பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் 2013 --14 ஆண்டு பருவத்தில் கரும்பு கொள்முதல் விலையாக டன்னுக்கு ரூ. 2650 வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயயலலிதா அறிவித்திருக்கிறார். கரும்புக்கு நியாயமான விலை வழங்கப்பட வேண்டும் என்று விவசாயிகள் கோரி வந்த நிலையில் யானைப் பசிக்கு சோளப்பொறியைப் போல தமிழக அரசு அறிவித்திருக்கும் கரும்புக் கொள்முதல் விலை மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.
கரும்பு பருவம் கடந்த அக்டோபர் மாதமே தொடங்கிவிட்ட நிலையில், கரும்புக்கான கொள்முதல் விலை அறிவிக்கப்படாததை சுட்டிக்காட்டி கடந்த நவம்பர் மாதம் அறிக்கை ஒன்றை வெளியிட்டேன். அதில் கரும்புக்கான உற்பத்திச் செலவு அதிகரித்திருப்பதால், நடப்பு பருவத்தில் டன்னுக்கு ரூ.3500 வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். ஆனால், அதன்பின் ஒரு மாதம் கழித்து கரும்புக்கான கொள்முதல் விலையை அறிவித்துள்ள அரசு, டன்னுக்கு ரூ. 2650 வழங்கப்படும் என்று கூறியுள்ளது.
கரும்புக்கான நியாய மற்றும் ஆதாய விலையை மத்திய அரசு தான் நிர்ணயிக்கிறது. ஆனால், அது போதுமானதாக இருப்பதில்லை என்பதால், அத்துடன் மாநில அரசின் சார்பில் ஒரு குறிப்பிட்ட தொகை மாநில பரிந்துரை விலையாக நிர்ணயிக்கப்பட்டு அதையும் சேர்த்து வழங்கும்படி சர்க்கரை ஆலைகளுக்கு ஆணையிடப்படும். நடப்பாண்டில் மத்திய அரசின் சார்பில் ஒரு டன் கரும்புக்கு நியாய மற்றும் ஆதாய விலையாக ரூ. 2100 அறிவிக்கப்பட்டது. அத்துடன் மாநில அரசின் சார்பில் ரூ.550 மட்டும் பரிந்துரை விலையாக சேர்த்து வழங்கும்படி ஆணையிடப்பட்டுள்ளது. கரும்பு விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு இவ்வாறு செய்யப்பட்டிருப்பதாகவும், இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைவார்கள் என்றும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்திருக்கிறார்.
ஆனால், உண்மையில், கரும்பு கொள்முதல் விலை உயர்வு என்ற பெயரில் கரும்பு கொள்முதல் விலையை ஜெயலலிதா குறைத்திருக்கிறார். கடந்த இரு ஆண்டுகளாக ஒரு டன் கரும்புக்கு மாநில அரசின் பரிந்துரை விலையாக ரூ. 650 அறிவிக்கப்பட்டு வந்தது. இந்தியாவின் பல மாநிலங்களில் மாநில அரசின் பரிந்துரை விலை கடந்த ஆண்டைவிட அதிகரிக்கப்பட்டுள்ளது. ஹரியானாவில் மாநில அரசின் பரிந்துரை விலையாக ரூ. 910ம், பஞ்சாபில் ரூ.800ம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. சில மாநிலங்களில் பரிந்துரை விலையுடன் மாநில அரசின் சார்பில் ஒரு தொகை மானியமாக கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த பரிந்துரை விலையை ரூ.550 ஆக குறைத்திருப்பதன் மூலம், ஆலை அதிபர்களுக்கு சாதகமாக செயல்பட்டு கரும்பு விவசாயிகளுக்கு மிகப் பெரிய அநீதியையும், துரோகத்தையும் தமிழக அரசு செய்திருக்கிறது.
கரும்புக்கான உற்பத்திச் செலவுடன், இலாபமாக 50% சேர்த்து கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு அமைத்த வல்லுனர் குழு பரிந்துரைத்துள்ளது. நடப்பாண்டில் ஒரு டன் கரும்பை உற்பத்தி செய்ய ரூ. 2510 ஆவதாக கணக்கிடப்பட்டுள்ளது. அத்துடன் விவசாயிகளுக்கான இலாபமாக ரூ.1255 சேர்த்து ஒரு டன் கரும்புக்கான கொள்முதல் விலையாக ரூ. 3765 நிர்ணயிக்கப் பட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்ய மத்திய அரசு தவறிவிட்ட நிலையில், கரும்பு விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கச் செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் மாநில அரசுக்கு உள்ளது.
கரும்புக்கான உற்பத்திச் செலவுடன், இலாபமாக 50% சேர்த்து கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு அமைத்த வல்லுனர் குழு பரிந்துரைத்துள்ளது. நடப்பாண்டில் ஒரு டன் கரும்பை உற்பத்தி செய்ய ரூ. 2510 ஆவதாக கணக்கிடப்பட்டுள்ளது. அத்துடன் விவசாயிகளுக்கான இலாபமாக ரூ.1255 சேர்த்து ஒரு டன் கரும்புக்கான கொள்முதல் விலையாக ரூ. 3765 நிர்ணயிக்கப் பட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்ய மத்திய அரசு தவறிவிட்ட நிலையில், கரும்பு விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கச் செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் மாநில அரசுக்கு உள்ளது.
எனவே, கரும்பு விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு கரும்புக்கான கொள்முதல் விலையை டன்னுக்கு குறைந்தது ரூ. 3500 ஆக நிர்ணயிக்க தமிழக அரசு முன்வர வேண்டும். இனி வரும் காலங்களில் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளுடன் சர்க்கரை ஆணையர் மூலம் பேச்சு நடத்தி கரும்புக்கான கொள்முதல் விலையை நிர்ணயிக்கும் நடைமுறையை அறிமுகப்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment