மீனவர் பிரச்சினை பற்றி கடந்த 27 மாதங்களில் 27 முறை பிரதமருக்கு கடிதம் எழுதியும் பயனில்லை என்பதை முதலமைச்சரே ஒப்புக்கொண்டுள்ளார். இனியாவது அவர் தமது அணுகுமுறையை மாற்றிக்கொண்டு, அனைத்துக்கட்சித் தலைவர்களுடன் பிரதமரை நேரில் சந்தித்து இலங்கையை கண்டிக்கும்படி வலியுறுத்துவாரா? அல்லது 28 ஆவது கடிதத்தை எழுதிவிட்டு அமைதியாகிவிடுவாரா? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை, காரைக்கால் பகுதி மீனவர்கள் 34 பேரை கடந்த ஜூலை 30 ஆம் தேதி சிங்களக் கடற்படை கைது செய்தது. அவர்களை இம்மாதம் 4 ஆம் தேதி இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்த போதிலும், அவர்களுக்கு சொந்தமான 5 படகுகளை விடுவிக்க மறுத்துவிட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள் தங்களின் படகுகளை மீட்பதற்காக, விடுதலையான பிறகும் தாயகம் திரும்பாமல், இலங்கையில் இருந்தவாறே போராடினர்.
வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை, காரைக்கால் பகுதி மீனவர்கள் 34 பேரை கடந்த ஜூலை 30 ஆம் தேதி சிங்களக் கடற்படை கைது செய்தது. அவர்களை இம்மாதம் 4 ஆம் தேதி இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்த போதிலும், அவர்களுக்கு சொந்தமான 5 படகுகளை விடுவிக்க மறுத்துவிட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள் தங்களின் படகுகளை மீட்பதற்காக, விடுதலையான பிறகும் தாயகம் திரும்பாமல், இலங்கையில் இருந்தவாறே போராடினர்.
ஒரு கட்டத்தில் இப்பிரச்சினையில் தலையிட்ட இலங்கைக்கான இந்திய தூதரக அதிகாரிகள், படகுகளை மீட்டு இந்தியாவுக்கு அனுப்பி வைப்பதாக உறுதியளித்த பிறகே 34 மீனவர்களும் கடந்த 22 ஆம் தேதி தாயகம் திரும்பினர். தங்களின் விசைப்படகுகள் விரைவில் கிடைத்துவிடும் என்று அவர்கள் நம்பிக் கொண்டிருந்த நிலையில் தான் அவர்களின் படகுகள் நாட்டுடைமை ஆக்கப்பட்ட செய்தி வந்துள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் ஒவ்வொன்றும் ரூ. 50 லட்சம் மதிப்புள்ளவையாகும். இவற்றைப் பறித்ததன் மூலம் மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்வாதாரத்தை இலங்கை அரசு அழித்துள்ளது. இலங்கை சிறைகளில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன் விடுதலை செய்யப்பட்ட 41 ராமேஸ்வரம் மீனவர்கள் மற்றும் 35 பாம்பன் மீனவர்களின் படகுகளையும் திரும்பத் தர இலங்கை அரசு மறுத்துவிட்டது. இதனால், தங்கள் படகுகளை மீட்பதற்காக அவர்கள் அங்கேயே முகாமிட்டுள்ளனர். இவர்கள் தவிர நாகை, புதுக்கோட்டை, இராமேஸ்வரம், பகுதிகளைச் சேர்ந்த 70 மீனவர்கள் இலங்கை சிறைகளில் வாடுகின்றனர். அவர்கள் அனைவருக்கும் சொந்தமான மேலும் 22 படகுகளையும் முடக்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.
இதுவரை தமிழக மீனவர்களை தாக்கியும், சுட்டுக்கொன்றும் கொடுமைப்படுத்தி வந்த சிங்களக் கடற்படை, இப்போது படகுகளை பறிக்கும் புதிய பாதகத்தைத் தொடங்கியிருக்கிறது. மீனவர்களின் பிழைப்புக்குத் தேவையான படகுகளை பறித்துக் கொண்டு அவர்களை விடுதலை செய்வது, உயிரைப் பறித்துக் கொண்டு நடைபிணமாக அனுப்புவற்கு ஒப்பானதாகும். மீனவர்களின் படகுகளை மீட்டுத் தருவதாக உறுதியளித்திருந்த இலங்கைக்கான இந்திய தூதரக அதிகாரிகள், அதற்காகத் துரும்பைக் கூட அசைக்க வில்லை என்பது தான் வேதனை அளிக்கும் உண்மையாகும்.
காமன்வெல்த் மாநாட்டிற்கு அழைப்பு விடுப்பதற்காக தில்லி வந்த இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பெரீசிடம், தமிழக மீனவர்களை விடுதலை செய்யும்படி பிரதமர் மன்மோகன்சிங் வலியுறுத்தினார். ஆனால், அதன்பிறகு தான் தமிழக மீனவர்களை இலங்கை அரசு கைது செய்யும் வேகம் அதிகரித்தது. இந்தியப் பிரதமரின் வார்த்தைகளுக்கு, நம்மிடம் உதவி பெற்று பிழைக்கும் நாடான இலங்கை எவ்வளவு மதிப்பளிக்கிறது என்பதற்கு இதுவே உதாரணமாகும். கடந்த காலங்களில் இலங்கையின் தவறுகளை இந்தியா கண்டிக்காதது தான் இந்த அவல நிலைக்கு காரணம் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தமிழக மீனவர்களின் படகுகளை பறித்து வைத்துக் கொண்டு தர முடியாது என்று மறுப்பது இந்தியாவின் இறையாண்மைக்கு சவால் விடுக்கும் செயலாகும். இலங்கையின் இச்செயலை இப்போதாவது இந்திய அரசு கடுமையாக கண்டித்து நடவடிக்கை எடுக்கப்போகிறதா? அல்லது இலங்கை எங்களின் நட்பு நாடு என்று கூறிக்கொண்டு, அதன் தவறுகளுக்கெல்லாம் துணை போகப் போகிறதா என்பது தான் தமிழ்நாட்டு மக்களின் மனதைத் துளைத்தெடுக்கும் முதல் கேள்வி .
மீனவர்களின் நலன்களை பாதுகாக்கும் கடமை தமிழக அரசுக்கு உள்ளது. மீனவர் பிரச்சினை பற்றி கடந்த 27 மாதங்களில் 27 முறை பிரதமருக்கு கடிதம் எழுதியும் பயனில்லை என்பதை முதலமைச்சரே ஒப்புக்கொண்டுள்ளார். இனியாவது அவர் தமது அணுகுமுறையை மாற்றிக்கொண்டு, அனைத்துக்கட்சித் தலைவர்களுடன் பிரதமரை நேரில் சந்தித்து இலங்கையை கண்டிக்கும்படி வலியுறுத்துவாரா? அல்லது 28 ஆவது கடிதத்தை எழுதிவிட்டு அமைதியாகிவிடுவாரா? என்பது விடைதெரியாத அடுத்த வினா .
இந்த இரு வினாக்களுக்கும் மத்திய, மாநில அரசுகள் சரியாக பதிலளித்து, மீனவர்களின் நலனை பாதுகாக்காவிட்டால் வரும் மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் தங்களின் வாக்குகள் மூலம் சரியான பதில் தருவது உறுதி என்று கூறியுள்ளார்
No comments:
Post a Comment