இலங்கை இனப்பிரச்சனைக்கு மாற்றுத் தீர்வை காண்பதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இலங்கை அரசியல் சட்டத்தில் செய்யப்பட்ட 13வது திருத்தத்தின்படி, நிலங்களை நிர்வகிக்கும் அதிகாரம் ராஜபக்சே தலைமையிலான தேசிய அரசுக்கு மட்டுமே உண்டு என்றும், மாநில அரசுகளுக்கு இல்லை என்றும் அந்நாட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
ஈழத் தமிழர்களுக்கு குறைந்தபட்ச அதிகாரங்களையாவது பெற்றுத் தரும் முயற்சிகளுக்கு இது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.
இலங்கை வடக்கு மாநிலத்திற்கு அண்மையில் நடைபெற்றத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மிகப்பெரிய வெற்றியை பெற்று ஆட்சியைப் பிடித்தது. தமிழர்களுக்கு ஓரளவாவது அதிகாரங்களைப் பெற்றுத் தருவதற்கு இது நல்ல தொடக்கமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நேரத்தில் தான் மாநில அரசுகளுக்கு நில அதிகாரம் கிடையாது என்ற அதிர்ச்சியூட்டும் தீர்ப்பு வெளியாகியிருக்கிறது. நில நிர்வாகம் தொடர்பாக இதற்கு முன் இலங்கை உச்சநீதிமன்றம் அளித்த இரு தீர்ப்புகளில் மாநில அரசுகளுக்கே அந்த அதிகாரம் இருப்பதாக தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நேரத்தில் தான் மாநில அரசுகளுக்கு நில அதிகாரம் கிடையாது என்ற அதிர்ச்சியூட்டும் தீர்ப்பு வெளியாகியிருக்கிறது. நில நிர்வாகம் தொடர்பாக இதற்கு முன் இலங்கை உச்சநீதிமன்றம் அளித்த இரு தீர்ப்புகளில் மாநில அரசுகளுக்கே அந்த அதிகாரம் இருப்பதாக தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், வடக்கு மாநிலத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்ற நிலையில், மாநில அரசுகளுக்கு நில அதிகாரம் இல்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டிருப்பது பல்வேறு ஐயங்களை எழுப்புகிறது.
வடக்கு மாநிலத்தில் தமிழர்களுக்கு சொந்தமான பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் சிறப்பு பொருளாதார மண்டலங்கள், அதிஉயர் பாதுகாப்பு வலயங்கள் என்ற பெயரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. வடக்கு மாநில அரசுக்கு நில அதிகாரம் இருந்தால் மட்டுமே, ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பது சாத்தியமாகும்.
மாநில அரசுகளுக்கு நில அதிகாரம் இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதால், தமிழர்கள் தங்களின் நிலங்களை இழந்து சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழும் நிலை தான் ஏற்படும்.
இலங்கை இனச் சிக்கலுக்கு தமிழ் ஈழம் தான் ஒரே தீர்வு என உலகம் முழுவதும் உள்ள தமிழ் உணர்வாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், 1987 ஆம் ஆண்டின் இந்திய& இலங்கை ஒப்பந்தப்படி இலங்கையில் செய்யப்பட்ட 13வது அரசியல் சட்டத்திருத்தம் மூலம் தமிழர்களுக்கு சம அந்தஸ்தும், அதிகாரமும் பெற்றுத் தரப்படும் என்று இந்தியா கூறி வருகிறது.
குறிப்பிட்ட அதிகாரங்களுடன் மாநில அவைகளை ஏற்படுத்துவது தான் 13 ஆவது அரசியல் சட்டத்தின் நோக்கம் ஆகும். அதன்படி 1988 ஆம் ஆண்டே மாநில அவைகள் ஏற்படுத்தப்பட்டன. ஆனால், 25 ஆண்டுகள் ஆன பிறகும் இதுவரை மாநில அவைகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்படவில்லை. வட மாநிலத்திற்கு நிலம் மற்றும் காவல்துறை அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பது தான் ஈழத்தமிழர்களின் எதிர்பார்ப்பு ஆகும்.
ஆனால், மாநிலங்களுக்கு நில அதிகாரம் இல்லை என நீதிமன்றத்தின் மூலமாக இராஜபக்சே அரசு கூறிவிட்டது. இதே அரசு தான் இந்திய - இலங்கை ஒப்பந்தப்படி மேற்கொள்ளப்பட்ட வடக்கு & கிழக்கு மாநிலங்களின் இணைப்பு செல்லாது என்று உச்சநீதிமன்றத்தின் மூலம் தீர்ப்பளிக்க வைத்தது.
நில அதிகாரம் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் 13 ஆவது அரசியல் சட்ட திருத்தத்தின் நோக்கமே சிதைக்கப்பட்டு விட்ட நிலையில், ஈழத் தமிழர்களுக்கு எத்தகைய அதிகாரத்தையும், அந்தஸ்தையும் இந்தியா பெற்றுத் தரும் என்பது தெரியவில்லை.
நிலம் மற்றும் காவல்துறை அதிகாரத்துடன் 13 ஆவது அரசியல் சட்டத்திருத்தம் செயல்படுத்தப்பட்டால் கூட அது தமிழருக்கு போதிய அதிகாரத்தை பெற்றுத் தராது. நிலம் மற்றும் காவல்துறை அதிகாரம் இல்லாமல் மற்ற அதிகாரங்கள் மட்டும் வழங்கப்பட்டால் ஓர் ஊராட்சி மன்றத்திற்குரிய அதிகாரம் மட்டுமே மாநில அரசுக்கு இருக்கும்.
எனவே, 13 ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தின் மூலம் ஈழத் தமிழர்களுக்கு அதிகாரம் பெற்றுத் தருவோம் என்று கூறி, தன்னையும் ஏமாற்றிக்கொண்டு, ஈழத் தமிழர்களையும் ஏமாற்றும் முயற்சியில் இந்தியா ஈடுபட வேண்டாம்.
மாறாக, உலகம் முழுவதுமுள்ள ஈழத் தமிழர்களிடையே வாக்கெடுப்பு நடத்தி, அவர்களின் விருப்பப்படி, இலங்கை இனப்பிரச்சினைக்கு மாற்றுத் தீர்வை காண்பதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.