இலங்கைத் தமிழர் பிரச்னையில் 4 வாக்குறுதிகளை வெளியிட முதல்வர் கருணாநிதியும், மத்திய அரசும் தயாரா என கேள்வி எழுப்பியுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.
நாகர்கோவிலில் செவ்வாய்க்கிழமை அவர் அளித்த பேட்டி:
"இலங்கைப் பிரச்னை தொடர்பாக முதல்வர் கருணாநிதி நடத்திய உண்ணாவிரதமும், பின்னர் போர்நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது என இவர்கள் கூறிக்கொண்டதும், ஏற்கெனவே திட்டமிட்டு தமிழக மக்களை ஏமாற்றியிருப்பதைத் தெளிவுபடுத்துகிறது.
இந்த நாடகத்தில் ப. சிதம்பரத்துக்கும் முக்கியப் பங்கு உள்ளது.
இலங்கையில் போர்நிறுத்தத்தை வலியுறுத்த மாட்டோம் என்றும், அது உள்நாட்டு விவகாரம் என்றும் மத்திய அமைச்சர் கபில் சிபல் கடந்த சில நாள்களுக்கு முன்பு கூறியிருந்தார். ஆனால், போர்நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக இங்கு சிதம்பரம் கூறுகிறார். இவையெல்லாம் தேர்தல் படுத்தும்பாடு.
இந்தியா நினைத்திருந்தால், 3 மாதங்களுக்கு முன்பே போரை நிறுத்தி, 5 ஆயிரம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதைத் தடுத்து நிறுத்தியிருக்க முடியும்.
தேர்தலில் தமிழக வாக்காளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற அச்சத்தில் போர்நிறுத்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். ஆனால், போர்நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று இலங்கை அதிபர் அறிவித்திருக்கிறார். இதற்கு கருணாநிதியும், சிதம்பரமும் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?
ஈழத் தமிழர்களுக்கு உதவ வேண்டும், அவர்கள் அனைத்து உரிமைகளையும் பெற்று தன்மானத்துடன் வாழ வேண்டும் என்று கருணாநிதியும், காங்கிரஸýம் விரும்பினால் கீழ்க்கண்ட அறிவிப்புகளை வெளியிட வேண்டும்.
1. தனி ஈழம் அமைவதுதான் ஈழத் தமிழர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு.
2. தனி ஈழம் அமைய எல்லா வகையிலும் உதவுவோம்.
3. தனிஈழ போராட்டம்- ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டம்.
4. ஈழத் தமிழர் போராட்டத்தில் இதுவரை 3 லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். எனவே, இதைப் போர்குற்றமாகக் கருதி இலங்கை அதிபர் ராஜபட்ச, ராணுவத் தளபதி பொன்சேகா, பாதுகாப்புத் துறைச் செயலர் கோத்தபய ராஜபட்ச ஆகியோர் மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவோம் என்ற 4 அறிவிப்புகளையும் வாக்குறுதிகளாக அளிக்க கருணாநிதியும், சிதம்பரமும், மத்திய அரசும் தயாரா என்றார் ராமதாஸ்.
நன்றி :தினமணி நாளிதழ்
No comments:
Post a Comment