Thursday, April 30, 2009

பஸ் கட்டண குறைப்பு தேர்தல் மோசடி-ராமதாஸ்

சென்னை: தமிழக அரசு திடீரென டவுன் பஸ் கட்டணத்தை சத்தமின்றி குறைத்துள்ளது மிகப்பெரிய தேர்தல் மோசடியாகும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்கள் இருக்கின்றன. ஆனால் இப்போதே சட்டத்தையும், தேர்தல் நடத்தை விதிமுறைகளையும் அப்பட்டமாக மீறி திமுக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
தேர்தல் அறிவிப்பு வெளிவந்ததும், நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விடுகின்றன. அவை நடைமுறையில் இருக்கும்போது அரசின் நடவடிக்கைகள் பற்றியோ, திட்டங்கள், உதவிகளை குறித்தோ நாளேடுகளில் விளம்பரம் செய்யக்கூடாது. ஆனால் திமுக அரசு அதை அப்பட்டமாக மீறி விளம்பரம் செய்து கொண்டிருக்கிறது.

கடந்த 3 ஆண்டுகளாக பஸ் கட்டணத்தை உயர்த்தவில்லை என்று சொல்லிக்கொண்டே மிதவை பேருந்து, சொகுசு பேருந்து, சிறப்புப் பேருந்து, இடையில் நிற்காத பேருந்து என்ற எல்லாம் பல்வேறு பெயர்களில் பேருந்துகளை இயக்கி சாதாரணக் கட்டணத்தை விட மூன்று, நான்கு மடங்கு கட்டணத்தை வசூலித்தனர்.

இன்று திடீரென அனைத்து வகை பேருந்துகளுக்கும் ஒரே வகையான கட்டணம் என்ற கட்டணக் குறைப்பை சத்தமின்றி செயல்படுத்தி இருக்கிறார்கள். இது மிகப்பெரிய தேர்தல் மோசடியாகும்.தேர்தலுக்காக மக்களை ஏமாற்றுகின்ற இன்னொரு ஒரு கபட நாடகமாகும். தேர்தலுக்காக கட்டணத்தைக் குறைத்து, தேர்தல் முடிந்ததும் கட்டணத்தை உயர்த்தி விடுவார்கள்.

திமுக அரசின் இந்த மோசடி வேலையில் மக்கள் ஏமாற மாட்டார்கள். தேர்தல் முடிந்ததும் கட்டணத்தை உயர்த்தி விடுவார்கள் என்பதை மக்கள் உணர்ந்து வைத்திருக்கிறார்கள். இதுபோன்ற திடீர் நடவடிக்கைகள் திமுகவின் தோல்வியை தடுத்து நிறுத்த உதவாது.

இப்படி தேர்தல் நடத்தை விதிமுறைகளை ஒன்றின்பின் ஒன்றாக காலில் போட்டு மிதிப்பதை கண்டிக்கவோ, தண்டிக்கவோ, முயற்சிக்காமல் தேர்தல் ஆணையம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.
இதர மாநிலங்களில் 'உம்' என்றால் குற்றம் என்று நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கின்ற தேர்தல் ஆணையம், தமிழகத்தில் அப்பட்டமாக தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி செயல்பட்டுக் கொண்டிருக்கும் திமுக அரசை கண்டிக்காமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது மக்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தும்.
இந்த மக்களவைத் தேர்தலில் ஒவ்வொரு தொகுதியும் திருமங்கலமாக மாறி கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.

அதிமுகவும் புகார்..

இந் நிலையில் இன்று தென் சென்னை தொகுதி வேட்பாளர்களுக்கு தேர்தல் நன்னடத்தை விதிகள் தொடர்பான விளக்கக் கூட்டம் நடந்தது.
மத்திய தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் நடந்த இக் கூட்டத்தில் பஸ் கட்டணம் திடீரென குறைக்கப்பட்டது குறித்து புகார் அளித்தது.
சொகுசு பஸ்களில் ரூ. 10 என்று இருந்த கட்டணம் ரூ.4.50ஆக குறைக்கப்பட்டுள்ளது. மற்ற பஸ்களில் ரூ.3 ஆக இருந்த கட்டணம் ரூ.2ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது தேர்தல் விதிகளுக்கு எதிரானது. எனவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக மனு தந்தது.
இது குறித்து தேர்தல் கமிஷனுக்கு தெரிவிப்பதாக அதிகாரிகள் உறுதியளி்த்துள்ளனர்.

கலெக்டரை மாற்ற கோரி பாமக உண்ணாவிரதம்:

இந் நிலையில் வேலூரில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு எதிராக பொய் வழக்கு போடும் மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி ஆகியோரை நீக்க வேண்டும் என்று கோரி பாமகவினர் முன்னாள் ரயில்வே இணையமைச்சரும் அரக்கோணம் பாமக வேட்பாளருமான வேலு தலைமையில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
தமிழகத்தில் தேர்தல் ஒரே கட்டமாக வரும் மே 13ம் தேதி நடக்கிறது. அதிமுக கூட்டணியில் வேலூர் தொகுதியில் அதிமுகவை சேர்ந்த வாசு நிறுத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில் வேலூர் கலெக்டர் மற்றும் மாவட்ட எஸ்.பி ஆகியோர் அதிமுக வேட்பாளர் மீது வேண்டுமென்றே பொய் வழக்கு போடுவதாக புகார் தெரிவித்து இன்று காலை கலெக்டர் அலுவலகம் முன்னதாக பாமகவினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

-நன்றி : தட்ஸ்தமிழ்.காம்

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: