பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அட்டப்பாடி பகுதியில் வாழ்ந்து வரும் தமிழர்கள் அனைவரும் தங்களுக்குச் சொந்தமான நிலங்களை அப்படியே விட்டுவிட்டு வெளியேற வேண்டும் கேரள அரசு ஆணையிட்டிருக்கிறது. இதனால் அட்டப்பாடி தமிழர்கள் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அட்டப்பாடி பகுதியில் வாழ்ந்து வரும் தமிழர்கள் அனைவரும் தங்களுக்குச் சொந்தமான நிலங்களை அப்படியே விட்டுவிட்டு வெளியேற வேண்டும் கேரள அரசு ஆணையிட்டிருக்கிறது. இதனால் அட்டப்பாடி தமிழர்கள் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.
அட்டப்பாடியில் தமிழர்கள் விவசாயம் செய்துவரும் நிலங்கள் பழங்குடியினருக்கு சொந்தமானவை என்றும்,பழங்குடியினரின் நிலங்கள் அவர்களுக்கே சொந்தம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழர்கள் தங்களின் நிலங்களை பழங்குடியினரிடமே ஒப்படைக்க வேண்டும் என்றும் கேரள அரசு கூறுகிறது. பழங்குடியினருக்கு சொந்தமான நிலங்களை தமிழர்கள் எந்தக் காலத்திலும் ஆக்கிரமிக்க வில்லை. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படுவதற்கு முன்பாகவே தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் இருந்து அட்டப்பாடியில் குடியேறிய தமிழர்கள் தான் அந்தப் பகுதியை வளம் கொழிக்கும் பூமியாக்கினர். ஒருகட்டத்தில் ஆதிவாசிகள் முழு மனதுடன் தங்கள் நிலங்களை தமிழர்களுக்கு விற்பனை செய்தனர்.
பழங்குடியினரின் நிலங்களை மற்றவர்கள் வாங்குவது தொடர்பாக பிரச்சினை எழுந்தபோது அது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பழங்குடியினரின் நிலங்களை மீட்டு அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. அதனடிப்படையில் 1999ஆம் ஆண்டில் சட்டமியற்றிய கேரள அரசு, 1986ஆம் ஆண்டுக்கு முன் பழங்குடியினரின் நிலங்களை வாங்கியோர் 5 ஏக்கரை வைத்துக் கொண்டு மீதமுள்ள நிலங்களையும், அதற்குப் பின் நிலம் வாங்கியோர் அதை முழுமையாகவும் ஒப்படைக்க வேண்டும் என்றும் அறிவித்தது. அதன்மீது, கடந்த 14 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் இப்போது திடீரென தமிழர்களை விரட்டுவதில் கேரளா தீவிரம் காட்டுகிறது.
தமிழர்களில் பெரும்பாலோனோர் 1986 ஆம் ஆண்டுக்கு முன்பே நிலங்களை வாங்கியுள்ளனர். எனவே அவர்கள் நிலங்களை ஒப்படைக்கத் தேவையில்லை. அதுமட்டுமின்றி, நிலங்களை விற்பனை செய்த பழங்குடியினரும், அட்டப்பாடி பகுதியைச் சேர்ந்த மலையாள விவசாயிகளும் தமிழர்கள் நிலத்தை திரும்ப ஒப்படைக்கத் தேவையில்லை என்று வெளிப்படையாக கூறிவருகின்றனர். ஆனால், கேரள அரசில் பணியாற்றும் இ.ஆ.ப., மற்றும் இ.கா.ப., அதிகாரிகள் சிலர், பழங்குடியினரின் நிலங்களை பெருநிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் நோக்குடன் தான் தமிழர்களை விரட்ட முயல்கின்றனர். இதற்காக இரவு நேரங்களில் தமிழர்களின் வீடுகளுக்குள் புகுந்து அத்துமீறுதல், பொய் வழக்குகளை பதிவு செய்து சிறையில் அடைத்தல் உள்ளிட்ட செயல்களில் கேரள காவல்துறை ஈடுபட்டிருக்கிறது. தமிழர் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களின் வாழ்வாதாரங்களை பறித்து துரத்தியடிக்க கேரள அரசு முயல்வதும், அதற்காக தமிழர்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவதும் கண்டிக்கத் தக்கவை.
கேரளாவில் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள பழங்குடியினருக்கு சொந்தமான 28 ஆயிரம் ஏக்கர் நிலங்களை பன்னாட்டு பெருநிறுவனங்கள் பறித்துக் கொண்டுள்ளன. அவற்றை மீட்க நடவடிக்கை எடுக்காத கேரள அரசு, தமிழர்களின் வாழ்வாதாரமாக கருதப்படும் நிலங்களை மட்டும் பறிக்க முயல்வது முறையல்ல.
சட்டத்திற்கு முரணான கேரள அரசின் நடவடிக்கையால் 2500 குடும்பங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே, அட்டப்பாடியிலிருந்து தமிழர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை கேரள அரசு கைவிட வேண்டும். தமிழக முதலமைச்சரும், கேரள முதலமைச்சரைத் தொடர்பு கொண்டு பேசி அட்டப்பாடி தமிழர்களை காக்க முன்வர வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.
No comments:
Post a Comment