பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
உலகில் மிகவும் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவரும், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையில் அக்கறை கொண்டவருமான நெல்சன் மண்டேலா உடல்நலக் குறைவால் மறைந்துவிட்டார் என்ற செய்தி எனது இதயத்தை இடியாய் தாக்கியது; கண்களை குளமாக மாற்றியது.
தென் ஆப்பிரிக்காவில் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த மண்டேலா தமது இளம் வயதிலேயே ஆப்பிரிக்க தேசிய காங்கிரசில் இணைந்து இனவெறி வெள்ளையர் அரசுக்கு எதிராக போராடினார். அறவழியிலும், ஆயுத வழியிலும் போராடிய மண்டேலா தேசத்துரோகம் செய்தார் என்ற பொய்குற்றச்சாற்றின் அடிப்படையில் 27 ஆண்டுகள் கொடுஞ்சிறையில் அடைக்கப்பட்டார்.
விடுதலைக்கு பின் இனவெறிக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெற்று, தென்னாப்பிரிக்காவின் முதல் கறுப்பின அதிபராக பதவியேற்ற மண்டேலா அதன்பிறகு நிகழ்த்தியவை அற்புதங்கள். தம்மை 27 ஆண்டுகள் சிறையில் அடைத்த வெள்ளைக்கார ஆட்சியாளர்களை மன்னித்தது, நீதிமன்றத்தில் தமக்கு எதிராக வாதாடி தண்டனை பெற்றுத் தந்த அரசு வழக்கறிஞருக்கு விருந்து அளித்தது; தம்மை சிறையில் அடைத்த வெள்ளைக்கார பிரதமர் ஹென்ட்ரிக் வெர்வோர்ட் மறைந்த பின் பல நூறு கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து அவரது மனைவியை சந்தித்து தேநீர் அருந்தியது உள்ளிட்ட நடவடிக்கைகள் அந்தப் போராளியின் மன்னிக்கும் மனப்பாங்கை வெளிப்படுத்தியவை.
இத்தகைய செயல்களால் தான் மகாத்மா காந்திக்கு இணையாக போற்றப்படும் அளவுக்கு உயர்ந்தார். அமைதிக்கான நோபல் பரிசு, இந்திய அரசின் பாரத ரத்னா உள்ளிட்ட 250க்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளை வென்றவர்.
நான் மிகவும் மதித்து போற்றும் உலகத் தலைவர்களின் மண்டேலா முதன்மையானவர். அவரைப் போன்ற ஒருவர் இனி இந்த உலகில் தோன்றுவது அரிது. உலகிற்கே கருணை ஒளியும், நம்பிக்கை ஒளியும் காட்டிய விளக்கு அணைந்து விட்டது. இது ஒட்டுமொத்த உலகிற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், தென்னாப்பிரிக்க மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment