Thursday, November 13, 2014

இடைநிற்றல் உயர்வு: ஏழைகளின் கல்வியை உறுதி செய்ய அருகமைப் பள்ளிகள் தேவை: ராமதாஸ் கோரிக்கை


பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் 14.11.2014 வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தமிழ்நாட்டில் மாணவர்கள் இடைநிற்றல் விகிதம் அதிகரித்து வருவதாக மத்திய அரசு அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்திருக்கிறது. இந்தியாவை வல்லரசாக்க வேண்டுமானால் அனைத்து மாணவர்களுக்கும் தரமான, பயனுள்ள கல்வியை வழங்குவது தான் ஒரே வழி எனும் நிலையில், மாணவர்களின் இடைநிற்றல் தொடர்பான புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியும், கவலையும் அளிக்கின்றன.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் ‘இந்திய கல்வி ஆலோசகர்கள்’ என்ற அமைப்பு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் ஆதரவுடன் பள்ளிக்கல்வி நிலவரம் குறித்து விரிவான ஆய்வு நடத்தியது. 

6 முதல் 13 வயது வரையுள்ள படிக்காத சிறுவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பள்ளியில் சேர்ந்து பல்வேறு காரணங்களால் படிப்பை பாதியில் நிறுத்தி வெளியேறியவர்கள் என்று இந்த ஆய்வில் தெரியவந்திருக்கிறது. 

கடந்த 2009ஆம் ஆண்டில் இதே அமைப்பு நடத்திய ஆய்வில், தமிழகத்தில் படிக்காத சிறுவர்களில் 45.34 விழுக்காட்டினர் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் என கண்டறியப்பட்டது. அடுத்த 5 ஆண்டுகளில் இந்த விகிதம் 8 விழுக்காடு அதிகரித்திருப்பது கல்வியிலும், வளர்ச்சியிலும் அக்கறை கொண்ட அனைவருக்கும் கவலையளிக்கும் தகவல் ஆகும்.

குறிப்பாக, மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் 10 வயதுக்குப் பிறகு தான் அதிகரிக்கிறது. 23% மாணவர்கள் ஐந்தாம் வகுப்புடனும், 30% பேர் ஏழாம் வகுப்புடனும் படிப்பை நிறுத்தி விடுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டிருக்கிறது. 6 முதல் 14 வயது வரையுள்ள அனைத்து குழந்தைகளும் தவறாமல் கல்வி கற்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் தான் கல்வி பெறும் உரிமைச் சட்டம் கடந்த 2011 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்டது. 

அதன்பின்னர் இடைநிற்றல் விகிதம் குறைந்திருக்க வேண்டிய நிலையில், அதிகரித்திருப்பது இயல்புக்கு மாறான ஒன்றாகும். இதற்கான காரணங்கள் என்னவென்று கண்டுபிடித்து அதை சரி செய்ய வேண்டியது தமிழக அரசின் தலையாய கடமையாகும்.

6 முதல் 13 வரையுள்ள குழந்தைகள் கல்வி கற்க ஏதுவாக அவர்கள் வாழும் பகுதிகளிலேயே பள்ளிக்கூடங்கள் அமைக்கப்பட வேண்டும். இதற்காகத் தான் அருகமைப் பள்ளிகள் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக பா.ம.க. வலியுறுத்தி வருகிறது. ஆனால், இதை செயல்படுத்த தமிழக அரசு தவறிவிட்டது. 

சென்னை போன்ற நகரங்களில் தெருவுக்குத் தெரு தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டிருக்கும் போதிலும், கிராமப்பகுதிகளில் தொடக்கப்பள்ளிகளுக்குச் செல்ல பல கிலோமீட்டர் தூரம் பயணம் செய்ய வேண்டிய அவல நிலை காணப்படுகிறது. இதைப் போக்குவதற்காகத் தான் கல்வி பெறும் உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. 

இந்த சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் 25% இடங்கள் நலிவடைந்த மாணவர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும். அவ்வாறு ஒதுக்கப்பட்டிருந்தால், நகர்ப்புறங்களிலாவது மாணவர்களின் இடைநிற்றல் குறைந்து இருக்க வேண்டும். ஆனால், கிராமப்புறங்களுக்கு இணையாக நகர்ப்புறங்களிலும் இடைநிற்றல் விகிதம் அதிகமாக இருப்பதால் கல்வி பெறும் உரிமைச் சட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை என்பது தெளிவாகிறது.

ஐந்தாம் வகுப்புக்குப் பிறகு மாணவர்களைவிட மாணவிகளின் இடைநிற்றல் விகிதம் தான் அதிகமாக இருக்கிறது. இதற்குக் காரணம் பள்ளிகளில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாதது தான். மாணவிகள் பருவமடைந்த பிறகு கழிப்பறை இல்லாத பள்ளிகளில் படிக்க இயலாது என்பதால் அவர்கள் படிப்பை நிறுத்தி விடுகின்றனர். தமிழகத்தில் 1500க்கும் அதிகமான பள்ளிகளில் கழிப்பறைகள் இல்லை. உச்சநீதிமன்றம் பலமுறை எச்சரித்த பிறகும் கழிப்பறை வசதிகளை அரசு செய்து தராததே மாணவிகள் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்துவதற்குக் காரணமாக அமைந்துள்ளது.

மாணவர்களின் இடைநிற்றலை உடனடியாக தடுக்க வேண்டியது அவசர, அவசியமாகும். எனவே, பள்ளிகளில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், அருகமைப் பள்ளித் திட்டத்தை செயல்படுத்துதல், கல்வி பெறும் உரிமைச் சட்டத்தை அனைத்து தனியார் பள்ளிகளும் செம்மையாக செயல்படுத்துவதை உறுதி செய்தல், இதற்கெல்லாம் மேலாக அரசு பள்ளிகளின் தரத்தை அதிகரித்து மாணவர்கள் தேடிவரும் நிலையை ஏற்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை  மேற்கொண்டு, அனைத்து மாணவர்களும் தரமான கல்வி கற்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார். 

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: