பொதுப்பிரிவில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வாய்ப்பு மறுப்பு என பல்வேறு குளறுபடிகள் அரங்கேறின. அதன்பின்னர், தகுதித் தேர்விலாவது இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தி, இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தனித்தனி தகுதி மதிப்பெண்களை நிர்ணயிக்கும்படி தமிழக அரசை வலியுறுத்தினேன். சமூகநீதியில் அக்கறை கொண்ட மற்ற தலைவர்களும் இந்த கோரிக்கையை ஆதரித்தனர். ஆனால், ஆசிரியர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவதை மட்டுமே சுட்டிக்காட்டி, தகுதித் தேர்வில் இட ஒதுக்கீடு வழங்கப்படாததை  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சாமர்த்தியமாக மறைத்து வந்தார். இதனால் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அரசு பள்ளி ஆசிரியராகும் வாய்ப்பை இழந்து, தனியார் பள்ளிகளில் குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர்.
தமிழக அரசின் இந்த சமூக அநீதி குறித்து அளிக்கப்பட்ட புகார்களை விசாரித்த மத்தியச் சமூகநீதி அமைச்சகம், தமிழக அரசின் இந்தக் கொள்கை தன்னிச்சையானது; நியாயமற்றது; சட்டவிரோதமானது; இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிரானது என்று கண்டனம் தெரிவித்திருக்கிறது. அதுமட்டுமின்றி, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண்களை குறைத்து நிர்ணயிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படியும் ஆணையிட்டுள்ளது.

ஆசிரியர்கள் நியமனத்தில் தமிழக அரசின் அணுகுமுறை தவறானது என சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது. ஆனால், அதன் பிறகும் தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்ளாமல்  தொடர்ந்து சமூக அநீதிக் கொள்கையை கடைபிடித்து வந்த  தமிழக அரசுக்கு தனது கண்டனத்தின் மூலம் மத்தியச் சமூகநீதி அமைச்சகம் ‘குட்டு’ வைத்துள்ளது. அண்மையில் அரசினர் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள பல்துறை உயர்சிறப்பு மருத்துவமனைக்கான மருத்துவப் பணியாளர்கள் நியமனத்தில் கூட இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தாத தமிழக அரசு, இனியாவது தனது தவறான அணுகுமுறையை மாற்றிக்கொண்டு அரசு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டை உறுதியாக கடைபிடிக்க வேண்டும்.
அதன் முதல் கட்டமாக, மத்தியச் சமூக நீதி அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி  ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் இட ஒதுக்கீட்டு விதிகளை நடைமுறைப்படுத்தி, இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண்களை குறைத்து நிர்ணயிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, ஏற்கனவே நடந்த தகுதித் தேர்வுகளுக்கும் இதே முறையை பின்பற்றி, குறைக்கப்பட்ட மதிப்பெண்களைப் பெற்றவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும். அவர்களைக் கொண்டு, கடந்த இரு ஆண்டுகளில் ஏற்பட்ட இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான பின்னடைவு காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளார்.

10 தொகுதிகளிலும் பா.ம.க. மட்டும் தனது தீவிர பிரசாரம்

சென்னை: இன்னும் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப் படாத நிலையில் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியிருக்கிறது. கட்சிகளின் தெளிவான கூட்டணி விவரங்கள் இன்னும் தெரிவிக்கப் படவில்லை. ஆனால், வேட்பாளர்களை அறிவித்த 10 தொகுதிகளிலும் பா.ம.க. மட்டும் தனது தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.தமிழகத்தில் யார் யாருடன் கூட்டணி சேருகிறார்கள் என்ற குழப்பம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், கடந்த 2 மாதத்திற்கு முன்பே 10 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த பா.ம.க தனது பிரசாரத்தையும் தீவிரப்படுத்தியுள்ளது.கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை ஒருபுறம், தேர்தல் களப்பணி மறுபுறம் என நாடாளுமன்றத் தேர்தல் பணிகளில் பரபரப்பாகச் செயல்பட்டு வருகிறது பா.ம.க..

வேட்பாளர்கள் விவரம்... அதன்படி, சேலம்- ஆர்.அருள், ஆரணி - ஏ.கே.மூர்த்தி, கிருஷ்ணகிரி - ஜி.கே.மணி, கடலூர் - டாக்டர் கோவிந்தசாமி, அரக்கோணம் - ஆர்.வேலு, மயிலாடுமுறை - அகோரம், திருவண்ணாமலை - எதிரொலிமாறன், சிதம்பரம் - கோபி, விழுப்புரம் - வடிவேல் ராவணன், பாண்டிச்சேரி - அனந்தராமன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தீவிர பிரச்சாரம்... பா.ம.க வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்கள் தங்களது தொகுதியில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வேட்பாளர்களுக்கு ஆதரவாக பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சரான டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரும் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

விஷன்-2023 : 2 ஆண்டுகளில் தமிழக அரசு சாதித்தது என்ன? ராமதாஸ் கேள்வி!



பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023-ன் இரண்டாவது பகுதியை சென்னையில் ஆடம்பர விழா நடத்தி முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டிருக்கிறார். அத்துடன், தமிழ்நாடு தொழில்கொள்கை, ஆட்டோ மொபைல் மற்றும் உதிரிபாகங்கள் கொள்கை, உயிரி தொழில்நுட்பக் கொள்கை ஆகியவற்றையும் வெளியிட்டதுடன் ரூ. 5081 கோடி முதலீட்டுக்கான 16 ஒப்பந்தங்களையும் கையெழுத்திடச் செய்துள்ளார்.
தொலைநோக்குத் திட்டத்தின் இரண்டாவது பகுதியில் மின்சாரம், போக்குவரத்து, வேளாண்மை  உள்ளிட்ட 6 துறைகளில் 217 உட்கட்டமைப்பு திட்டங்களை ரூ.15 லட்சம் கோடியில் செயல்படுத்துவது குறித்து விளக்கப்பட்டிருக்கிறது. இவற்றின் மூலம் தொழில்துறையில் தமிழகம் சிறந்து விளங்குவதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முதலமைச்சர் ஜெயலலிதா முயன்றிருக்கிறார். வரும் மக்களவைத் தேர்தலில், மக்களை ஏமாற்றி வாக்குகளை வாங்குவதற்காக நடத்தப்படும் இந்நாடகம் வெற்றி பெறாது. முதலமைச்சர் வெளியிட்ட தொலைநோக்குத் திட்டத்தின் இரு பகுதிகளையும் நான் முழுமையாக படித்தேன்; பொருளாதார வல்லுனர்களிடமும் இதுபற்றி ஆலோசனை நடத்தினேன். தொலைநோக்குத் திட்ட அறிக்கை வெறும் வாய்ப்பந்தல் தானே ஒழிய அதனால் யாருக்கும் எந்த பயனும் ஏற்படாது என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது. இலக்குகள் பெரிதாக நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், அவற்றை எட்டுவதற்கு சாத்தியமான செயல் திட்டங்களோ, திறனோ இந்த அரசிடம் இல்லை என்பதே உண்மை.
2011-ஆம் ஆண்டில் ஆட்சிப்பொறுப்பேற்ற ஜெயலலிதா 22.03.2012 ஆம் தேதி தொலைநோக்குத் திட்டம் 2023&ன் முதல் பகுதியை வெளியிட்டார். அந்த ஆவணம் வெளியிடப்பட்டு இரு ஆண்டுகள் நிறைவடையவிருக்கும் நிலையில், அதன் இலக்குகளை எட்டுவதில் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்பட்டதாக தெரியவில்லை. 2023 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் ரூ. 4.5 லட்சமாக உயர்த்தப்படும் என அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த இலக்கை எட்டவேண்டுமானால், தனிநபர் வருமானம் ஆண்டுக்கு 15% வீதமும், பொருளாதார உற்பத்தி 11% வீதமும் வளர்ச்சியடைய வேண்டும். ஆனால், கடந்த 2000 ஆவது ஆண்டுகளின் தொடக்கத்தில் 17 முதல் 20% ஆக இருந்த தனிநபர் வருமானம் தற்போது 11% ஆகவும், 12% ஆக இருந்த பொருளாதார வளர்ச்சி தற்போது 4.2% ஆகவும் குறைந்துவிட்டது. பொருளாதாரம் மற்றும் தனிநபர் வருமான வளர்ச்சிக்கு வகை செய்ய வேண்டிய முதலமைச்சர் ஜெயலலிதா, அதன் வீழ்ச்சிக்கு வகை செய்துவிட்டு, தொலைநோக்குத் திட்ட இலக்குகளை எப்படி எட்டப் போகிறார் என்பது தெரியவில்லை.
2023 ஆம் ஆண்டிற்குள் தமிழகத்தில் வறுமை ஒழிக்கப்பட்டுவிடும் என்று முதலமைச்சர் வாக்குறுதி அளித்திருக்கிறார். அனைவருக்கும் உணவு, உடை, இருப்பிடம் , படித்தவர்களுக்கு திறமைக்கேற்ற ஊதியத்துடன் வேலை ஆகியவை உறுதி செய்யப்படும்போது தான் வறுமை ஒழிந்ததாக கருதப்படும் என்று தொலைநோக்குத் திட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அரசு சார்பில் பொங்கல் சமைப்பதற்காக அரிசி, சர்க்கரையுடன் ரூ.100 பணமும், உடுத்துவதற்காக வேட்டி - சேலையும் இலவசமாக கொடுத்தால் தான் பொங்கல் திருநாளை கொண்டாட முடியும் என்ற நிலைக்கு 92% குடும்பங்களை தள்ளிவிட்ட திராவிடக் கட்சிகளின் அரசுகள் வறுமையை ஒழிக்கப்போவதாக கூறுவது விந்தையாக இருக்கிறது.
தொலைநோக்குத் திட்டத்தால் வேலைவாய்ப்பு பெருகும் என்றும், கடந்த 33 மாதங்களில் 77 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்பட்டிருப்பதாகவும் முதல்வர் கூறியிருக்கிறார். உண்மையில், இதேகாலத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் வேலை கேட்டு பதிவு செய்திருப்போரின் எண்ணிக்கை  68.05 லட்சத்திலிருந்து 84.38 லட்சமாக அதிகரித்திருக்கிறது. அதாவது வேலை தேடுபவர்களின் எண்ணிக்கை இப்போதைய அ.தி.மு.க. ஆட்சியில் மட்டும் 16.33 லட்சம் அதிகரித்திருக்கிறது.
அனைவருக்கும் வீடு கிடைப்பதை உறுதி செய்ய 25 லட்சம் வீடுகள் கட்டுப்படியாகும் விலையில் கட்டப்பட வேண்டும் எனக் கூறப்பட்டிருகிறது. ஆனால், கடந்த இரு ஆண்டுகளாக நகர்ப்புறங்களில் ஒருவீடு கூட கட்டப்படவில்லை. ஆட்சிக்கு வந்த புதிதில் அறிவிக்கப்பட்ட திருமழிசை துணைநகரத் திட்டத்தைக் கூட இன்னும் நிறைவேற்ற முடியவில்லை. தொழில் வளர்ச்சியைப் பெருக்குவதற்காக 2000 கி.மீ தொலைவுக்கு 6 முதல் 8 வழிச் சாலையும், 5000 கி.மீ 4 வழிச் சாலையும் அமைக்கப்பட வேண்டும். இதற்கான எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளாத தமிழக அரசு, மத்திய அரசின் மூலம் மேற்கொள்ளப்படவிருந்த மதுரவாயல் பறக்கும் பாலத்திற்கும், ரூ. 10,000 கோடி மதிப்புள்ள நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டு வளர்ச்சிக்கு தடை போட்டுக்கொண்டிருக்கிறது.
அடுத்த 10 ஆண்டுகளில் 20 ஆயிரம் மெகாவாட் அனல் மின்சாரம், 10,000 மெகாவாட் மரபு சாரா மின்சாரம், 5000 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும். ஆனால், ஒரு புதிய மின்திட்டத்தைக் கூட உருவாக்காத தமிழக அரசு, ஏற்கனவே உருவாக்கப்பட்ட 12,000 மெகாவாட் திறன் கொண்ட மின்திட்டங்களை செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மழைக் காலத்தில் கூட மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும்  அவல நிலை தான் தமிழகத்தில் நிலவுகிறது.
இப்படிப்பட்ட சூழலில் வேளாண்துறை கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ஒரு லட்சத்து 21 ஆயிரம் கோடி உள்பட மொத்தம் 15 லட்சம் கோடி முதலீட்டை தமிழகத்திற்கு கொண்டுவரப்போவதாக எந்த நம்பிக்கையில் முதலமைச்சர் கூறுகிறார் என்று தெரியவில்லை. ஒரு மாநிலத்திற்கு தொழில் முதலீடுகள் அதிக அளவில் வர வேண்டுமானால், அங்கு தடையற்ற மின்சாரம், நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், ரயில் பாதைகள், விமான நிலையங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் மிகவும் அவசியமாகும். ஆனால், இவை எதையும் மேம்படுத்தாததால் தான் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர்கள் ரூ.12,000 கோடியை கர்நாடகத்தில் முதலீடு செய்திருக்கிறார்கள். கடந்த 2012 ஆம் ஆண்டில் ரூ.26,625 கோடியில் 26 திட்டங்களைத் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதாக முதல்வர் கூறியுள்ளார். ஆனால், அவற்றில் ஒரு திட்டத்திற்கான பணி கூட இன்னும் தொடங்கவில்லை. முந்தைய தி.மு.க. ஆட்சியில் ரூ. 46,091 கோடியில் 25 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. இந்தத் திட்டங்களின் மூலம் மொத்தம் 2.5 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என்று கூறப்பட்டது.  ஆனால், அதில் பத்தில் ஒரு பங்கு பேருக்காவது வேலை கிடைத்திருக்குமா? என்பது ஐயம் தான்.
தொலைநோக்குத் திட்ட இலக்குகளை எட்டுவதற்கான திசையில் தமிழகம் சரியாக பயணிக்கிறது என்றால் 2014-15 ஆம் நிதியாண்டிற்குள் பல்வேறு உட்கட்டமைப்புத் திட்டங்களில் ரூ. 2 லட்சத்து 13 ஆயிரத்து 258 கோடி முதலீடு செய்திருக்க வேண்டும். ஆனால், அதில் நான்கில் ஒரு பங்காவது முதலீடு செய்யப்பட்டிருக்குமா? என்பது ஐயம் தான்.

வளர்ச்சி இலக்குகளை நிர்ணயிப்பது பெரிய சாதனையல்ல. ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதை உணர்ந்து  நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை எட்டுவதற்கான குறைந்தபட்ச முயற்சிகளையாவது அரசு மேற்கொள்ள வேண்டும். ஆனால், அப்படி எந்த முயற்சியையும் இந்த அரசு மேற்கொள்ளவில்லை. மாறாக வீண் விளம்பரங்களை செய்து மக்களை ஏமாற்றப்பார்க்கிறது. தொலைநோக்குத் திட்டம் 2023-ன் இலக்குகளை எட்ட இதுவரை என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது குறித்த வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும்.
இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Sunday, February 23, 2014

7 பேர் விடுதலை விவகாரத்தில் ஜெயலலிதா நாடகமாடுகிறார்: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு



மயிலாடுதுறையில் நடந்த பாமக இளைஞர் அணி எழுச்சி மாநாட்டில் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில்,
தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் தொழில் வளர்ச்சி மற்றும் வேளாண் வளர்ச்சி பெரிதும் குறைந்துள்ளது. தமிழகம் பின்தங்கிவிட்டது. தொழில் வளர்ச்சி 1.3 சதவீதமாகவும், வேளாண் வளர்ச்சி 0.12 சதவீதமாகவும் குறைந்துள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா நாடகமாடுகிறார்.

பண்ருட்டியில் 2 முந்திரிக்கொட்டைகள், இரண்டும் அதிமுகவில்: அன்புமணி ராமதாஸ்

சென்னை: பண்ருட்டியில் 2 முந்திரிக்கொட்டைகள் இருக்கிறது. இரண்டுமே அதிமுகவில் சரணடைந்துவிட்டன என்று பாமக இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.பாமகவின் இளைஞர்கள் எழுச்சி மாநாடு கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நேற்று இரவு நடைபேற்றது. கடலூர் நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளரான டாக்டர் கோவிந்தசாமி தலைமையில் நடந்த மாநாட்டில் பாமக இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார்.அப்போது அவர் கூறுகையில்,
முந்திரிக் கொட்டைகள் சாதாரணமாக பழத்திற்குள் தான் கொட்டைகள் இருக்கும். ஆனால் முந்திரியில் மட்டும் பழத்திற்கு வெளியே கொட்டைகள் இருக்கும். பண்ருட்டியில் 2 முந்திரிக் கொட்டைகள் உள்ளன. அந்த 2 முந்திரிக் கொட்டைகளும் அதிமுகவிடம் சரணடைந்துள்ளன.

முதல்வர் முதல்வர் மாவாட்டம் தோறும் சென்று மக்களின் பிரச்சனைகளை கேட்டு தீர்க்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் அப்படியா நடக்கிறது? 4 அதிகாரிகள் தான் தமிழகத்தை நிர்வகித்து வருகின்றனர்.
திமுக, அதிமுக மக்கள் திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளை வெறுக்கிறார்கள். இந்த கட்சிகளுக்கு மாறாக அவர்கள் பாமகவை விரும்புகிறார்கள். ஏனென்றால் வித்தியாசமான கொள்கைகளைக் கொண்ட கட்சி பாமக

2 திராவிட கட்சிகளும் தமிழகத்திற்கு துரோகம் செய்தவை. திமுகவின் பெரிய கூட்டணி தலைவர் திருமாவளவன். கருணாநிதியின் நேரம் இப்படி இருக்கிறது.
பாமக ஒன்றும் தலித்களுக்கு எதிரி கிடையாது. ஆனால் தலித் என்ற போர்வையில் ஒரு கும்பல் பெண்களை கடத்தி வைத்து கட்டப்பஞ்சாயத்து செய்கிறது. காதல் நாடகத்தால் இந்த கடலூர் மாவட்டம் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.
ராஜீவ் கொலையாளிகள் ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுதலை செய்யும் அறிவிப்பு வெறும் அரசியல் நாடகம் ஆகும். உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள தந்தையை பார்க்க பரோல் கேட்ட நளினிக்கு அனுமதி மறுத்த தமிழக அரசு தற்போது 7 பேரை விடுவிப்பதாக அறிவித்துள்ளது.
ராஜீவ் கொலையாளிகளை வைத்து திமுகவும் சரி, அதிமுகவும் சரி அரசியல் செய்கின்றது. நாங்கள் தான் இலங்கை பிரச்சனையில் அரசியல் செய்யவில்லை. இதை எல்லாம் நினைத்து நமது வேட்பாளர் கோவிந்தசாமியை 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள் என்றார் அன்புமணி.

Tuesday, February 18, 2014

ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கே இந்த கதியா?”-பா.ம.க நிறுவனர் ராமதாஸ்

சென்னை: ஐ.ஏ.எஸ். அதிகாரியை தாக்கிய போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.இதுபற்றி பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"சென்னை நுங்கம்பக்கத்தில் உள்ள பீடா கடை அருகில் சனிக்கிழமை இரவு நின்று கொண்டிருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி தர்மேந்திர பிரதாப் யாதவுடன் காவல்துறையினர் மோதலில் ஈடுபட்டதாகவும், ஒருகட்டத்தில் அவரது சட்டைக் காலரை பிடித்து தள்ளியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்ததால், அவரிடம் இருந்த செல்போனை பறித்த காவலர்கள், முகத்தில் சரமாரியாக தாக்கியதாகவும், அவரை ஒரு குற்றவாளி போல இழுத்துச் சென்று காவல் வாகனத்தில் ஏற்றியதாகவும் பத்திரிகைகளில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.காவல் நிலையத்திலும் அவரை மிகக்கேவலமான முறையில் நடத்தியுள்ளனர். அவர் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று அவரது நண்பர் கூறிய போதிலும் அதை காவலர்கள் பொருட்படுத்தவில்லை எனக்கூறப்படுகிறது. பின்னர் இன்னொரு ஐ.ஏ.எஸ் அதிகாரி வந்து நிலைமையை விளக்கிய பிறகே தர்மேந்திர பிரதாப்பை காவல்துறையினர் விடுதலை செய்துள்ளனர்.காவலர்கள் தாக்கியதில் தர்மேந்திர பிரதாப்பின் உதடு கிழிந்து ரத்தம் கொட்டியுள்ளது. கைகளிலும் காயம் ஏற்பட்டிருக்கிறது. இதற்காக அந்த அதிகாரி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருக்கிறார்.தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கே பாதுகாப்பில்லாத நிலை நிலவுவதைத் தான் இந்த சம்பவம் காட்டுகிறது. எவர் ஒருவரையும் தண்டிக்கும் அதிகாரம் காவல்துறைக்கு வழங்கப்படவில்லை; விசாரிக்கும் அதிகாரம் மட்டுமே அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.அவ்வாறு இருக்கும்போது தர்மேந்திர பிரதாப் யாதவ் ஐ.ஏ.எஸ் அதிகாரி எனத் தெரிந்தும் அவரை காவல்துறையினர் கேவலமாக நடத்தி தாக்கியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. மக்களிடம் மரியாதை கிடைக்கும் வகையில் காவல்துறையினர் நடந்து கொள்ளவேண்டுமே தவிர, பயம் வரும் வகையில் நடக்கக்கூடாது.பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்வது எப்படி? என்பதை காவலர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி தர்மேந்திர பிரதாப் யாதவை காவல்துறையினர் தாக்கியதாக கூறப்படுவது குறித்து முறையான விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்"என்று கூறியுள்ளார்.

Sunday, February 16, 2014

ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் : ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:2009ம் ஆண்டு, ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை சர்வதேச நாடுகளுடன் இணைந்து இந்தியா தோற்கடித்தது. பின்னர் 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் இதே போன்ற தீர்மானங்களை அமெரிக்கா கொண்டு வந்த போது, அதை நீர்த்து போகச் செய்தது. இந்நிலையில் அமெரிக்கா இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை வரும் மார்ச் 3ம் தேதி முதல் 28ம் தேதி வரை ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா.மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில்  கொண்டுவர உள்ளது. இந்த தீர்மானத்தை தோற்கடிக்கும் முயற்சியில் சீனா, ஜப்பான், பாகிஸ்தான், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் ஈடுபட உள்ளதாக கூறி வருகின்றன.

எனவே  இலங்கையில் நடந்த போர்குற்றத்திற்கு எதிராக ஐநாவில் சர்வதேச விசாரணை நடத்த கோரி இந்தியா தனியாகவோ அல்லது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளோடு இணைந்தோ தீர்மானம் கொண்டு வர வேண்டும். இலங்கையில் நடந்தது இனப்படுகொலை தான் என்று மத்திய அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து  கட்சிகளின் தலைவர்களும் ஒரே குழுவாக டெல்லி சென்று பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து இக்கோரிக்கைகளை வலியுறுத்த முன்வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Saturday, February 15, 2014

சாலைகள் பராமரிப்பை தனியாரிடம் விடும் திட்டத்தை கைவிட வேண்டும் : ராமதாஸ்





பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மக்கள் நலனை பாதுகாப்பதில் போட்டி போடாத மத்திய, மாநில அரசுகள், அரசின் சொத்துக்களைத் தனியாருக்கு தாரை வார்ப்பதில் மட்டும் போட்டி போடுகின்றன. தேசிய நெடுஞ்சாலைகளை தனியார் மயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில், அதற்கு போட்டியாக தமிழகத்தில் உள்ள மாநில, மாவட்ட சாலைகளின் பராமரிப்பை தனியாரிடம் வழங்க மாநில அரசு தீர்மானித்திருக்கிறது.

தமிழகத்தில் உள்ள மாநில மற்றும் மாவட்ட நெடுஞ்சாலைகளை சர்வதேச தரத்திற்கு உயர்த்த ஆசிய வளர்ச்சி வங்கி மிகப்பெரிய அளவில் கடன் வழங்குகிறது. இந்தத் தொகையைக் கொண்டு  சாலைகளை மேம்படுத்தும் திட்டத்தை  தமிழக அரசே செயல்படுத்தினால் சாலைகள் தரமாக இருக்கும்; அதற்கான செலவும் குறைவாக இருக்கும். ஆனால், மக்களின் நலனை விட தனியார் நிறுவனங்களின் நலனில் அதிக அக்கறை கொண்ட திராவிடக் கட்சிகளின் அரசுகள், சாலைகளை மேம்படுத்தி, பராமரிக்கும் பணியை தனியாரிடம் ஒப்படைக்கத் துடிக்கின்றன. சாலைப் பராமரிப்பை தனியார் மயமாக்குவதற்கான விதை கடந்த தி.மு.க. ஆட்சியில் தான் ஊன்றப்பட்டது. அப்போதே இத்திட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், அதையும் மீறி சில சாலைகளின் பராமரிப்புப் பணிகள் மட்டும் சோதனை அடிப்படையில் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டன. அவ்வாறு ஒப்படைக்கப்பட்ட எந்த சாலையிலும் பராமரிப்பு பணி சரிவர மேற்கொள்ளப்படாததால் அவை மோசமான நிலையில் உள்ளன.

அதன் பின்னர் 2011 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. அரசு பொள்ளாச்சி மண்டலத்தில் உள்ள 400 கி.மீ நீளமுள்ள சாலைகளை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 10,000 கி.மீ. நீளமுள்ள மாநில மற்றும் மாவட்ட சாலைகளின் மேம்பாட்டு மற்றும் பராமரிப்பு பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க திட்டமிட்டு, அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. தற்போது மாநில நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகள் தனியார் மயமாக்கப்பட்டால், மாநில சாலை பராமரிப்பில் மிக மோசமான விளைவுகள் ஏற்படும்.

சாலைகளின் பராமரிப்பு தனியாரிடம் விடப்பட்டால் ஏற்கனவே அந்தப் பணியை செய்து வரும் மாநில நெடுஞ்சாலைத்துறை செயலிழந்துவிடும்; அதில் பணியாற்றும் அதிகாரிகளும், பணியாளர்களும் வேலை இழப்பார்கள். சாலைப் பராமரிப்புப் பணியில் ஈடுபடும் தனியார் நிறுவனங்களுக்கு பொறுப்புடைமை இல்லை என்பதால் அவர்கள் சாலைகளை சரியாக பராமரிப்பார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை. இதுவரை சிறிய அளவில் ஒப்பந்தக்காரர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்த பராமரிப்பு பணிகள் இனி ஒரே நிறுவனத்திடம் ஒட்டுமொத்தமாக வழங்கப்படுவதால் ஊழல் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இதற்கெல்லாம் மேலாக, சாலை பராமரிப்பிற்கான தொகையை ஒரு குறிப்பிட்ட கால கட்டத்திற்கு மட்டுமே தமிழக அரசு வழங்கும். அதன்பின்னர், அந்தப் பணியை தனியார் நிறுவனங்களே மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால், அவர்கள் சாதாரண சாலைகளில் கூட சுங்கச் சாவடி அமைத்து சாலைகளை பயன்படுத்துவோரிடம் கட்டணம் வசூலிக்கும் ஆபத்து உள்ளது. மராட்டியத்தில் நெடுஞ்சாலைகள் தனியார் மயமாக்கப்பட்டதை எதிர்த்து நடந்த போராட்டங்களில் பெருமளவில் வன்முறை வெடித்தது அனைவரும் அறிந்த ஒன்று தான். தமிழகத்தில் மாவட்ட சாலைகளும் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டால் தமிழகத்திலும் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

தமிழக நெடுஞ்சாலைத் துறை அனுபவம் மிக்கதாகும். பாம்பன் பாலம் உள்ளிட்ட கட்டுமானக் கலையின் அடையாளங்களாக திகழும் பல்வேறு முக்கியப்  பாலங்கலையும், சாலைகலையும் அமைத்தது மாநில நெடுஞ்சாலைத்துறை தான். இதையெல்லாம் கருத்தில் கொண்டு, மாநில, மாவட்ட சாலைகளை பராமரிக்கும் பணியை தனியாருக்கு தாரை வார்க்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Thursday, February 13, 2014

கம்பம் பள்ளத்தாக்கு நெற்பயிரை காக்க உடனே தண்ணீர் திறக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்



பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுவது கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி திடீரென நிறுத்தப்பட்டு விட்டதால், கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14 ,000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள இரண்டாம் போக நெற்பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன.
கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில்  கம்பம் சின்ன வாய்க்கால், வைரவன் வாய்க்கால், உத்தமுத்துக் கால்வாய் ஆகிய மூன்று கால்வாய்கள் மூலம் பாசன வசதி பெறும் பகுதிகளில் நெற்பயிர்கள் கதிர் முற்றி அறுவடை செய்யும் நிலையில் உள்ளது. மற்ற 14 கால்வாய்களின் பாசன பகுதிகளில் 35 முதல் 55 நாட்கள் ஆன நிலையில் நெற்பயிர்கள் உள்ளன. இத்தகைய நிலையில் 17 கால்வாய்களிலும் தண்ணீர் திறந்துவிடுவது நிறுத்தப்பட்டதால் விவசாயிகள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.
அனைத்துக் கால்வாய்களிலும் உடனடியாக தண்ணீர் திறந்துவிடப்படவில்லை என்றால் கதிர் முற்றும் நிலையில் உள்ள பயிர்களில் நெல்லுக்கு பதில் பதர் தான் கிடைக்கும். இளம் நிலையில் உள்ள நெற்பயிர்கள் கருகிவிடும் ஆபத்து உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு கடுமையான இழப்பு ஏற்படும். கம்பம் சின்ன வாய்க்கால், வைரவன் வாய்க்கால், உத்தமுத்துக் கால்வாய் ஆகிய மூன்று கால்வாய்களிலும் ஒரு பாய்ச்சலுக்கு தண்ணீர் திறந்து விட்டால் கதிர் முற்றும் நிலையில் உள்ள பயிர்கள் முழுவதையும் காப்பாற்றிவிட முடியும். மற்ற பயிர்களுக்கு இன்னும் சில நாட்கள் கூடுதலாக தண்ணீர் திறந்துவிடப்படும் பட்சத்தில் அவற்றையும் முழுமையாக காப்பாற்றிவிட முடியும்.
ஆனால், பெரியாறு அணையில் உள்ள நீர் குடிநீர் தேவைக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என்றும், பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட முடியாது என்றும் மறுத்து விட்டனர். இக்கோரிக்கையை முன்வைத்து கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பல்வேறு போராட்டங்களை நடத்தியும் பயனில்லை. உழவர்களின் கோரிக்கையை ஏற்று  கால்வாய்களில் தண்ணீர் திறந்துவிட வேண்டிய தமிழக அரசு, போராட்டம் நடத்திய 115 விவசாயிகளை கைது செய்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்திருக்கிறது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்த நிலை ஏற்பட்டதற்கு அதிகாரிகள் தான் காரணமே தவிர விவசாயிகள் காரணம் அல்ல. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் மிகவும் குறைவாக இருப்பதை  அறிந்த விவசாயிகள் ஆற்றிலும், கால்வாய்களிலும் திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவைக் குறைத்து, அதிக நாட்களுக்கு தண்ணீர் வழங்கும்படி கடந்த திசம்பர் மாதமே பொதுப்பணித்துறை அதிகாரிகளை வலியுறுத்தினர். ஆனால் அப்போது கட்டுப்பாடில்லாமல் தண்ணீரை திறந்துவிட்டு நீர்மட்டத்தை குறைத்த அதிகாரிகள், இப்போது அதையே காரணம் காட்டி தண்ணீர் திறக்க மறுப்பது சிறிதும் நியாயமற்றது.

முல்லைப் பெரியார் அணையில் தற்போது 110.80 அடி தண்ணீர் உள்ளது. அணையின் நீர்மட்டம் குறைந்தால் கூட பம்ப் செட் மூலம் தண்ணீரை எடுத்து வினியோகிக்க முடியும். அதுமட்டுமின்றி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்படுவதால், பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டாலும், அதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் சமாளித்துவிட முடியும்.
எனவே, கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களை பாதுகாக்கத் தேவையான தண்ணீரை  அரசு உடனடியாக திறந்துவிடவேண்டும். தண்ணீர் கேட்டு போராடியதற்காக 115 விவசாயிகள் மீது தொடரப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

Wednesday, February 12, 2014

இடைக்கால ரயில்வே பட்ஜெட்: தமிழகத்திற்கு பெருத்த ஏமாற்றம்: ராமதாஸ் குற்றச்சாட்டு



பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2014-15 ஆம் ஆண்டிற்கான இடைக்கால ரயில்வே நிதிநிலை அறிக்கையில் தமிழகம் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் நலனுக்காக நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வரும் பல கோரிக்கைகள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை.
இடைக்கால நிதிநிலை அறிக்கையில் மொத்தம் 65 புதிய தொடர்வண்டிகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இவற்றில் 9 தொடர்வண்டிகள் மட்டுமே தமிழகத்திற்கு கிடைத்துள்ளன. 100 கி.மீ தொலைவுக்கும் குறைவாக இயக்கப்படும் மயிலாடுதுறை & மன்னார்குடி, திருச்செந்தூர் & திருநெல்வேலி ஆகிய பயணியர் வண்டிகளை தவிர்த்துப் பார்த்தால் தமிழ்நாட்டிற்கு கிடைத்துள்ள தொடர்வண்டிகளின் எண்ணிக்கை வெறும்  7 மட்டுமே. இவற்றில்  முழுக்க முழுக்க தமிழக மக்களுக்கு பயனளிக்கும் வகையில்,

தமிழகத்திற்குள்ளேயே இயங்கும் வகையில் ஒரு ரயில் கூட அறிவிக்கப்பட வில்லை. கடந்த ஆண்டு  மொத்தம் 14 ரயில்கள் கிடைத்த நிலையில் இப்போது தமிழகத்திற்கு  துரோகம் இழைக்கப்பட்டிருக்கிறது.
அதுமட்டுமின்றி தமிழகத்திற்கு புதிய ரயில் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் தஞ்சாவூர்&அரியலூர் பாதை, சென்னை & மாமல்லபுரம் & புதுச்சேரி & கடலூர் கிழக்கு கடற்கரை ரயில் பாதை ஆகியவற்றுக்கான சாத்தியக்கூறு ஆய்வுகள் வெற்றிகரமாக முடிவடைந்து, தொடக்ககட்ட பணிகளுக்காக கடந்த ஆண்டு நிதி ஒதுக்கப்பட்ட போதிலும், அவற்றை செயல்படுத்துவது குறித்து இந்த நிதிநிலை அறிக்கையில் எந்த அறிவிப்பும் இடம் பெறாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.
கடந்த ஆண்டில் ஜனவரி, அக்டோபர் ஆகிய மாதங்களில் இரண்டு முறை மின்கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், இப்போது பயணிகள் மற்றும் சரக்கு கட்டணம் உயர்த்தப்படாததில் வியப்பேதும் இல்லை. ஆனால், தன்னாட்சி அதிகாரத்துடன் கூடிய ரயில் கட்டண நிர்ணய ஆணையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால், டீசல் விலை உயர்வைக் காரணம் காட்டி எந்த நேரமும் ரயில் கட்டணம் உயர்த்தப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.

பிரீமியம் ரயில்கள் என்ற பெயரில் 17 புதிய ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது கொல்லைப்புற வழியாக ரயில்கட்டணத்தை உயர்த்தும் செயல் ஆகும். இந்த வகை ரயில்களில் பயண தேதிக்கு சில நாட்கள் முன்பாக முன்பதிவு தொடங்கும். அதேநேரத்தில் வழக்கமான கட்டணத்தைவிட அதிக கட்டணம் வசூலிக்கப்படும். கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக தில்லி & மும்பை மார்க்கத்தில் இயக்கப்பட்ட பிரிமியம் ரயில்களில் மூன்றடுக்கு ஏ.சி. வகுப்பு பயணச் சீட்டுக் கட்டணம் ரூ.12,000 வரையும், இரண்டடுக்கு  ஏ.சி. வகுப்பு பயணச் சீட்டுக் கட்டணம் ரூ.17,000 வரையும் உயர்த்தி விற்கப்பட்டதிலிருந்தே பிரிமியம் ரயில்கள் ஏழைகளுக்கு எட்டாதவையாக இருக்கும் என்பதை உணர முடியும். கடைசி நேரத்தில் பயணம் செய்ய திட்டமிடுபவர்களின் நலனுக்காகவும், வழக்கமான ரயில்களில் இடம் கிடைக்காதவர்களின் நலனுக்காகவும் இந்த ரயில்கள் இயக்கப்படுவதாக கூறப்படுவதை ஏற்க முடியாது. பயணிகளின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் அதிக ரயில்களை இயக்க வேண்டியது ரயில்வேத் துறையின் கடமையாகும். மாறாக, பயணிகள் நெரிசலை பயன்படுத்தி கட்டணத்தை உயர்த்துவது பச்சையான வணிக நோக்கம் கொண்ட செயலாகவே பார்க்கப்படும். எனவே, பிரிமியம் ரயில்களாக அறிவிக்கப்பட்டவற்றை சாதாரண கட்டண ரயில்களாக மாற்றியமைக்க வேண்டும்.
தமிழகத்திற்கான ரயில்வே திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கப்படாததால், அவை பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளன. ரயில்வே அமைச்சர்களாக லாலு பிரசாத் யாதவும்,பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த அரங்க.வேலுவும் இருந்த போது ரயில்வேத் துறையிடம் ஒரு லட்சம் கோடி ரூபாய் உபரி நிதி இருந்தது. ஆனால், இப்போது திட்டங்களுக்கு ஒதுக்குவதற்கு கூட நிதி இல்லாத நிலை ஏற்படுத்தப் பட்டிருப்பது தான் கடந்த 5 ஆண்டுகளில் ரயில்வே அமைச்சகம் படைத்துள்ள சாதனையாகும்.
அதேநேரத்தில் ரயில்வே நிதிநிலை அறிக்கையில் வரவேற்கப்பட வேண்டிய சில அம்சங்களும் உள்ளன. ஆந்திர மாநிலம் நகரி - திண்டிவனம் இடையிலான ரயில்பாதையை புதுச்சேரி வரை நீட்டிப்பதற்கான சாத்தியக் கூறு ஆய்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பதும், சேலம் & ஓமலூர் இடையே இரட்டை பாதை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பதும் வரவேற்கப்பட வேண்டியவை ஆகும். பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்காகவும், வசதிகளுக்காகவும் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பதும் பாராட்டப்பட வேண்டியவையாகும். மொத்தத்தில் கொஞ்சம் மகிழ்ச்சியும், நிறைய ஏமாற்றமும் கொண்டதாக 2014-15 ஆம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கிறது. இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார். 

Tuesday, February 11, 2014

கட்டுவது வேட்டி, உண்பது அரிசி, காப்பது கோதுமையையா?.. ப.சிதம்பரம் மீது ராமதாஸ் தாக்கு

சென்னை: அரிசி வேளாண் விளைபொருளே இல்லை என்று கூறி அதன் மீதான சேவை வரியை விதித்துள்ள மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,அரிசி, பருத்தி ஆகிய வேளாண் விளைபொருட்கள் மீது சேவை வரி விதித்து மத்திய நிதித்துறை ஆணையிட்டிருக்கிறது. அதன்படி, இனி அரிசி, பருத்தி ஆகியவை பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் கிடங்கு வாடகை, அவற்றை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கான வாடகை ஆகியவற்றின் மீது 12.36% வரி விதிக்கப்படும் என்று நேரடி வரிகள் ஆணையம் அறிவித்துள்ளது.வேளாண் விளைபொருட்கள் மிகவும் அத்தியாவசியமானவை என்பதால் அவற்றின் மீது எவ்வித வரியும் விதிக்கப்படுவதில்லை. நூற்றுக்கும் மேற்பட்ட பொருட்கள் குறித்த சேவைகளுக்கு சேவைவரி விதிக்கப்படும் போதிலும், வேளாண் பொருட்களுக்கு அதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு வந்தது.ஆனால், திடீரென கடந்த டிசம்பர் மாதம் 27 தேதி மத்திய நிதியமைச்சகம் பிறப்பித்த ஆணையில், அரிசி மற்றும் பருத்தியை வேளாண் விளைபொருட்களாக கருத முடியாது என்பதால் அவற்றின் மீதான சேவைகளுக்கு சேவை வரி விதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, இந்த வரி கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் முன் தேதியிட்டு வசூலிக்கப்பட இருக்கிறதாம்.அரிசியும், பருத்தியும் எப்படி வேளாண் விளைபொருட்கள் இல்லாமல் போகும்? என்று கேட்டால், அதற்கு அதிபுத்திசாலித்தனமான பதில் ஒன்று மத்திய அரசு சார்பில் அளிக்கப்பட்டிருக்கிறது.அதாவது, நெல்தான் வேளாண் விளைபொருள் என்றும், நெல்லில் இருந்து உமி நீக்கப்பட்ட பிறகுதான் அரிசி கிடைக்கிறது என்பதால் அதை வேளாண் விளைபொருளாக கருத முடியாது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதேபோல், பருத்தியில் இருந்து கொட்டை நீக்கப்படுகிறது என்பதால் அது வேளாண் விளைபொருள் என்ற தகுதியை இழந்துவிடுகிறது என்றும் மத்திய அரசு விளக்கமளித்திருக்கிறது.இந்த விளக்கத்தை அளித்திருப்பவர் யார் தெரியுமா? வேட்டிக் கட்டிய தமிழர் என்று போற்றப்படும் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம்தான் இந்த வேடிக்கையான பதிலைக் கூறி வெதும்ப வைத்திருக்கிறார்.இந்திய நிதிச் சட்டத்தின் 65பி (5)வது பிரிவில் வேளாண் விளைபொருள் என்வதற்கான வரையரை அளிக்கப்பட்டிருப்பதாகவும், அந்த வரையறைக்குள் அரிசி வரவில்லை என்பதால்தான் அதற்கு சேவை வரி விதிக்கப்படுவதாகவும் சிதம்பரம் தெரிவித்திருக்கிறார்.நெல்லில் இருந்து பெறப்படும் அரிசி வேளாண் விளைபொருள் இல்லை என்று ஏதாவது ஒரு சட்டம் கூறுமானால் தவறு அந்த சட்டத்தில்தான் இருக்கிறதே தவிர, அரிசியிடம் இல்லை. இத்தகைய சூழலில் சட்டத்தை திருத்துவதற்குதான் முயற்சி செய்ய வேண்டுமே தவிர, அரிசிக்கு சேவை வரி விதிக்க முயல்வது அறிவார்ந்த செயலல்ல.அதுவும் அரிசியை முதன்மை உணவு தானியமாகக் கொண்ட தமிழ்நாட்டை சேர்ந்த நிதியமைச்சர் ப.சிதம்பரமே இப்படி ஒரு பாரபட்சமான நடவடிக்கையை எடுத்திருப்பதுதான் அதிர்ச்சியளிக்கிறது.வட இந்தியர்கள் அதிகம் உண்ணும் கோதுமை மீது இப்படி ஒரு சொத்தைக் காரணத்தைக் கூறி சேவை வரி விதிக்கப்பட்டிருந்தால், அதற்குக் காரணமான மத்திய அரசு இந்நேரம் கவிழ்ந்திருக்கும். ஆனால், தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களோ அல்லது தமிழக அரசோ இதுபற்றி வாய் திறக்கவில்லை என்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.நாடாளுமன்றத்தில் தினமும் அமளி செய்யும் தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட இப்பிரச்னையை எழுப்பாதது வருத்தமளிக்கிறது.அரிசி மீது சேவை வரி விதிக்கப்பட்டால் அதன் விலை கடுமையாக உயரும். இதனால் பொதுமக்களும், அரிசி வணிகர்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இதேபோல் பருத்தி விலை உயர்வால் பஞ்சாலைகளும், நெசவாளர்களும் கடுமையாக பாதிக்கப்படுவர். எனவே, இதையெல்லாம் கருத்தில் கொண்டு அரிசி, பருத்தி மீதான சேவை வரியை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

Monday, February 10, 2014

10 தொகுதியை விட்டுத்தர முடியாது- பாமக அறிவிப்பால் பாஜகவுடன் கூட்டணி இல்லை?

சென்னை: வேட்பாளர்களை அறிவித்திருக்கும் 10 தொகுதிகளை கூட்டணியே அமைந்தாலும் விட்டுக் கொடுக்க முடியாது என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் அறிவித்திருப்பதால் பாரதிய ஜனதாவுடன் அக்கட்சி கூட்டணி அமைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.லோக்சபா தேர்தலில் திராவிடக் கட்சிகளுடனும் தேசியக் கட்சிகளுடனும் கூட்டணி இல்லை என்று பாட்டாளி மக்கள் கட்சி அறிவித்தது. பின்னர் சாதிய கட்சிகளை ஒன்றிணைத்து சமூக ஜனநாயக கூட்டணியை உருவாக்கியது.அத்துடன் அரக்கோணம், ஆரணி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, கடலூர், சிதம்பரம், விழுப்புரம், மயிலாடுதுறை மற்றும் புதுச்சேரி ஆகிய 10 லோக்சபா தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அறிவித்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறது பாமக. அதே நேரத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையவும் பேச்சுவார்த்தைகளை நடத்தியது.பாமக தொகுதிகளை கேட்கும் தேமுதிகஆனால் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி தொடர்ந்தும் நீடித்து வருகிறது. பாமக கேட்கும் 10 தொகுதிகளில் பாதியை தேமுதிகவும் கேட்பதாக கூறப்படுகிறது.15 ப்ளஸ் 2 - தேமுதிக டிமாண்ட்அத்துடன் தேமுதிக 15 தொகுதிகள், ப்ளஸ் 2 ராஜ்யசபா சீட் கேட்பதாகவும் தெரிகிறது. இந்த இழுத்தடிப்பில்தான் இன்னமும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் எது என்பது உறுதியாகமல் இருக்கிறது.10 தொகுதிகளை விட முடியாதுஇந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், ஏற்கெனவே 10 தொகுதிகளுக்கு நாங்கள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டோம். பாஜகவுடன் கூட்டணியே அமைந்தாலும் கூட இந்த 10 தொகுதியை ஒருபோதும் விட்டுத்தரமாட்டோம் என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.பாஜகவுடன் கூட்டணி இல்லை?பாமகவின் இந்த திட்டவட்ட அறிவிப்பால் அது பாஜக கூட்டணியில் இடம்பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.பாஜக-தேமுதிக- மதிமுக?பாஜக அணியில் பாமக இடம்பெறாமல் போனால் அனேகமாக தேமுதிக, பாஜக, மதிமுக இணைந்து தேர்தலை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு 7 கொலைகள், 70 வழிபறிகள் நடக்கிறது: ராமதாஸ் குற்றச்சாட்டு

பாமக சார்பில் நிழல் நிதி நிலை அறிக்கையை அக்கட்சி நிறுவனர் ராமதாஸ், 10.02.2014 திங்கள்கிழமை வெளியிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
சென்னையில் மோனோ ரயில் திட்டத்தைத் கைவிட வேண்டும். மின்திட்ட செயலாக்கத்திற்காக புதிய துறையை தமிழக அரசு உருவாக்க வேண்டும். தமிழகத்தை மின் மிகை மாநிலமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சராசரியாக தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு 7 கொலைகள், 70 வழிபறிகள் நடக்கிறது. கடந்த 3 வருடத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளது என்றார்.

எல்லா கட்சியும் கத்திரிக்காய் பயிரிடுது. விளைந்தால் கடைக்கு வந்துதானே ஆகவேண்டும்: ராமதாஸ் பேட்டி

பாமக சார்பில் 12வது நிழல் நிதி நிலை அறிக்கையை அக்கட்சி நிறுவனர் ராமதாஸ், 10.02.2014 திங்கள்கிழமை வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.
கேள்வி: தேமுதிகவையும், பாமகவையும் ஒரே கூட்டணியில் இழுக்க பாஜக முயற்சி செய்கிறது. பேச்சுவார்த்தை என்ன நிலைமையில் இருக்கிறது. தேமுதிக இருக்கும் கூட்டணியில் பாமக சேர விருப்பம் உண்டா.
பதில்: உங்களுக்கு தெரியாமல் எதுவும் நடக்கப் போவதில்லை.
 
கேள்வி: தேமுதிக இடம் பெறும் அணியில் பாமக இடம்பெறுமா? தேமுதிகவை கடுமையாக விமர்சித்திருக்கிறீர்கள். ஒரு நடிகர் பின்பு போகலாமா என்று பொதுக்கூட்டங்களில் பேசியிருக்கிறீர்கள்.
பதில்: இந்த கேள்வியை அவரிடம் கேட்டிருக்கலாமே. இந்த மாதிரி கேள்விகள் கேட்பீங்கன்னு இங்க வந்த பிறகுதான் எனக்கு தெரியுது. ஆனால் இதற்கு என்ன பதில் சொல்லுவது என்று தான் எனக்கு தெரியவே இல்லை.
கேள்வி: கூட்டணி குறித்து பூர்வாங்க பேச்சுவார்த்தை நடத்தியதாக பாஜக கூறியிருக்கிறதே அதனால்தான் கேட்கிறோம்
பதில்: கத்திரிக்காய் விளைந்தால் கடைக்கு வந்துதானே ஆகவேண்டும்.
கேள்வி: கத்திரிக்காய் பயிரிடப்பட்டுவிட்டதா?
பதில்: எல்லா கட்சியும் கத்திரிக்காய் பயிரிடுது.
இவ்வாறு பதில் அளித்தார்.

எங்களின் யோசனைகள் அற்புதமானவை என அதிகாரிகள் பாராட்டுகிறார்கள்: ஆட்சியாளர்கள் தயங்குகின்றனர்: ராமதாஸ்



பாமக சார்பில் நிழல் நிதி நிலை அறிக்கையை அக்கட்சி நிறுவனர் ராமதாஸ், 10.02.2014 திங்கள்கிழமை வெளியிட்டார்.
பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு அரசு நிறைவேற்ற வேண்டிய அடிப்படை கடமைகள் அனைத்தும் பாமக ஆட்சிக்கு வந்தால் நிறைவேறும் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஒவ்வொரு ஆண்டும் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக நாட்டின் நிதிநிலை எவ்வாறு உள்ளது என்பதை மக்களுக்கு தெரிவிப்பதற்காக பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்பட வேண்டும். அதேபோல் கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் எவை, எவை செயல்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதை விளக்குவதற்காக கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை செயலாக்கப்பட்ட விவர அறிக்கை அவையில் வைக்கப்பட வேண்டும். அத்தகைய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதால் எத்தகைய தாக்கம் ஏற்பட்டிருக்கிறது என்பதை நாட்டுக்கு தெரிவிக்க கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை திட்டங்களின் விளைவுகளும், தாக்கங்களும் அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும். மக்கள் தொகையில் சரிபாதியாக உள்ள பெண்களுக்கான சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்த பாலின நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது.
இந்த அறிக்கைகள் அனைத்தையும் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறது. தமிழகத்திலும் இந்த நடைமுறை செயல்படுத்தப்பட்டால் ஆரோக்கியமான பொருளாதார சூழலை உருவாக்க முடியும் என்று கூறி வருகிறோம். எங்களின் இந்த திட்டங்களும், யோசனைகளும் அற்புதமானவை என்று தமிழக அரசு அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் பாராட்டுகிறார்கள். ஆனால், இத்தகைய அறிக்கைகளை வெளியிட ஆட்சியாளர்கள் தயங்குகின்றனர். காரணம், திராவிட ஆட்சியாளர்கள் தாக்கல் செய்யும் நிதிநிலை அறிக்கைகளின் திட்டங்களில் பெரும்பாலானவை செயல்படுத்தப்படுவதில்லை; செயல்படுத்தப்படும் திட்டங்களால் சமுதாயத்தில் எந்த வித தாக்கமும் ஏற்படுவதில்லை. எனவே தான் இத்தகைய அறிக்கைகளை திராவிட ஆட்சியாளர்கள் தாக்கல் செய்வதில்லை. மாறாக திறன் அறிக்கை என்ற பெயரில் ஒவ்வொரு துறை சார்பிலும் பெயருக்காக ஓர் அறிக்கையை தாக்கல் செய்கிறார்கள். பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர் இந்த அறிக்கைகள் அனைத்தும் வெளியிடப்படும் என உறுதியளிக்கிறோம் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

Sunday, February 9, 2014

மதுக்கடைகளை மூடி மக்களைக் காப்பாற்றுங்கள்: ராமதாஸ் வேண்டுகோள்

தமிழகத்தில் அனைத்து மதுக்கடைகளையும் மூடி முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்தி, மக்களைக் காப்பாற்ற தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டு அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் நிகழும் சாலை விபத்துக்கள் தொடர்பாக ஓரளவு நிம்மதியளிக்கும் செய்தி இப்போது தான் வெளியாகியிருக்கிறது. சாலை விபத்துக்கள், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் ஆகிய இரண்டுமே  கடந்த 10 ஆண்டுகளில் முதன்முறையாக குறைந்திருக்கின்றன என்பது தான் அந்த செய்தியாகும்.
இந்திய அளவில்  சாலை விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகளில் தமிழ்நாடு தான் கடந்த 10 ஆண்டுகளாக முதலிடம் பிடித்து வருகிறது. அதுமட்டுமின்றி, கடந்த10 ஆண்டுகளாகவே தமிழகத்தில்  விபத்து மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. கடந்த 2003 ஆம் ஆண்டில் 9275 ஆக இருந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை கடந்த 2012 ஆம் ஆண்டில்  கிட்டத்தட்ட 80 விழுக்காடு அதிகரித்து 16,175 ஆக உயர்ந்திருக்கிறது. இதே காலத்தில் விபத்துக்களின் எண்ணிக்கை 52,508 என்ற அளவிலிருந்து 67,757 என்ற அளவுக்கு அதிகரித்திருப்பதாக தமிழ்நாடு  மாநில போக்குவரத்து ஆணையம் வெளியிட்ட புள்ளிவிவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
2012 ஆம் ஆண்டில் 15,072 ஆக இருந்த விபத்து உயிரிழப்புகளின் எண்ணிக்கை 2013 ஆம் ஆண்டில்  14,504 ஆக குறைந்திருக்கிறது. விபத்துக்களின் எண்ணிக்கையும் 67,757 என்ற அளவில் இருந்து 66,238 என்ற அளவுக்கு குறைந்திருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக சாலை விபத்துகளில் உயிரிழப்போரின் எண்ணிக்கை ஆண்டுக்கு சராசரியாக 700 பேர் வீதம் அதிகரித்து வந்த நிலையில், 2013 ஆம் ஆண்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 612 குறைந்திருக்கிறது. அதேபோல் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு சராசரியாக 1500 வீதம் அதிகரித்துவந்த நிலையில், கடந்த ஆண்டில் 1519 குறைந்துள்ளது. அதாவது 2013 ஆம் ஆண்டில் சுமார் 3,000 விபத்துக்களும், 1300 உயிரிழப்புகளும் தடுக்கப்பட்டிருக்கின்றன. விபத்துத் தடுப்பில் இது ஒரு மிகப்பெரிய சாதனை ஆகும்.
தமிழகத்தில் சாலை விபத்துக்கள் அதிகரித்ததற்கான முதல் காரணம் நெடுஞ்சாலையோர மதுக்கடைகள் தான். கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் தான்  தமிழகத்தில் சாலை விபத்துக்கள் அதிகரித்தன என்பது அனைவரும் அறிந்த உண்மை. அதே 2003 ஆம் ஆண்டில் தான் தமிழகத்தில் மதுக்கடைகளை எல்லாம் அரசுடைமையாக்கிய அதிமுக அரசு, சாலை ஓரங்களில் அதிக எண்ணிக்கையில் மதுக்கடைகளை திறந்தது.  இதிலிருந்தே சாலை விபத்துக்கள் அதிகரித்ததற்கு காரணம் என்ன? என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.
அதேபோல், சாலை விபத்துக்கள் குறைந்ததற்கு மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை குறைந்தது தான் காரணம் என்பதை எவரும் மறுக்க முடியாது. நெடுஞ்சாலை ஓரங்களிலும், நெடுஞ்சாலைகளை ஒட்டியும் அமைந்துள்ள மதுக்கடைகளை மூட ஆணையிடக் கோரி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தேசிய நெடுஞ்சாலைகளிலுள்ள மதுக்கடைகளை கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் மூட ஆணையிட்டது.
அதன்படி சில கடைகளை  மூடிய அரசு பெரும்பாலானகடைகளை மூட வில்லை. நெடுஞ்சாலைகளை ஒட்டியிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட மதுக்கடைகள் மூடப்பட்டதால் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை குறைந்தது. 100 கடைகள் மூடப்பட்டதாலேயே, 3000 விபத்துக்களும், 1300 உயிரிழப்புகளூம் தடுக்கப்பட்ட நிலையில், சாலையோர மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டால், தமிழ்நாட்டை சாலை விபத்து மற்றும் உயிரிழப்புகள் இல்லாத மாநிலமாக மாற்றியமைக்க அரசால் முடியும். முழு மதுவிலக்கு கொண்டுவரப்பட்டால் மதுவின் மற்ற தீமைகளையும் அடியோடு ஒழித்து விட முடியும்.
இதை உணர்ந்து, தமிழகத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலையோர மதுக்கடைகள் அனைத்தையும்  உடனடியாக மூட வேண்டும்; அடுத்த கட்டமாக தமிழகத்தில் அனைத்து மதுக்கடைகளையும் மூடி முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்தி, மக்களைக் காப்பாற்ற தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். என்று கூறியுள்ளார்.

Friday, February 7, 2014

தமிழ்நாட்டில் தீராத மின்வெட்டும், உறக்கம் கலையாத அ.தி.மு.க அரசும்! ராமதாஸ் குற்றச்சாட்டு!



பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில் மின்வெட்டு மீண்டும் மோசமான கட்டத்தை அடைந்திருக்கிறது. வடசென்னை, மேட்டூர், நெய்வேலி அனல் மின் நிலையங்களிலும், கூடங்குளம் அணுமின் நிலையத்திலும் தொழில்நுட்பக் குளறுபடிகள் காரணமாக உற்பத்தி  பாதிக்கப்பட்டதே மின்வெட்டுக்கு காரணமாகக் கூறப்படுகிறது. காற்றாலை மின்னுற்பத்தி முற்றிலுமாக ஓய்ந்துவிட்டதால் மின்நிலைமை மிகவும் மோசமடைந்திருக்கிறது.
நகர்ப்புறங்களில்  4 மணி நேரமும், கிராமப்புறங்களில் 6 மணி நேரமும் அறிவிக்கப்படாத மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது. சென்னையில் அறிவிக்கப்பட்ட 2 மணி நேரம் தவிர, அறிவிக்கப்படாத மின்தடையும் அடிக்கடி நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதனால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. பொருளாதார நெருக்கடியால் ஏற்கனவே இந்த தொழிற்சாலைகள் நலிவடைந்திருந்த நிலையில், இப்போதைய மின்வெட்டு அவற்றின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியிருக்கிறது. 12ஆம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நெருங்கி வரும் நிலையில் மின்வெட்டு தலைதூக்கியிருப்பதால் மாணவர்கள் படிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.
தமிழ்நாட்டில் மின்வெட்டை போக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததே இந்த அவலநிலைக்கு காரணம் ஆகும். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் அடுத்த மூன்று மாதங்களில் தமிழ்நாட்டில் மின்வெட்டு முற்றிலுமாக  நீங்கிவிடும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் கூட மின்வெட்டுக்கு தீர்வு காணப்படவில்லை. காற்றாலை மின் உற்பத்தி அதிகரிக்கும் போது மின்வெட்டு குறைவதும், உற்பத்தி குறையும் போது மின்வெட்டு அதிகரிப்பதும் வாடிக்கையாகிவிட்டது. மின்வெட்டைக் குறைப்பதில் காற்றாலைகளுக்கு இருக்கும் அக்கறை கூட ஆட்சியாளர்களுக்கு இல்லாதது தான் வேதனை அளிக்கும்  உண்மையாகும்.
ஒவ்வொரு முறை சட்டப்பேரவை கூடும்போதும் மின்வெட்டு குறைந்துவிடும் என்று ஜெயலலிதா அறிவிப்பதும், அதற்கு அடுத்த நாளிலிருந்து மின்வெட்டு அதிகரிப்பதும் வழக்கமாகி விட்டது. கடந்த  03.02.2014 அன்று சட்டப்பேரவையில் ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா, தமது அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளால் விரைவில் மின்வெட்டு இல்லாத மாநிலமாக தமிழகம் மாறிவிடும் என்று கூறி மீண்டும் ஒருமுறை, அதாவது 11 ஆவது முறையாக வாய்தா வாங்கியிருக்கிறார். உண்மையில் தமிழ்நாட்டின் மின்வெட்டை போக்க அ.தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையையுமே மேற்கொள்ளவில்லை என்பது தான் மறுக்க முடியாத உண்மையாகும். கடந்த 3 ஆண்டுகளில் புதிதாக எந்த ஒரு மின்திட்டத்திற்கான பணிகளுமே தொடங்கப்படவில்லை என்று தொடர்ந்து கூறிவருகிறேன். மின்வெட்டை போக்குவதில் தமிழக அரசின் தோல்வியைக் கண்டித்து பா.ம.க. பல்வேறு போராட்டங்களை நடத்தியிருக்கிறது. ஆனாலும், தமிழக அரசு இன்னும் உறக்கத்தைக் கலைத்து விழித்தெழ வில்லை.
மொத்தம் 3300 மெகாவாட் உற்பத்தித் திறனுள்ள அனல் மின்திட்டங்களுக்கு விரைவில் ஒப்பந்தம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் சட்டப்பேரவையில் கூறியிருக்கிறார். 660 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் அனல் மின் நிலையம், 660 மெகாவாட் திறனுள்ள இரண்டு எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல அனல் மின் நிலையங்கள், 660 மெகாவாட் திறனுள்ள 2 உடன்குடி அனல் மின் நிலையங்கள் ஆகியவை தான் முதலமைச்சர் கூறிய அந்த மின் திட்டங்களாகும். இவற்றில் எண்ணூர் அனல் மின் திட்டத்திற்கான சர்வதேச ஒப்பந்தப்புள்ளிகள் 15.03.2013 அன்று பெறப்பட்டும், ஏதோ காரணத்தால் இன்று வரை இறுதி செய்யப்படாமல் கிடக்கின்றன. இதனால், 2016 மார்ச் மாதத்தில் மின் உற்பத்தியை தொடங்க வேண்டும் என்ற இலக்கை இந்த மின்நிலையம் எட்டுமா? என்ற ஐயம் ஏற்பட்டிருக்கிறது.

எண்ணூர் சிறப்பு பொருளாதார அனல் மின் நிலையங்கள், உடன்குடி அனல் மின்நிலையங்கள் ஆகியவற்றுக்கான ஒப்பந்தப்புள்ளிகள் கடந்த ஜூலை& ஆகஸ்ட் மாதத்திலேயே பெறப்பட்டுவிட்டன. அதன்பின் 6 மாதத்திற்கு மேலாகியும் ஆட்சியாளர்களுக்கு மட்டுமே தெரிந்த காரணங்களால் இந்த மின்நிலையங்களுக்கும் இன்னும் ஒப்பந்தம் வழங்கப்படவில்லை. இவைதவிர மேலும் 8660 மெகாவாட் திறன் கொண்ட 7 மின்திட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையிலேயே கிடக்கின்றன. மொத்தத்தில் மின்னுற்பத்தியை பெருக்குவதில் தமிழக அரசு படுதோல்வி அடைந்து விட்டது. மின்திட்டங்களை செயல்படுத்துவதில் இவ்வளவு அலட்சியம் காட்டும் ஜெயலலிதா தான்,  தமிழகத்தை வெகுவிரைவில் மின்மிகை மாநிலமாக மாற்றுவேன் என 3 மாதங்களுக்கு ஒருமுறை அறைகூவல் விடுத்து வருகிறார்.
கோடைக்காலம் விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில் மின்வெட்டு இன்னும் பலமடங்கு அதிகரிக்கும் என்று மின்துறை வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். மின்வெட்டு அதிகரித்தால் அனைத்துத் துறையினரும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே, தமிழக ஆட்சியாளர்கள் வெற்று வசனங்களை பேசுவதை விடுத்து, வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரத்தை விலைக்கு வாங்கியாவது நிலைமையை சமாளிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, எதிர்கால மின் தேவையை கருத்தில் கொண்டு, கிடப்பில் போடப்பட்டுள்ள மின் திட்டங்களை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Thursday, February 6, 2014

இடஒதுக்கீட்டுக்கு எதிரான ஜனார்தன் திரிவேதி பேச்சு- பகிரங்க மன்னிப்பு கேட்க ராமதாஸ் வலியுறுத்தல்!

சென்னை: ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக்கு எதிராக பேசியதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜனார்தன் திரிவேதி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்துவிட்டு, பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த பொதுச் செயலாளர் ஜனார்தன் திரிவேதி கூறியிருக்கிறார்.அதுமட்டுமின்றி, தற்போதைய இடஒதுக்கீட்டு முறையில் தகுதியில்லாதவர்கள் தான் அதிகம் பயனடைவதாகவும் கூறியிருக்கிறார். சமூக நீதி அமைப்பையே கொச்சைப் படுத்தும் வகையில் திரிவேதி கூறியுள்ள கருத்துக்கள் கடுமையாக கண்டிக்கத்தக்கவை.இட ஒதுக்கீடு என்பது சமூகத்தில் பின் தங்கியுள்ள மக்களுக்கு வழங்கப்படும் சலுகை அல்ல... உரிமை ஆகும். இந்த அடிப்படை உண்மை கூட தெரியாததால் தான் இட ஒதுக்கீடு என்பது சலுகை போலவும், அதை எவ்வாறு வழங்குவது என்பதை தாங்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்றும் எண்ணிக் கொண்டு திரிவேதி போன்றவர்கள் இலவசமாக ஆலோசனைகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.சமூகநீதி என்பது சாதி சார்ந்ததாக மாறி வருகிறது என்றும் திரிவேதி கூறியிருக்கிறார். சமூகநீதி சாதி சார்ந்தது என்பதில் சந்தேகமே இல்லை. சமூக நீதியை சமூகத்தின் ஓர் அங்கமான சாதியின் அடிப்படையில் தான் வழங்க முடியும். அதனால் தான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 16 (4) ஆவது பிரிவில், ‘‘சமூக நீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்தங்கிய பிரிவினரின் முன்னேற்றத்திற்காக சிறப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருவதற்கு தடை இல்லை'' எனக் கூறப்பட்டிருக்கிறது.இன்றைய சூழலில் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களைச் சேர்ந்த ஒருவர் கோடிக்கணக்கில் சொத்துக்களை வைத்திருந்தாலும், அவருக்கு முன்னேறிய வகுப்பைச் சேர்ந்த ஏழைக்கு கிடைக்கும் சமூக மரியாதை கிடைக்காது. சமூக மரியாதையை தீர்மானிக்கும் சக்தியாக சாதிகள் தான் திகழ்கின்றனவே தவிர, பணம் இல்லை என்பதால் தற்போதுள்ளவாறு சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது தான் சரியானதாக இருக்கும்.இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரில் கிரிமிலேயர் முறையை நீக்கிவிட்டு அனைத்து தரப்பினருக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், பொருளாதார அடிப்படையில் மட்டுமே இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது மிகவும் ஆபத்தான யோசனை ஆகும்.அதுமட்டுமின்றி, பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பதை இந்திய அரசியல் சட்டமும் ஏற்றுக் கொள்ளவில்லை; உச்சநீதிமன்றமும் ஏற்றுக் கொள்ளவில்லை. மக்கள் மன்றத்திலும் பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டுக்கு வரவேற்பு இல்லை. தமிழ்நாட்டில் பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்திய எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க. 1980 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்ததும், அடுத்த சில மாதங்களில் மீண்டும் ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆர். பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை இரத்து செய்துவிட்டு, சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டைக் கொண்டுவந்து வலுப்படுத்தியது தான் இதற்கெல்லாம் சிறந்த உதாரணங்கள் ஆகும்.மேலும், வருமான சான்றிதழ்களை பணம் கொடுத்து வாங்குவது சர்வ சாதாரணமாகிவிட்ட நிலையில், பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவது நடைமுறை சாத்தியமானதும் இல்லை.உண்மையும், நடைமுறையும் இவ்வாறு இருக்கும்போது, ஆளும் காங்கிரசின் முன்னணித் தலைவரான ஜனார்தன் திரிவேதி போன்றவர்கள் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கூறுவது சமூகநீதிக்கு சவக்குழி தோண்டும் செயலாகும். திரிவேதியின் இந்தக் கருத்துக்கு நாடு முழுவதிலுமிருந்து கண்டனங்கள் குவிகின்றன.திரிவேதியின் யோசனையை ஏற்கப் போவதில்லை என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், மத்திய அரசும் அறிவித்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. எனினும் சமூகநீதிக்கு எதிராக தெரிவித்த கருத்துக்காக திரிவேதி பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

Saturday, February 1, 2014

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும்: பாமக வலியுறுத்தல்



 


இலங்கை மீது பன்னாட்டு விசாரணை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் 2014 மார்ச் மாதம் வரவுள்ள அமெரிக்க தீர்மானம் குறித்த கலந்துரையாடல் கூட்டம் சென்னை தி.நகரில் சனிக்கிழமை நடைபெற்றது. பசுமைத் தாயகம், வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவை, தமிழக மாணவர் சங்கம், பாட்டாளி இளைஞர் சங்கம், தமிழ்ச் சமூக ஊடகப் பேரவை ஆகியவை இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது,
இதில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசுகையில்,
இலங்கை பிரச்சனை தமிழகத்தில் அரசியலாகி வருகிறது. அரசியலுக்காக இந்த கூட்டத்தை நாங்கள் கூட்டவில்லை. இதையடுத்து ஒரு குழு அமைத்து 2 வாரங்களில் கையெழுத்து இயக்கம், கடிதம் எழுதும் இயக்கம், ஆர்ப்பாட்டம், போராட்டம் ஆகியவற்றை தொடர்ந்து நடத்த இருக்கிறோம்.
இலங்கைக்கு எதிராக ஏற்கனவே கொண்டு வந்த இரண்டு தீர்மானங்களும் செயலிழந்து போய்விட்டது. எனவே இந்த முறை வரும் தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்க வேண்டும்.
இலங்கை பிரச்சனையை பொறுத்தவரை தமிழக அரசு அனைத்து அரசியல் கட்சிகளும் பங்கேற்கும் வகையில் கூட்டத்தை நடத்தி ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்றார்.

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: