தமிழ் மண்ணில் இருக்கும் வரை இலங்கைத் தமிழர்கள் யாரும் அகதிகள் அல்ல என்று கூறிய இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், அவர்களுக்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம் என்றார்.
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வலியுறுத்தி மக்கள் உரிமை கூட்டமைப்பு சார்பில் தமிழ்நாடுவாழ் ஈழத் தமிழர்களின் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், தமிழ் ஆர்வலர்கள் தியாகு, புகழேந்தி, தங்கராஜா, திருச்சி வேலுச்சாமி, விடுதலை ராஜேந்திரன், வைத்தியலிங்கம், கவிஞர் தாமரை உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு உண்ணாவிரத போராட்டத்தை ஆதரித்து பேசினர்.
இப்போராட்டத்தின் முடிவில் தமிழ்நாடுவாழ் ஈழத் தமிழர்களின் சார்பில் இலங்கையில் நிரந்தர போர் நிறுத்தம் ஏற்பட நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க சர்வதேச அமைப்புகளை இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும், பேச்சுவார்த்தை மூலம் தமிழர்கள் அவரவர் இடங்களில் மீண்டும் குடியேற ஆவண செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து வைத்து பழ.நெடுமாறன் பேசுகையில், இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களை இலங்கை அரசு முறையாக பராமரிக்க வேண்டும். இல்லையெனில் அவர்களை ஐ.நா. சபையிடம் ஒப்படைத்து விட வேண்டும். ஆனால் தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களை இலங்கை அரசு புறக்கணிக்கிறது.
தமிழ் மண்ணில் இருக்கும் வரை இலங்கைத் தமிழர்கள் யாரும் அகதிகள் அல்ல. அவர்கள் எங்கள் சகோதர, சகோதரிகள். இலங்கைத் தமிழர்களுக்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம் என்றார் பழ.நெடுமாறன்.
பின்னர் பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை பழ.நெடுமாறன் முடித்து வைத்தார். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்
நன்றி:http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/0904/30/1090430099_1.htm