வன்னியர் சங்க மாநில தலைவரும், பா.ம.க. எம்.எல்.ஏ.வுமான குரு, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டது செல்லாது என சென்னை ஐகோர்ட் புதன்கிழமை தீர்ப்பளித்தது.
அதனை தொடர்ந்து சிறையில் இருந்து வெளியே வந்த குரு எம்.எல்.ஏ., திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்திற்கு சென்றார். அப்போது அவரை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வரவேற்றார்.
இதன் பிறகு டாக்டர் ராமதாஸ், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
செய்யாத குற்றத்திற்காக ஜெ.குரு 8 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டு சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டார். இதற்கு காரணமானவர்களுக்கு வன்னிய மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.
வன்னிய மக்கள், வன்னிய இளைஞர்கள், பா.ம.க.வினர் மீது தமிழக அரசு, போலீசை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. காவல்துறை என்பது பொதுவாக அனைத்து மக்களுக்கும், உடைமைகளுக்கும், உயிருக்கும் பாதுகாப்பு தர வேண்டிய துறையாகும். ஆனால் இந்த ஆட்சியில் எந்தவித காரணமும் இல்லாமல் யாரையும் கைது செய்ய முடியும் என்ற நிலை உள்ளது.
தமிழக அரசு என்னை 12 நாட்கள் சிறையில் அடைத்து சித்ரவதை செய்தது. பின்னர் வெளியே வந்தவுடன் அறுவை சிகிச்சை பெற்ற நான், மிகுந்த வேதனையோடு இருந்தேன். வன்னியர்கள் 134 பேர் சிறையில் இருந்து வெளியில் வந்தவுடன் ஓரளவிற்கு ஆறுதலடைந்தேன்.
தற்போது உயர்நீதிமன்றத்தின் ஆணைப்படி சிறையில் இருந்து குரு விடுதலை செய்யப்பட்டதால் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன். எத்தனை அடக்கு முறைகள் என்றாலும் நானும், குருவும் அஞ்சமாட்டோம். இதற்கெல்லாம் வன்னிய மக்கள் தேர்தலில் சரியான பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார்.
No comments:
Post a Comment