பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தர்மபுரி வந்தார். அவர் தர்மபுரி அருகே குண்டலப்பட்டியில் உள்ள டி.என்.ஜி. விடுதி கூட்ட அரங்கில் நடைபெற்ற பல்வேறு கூட்டங்களில் கலந்து கொண்டு பாராளு மன்ற தேர்தலையொட்டி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டங்களில் ராமதாஸ் பேசியபோது, ’’பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் சமூக ஜனநாயக கூட்டணி உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணி சார்பில் முதல்கட்டமாக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு அவர்கள் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தர்மபுரி பாராளுமன்ற தொகுதி அனைத்து தரப்பினராலும் எதிர்பார்க்கப்படும் தொகுதியாக உள்ளது.
இந்த தொகுதியில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் போட்டியிட வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் விருப்பப்படுகின்றனர்.
உங்களின் எண்ணம் நிறைவேற வேண்டும் என்றால் கட்சி நிர்வாகிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக பாடுபட வேண்டும். நமது கட்சிக்கு பெண்களின் வாக்கை அதிக அளவில் பெற வேண்டும். அதற்கான நாம் திட்டமிட்டுள்ளபடி வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்து பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்க வேண்டும். மேலும் ஊரில் உள்ள முக்கிய பிரமுகர்களை தனித்தனியாக சந்தித்து நமது இயக்கம் எந்தெந்த கொள்கைக்காக பாடு படுகிறது என்பதை எடுத்துக் கூற வேண்டும்.
தர்மபுரி பாராளுமன்ற தொகுதியின் வெற்றி இதுவரை வரலாற்றில் இல்லாத வெற்றியாக அமைய வேண்டும். மாநிலம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் பாட்டாளி மகளிர் சங்க மாநாட்டை நடத்தும் பொறுப்பை நான் ஏற்றுள்ளேன்.
இதற்காக அனைத்து தொகுதிகளிலும் நடைபெறும் மகளிர் சங்க மாநாட்டில் திரளான பெண்களை அழைத்துவர கட்சி நிர்வாகிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் பா.ம.க. வேட்பாளர் வெற்றிக்கு கட்சி நிர்வாகிகள் முழு மூச்சுடன் பாடுபட வேண்டும். இந்த வெற்றியின் மூலம் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும்’’என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment