Tuesday, December 31, 2013

மதுவை ஒழிக்கவும், மாற்றம் காணவும் ஆங்கில புத்தாண்டில் உறுதி ஏற்போம்: ராமதாஸ்



பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சோதனைகளுக்குப் பின்னே சாதனைகள் தான் அணிவகுக்கும் என்ற நம்பிக்கையுடன் 2014&ஆம் ஆண்டு பிறக்கிறது. இந்த புத்தாண்டாவது ஏமாற்றத்தைத் தராமல் மாற்றத்தைத் தராதா? என்ற எதிர்பார்ப்புடன் ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்று கொண்டாடும் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு  வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
2013ஆம் ஆண்டு புதிய நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புடன் தான் பிறந்தது என்றாலும், கிடைத்தவை என்னவோ ஏமாற்றங்கள் தான். 2013 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. அதன்படி, காவிரி ஆற்றை நிர்வகிப்பதற்கான காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கர்நாடகத்தின் நலனில் மட்டுமே அக்கறை காட்டி வரும் மத்திய அரசு, இன்று வரை காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. இதனால் இந்த ஆண்டும் தண்ணீர் பற்றாக்குறையால் காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சம்பா சாகுபடிகள் முழுமையாக நடைபெறவில்லை.  கரும்பு, நெல் உள்ளிட்ட வேளாண் விளைப்பொருட்களுக்கு இந்த ஆண்டும் நியாயமான விலை கிடைக்காததால் உழவர்களின் துயரம்  தொடருகிறது.
144 தடை உத்தரவு, அப்பாவிகள் மீது பொய் வழக்குகள், அதிகரித்து வரும் கொலை, கொள்ளைகள் என சட்டம் & ஒழுங்கும் சந்தி சிரித்தது. நெடுஞ்சாலைகளில் விபத்துக்களைத் தடுக்கும்  நோக்கத்துடன் தேசிய நெடுஞ்சாலையோரங்களில் உள்ள மதுக்கடைகளை மூடும்படி உச்சநீதிமன்றமே ஆணையிட்ட பிறகும், அதை மதிக்காமல் தொடர்ந்து கடைகளை நடத்தும் அநீதியும், அதனால் சாலை விபத்துகள் அதிகரிக்கும் அவலமும் தான் தொடர்கின்றன. மதுவால் பாதிக்கப்பாடாதவர்களே இல்லை என்று கூறும் அளவுக்கு மதுவின் தீமைகள் அதிகரித்திருக்கின்றன. தமிழக அரசோ மதுவை ஒழிப்பதற்கு பதிலாக, அதை வெள்ளமாக ஓடவிட்டு மக்களை ஒழிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறது. இந்த நிலையை மாற்றி, எல்லா தீமைகளுக்கும் தாயான மதுவை ஒழித்து மக்களைக் காப்போம் என்று இந்த புத்தாண்டின் முதல் நாளில் அனைவரும் உறுதி ஏற்கவேண்டும்.
விலைவாசி உயர்வு, பொருளாதார வளர்ச்சிக் குறைவு, வேலைவாய்ப்பில் மந்த நிலை என இந்த ஆண்டில் எதுவுமே மகிழ்ச்சி அளிப்பவையாக இல்லை. இவற்றையெல்லாம் மாற்ற வேண்டுமானால் நாட்டின் ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் மாற்றப்படவேண்டும். விரைவில் நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவும், தமிழகத்திலிருந்து நல்லவர்களையும், திறமையானவர்களையும் தேர்ந்தெடுக்கவும் மக்கள் அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்று கூறி அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்

தேர்தலில் வாக்களிக்க பணம் கொடுப்பதை ஒழிக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்: ராமதாஸ் பேச்சு



தேர்தலில் வாக்களிக்க பணம் கொடுப்பதை ஒழிக்க இளைஞர்கள் முன்வர வேண்டும் என, பாமக நிறுவனர் தலைவர் ராமதாஸ் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரியில் பாமக சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர்:
கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களுக்கு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்காக நீதிமன்றம் மூலம் பாமக போராடியது. அதேபோல, சமச்சீர் கல்விக்காகவும் போராட்டங்களை நடத்தினோம். இதற்காக, பாடுபட்ட பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி, கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
கடந்த தேர்தலின் போது ஒளிமயமான எதிர்காலம் உள்ளதாக அதிமுக வாக்குறுதி அளித்தது. ஆனால், தற்போது தமிழகம் இருளில் முழ்கியுள்ளது.
எனது வாக்கு விற்பனைக்கு இல்லை என்ற வாசகங்கள் உங்கள் வீட்டுக்கு முன் வைக்க வேண்டும். மக்களவைத் தேர்தலில் திமுகவும், அதிமுகவும் வாக்களிக்க பணம் தருவர். வாக்களிக்க பணம் கொடுப்பதை ஒழிக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்

Monday, December 30, 2013

'காரைக்கால் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: அரசியல் கட்சிகளின் கள்ள மெளனம் ஏன்?'

காரைக்காலில் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது குறித்து அரசியல் கட்சிகள் மெளனம் காப்பது ஏன்? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "டெல்லியில் மருத்துவக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதன் முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்ட நிலையில், அதைவிட பலமடங்கு கொடூரமான பாலியல் வன்கொடுமைக்கு தமிழ்நாட்டு இளம் பெண் ஆளாக்கப்பட்டிருக்கிறார். இதைக் கண்டித்து குரல் கொடுக்க வேண்டிய அரசியல் கட்சிகள் அமைதி காப்பதுடன், இப்பிரச்சினையை திசை திருப்ப முயல்வது மிகுந்த வருத்தமும், வேதனையும் அளிக்கிறது.
தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் காரைக்காலில் உள்ள மதன் என்ற நண்பரை பார்க்க கடந்த 24 ஆம் தேதி காரைக்கால் சென்றுள்ளார். அவருக்கு துணையாக அவரது தோழியும் சென்றிருக்கிறார். அங்கு இளம்பெண்ணுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவம் பெற அப்பெண்ணும், அவரது தோழரும் நண்பரின் வீட்டுக்குச் சென்றனர்.
அந்த நேரத்தில் அப்பெண்ணின் தோழி தனியாக நின்று கொண்டிருப்பதைப் பார்த்த மூன்று பேர் கொண்ட கும்பல் அவரை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறது. பின்னர் அந்த கும்பலிடமிருந்து மீட்கப்பட்ட அப்பெண்ணை, 7 பேர் கொண்ட இன்னொரு கும்பல் கடத்திச் சென்று கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. நன்னிலம் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை கற்பனை செய்து பார்க்கக் கூட முடியாத கொடூரமாகும்.
இந்த பாலியல் வன்கொடுமை தொடர்பாக அதிர்ச்சியூட்டும் பல உண்மைகள் வெளியாகியுள்ளன. காரைக்கால் தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான நாஜீமின் ஆதரவுடன் செயல்பட்டுவரும் அப்துல் நாசர் தலைமையிலான கும்பலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஜெயகாந்தன் தலைமையிலான கும்பலும் தான் இக்கொடூரத்தை அரங்கேற்றியுள்ளன.
காரைக்காலுக்கு வரும் பெண்களை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்வதையே இந்த கும்பல்கள் தொழிலாக கொண்டுள்ளன. இவர்களில் ஜெயகாந்தன் மீது 2 பாலியல் வன்கொடுமை வழக்குகள் நிலுவையில் உள்ளன; அப்துல் நாசர் ஏற்கனவே பாலியல் வழக்கில் தண்டிக்கப்பட்டு 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர் என்றும் கூறப்படுகிறது.
நன்னிலத்தைச் சேர்ந்த இளம்பெண்களை காரைக்காலுக்கு அழைத்துவந்த மதன் என்பவர் காரைக்கால் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளரின் தம்பி என்றும், இவர் தான் அந்த இரு பெண்களையும் காதல் நாடகமாடி அழைத்து வந்து, அதுபற்றி தமது நண்பர்களுக்குத் தெரிவித்து பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதற்கு காரணமாக இருந்தார் என்றும் கூறப்படுகிறது. இவர்களைக் காப்பாற்றும் நோக்குடன் இந்த சம்பவத்தையே காவல்துறை உதவியுடன் மூடி மறைக்க சில அரசியல் தலைவர்கள் முயன்றுள்ளனர். முதுநிலை காவல் கண்காணிப்பாளர் மோனிகா பரத்வாஜ் நேரடியாக தலையிட்டு விசாரித்ததால் தான் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, அந்த பெண்ணின் புகார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம்பெண் காரைக்காலில் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக உலகெங்கும் உள்ள ஊடகங்கள் பத்திபத்தியாக செய்தி வெளியிட்டுள்ளன. கலாச்சார பெருமைக்கு பெயர் போன இந்தியா 'கூட்டுக் கற்பழிப்பின்' தலைநகராக மாறி வருவதாக உலக ஊடகங்கள் காறி உமிழ்கின்றன. ஆனால், தமிழகத்தின் முற்போக்கு சிந்தனையாளர்களாக தங்களைக் காட்டிக் கொள்பவர்களும், அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இதுபற்றி எந்த கருத்தும் தெரிவிக்காமல் அமைதி காக்கின்றனர். ஏன் இந்த கள்ள மவுனம்?
மது அருந்திவிட்டு ரயிலில் பாய்ந்து இளவரசன் தற்கொலை செய்து கொண்ட போதும், ஆதிக்க சாதி வன்னியர்கள் தான் இதற்கு காரணம் என்று கொதித்து எழுந்து குற்றஞ்சாற்றியோரும், உண்மை கண்டறியும் குழுவை அனுப்பி பொய் அறிக்கை தாக்கல் செய்தோரும் இப்போது எங்கு போனார்கள்?
வன்னியர்கள் தவறு செய்யாதபோதும் அவர்களை சிலுவையில் அறைந்தவர்கள் இப்போது இஸ்லாமிய மற்றும் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த சிலர் தவறு செய்தது உறுதிசெய்யப்பட்ட பிறகும் வாய் திறக்க மறுப்பது ஏன்? தலித்துகள் பாதிக்கப்படாத போதே அவர்களுக்காக குரல் கொடுக்கும் போலி முற்போக்குவாதிகள் இப்போது முதலியார் சமுதாயத்தை சேர்ந்த பெண்ணுக்கு பெருங்கொடுமை இழைக்கப்பட்டிருக்கும் நிலையில் அமைதிகாப்பது ஏன்? இது எந்த வகையான முற்போக்கு வாதம்?
என்னைப் பொறுத்தவரை யார் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்கு ஆதரவு காட்ட வேண்டும்; யார் தவறு செய்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகளும், வேலைக்கு செல்லும் இளம்பெண்களும் நிம்மதியாக நடமாட முடியாத நிலை காணப்படுகிறது.
காதல் நாடகமாடி இளம் பெண்களை கடத்திச் செல்வதும் தொடர்கிறது. இதையெல்லாம் ஒரு தொழிலாகவே செய்துவருவது தலித் மக்களை காப்பதாக கூறி ஏமாற்றிவரும் ஒரு கட்சியைச் சேர்ந்தவர்கள் தான். இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் வலியுறுத்திய போதெல்லாம் சாதி உணர்வுடன் பேசுவதாக கூறி என்னை விமர்சித்த போலி முற்போக்குவாதிகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களை கண்டிக்கவில்லை. அதன்விளைவு தான் ஒரு இளம்பெண்ணை இரு குழுக்களைச் சேர்ந்தவர்கள் மாறி மாறி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்திருப்பதாகும்.
எனவே, முற்போக்கு வாதம் பேசுபவர்கள் தங்களின் வேடங்களை கலைத்து விட்டு, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் யார் ஈடுபட்டாலும் அவர்களை கண்டிக்க முன்வர வேண்டும்.
அதேபோல், காரைக்கால் பாலியல் வன்கொடுமையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு காப்பாற்ற முயன்ற அரசியல்வாதிகள் யார், யார்? என்பதை காவல்துறை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு வேலை மற்றும் நிதி உதவியை புதுவை அரசு வழங்க வேண்டும்" என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தேர்தலில் வாக்களிக்க பணம் கொடுப்பதை ஒழிக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்: ராமதாஸ் பேச்சு



தேர்தலில் வாக்களிக்க பணம் கொடுப்பதை ஒழிக்க இளைஞர்கள் முன்வர வேண்டும் என, பாமக நிறுவனர் தலைவர் ராமதாஸ் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரியில் பாமக சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர்:
கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களுக்கு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்காக நீதிமன்றம் மூலம் பாமக போராடியது. அதேபோல, சமச்சீர் கல்விக்காகவும் போராட்டங்களை நடத்தினோம். இதற்காக, பாடுபட்ட பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி, கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
கடந்த தேர்தலின் போது ஒளிமயமான எதிர்காலம் உள்ளதாக அதிமுக வாக்குறுதி அளித்தது. ஆனால், தற்போது தமிழகம் இருளில் முழ்கியுள்ளது.
எனது வாக்கு விற்பனைக்கு இல்லை என்ற வாசகங்கள் உங்கள் வீட்டுக்கு முன் வைக்க வேண்டும். மக்களவைத் தேர்தலில் திமுகவும், அதிமுகவும் வாக்களிக்க பணம் தருவர். வாக்களிக்க பணம் கொடுப்பதை ஒழிக்க இளைஞர்கள் முன்வர வேண்டும் என்றார்.

Sunday, December 29, 2013

இந்தியாவின் இறையாண்மைக்கு சவால் விடுகிறது இலங்கைப் படை: ராமதாஸ்



 பாமக நிறுவனர் ராமதாஸ்  வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’வங்கக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த 22 மீனவர்களை சிங்களப் படை நேற்று நள்ளிரவில் கைது செய்துள்ளது. இலங்கை நீதிமன்றத்தில் இன்று நேர்நிறுத்தப்பட்ட அவர்கள், பின்னர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தமிழக மீனவர்கள் வங்கக் கடலில் மீன்பிடிக்கச் செல்லும் போதெல்லாம் சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்படுவது வாடிக்கையாகி வருகிறது. தமிழக மீனவர்கள் நமது கடல் எல்லைக்குள் மீன் பிடித்தாலும், இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து அவர்களை கைது செய்வது சிங்களப்படையின்  வழக்கமாகி விட்டது. இப்போதும் இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை தான் சிங்களப் படையினர் கைது செய்துள்ளனர். இந்தியாவின் இறையாண்மைக்கு சவால் விடும் வகையில் இலங்கைப் படை நடத்தியுள்ள இந்த கைது நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.
நாகப்பட்டினம், புதுக்கோட்டை, இராமநாதபுரம் மற்றும் காரைக்கால் மாவட்டங்களைச் சேர்ந்த 227 மீனவர்கள் ஏற்கனவே இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டு கடந்த சில மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான 77 படகுகளும் இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.

இந்திய, இலங்கை மீனவர்கள் எதிர்பாராதவிதமாக சர்வதேச கடல் எல்லையை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கைது  செய்யப்பாட்டல் மனிதநேய அடிப்படையில் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று இரு நாட்டு அரசுகளும் உடன்பாடு செய்துள்ளன. இதை இந்தியா மதித்து செயல்படுத்தி வரும் நிலையில், இலங்கையோ உடன்பாட்டை மீறி தமிழக மீனவர்களை குறைந்தது 3 மாதங்கள் சிறையில் அடைக்கும் அணுகுமுறையை கடைபிடித்து வருகிறது.
ஏற்கனவே கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தமிழக மீனவர்களின் பிரதிநிதிகள் நேற்று தான் கோரிக்கை விடுத்தனர். இலங்கை அரசின் செயலுக்கு கண்டனம் தெரிவித்த பிரதமர், கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்திருந்தார். இந்தநிலையில் மேலும் 22 மீனவர்களை, அவர்களுக்கு சொந்தமான 6 படகுகளுடன் இலங்கை அரசு கைது செய்திருப்பதைப் பார்க்கும்போது இந்திய அரசை இலங்கை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்பது தெளிவாகிறது.
இலங்கை அரசின் இத்தகைய போக்கை தொடர அனுமதித்தால் அது இந்தியாவின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக அமைந்து விடும். எனவே, இனியும் தமிழக மீனவர்களை கைது செய்தால் மிக மோசமான விளைவுகள் ஏற்படும் என்று இலங்கை அரசை மத்திய அரசு எச்சரிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, இதுவரை கைது செய்யப்பட்டுள்ள 249 தமிழக மீனவர்களையும், 83 விசைப்படகுகளுடன் உடனடியாக விடுதலை செய்யும்படி இலங்கை அரசுக்கு ஆணையிட வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

அனைத்து தரப்பினராலும் எதிர்ப்பார்க்கப்படும்



பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தர்மபுரி வந்தார். அவர் தர்மபுரி அருகே குண்டலப்பட்டியில் உள்ள டி.என்.ஜி. விடுதி கூட்ட அரங்கில் நடைபெற்ற பல்வேறு கூட்டங்களில் கலந்து கொண்டு பாராளு மன்ற தேர்தலையொட்டி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டங்களில் ராமதாஸ் பேசியபோது,  ’’பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் சமூக ஜனநாயக கூட்டணி உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணி சார்பில் முதல்கட்டமாக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு அவர்கள் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தர்மபுரி பாராளுமன்ற தொகுதி அனைத்து தரப்பினராலும் எதிர்பார்க்கப்படும் தொகுதியாக உள்ளது.
இந்த தொகுதியில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் போட்டியிட வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் விருப்பப்படுகின்றனர்.
உங்களின் எண்ணம் நிறைவேற வேண்டும் என்றால் கட்சி நிர்வாகிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக பாடுபட வேண்டும். நமது கட்சிக்கு பெண்களின் வாக்கை அதிக அளவில் பெற வேண்டும். அதற்கான நாம் திட்டமிட்டுள்ளபடி வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்து பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்க வேண்டும்.     மேலும் ஊரில் உள்ள முக்கிய பிரமுகர்களை தனித்தனியாக சந்தித்து நமது இயக்கம் எந்தெந்த கொள்கைக்காக பாடு படுகிறது என்பதை எடுத்துக் கூற வேண்டும்.
தர்மபுரி பாராளுமன்ற தொகுதியின் வெற்றி இதுவரை வரலாற்றில் இல்லாத வெற்றியாக அமைய வேண்டும். மாநிலம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் பாட்டாளி மகளிர் சங்க மாநாட்டை நடத்தும் பொறுப்பை நான் ஏற்றுள்ளேன்.
 இதற்காக அனைத்து தொகுதிகளிலும் நடைபெறும் மகளிர் சங்க மாநாட்டில் திரளான பெண்களை அழைத்துவர கட்சி நிர்வாகிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் பா.ம.க. வேட்பாளர் வெற்றிக்கு கட்சி நிர்வாகிகள் முழு மூச்சுடன் பாடுபட வேண்டும்.  இந்த வெற்றியின் மூலம் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும்’’என்று தெரிவித்தார்.

Saturday, December 28, 2013

புத்தாண்டு.. மூணு நாளைக்கு கடை மூடுங்க! - ராமதாஸ்

சென்னை: புத்தாண்டையொட்டி இரண்டு நாட்களில் மட்டும் ரூ.250 கோடிகளுக்கு மது விற்பனை செய்ய தமிழக அரசு இலக்கு நிர்ணயித்திருப்பதாகவும், எனவே புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் போது விபத்து உள்ளிட்ட அசம்பாவிதங்களைத் தவிர்க்க டிசம்பர் 31 முதல் வரும் ஜனவரி 2ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு மதுக்கடைகளை மூட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாட மக்கள் தயாராகிவரும் நிலையில், டிசம்பர் 31, ஜனவரி 1 ஆகிய இரு நாட்களில் மட்டும் ரூ.250 கோடிகளுக்கு மது விற்பனை செய்ய தமிழக அரசு இலக்கு நிர்ணயித்திருக்கிறது. தாராளமாக மது விற்பனை செய்ய வசதியாக ஒவ்வொரு கடையிலும் 15 நாட்களுக்கு தேவையான மது இருப்பு வைக்கப்பட வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியிருக்கிறது.தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் மக்களுக்குத் தேவையான அரிசி, எண்ணெய், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை தேவையான அளவுக்கு இருப்பு வைப்பதில் ஆர்வம் காட்டாத அரசு, மது வகைகளை இருப்பு வைப்பதில் மட்டும் ஆர்வம் காட்டி வருவது கண்டிக்கத்தக்கது.ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாடும் வழக்கம் தமிழகத்தில் அதிகரித்த பிறகுதான் இளைஞர்கள் மது அருந்தும் வழக்கமும் அதிகரித்திருப்பதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 14 முதல் 19 வயது வரையுள்ள சிறுவர்கள் மற்றும் இளைஞர்களில் 65 விழுக்காட்டினர் மது அருந்தும் பழக்கத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள் என்று அசோசெம் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதுமட்டுமின்றி, 20 வயது முதல் 29 வயது வரையுள்ளவர்களில் 25 விழுக்காட்டினர் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் போது மது அருந்துவதற்காக மட்டும் ரூ.1000 முதல் ரூ.10,000 வரை செலவழிக்கிறார்கள் என்றும் இந்த ஆய்வுகளில் கண்டறியப்பட்டிருக்கிறது.இந்த தகவல்கள் மிகவும் அதிர்ச்சி அளிக்கின்றன என்ற போதிலும் இந்த உண்மைகளை எவரும் மறுக்க முடியாது. கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவிலேயே மிக அதிக அளவில் சாலை விபத்துக்கள் நடைபெறும் மாநிலமாகவும், அதிக உயிரிழப்புகள் ஏற்படும் மாநிலமாகவும் தமிழகம் திகழ்கிறது. அதிலும் குறிப்பாக புத்தாண்டு கொண்டாட்டங்களின் போதுதான் அதிக அளவில் விபத்துக்கள் ஏற்படுகின்றன. கடந்த சில மாதங்களில் சென்னையில் சாலையோர நடைபாதைகளில் இருந்த குழந்தைகள் உள்ளிட்டோர் உயிரிழக்கக் காரணமான 2 பயங்கர சாலை விபத்துக்களுக்கு காரணம் மதுபோதை தான் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், புத்தாண்டையொட்டி நிகழும் பாலியல் குற்றங்களுக்கும் மது தான் காரணமாக விளங்குகிறது.இத்தனைத் தீமைகளுக்கும் காரணமான மதுவை கட்டுப்படுத்துவது தான் மக்கள் நலன் விரும்பும் ஓர் அரசின் கடமையாக இருக்க வேண்டும். ஆனால், மக்களை பாதுகாக்க வேண்டிய அரசே புத்தாண்டின் போது இலக்கு நிர்ணயம் செய்து மதுவை விற்பனை செய்வது வெட்கக்கேடான ஒன்றாகும். புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் போது குடித்துவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது என்று ஒருபுறம் அறிவுறுத்தும் அரசு, இன்னொரு புறம் மதுக்கடைகளை திறந்து வைத்து, இலக்கு நிர்ணயித்து மது விற்பனை செய்வது முரண்பாடுகளின் உச்சமாகும்.மது அருந்துவதை வழக்கமாகக் கொண்டவர்கள் அதிகம் வாழும் அமெரிக்கா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் கூட புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது விபத்துக்களைத் தவிர்க்கவும், மற்றவர்களுக்கு தொல்லையில்லாத கொண்டாட்டங்களை உறுதி செய்யவும் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அவ்வாறு இருக்கும் போது கலாச்சாரத்திற்கும், ஒழுங்குக்கும் பெயர்பெற்ற தமிழ்நாட்டில் அரசே அதிக அளவில் மது விற்பனை செய்வது சரியல்ல. எனவே, மக்களின் நலன்கருதி புத்தாண்டையொட்டி டிசம்பர் 31 முதல் ஜனவரி 2 வரை மூன்று நாட்களுக்கு மதுக்கடைகளை அரசு மூட வேண்டும்" என இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

Friday, December 27, 2013

நடவடிக்கை எடுக்க நேரம் வந்து விட்டது: ராமதாஸ்

தமிழக இதழாளர் கைது: இலங்கை மீது
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கை வடக்கு மாநிலம் கிளிநொச்சி பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ் பிரபாகரன் என்ற இளம் பத்திரிகையாளர் சிங்கள இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
கொழும்பு கொண்டு செல்லப்பட்டுள்ள அவரிடம் கடுமையான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. சுற்றுலா விசாவில் இலங்கை சென்ற தமிழ்பிரபாகரன் வடக்கு மாநிலத்தில் உள்ள இராணுவ முகாம்களை படம் பிடித்ததாகவும், அதற்காகவே அவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் சிங்கள அரசு கூறியிருக்கிறது.
இலங்கையில் போர் முடிவடைந்து நான்கரை ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும், போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இன்னும் மறுவாழ்வு அளிக்கப்படவில்லை. அவர்களுக்கு இன்னும் அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படவில்லை. இராணுவ முற்றுகைக்கு நடுவே அஞ்சி, அஞ்சி தான் அவர்கள் வாழ வேண்டியிருக்கிறது. வடக்கு மாநிலத்திலிருந்து இராணுவத்தை வெளியேற்றும்படி உலக நாடுகள் விடுத்த அறிவுரைகளையெல்லாம் புறந்தள்ளிவிட்ட இராஜபக்சே, தமிழர்கள் வாழும் பகுதிகளை இராணுவ மற்றும் சிங்கள மயமாக்கும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
ஒரு நாட்டின் மக்களுக்கு எதிராக அந்நாட்டு அரசே அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிடும் நிலையில், அது குறித்த உண்மைகளை உலகிற்கு அம்பலப்படுத்த வேண்டியது ஊடகவியலாளர்களின் கடமை ஆகும். இதற்காக அவர்கள் பல்வேறு வழிமுறைகளை கையாளுவது வழக்கம். அந்த வகையில்  இலங்கை நிலைமை குறித்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதற்கான முயற்சியில் தமிழகத்தைச் சேர்ந்த தமிழ்பிரபாகரனும் ஈடுபட்டிருக்கக் கூடும். ஆனால், உண்மைகள் வெளியாகிவிடக் கூடாது என்பதில் தீவிரம் காட்டிவரும் இலங்கை அரசு மக்களின் வாழ்க்கை நிலையை கண்டறிவதற்காகச் சென்ற ஓர் ஊடகவியாளரை பொய்யான குற்றச்சாற்றில் கைது செய்திருப்பது கண்டிக்கத் தக்கது.
இப்போது கைது செய்யப்பட்டுள்ள இதழாளர் இதற்கு முன்பும் இலங்கை சென்று தமிழர்களின் அவல நிலை பற்றி தொடர் கட்டுரை எழுதியுள்ளார். அது இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. அதேபோல், இப்போதும் நடந்துவிடக்கூடாது என்பதற்காகவே அவரை சிங்களப்படையினர் கைது செய்திருப்பதாகத் தோன்றுகிறது. காரணமின்றி, கைது செய்யப்பட்டுள்ள இதழாளரை உடனடியாக விடுவிக்க இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், இதை இந்த ஒரு பத்திரிகையாளர் சம்பந்தப்பட்ட பிரச்சினையாக மட்டும்  பார்க்கக்கூடாது. இலங்கையில் நிலவும் மனித உரிமை மீறல்களை வெளிக்கொண்டுவர முயலும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் இதே நிலை தான். கடந்த சில ஆண்டுகளில் மட்டும் இலங்கை அரசால்  அச்சுறுத்தப்பட்டு வேறு நாடுகளுக்கு தப்பிச் சென்ற பத்திரிக்கையாளர்கள் பலர். கடந்த அக்டோபர் மாதத்தில் கூட இலங்கையில் செய்தி செகரிக்கச் சென்ற ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜேக்கி பார்க், ஜேன் வொர்த்திங்டன் ஆகிய இரு பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டனர். ஐ.நா. விதிகளின்படி இவை கடுமையான மனித உரிமை மீறல் என்பது மட்டுமின்றி, உலகிற்கு தெரியக் கூடாத அளவுக்கு  மிகப்பெரிய மனித உரிமை மீறல்கள் இலங்கையில் நடைபெறுகின்றன என்பதும் தெளிவாகிறது.

இலங்கை அரசுக்கு எதிரான இனப்படுகொலை, மனித உரிமை மீறல், போர்க்குற்றம் உள்ளிட்ட குற்றச்சாற்றுகளை நிரூபிக்க ஏராளமான ஆதாரங்கள் கிடைத்துள்ள நிலையில், அந்நாட்டின் மீது இனப்படுகொலை மற்றும் போர்க்குற்ற விசாரணைகளை நடத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள இந்திய அரசு ஏன் தயங்குகிறது என்பது தான் தெரியவில்லை. ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின்  அடுத்தக் கூட்டம் வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள நிலையில், இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்துவதற்கான நேரம் வந்துவிட்டது. இதை இந்திய அரசு சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்,

Thursday, December 26, 2013

10 ஆண்டுக்கு மேலாக சிறையில் உள்ள ஆயுள் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்: ராமதாஸ்

இது குறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் :-''கொலை வழக்கு ஒன்றில் தண்டிக்கப்பட்டு 23 ஆண்டுகளுக்கும் மேலாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விஜயா என்ற மனநலம் பாதிக்கப்பட்ட பெண்மணி சென்னை உயர்நீதிமன்ற ஆணையின்படி அண்மையில் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். ஆதரவற்ற அந்த ஏழைப் பெண் மீது சென்னை உயர்நீதி மன்றமும், நீதிபதிகளும் காட்டிய பரிவும், கருணையும் பாராட்டப்பட வேண்டியவை.விஜயாவைப் போலவே ஏராளமானோர் ஆதரவற்ற நிலையில், தண்டனைக் காலம் முடிவடைந்த நிலையிலும் விடுதலை ஆக முடியாமல் சிறைகளில் வாடிக் கொண்டிருக்கின்றனர். அரியலூர் மாவட்டம் உடையார் பாளையத்தைச் சேர்ந்த தென்தமிழன் என்பவர் கடந்த 26 ஆண்டுகளாக திருச்சி மத்திய சிறையில் வாடிக்கொண்டிருகிறார். குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுவிட்டது.ஆயுள் தண்டனைக் காலத்தை கழித்த பிறகும் அவர் விடுதலை செய்யப்படவில்லை. தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டிருந்ததால் மனநலம் பாதிக்கப்பட்ட அவர், சிறையில் தவறி விழுந்து எழும்பு முறிந்த நிலையில் திருச்சி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளார். தன்னுணர்வற்ற நிலையில் உள்ள அவரை, மனிதாபிமானம் இல்லாமல் சங்கிலியால் கட்டிலில் கட்டி வைத்து காவல் துறையினர் கொடுமைப்படுத்துகின்றனர்.அவரை விடுதலை செய்ய எந்த தடையும் இல்லை என்பதால், அவரை விடுவிப்பது குறித்து பரிசீலனை செய்யும்படி கடந்த 2009 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் ஆணையிட்டது. ஆனால், அப்போதைய அரசு தென்தமிழனை விடுதலை செய்ய மறுத்ததன் விளைவாகவே அவர் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறார்.ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரும் தண்டனைக் காலம் முடிவடைந்த பிறகும் விடுதலை செய்யப்படவில்லை. தண்டனைக் காலம் முடிந்தும் விடுதலை செய்யப்படாத ஆயுள் தண்டனைக் கைதிகளின் எண்ணிக்கை நூற்றுக்கும் மேல் இருக்கும். குறிப்பாக இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த பலர் தங்களின் எதிர்காலத்தை இழந்து சிறைகளில் வாடிக்கொண்டிருக்கின்றனர்.முந்தைய தி.மு.க. ஆட்சியின் போது 2006 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த 662 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். 2008 ஆம் ஆண்டில் அண்ணாவின் நூற்றாண்டு விழாவையொட்டி 7 ஆண்டு தண்டனை அனுபவித்த ஆயுள் தண்டனை கைதிகள், 5 ஆண்டு தண்டனை முடித்த 60 வயதைக் கடந்த கைதிகள் என 744 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.ஆனால், அப்போது கூட பல்வேறு காரணங்களைக் கூறி, இவர்கள் விடுவிக்கப்படவில்லை. இவர்களில் நளினி உள்ளிட்ட பலரை விடுதலை செய்வது குறித்து ஆலோசனைக் குழுவை அமைத்து முடிவெடுக்கும்படி உயர்நீதிமன்றம் ஆணையிட்டும், சொத்தைக் காரணங்களைக் கூறி இவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு மறுத்துவிட்டது. உடனடியாக விடுதலை செய்யப்படாவிட்டால், இவர்களில் பலரும் விஜயாவைப் போன்றும், தென்தமிழனைப் போன்றும் மனநலம் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது.சிறைகள் கைதிகளை திருத்துவதற்கான சீர்திருத்தக் கூடங்களாக இருக்க வேண்டுமே தவிர, சித்திரவதைக் கூடங்களாக இருக்கக் கூடாது. மேலும் சிறையில் நன்னடத்தையுடன் இருப்பவர்களை விடுதலை செய்வதால், சமுதாய அமைதிக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடாது. எனவே, அவர்களின் வாழ்வில் புதிய விடியலை ஏற்படுத்தும் வகையில், பத்தாண்டுகளுக்கு மேல் சிறையிலிருக்கும் ஆயுள் தண்டனை கைதிகளை வரும் புத்தாண்டையொட்டி தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும்' என இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 

Monday, December 23, 2013

பிடிக்காதவர்களை பழிவாங்கும் நோக்குடனும் நடந்து கொள்ளும் போக்கு



பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள கிறித்துமஸ் வாழ்த்து செய்தியில், ’’எதிரிகளையும் மன்னிக்க வேண்டும் என்ற உயர்ந்த தத்துவத்தை போதித்த இயேசு கிறித்துவின் பிறந்தநாளை கிறித்துமஸ் திரு நாளாக கொண்டாடும் கிறித்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த கிறித்துமஸ் திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகம் முழுவதும் அன்பு, கருணை, மகிழ்ச்சி ஆகியவை நிலவ வேண்டும் என்று இயேசுபிரான் விரும்பி னார். ஏழைகளிடத்திலும், பாவிகளிடத்திலும் அன்பு காட்டினார். மனிதர்களை மட்டுமின்றி, விலங்கு களையும் நேசித்தார்.

உன் மீது நீ அன்பு காட்டுவதைப் போல அடுத்தவர் மீது நீ அன்பு காட்டுவாயாக! என்று கூறி அன்பின் மகத்துவத்தை மற்றவர்களுக்கும் புரிய வைத்தவர். ஆனால், இயேசு போதித்த கொள்கைகளை எல்லாம் மறந்துவிட்டு சுயநலத்துடனும், பிடிக்காதவர்களை பழிவாங்கும் நோக்குடனும் நடந்து கொள்ளும் போக்கு  அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.
‘‘தந்தையே இவர்களை மன்னியும்... ஏனெனில் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதே இவர்களுக்குத் தெரியவில்லை’’ என்றார் இயேசுபிரான். அவரது இந்த போதனையை மனதில் கொண்டு, மற்றவர்களின் தவறுகளை மன்னித்து, நாட்டில் அமைதி நிலவவும், போட்டி பொறாமைகள் அகலவும், ஏழைகள் மற்றும் நலிவடைந்த பிரிவினரின் துயரங்கள் அகலவும் உழைப்போம் என இயேசுபிரான் அவதரித்த இந்த நன்னாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்போம் என்று கூறி மீண்டும் ஒருமுறை கிறித்துமஸ் வாழ்த்துக் களைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’என்று தெரிவித்துள்ளார்

இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும்: ராமதாஸ்



பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வங்கக்கடலில் மீன் பிடிப்பதற்காகச் செல்லும் தமிழக மீனவர்களை சிறை பிடித்துச் செல்வது தான் சிங்களப் படையினரின் வாடிக்கையாகிவிட்டது.  அதிலும், இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீனவர்களை சிங்களப்படையினர் கைது செய்வது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.
கடந்த திசம்பர் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் மட்டும் நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 140 மீனவர்களை சிங்களப்படையினர் துப்பாக்கி முனையில் கைது செய்து அழைத்துச் சென்றனர். இவர்கள் தவிர மேலும் 70 மீனவர்கள் ஏற்கனவே இலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை சிறைகளில் வாடும் 210 தமிழக மீனவர்களை விடுவிக்கவும், அவர்களுக்கு சொந்தமான 70 படகுகளை மீட்கவும் நடவடிக்கை எடுக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு அரசியல் கட்சிகள் பலமுறை கோரிக்கை விடுத்தன. மீனவர்களும் கடந்த 11 ஆம் தேதி முதல் மீனவர்களும் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற  இன்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தமிழக முதலமைச்சரோ மீனவர்கள் கைது செய்யப்படும் போதெல்லாம் பிரதமருக்கு கடிதம் எழுதுவதுடன் தமது  கடமை முடிந்து விட்டதாக  நினைத்துக் கொள்கிறார். இதுவரை 35 முறை பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியும் பயனில்லை.
இலங்கை சிறையில் வாடும் 210 மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள், அவர்களின் குடும்பத்தினர் என மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் நாகப்பட்டினத்தில் கடந்த சனிக்கிழமை முதல் சாகும்வரை உண்ணாநிலை மேற்கொண்டுள்ளனர்.
அவர்களில் 15&க்கும் மேற்பட்ட பெண்கள் மயங்கி விழுந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.  நாகப்பட்டினத்தில் உள்ள ஆயிரத்திற்கும் அதிகமான வணிகர்கள் இன்று ஒருநாள் கடையடைப்பு நடத்துவதுடன், மீனவர்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். மீனவர்கள் இவ்வளவு தீவிரமாக போராடிவரும் போதிலும், இதுவரை அரசுத் தரப்பிலிருந்து எவரும் அவர்களைச் சந்தித்து குறைகளை கேட்கவில்லை. மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால் நாகையை சேர்ந்தவர் தான். அவர் நாகப்பட்டினத்தில் தான் இருக்கிறார் என்ற போதிலும் மீனவர்களை சந்தித்து, குறைகளை கேட்க முயற்சி செய்யவில்லை.
நடப்பாண்டில் மட்டும் 600&க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை சிங்களப்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை 3 மாதங்களுக்கும் மேலாக சிறையில் அடைத்து வைப்பதுடன், அவர்களின் படகுகளையும் நாட்டுடைமையாக்கி விடுவதால் அவர்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கின்றனர். அவர்களுக்கு அரசு சார்பில் எந்த உதவியும் வழங்கப்படவில்லை. சிங்களப்படை செய்யும் அட்டூழியத்தால் ஒரு சமுதாயமே சொல்லமுடியாத அளவுக்கு பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலையில், அதைப்பற்றி மத்திய, மாநில அரசுகள் கவலைப்படாமல் இருப்பது கண்டிக்கத்தக்கதாகும்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்யவும், அவர்களின் படகுகளை மீட்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக தமிழகத்திலிருந்து எழுப்பப்படும் குரல்களை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை என்பதால், அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய குழுவுடன் முதலமைச்சர் ஜெயலலிதா தில்லி சென்று, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும்படி வலியுறுத்த வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

Sunday, December 22, 2013

அனைத்துக்கட்சி குழுவுடன் முதல்வர் டெல்லி செல்லவேண்டும் : ராமதாஸ்



 பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’இலங்கை சிறையில் வாடும் 210 மீனவர் களையும், அவர்களின் படகுகளையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள், அவர்களின் குடும்பத்தினர் என மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் நாகப்பட்டினத்தில் கடந்த சனிக்கிழமை முதல் சாகும்வரை உண்ணாநிலை மேற்கொண்டுள்ளனர்.


நாகப்பட்டினத்தில் உள்ள இன்று ஒருநாள் கடையடைப்பு நடத்துவதுடன், மீனவர்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
நடப்பாண்டில் மட்டும் 600க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை சிங்களப்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை 3 மாதங்களுக்கும் மேலாக சிறையில் அடைத்து வைப்பதுடன், அவர்களின் படகுகளையும் நாட்டுடைமையாக்கி விடுவதால் அவர்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்யவும், அவர்களின் படகுகளை மீட்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக தமிழகத்திலிருந்து எழுப்பப்படும் குரல்களை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை என்பதால், அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய குழுவுடன் முதலமைச்சர் ஜெயலலிதா தில்லி சென்று, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும்படி வலியுறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Saturday, December 21, 2013

கரும்பு கொள்முதல் விலை: உழவர்களுக்கு தமிழக அரசு துரோகம்: ராமதாஸ் அறிக்கை



பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் 2013 --14 ஆண்டு பருவத்தில் கரும்பு கொள்முதல் விலையாக டன்னுக்கு ரூ. 2650   வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயயலலிதா அறிவித்திருக்கிறார். கரும்புக்கு நியாயமான விலை வழங்கப்பட வேண்டும் என்று விவசாயிகள் கோரி வந்த நிலையில் யானைப் பசிக்கு சோளப்பொறியைப் போல தமிழக அரசு அறிவித்திருக்கும் கரும்புக் கொள்முதல் விலை மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.
கரும்பு பருவம் கடந்த அக்டோபர் மாதமே தொடங்கிவிட்ட நிலையில், கரும்புக்கான கொள்முதல் விலை அறிவிக்கப்படாததை சுட்டிக்காட்டி கடந்த நவம்பர் மாதம் அறிக்கை ஒன்றை வெளியிட்டேன். அதில் கரும்புக்கான உற்பத்திச் செலவு அதிகரித்திருப்பதால், நடப்பு பருவத்தில் டன்னுக்கு ரூ.3500 வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். ஆனால், அதன்பின் ஒரு மாதம் கழித்து கரும்புக்கான கொள்முதல் விலையை அறிவித்துள்ள  அரசு, டன்னுக்கு ரூ. 2650  வழங்கப்படும் என்று கூறியுள்ளது.
கரும்புக்கான நியாய மற்றும் ஆதாய விலையை மத்திய அரசு தான் நிர்ணயிக்கிறது. ஆனால், அது போதுமானதாக இருப்பதில்லை என்பதால், அத்துடன் மாநில அரசின் சார்பில் ஒரு குறிப்பிட்ட தொகை மாநில பரிந்துரை விலையாக நிர்ணயிக்கப்பட்டு அதையும் சேர்த்து வழங்கும்படி சர்க்கரை ஆலைகளுக்கு ஆணையிடப்படும். நடப்பாண்டில் மத்திய அரசின் சார்பில் ஒரு டன் கரும்புக்கு நியாய மற்றும் ஆதாய விலையாக  ரூ. 2100 அறிவிக்கப்பட்டது. அத்துடன் மாநில அரசின் சார்பில் ரூ.550 மட்டும் பரிந்துரை விலையாக சேர்த்து வழங்கும்படி ஆணையிடப்பட்டுள்ளது. கரும்பு விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு இவ்வாறு செய்யப்பட்டிருப்பதாகவும், இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைவார்கள் என்றும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்திருக்கிறார்.
ஆனால், உண்மையில், கரும்பு கொள்முதல் விலை உயர்வு என்ற பெயரில் கரும்பு கொள்முதல் விலையை ஜெயலலிதா குறைத்திருக்கிறார். கடந்த இரு ஆண்டுகளாக ஒரு டன் கரும்புக்கு மாநில அரசின் பரிந்துரை விலையாக ரூ. 650 அறிவிக்கப்பட்டு வந்தது. இந்தியாவின் பல மாநிலங்களில் மாநில அரசின் பரிந்துரை விலை கடந்த ஆண்டைவிட அதிகரிக்கப்பட்டுள்ளது. ஹரியானாவில் மாநில அரசின் பரிந்துரை விலையாக ரூ. 910ம், பஞ்சாபில் ரூ.800ம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. சில மாநிலங்களில் பரிந்துரை விலையுடன் மாநில அரசின் சார்பில் ஒரு தொகை  மானியமாக கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த பரிந்துரை விலையை ரூ.550 ஆக குறைத்திருப்பதன் மூலம், ஆலை அதிபர்களுக்கு சாதகமாக செயல்பட்டு கரும்பு விவசாயிகளுக்கு மிகப் பெரிய அநீதியையும், துரோகத்தையும் தமிழக அரசு செய்திருக்கிறது.

கரும்புக்கான உற்பத்திச் செலவுடன், இலாபமாக 50% சேர்த்து கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு அமைத்த வல்லுனர் குழு பரிந்துரைத்துள்ளது. நடப்பாண்டில் ஒரு டன் கரும்பை உற்பத்தி செய்ய ரூ. 2510 ஆவதாக கணக்கிடப்பட்டுள்ளது. அத்துடன் விவசாயிகளுக்கான இலாபமாக ரூ.1255 சேர்த்து ஒரு டன் கரும்புக்கான கொள்முதல் விலையாக ரூ. 3765 நிர்ணயிக்கப் பட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்ய மத்திய அரசு தவறிவிட்ட நிலையில், கரும்பு விவசாயிகளுக்கு  நியாயமான விலை கிடைக்கச் செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் மாநில அரசுக்கு உள்ளது.
எனவே, கரும்பு விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு கரும்புக்கான கொள்முதல் விலையை டன்னுக்கு குறைந்தது ரூ. 3500 ஆக நிர்ணயிக்க தமிழக அரசு முன்வர வேண்டும். இனி வரும் காலங்களில் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளுடன் சர்க்கரை ஆணையர் மூலம் பேச்சு நடத்தி  கரும்புக்கான கொள்முதல் விலையை நிர்ணயிக்கும் நடைமுறையை அறிமுகப்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

Monday, December 16, 2013

கடலூர், வேலூர் மாவட்டங்களில் மாசுபாட்டை போக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்



பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் கடலூர், வேலூர், கோவை ஆகிய மாவட்டங்களின் தொழில் பகுதிகள் மிக மோசமாக  சுற்றுச்சூழல் மாசடைந்த பகுதிகள் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. இம்மாவட்டங்களில் தொழில்மாசுபாட்டின் அளவு அபாய கட்டத்தை தாண்டியிருக்கிறது.
இந்தியாவில் உள்ள தொழில்பகுதிகளில் சுற்றுச்சூழல் மாசுபாடு எந்த அளவுக்கு அதிகரித்திருக்கிறது என்பதை அறிய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சார்பில் ஆண்டுதோறும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் கோவை, கடலூர், வேலூர் ஆகிய தொழில் பகுதிகளில் சுற்றுச்சூழல் மிகமோசமாக பாதிக்கப்பட்டிருப்பதாக நடப்பாண்டில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்திருக்கிறது. வேலூர் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் மாசுபாட்டு குறியீடு 80 புள்ளிகளுக்கு மேல் இருப்பதாகவும், கடலூர் மற்றும் கோவையில்  சுற்றுச்சூழல் மாசுபாட்டு குறியீடு 70 புள்ளிகளுக்கு மேல் இருப்பதாகவும் ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.
கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள இரசாயன தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் வேதிக் கழிவுகளால் அப்பகுதியில் உள்ள வேளாண் விளைநிலங்கள் மலட்டுத் தன்மைக் கொண்டவையாக மாறிவிட்டன. இந்த ஆலைகளிலிருந்து அடிக்கடி நச்சு வாயு வெளியேறுவதால் அருகிலுள்ள கிராமங்களில் வாழும் மக்கள் மயக்கமடைவதும், உயிருக்கு பயந்து ஊரைவிட்டு ஓடுவதும் வழக்கமான நிகழ்வுகளாகி விட்டன. அதுமட்டுமின்றி, மீனவர்கள், விவசாயிகள், குழந்தைகளுக்கு பல பாதிப்புகளுக்கு ஆளாகியியுள்ளனர்.

பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படுவது சாதாரண நிகழ்வாகிவிட்டது.

வேலூர் மாவட்டத்திலும் வாணியம்பாடி பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலைகளில் இருந்தும், ராணிப்பேட்டையில் உள்ள இரசாயன தொழிற்சாலைகளில் இருந்தும் வெளியேறும் கழிவுகளால் வேளாண் விளைநிலங்களுக்கும் மனிதர்களுக்கும் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. பாலாற்றில் தோல் பதனிடும் தொழிற்சாலைகளின் கழிவுகள் வெளியிடப்படுவதால் அங்குள்ள மக்களுக்கு பலவிதமான நோய்கள் ஏற்படுகின்றன. கோவை மாவட்டத்தின் நிலைமையும் இதேதான். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், தொழிற்சாலைக் கழிவுகளால் இம்மாவட்டங்கள் மனிதர்கள் வாழ்வதற்கு தகுதியற்றவையாகி விட்டன.
இந்த மாவட்டங்களில் தொழில் மாசுபாடு அதிகரித்து வருவதைக் கண்டித்தும், அவற்றை சரிசெய்து மக்கள் வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த வலியுறுத்தியும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. வேலூர் மாவட்டத்திலுள்ள தோல் தொழிற்சாலைகளை மூட வலியுறுத்தி கடந்த 1995 ஆம் ஆண்டு பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் தலைமையிலும், இரசாயன தொழிற்சாலைகளில் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்கக் கோரி கடந்த 2000 ஆம் ஆண்டில் எனது தலைமையிலும் மிதிவண்டிப் பேரணிகள் நடத்தப்பட்டிருக்கின்றன. இந்த போராட்டங்களின் பயனாக வேலூர் மாவட்டத்திலுள்ள தோல் தொழிற்சாலைகளை மூடும்படி உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. இராசயன தொழிற்சாலைகளிலும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்க ஆணையிடப்பட்டது.
இதேபோல் கடலூர் மாவட்டத்திலும்  சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக மருத்துவர் அய்யா தலைமையிலும், எனது தலைமையிலும் அண்மையில் பல போராட்டங்கள் நடத்தப்பட்டன.  இதன்பயனாக, கடலூர் மாவட்டத்தில் உள்ள இரசாயன ஆலைகளிலிருந்து கழிவுகள் வெளியேறுவதை தடுக்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. ஆனால், அவை எதுவும் செயல்படுத்தப்படாததால் இம்மாவட்டங்களின் சுற்றுச்சூழல் மிகவும் மோசமடைந்துள்ளது.
 இந்த மோசமான நிலைமையை மாற்ற மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. வேலூர் மாவட்டத்தில் தொழில் மாசுபாடு அதிகரித்திருப்பதால் அங்கு புதிய தொழிற்சாலைகள் அமைக்கத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. கடலூர், கோவை மாவட்டங்களிலும் அதே அளவுக்கு தொழில் மாசுபாடு அதிகரித்துள்ள போதிலும் அங்கு புதிய தொழிற்சாலைகள் அமைக்கத் தடை விதிக்கப்படவில்லை. குறிப்பாக சுற்றுச்சூழல் ரீதியாக வேலூர் மாவட்டம் கருப்பு மாவட்டம் என அறிவிக்கப்பட்ட பிறகும் நிலைமையில் எந்த மாற்றமும் இல்லை. மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருப்பவர் தமிழகத்தை சேர்ந்தவராக இருந்தும் இந்த நிலை நீடிப்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.
அதிகரித்துவரும் சுற்றுச்சூழல் மாசுபாடு தடுக்கப்படவில்லை என்றால் ஒட்டுமொத்த தமிழகமும் வாழத் தகுதியற்ற நரகமாகிவிடும். எனவே, தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளால் ஏற்படும் மாசுக்களை கட்டுப்படுத்தி, மக்கள் வாழ்வதற்கேற்ற சூழலை மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

Thursday, December 12, 2013

பொறியியல் கல்லூரி குழப்பங்களை போக்க சட்டத் திருத்தம் தேவை: ராமதாஸ்



பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பொறியியல் கல்லூரிகளை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விகுழுவுக்கு இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து 8 மாதங்களாகிவிட்ட நிலையில், அதனால் ஏற்பட்ட குழப்பங்களை சரி செய்ய மத்திய அரசு இன்னும் முன்வரவில்லை. இதனால், இந்தியாவில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் எதிர்காலம்  கேள்விக்குறியாகியுள்ளது.
எம்.பி.ஏ., எம்.சி.ஏ., ஆகிய படிப்புகளை நடத்த அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழுவின் முன் அனுமதி பெற வேண்டும் என்ற விதியை எதிர்த்து தனியார் பொறியியல் கல்லூரிகளின் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், எம்.பி.ஏ. போன்ற மேலாண்மையியல் படிப்புகள் தொழில்நுட்ப கல்வி என்ற வரம்புக்குள் வராது என்று தீர்ப்பளித்தது. அதுமட்டுமின்றி, அகில் இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழுச் சட்டத்தில் கடந்த 2000ஆவது ஆண்டில் செய்யப்பட்ட திருத்தங்களுக்கு நாடாளுமன்றத்தின் அனுமதி பெறப்படவில்லை என்பதால் அக்குழு இனி பொறியியல் கல்லூரிகளுக்கு ஆலோசனை கூறும் அமைப்பாக செயல்படலாமே ஒழிய ஒழுங்கு படுத்தும் அமைப்பாக இருக்க முடியாது  என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி அளிக்கப்பட்ட இந்தத் தீர்ப்பை எதிர்த்து அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவையும் ஜூலை மாதத்தில் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. அப்போதிலிருந்தே பொறியியல் கல்லூரிகளை ஒழுங்கு படுத்த எந்த அமைப்பும் இல்லாமல் போய்விட்டது.
தொழில்நுட்பக் கல்வி குழுவின் அதிகாரம் பறிக்கப்பட்டுவிட்டதால், பொறியியல் கல்லூரிகளை ஒழுங்கு படுத்தும் அதிகாரத்தை பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு வழங்கி மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் ஆணையிட்டிருக்கிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை தான் பொறியியல் கல்வியின் தரத்தையும், பொறியியல் பயிலும் மாணவர்களின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கி உள்ளது. இந்தியாவில் 567 பல்கலைக்கழகங்களும், அவற்றுடன் இணைந்த 51 ஆயிரம் கல்லூரிகளும்  உள்ளன. அவற்றை ஒழுங்குபடுத்தும் பணியையே  திறம்பட செய்ய முடியாமல் பல்கலைக்கழக மானியக் குழு திணறி வரும் நிலையில், மேலும் 13,000 தொழிநுட்ப கல்வி நிறுவனங்களை நிர்வகிக்கும் பொறுப்பையும்  அதனிடமே ஒப்படைப்பது தொழில்நுட்பக் கல்வியின் சீரழிவுக்கே வழி வகுக்கும்.
பொறியியல் கல்லூரிகளை தமது கட்டுப்பாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களின் மூலம் ஒழுங்குபடுத்த திட்டமிட்டுள்ள பல்கலைக்கழக மானியக் குழு, தனியார் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களுக்கும் இந்த அதிகாரத்தை வழங்க தீர்மானித்திருக்கிறது. நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு இந்த அதிகாரம் வழங்கப்பட்டால் தெருவுக்குத் தெரு பொறியியல் கல்லூரிகள் திறக்கப்பட்டு விடும். அது பொறியியல் கல்வியின் தரம் குறையவே வழி வகுக்கும். ஏற்கனவே, பொறியியல் படிப்பை முடித்தவர்கள் வேலை பெறும் திறன் இல்லாமல் மிகக் குறைந்த ஊதியத்தில் , தாங்கள் படித்ததற்கு சம்பந்தமில்லாத வேலையை செய்து வருகின்றனர். இந்நிலையில் பொறியியல் கல்வியின் தரம் மேலும் குறைந்தால் அது இளைய தலைமுறையின் எதிர்காலத்தில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும்.போதிய கட்டமைப்பு வசதியில்லாத 44 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அங்கீகாரத்தை பறிக்க வேண்டும் என வல்லுனர்குழு கூறியுள்ள நிலையில், புதிய பொறியியல் கல்லூரிகளை தொடங்க அனுமதிக்கும் அதிகாரத்தை நிகர்நிலைப் பல்கலைகளுக்கு வழங்குவது  தவறான முன்னுதாரமாகிவிடும்.

பொறியியல் கல்லூரிகளை ஒழுங்குபடுத்தும் திறனும், தகுதியில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவுக்கு மட்டுமே உண்டு. எனவே, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழுவுக்கு உரிய அதிகாரம் வழங்க நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே உரிய சட்டத்திருத்தம்  கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்; அதன் மூலம் நாடு முழுவதும் தொழில்நுட்பக் கல்வி பயிலும் ஒரு கோடிக்கும் அதிகமான மாணவ& மாணவியரின் எதிர்காலத்தை மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்.  இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

Tuesday, December 10, 2013

சமையல் எரிவாயு விலை உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும் : ராமதாஸ்



பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கையில்,   ’’சமையல் எரிவாயு விலை உருளைக்கு ரூ.3.46 உயர்த்தப்பட்டிருப்பதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. ஏழை மற்றும் நடுத்தர மக்களை பாதிக்கும் இந்த விலை உயர்வு கடுமையாக கண்டிக்கத் தக்கது. 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல் முடிவடையும் வரை காத்திருந்து, முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் விலை உயர்வை அறிவிப்பது மக்களை ஏமாற்று ம் செயலாகும்.


எரிபொருள் விலை நிர்ணயத்தில் மத்திய அரசு தவறானக் கொள்கையை கடைபிடித்து வருகிறது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றை மக்களின் அடிப்படைத் தேவையாக கருதி விலை நிர்ணயம் செய்ய வேண்டிய அரசு, அவற்றை பணம் காய்க்கும் மரமாக கருதி வரி மேல் வரி விதித்து வருகிறது. கடந்த 2012&13 ஆண்டில் எரிபொருட்களின் மீதான வரி மூலமாக மட்டும் மத்திய, மாநில அரசுகளுக்கு ரூ. 3 லட்சம் கோடிக்கும் வ ருவாய் கிடைத்திருக்கிறது என்பதிலிருந்தே எரிபொருள் விலை என்ற பெயரில் ஏழை மக்களை மத்திய, மாநில அரசுகள் கசக்கிப் பிழிகின்றன என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.


சமையல் எரிவாயு உருளைகளை வினியோகிக்கும் முகவர்களுக்கு வழங்கப்படும் கமிஷன் தொகை உயர்த்தி வழங்கப்பட்டது தான் விலை உயர்வுக்கு காரணம் என்று மத்திய அரசு கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. எரிவாயு முகவர்களுக்கு ஓர் உருளைக்கு ரூ. 37.25 கமிஷனாக வழங்கப்பட்டு வருகிறது. முகவர்களின் கமிஷன் தொகை கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் தான் உருளைக்கு ரூ.11.50 உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் ம கவர்களின் கமிஷனை மீண்டும் ரூ.3.46 உயர்த்துவதும், அதை பொது மக்களின் தலையில் சுமத்துவதும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும். முகவர்களின் கமிஷனை உயர்த்துவதாக இருந்தால் அதை மத்திய அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும். அதைவிடுத்து அந்த சுமையையும் மக்களின் தலையில் சுமத்துவது முறையல்ல. முகவர்களின் நலனில் காட்டும் அக்கறையில் சிறிதளவையாவது மக்களிடமும் மத்திய அரசு காட்ட வேண்டும்.


ஏற்கனவே, ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்பட்டு வந்த சமையல் எரிவாயு உருளைகளின் எண்ணிக்கையை ஆண்டுக்கு ஒன்பதாக மத்திய அரசு குறைத்து விட்டது. இதனால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு குறைந்தது 2,000 ரூபாயாவது கூடுதலாக செலவாகிறது. இன்னொருபுறம் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் மக்கள் சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்து வருகின்றனர். இத்தகைய சூழலில் இன்னும் à ��ரு விலை உயர்வை மக்கள் தாங்க மாட்டார்கள். எனவே, முகவர்களுக்கான கமிஷன் தொகை உயர்வை மத்திய அரசே ஏற்றுக் கொண்டு, சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்’’என்று கூறியுள்ள்

Sunday, December 8, 2013

ஏற்காட்டில் ஜனநாயகம்தோல்வி: ராமதாஸ்

சென்னை: ஏற்காடு இடைத்தேர்தலில் வெற்றி பணத்தையும், பரிசுப்பொருளையும் கொடுத்து வாங்கப்பட்டிருக்கிறது என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இடைத்தேர்தலில் பணநாயகம் வெற்றி பெற்றுள்ளது. ஜனநாயகம் தோல்வியடைந்திருக்கிறது. நோட்டா முறையை அதிகம் பேர் பயன்படுத்தியுள்ளது, திராவிட கட்சிகளுக்கு எதிரான மக்களின் மனநிலையே காட்டுகிறது. தமிழகத்தில் நடைபெறும் இடைத்தேர்தல்கள் மக்களின் மனநிலையை பிரதிபலிப்பதில்லை. தற்போதைய ஆளுங்கட்சிக்கு எதிரான கோபத்தை வரும் லோக்சபா தேர்தலில் மக்கள் காட்டுவார்கள். அப்போது மக்களின் ஆதரவு யாருக்கு என தெரியவரும் என கூறியுள்ளார்.

Thursday, December 5, 2013

கேரள மாநிலத்திலிருந்து தமிழர்கள் விரட்டப்படுவதை தடுக்க வேண்டும்: ராமதாஸ்



பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அட்டப்பாடி பகுதியில் வாழ்ந்து வரும் தமிழர்கள் அனைவரும் தங்களுக்குச் சொந்தமான நிலங்களை அப்படியே விட்டுவிட்டு வெளியேற வேண்டும் கேரள அரசு ஆணையிட்டிருக்கிறது. இதனால் அட்டப்பாடி தமிழர்கள் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.
அட்டப்பாடியில் தமிழர்கள் விவசாயம் செய்துவரும் நிலங்கள் பழங்குடியினருக்கு சொந்தமானவை என்றும்,பழங்குடியினரின் நிலங்கள் அவர்களுக்கே சொந்தம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி  தமிழர்கள் தங்களின் நிலங்களை பழங்குடியினரிடமே ஒப்படைக்க வேண்டும் என்றும் கேரள அரசு  கூறுகிறது. பழங்குடியினருக்கு சொந்தமான நிலங்களை தமிழர்கள் எந்தக் காலத்திலும் ஆக்கிரமிக்க வில்லை. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படுவதற்கு முன்பாகவே தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் இருந்து அட்டப்பாடியில் குடியேறிய தமிழர்கள் தான் அந்தப் பகுதியை வளம் கொழிக்கும் பூமியாக்கினர். ஒருகட்டத்தில் ஆதிவாசிகள் முழு மனதுடன் தங்கள் நிலங்களை  தமிழர்களுக்கு விற்பனை செய்தனர்.
பழங்குடியினரின் நிலங்களை மற்றவர்கள் வாங்குவது தொடர்பாக பிரச்சினை எழுந்தபோது அது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பழங்குடியினரின் நிலங்களை மீட்டு அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. அதனடிப்படையில் 1999ஆம் ஆண்டில் சட்டமியற்றிய கேரள அரசு, 1986ஆம் ஆண்டுக்கு முன் பழங்குடியினரின் நிலங்களை வாங்கியோர் 5 ஏக்கரை வைத்துக் கொண்டு மீதமுள்ள நிலங்களையும், அதற்குப் பின் நிலம் வாங்கியோர் அதை முழுமையாகவும் ஒப்படைக்க வேண்டும் என்றும் அறிவித்தது. அதன்மீது, கடந்த 14 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் இப்போது திடீரென தமிழர்களை விரட்டுவதில் கேரளா தீவிரம் காட்டுகிறது.
தமிழர்களில் பெரும்பாலோனோர் 1986  ஆம் ஆண்டுக்கு முன்பே நிலங்களை வாங்கியுள்ளனர். எனவே அவர்கள் நிலங்களை ஒப்படைக்கத் தேவையில்லை.  அதுமட்டுமின்றி, நிலங்களை விற்பனை செய்த பழங்குடியினரும், அட்டப்பாடி பகுதியைச் சேர்ந்த மலையாள விவசாயிகளும் தமிழர்கள் நிலத்தை திரும்ப ஒப்படைக்கத் தேவையில்லை என்று வெளிப்படையாக கூறிவருகின்றனர். ஆனால், கேரள அரசில் பணியாற்றும் இ.ஆ.ப., மற்றும் இ.கா.ப., அதிகாரிகள் சிலர், பழங்குடியினரின் நிலங்களை  பெருநிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் நோக்குடன் தான் தமிழர்களை விரட்ட முயல்கின்றனர். இதற்காக இரவு நேரங்களில் தமிழர்களின் வீடுகளுக்குள் புகுந்து அத்துமீறுதல்,  பொய் வழக்குகளை பதிவு செய்து சிறையில் அடைத்தல் உள்ளிட்ட செயல்களில் கேரள காவல்துறை ஈடுபட்டிருக்கிறது. தமிழர் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களின் வாழ்வாதாரங்களை பறித்து துரத்தியடிக்க கேரள அரசு முயல்வதும், அதற்காக தமிழர்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவதும் கண்டிக்கத் தக்கவை.
கேரளாவில் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள பழங்குடியினருக்கு சொந்தமான 28 ஆயிரம் ஏக்கர் நிலங்களை பன்னாட்டு பெருநிறுவனங்கள் பறித்துக் கொண்டுள்ளன. அவற்றை மீட்க நடவடிக்கை எடுக்காத கேரள அரசு, தமிழர்களின் வாழ்வாதாரமாக கருதப்படும் நிலங்களை மட்டும் பறிக்க முயல்வது முறையல்ல.
சட்டத்திற்கு முரணான கேரள அரசின் நடவடிக்கையால் 2500 குடும்பங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே, அட்டப்பாடியிலிருந்து தமிழர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை கேரள அரசு கைவிட வேண்டும். தமிழக முதலமைச்சரும், கேரள முதலமைச்சரைத் தொடர்பு கொண்டு பேசி அட்டப்பாடி தமிழர்களை காக்க முன்வர வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

அணைந்தது ஒளிவிளக்கு! மண்டேலா மறைவுக்கு மருத்துவர் இராமதாசு இரங்கல்!


 பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

உலகில் மிகவும் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவரும், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையில் அக்கறை கொண்டவருமான நெல்சன் மண்டேலா உடல்நலக் குறைவால் மறைந்துவிட்டார் என்ற செய்தி எனது இதயத்தை இடியாய் தாக்கியது; கண்களை குளமாக மாற்றியது.

தென் ஆப்பிரிக்காவில் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த மண்டேலா தமது இளம் வயதிலேயே ஆப்பிரிக்க தேசிய காங்கிரசில் இணைந்து இனவெறி வெள்ளையர் அரசுக்கு எதிராக போராடினார். அறவழியிலும், ஆயுத வழியிலும் போராடிய மண்டேலா தேசத்துரோகம் செய்தார் என்ற பொய்குற்றச்சாற்றின் அடிப்படையில் 27 ஆண்டுகள் கொடுஞ்சிறையில் அடைக்கப்பட்டார்.
விடுதலைக்கு பின் இனவெறிக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெற்று, தென்னாப்பிரிக்காவின் முதல் கறுப்பின அதிபராக பதவியேற்ற மண்டேலா அதன்பிறகு நிகழ்த்தியவை அற்புதங்கள். தம்மை 27 ஆண்டுகள் சிறையில் அடைத்த வெள்ளைக்கார ஆட்சியாளர்களை மன்னித்தது, நீதிமன்றத்தில் தமக்கு எதிராக வாதாடி தண்டனை பெற்றுத் தந்த அரசு வழக்கறிஞருக்கு விருந்து அளித்தது; தம்மை சிறையில் அடைத்த வெள்ளைக்கார பிரதமர் ஹென்ட்ரிக் வெர்வோர்ட் மறைந்த பின் பல நூறு கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து அவரது மனைவியை சந்தித்து தேநீர் அருந்தியது உள்ளிட்ட நடவடிக்கைகள் அந்தப் போராளியின் மன்னிக்கும் மனப்பாங்கை வெளிப்படுத்தியவை.
இத்தகைய செயல்களால் தான் மகாத்மா காந்திக்கு இணையாக போற்றப்படும் அளவுக்கு உயர்ந்தார். அமைதிக்கான நோபல் பரிசு, இந்திய அரசின் பாரத ரத்னா உள்ளிட்ட 250க்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளை வென்றவர்.
நான் மிகவும் மதித்து போற்றும் உலகத் தலைவர்களின் மண்டேலா முதன்மையானவர். அவரைப் போன்ற ஒருவர் இனி இந்த உலகில் தோன்றுவது அரிது. உலகிற்கே கருணை ஒளியும், நம்பிக்கை ஒளியும் காட்டிய விளக்கு அணைந்து விட்டது. இது ஒட்டுமொத்த உலகிற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், தென்னாப்பிரிக்க மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நானும், குருவும் அஞ்சமாட்டோம்: டாக்டர் ராமதாஸ் பேட்டி

எத்தனை அடக்கு முறைகள் என்றாலும் நானும், குருவும் அஞ்சமாட்டோம் என டாக்டர் ராமதாஸ் கூறினார்.
வன்னியர் சங்க மாநில தலைவரும், பா.ம.க. எம்.எல்.ஏ.வுமான குரு, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டது செல்லாது என சென்னை ஐகோர்ட் புதன்கிழமை தீர்ப்பளித்தது.
அதனை தொடர்ந்து சிறையில் இருந்து வெளியே வந்த குரு எம்.எல்.ஏ., திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்திற்கு சென்றார். அப்போது அவரை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வரவேற்றார்.
இதன் பிறகு டாக்டர் ராமதாஸ், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
செய்யாத குற்றத்திற்காக ஜெ.குரு 8 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டு சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டார். இதற்கு காரணமானவர்களுக்கு வன்னிய மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.
வன்னிய மக்கள், வன்னிய இளைஞர்கள், பா.ம.க.வினர் மீது தமிழக அரசு, போலீசை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. காவல்துறை என்பது பொதுவாக அனைத்து மக்களுக்கும், உடைமைகளுக்கும், உயிருக்கும் பாதுகாப்பு தர வேண்டிய துறையாகும். ஆனால் இந்த ஆட்சியில் எந்தவித காரணமும் இல்லாமல் யாரையும் கைது செய்ய முடியும் என்ற நிலை உள்ளது.
தமிழக அரசு என்னை 12 நாட்கள் சிறையில் அடைத்து சித்ரவதை செய்தது. பின்னர் வெளியே வந்தவுடன் அறுவை சிகிச்சை பெற்ற நான், மிகுந்த வேதனையோடு இருந்தேன். வன்னியர்கள் 134 பேர் சிறையில் இருந்து வெளியில் வந்தவுடன் ஓரளவிற்கு ஆறுதலடைந்தேன்.
தற்போது உயர்நீதிமன்றத்தின் ஆணைப்படி சிறையில் இருந்து குரு விடுதலை செய்யப்பட்டதால் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன். எத்தனை அடக்கு முறைகள் என்றாலும் நானும், குருவும் அஞ்சமாட்டோம். இதற்கெல்லாம் வன்னிய மக்கள் தேர்தலில் சரியான பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார்.

மக்கள் பாடம் புகட்டுவர்: ராமதாஸ் சபதம்

திண்டிவனம்: தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதாகி, விடுதலையான வன்னியர் சங்க தலைவர் குரு, பா.ம.க., நிறுவனர், ராமதாசை சந்தித்து பேசினார். அப்போது ராமதாஸ் அளித்த பேட்டி: தமிழக அரசு சட்டத்தின் கீழ் ஆட்சி நடத்தாமல், போலீஸ் ஆட்சியை நடத்துகிறது. வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு உட்பட பா.ம.க.,வினர், 134 பேரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இப்போது, அது தவறு என, ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஹிட்லர் போல் ஆட்சி புரியும் ஜெயலலிதா, என்ன ஆனார் என, நாம் வரலாற்றில் பார்ப்போம். இதற்கெல்லாம், வரும் தேர்தலில் மக்கள் சரியான பாடத்தைப் புகட்டுவர், என்றார்.

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: