தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ., ஆந்திர மாநில பாடத்திட்டம் ஆகியவற்றுக்கு இணையான பாடத்திட்டத்தை தமிழ் வழியில் உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "இந்திய தொழில்நுட்ப நிறுவன (ஐ.ஐ.டி) மாணவர் சேர்க்கை நிறைவடைந்துள்ள நிலையில், அவற்றில் சேர்வதற்கு தகுதி பெற்ற மாணவர்களின் விவரங்களை நுழைவுத் தேர்வுக்கான கூட்டு செயல்பாட்டுக் குழு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு மாநில வாரியப் பாடத்திட்டம் எந்தளவுக்கு ஏட்டுச் சுரைக்காய்களை மட்டுமே உருவாக்குகிறது என்பதை விளக்கும் வகையில் இந்த புள்ளிவிவரங்கள் அமைந்திருக்கின்றன.
இந்தியாவில் உள்ள 17 ஐ.ஐ.டிக்களில் மொத்தம் 9784 மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ளன. அவற்றில் மாணவர்களை சேர்ப்பதற்கான மேல்நிலை கூட்டு நுழைவுத்தேர்வில் (IIT- JEE ADVANCED) ஒரு லட்சத்து 26,995 பங்கேற்றனர். அவர்களில் 27,152 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.
பாடத்திட்ட வாரியம் வாரியாக பார்க்கும்போது மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (CBSE) பாடத்திட்ட மாணவர்கள் 55.08%, அதாவது 14,955 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால், தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களில் 65 பேர் மட்டுமே இத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் நடப்பாண்டில் 8 லட்சம் மாணவர்கள் 12-ஆம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்றுள்ள நிலையில், அவர்களில் லட்சத்திற்கு 10 பேர் கூட ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெறவில்லை என்பது வெட்கித் தலைகுனிய வேண்டிய விஷயமாகும்.
இந்த அவலநிலைக்கான காரணம் தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின் தரம் மிகவும் மோசமாக இருப்பது தான். தமிழகத்தில் உள்ள பள்ளிகளின் நிர்வாகிகள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களின் ஒற்றை இலக்கு மருத்துவக் கல்லூரிகளிலோ அல்லது மாநிலத்தின் சிறந்த பொறியியல் கல்லூரிகளில் ஒன்றிலோ தங்களின் குழந்தைகளுக்கு இடம் கிடைத்துவிட வேண்டும் என்பதாகத் தான் இருக்கிறதே தவிர, அதையும் தாண்டி சாதனைகளை படைக்க வேண்டும் என்பதாக இல்லை.
12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றால், மருத்துவம் அல்லது பொறியியல் என்ற தங்களின் இலக்கை எட்டிவிட முடியும் என்பதால் புத்தகங்களிலுள்ள பாடங்களை அப்படியே மனப்பாடம் செய்து தேர்வில் எழுதும் அணுகுமுறையையே பள்ளிகளும், பெற்றோர்களும் ஊக்குவிக்கின்றனர்.
இதற்காகவே தமிழகத்தின் பல மாவட்டங்களில் தனியார் உறைவிடப் பள்ளிகள் நடத்தப்படுகின்றன. இவை இரண்டு ஆண்டுகள் புத்தகங்கள் என்ற முட்டைகளை அடைகாத்து மதிப்பெண் என்ற கோழிக்குஞ்சுகளை பொறிக்கும் எந்திரங்களாக மாணவர்களை மாற்றி விடுகின்றன.
இதனால் அதிக மதிப்பெண் பெற்று மருத்துவம் அல்லது பொறியியல் படிப்பில் சேர்ந்தாலும் ஏட்டுப்படிப்புக்கு மேல் எதுவும் அவர்களுக்கு தெரிவதில்லை.
அதேநேரத்தில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், இந்திய பள்ளி நிறைவுச் சான்றிதழ் தேர்வு வாரியம் மற்றும் ஆந்திரம், ராஜஸ்தான், மராட்டியம் மாநில வாரியங்களின் பாடத்திட்டங்கள் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளைத் தாண்டி ஐ.ஐ.டி., என்.ஐ.டி. மற்றும் சர்வதேச அளவிலான படிப்புகளுக்கு மாணவர்களைத் தயார் படுத்தும் நோக்குடன் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.
இப்படிப்புகளுக்கு தயார் படுத்துவதற்காக மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளையும் இப்பாடத்திட்ட நிர்வாகங்கள் நடத்துகின்றன. 8 லட்சம் மாணவர்களைக் கொண்ட மாநிலப் பாடத்திட்டத்திலிருந்து 61 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், தமிழகத்தில் ஒரு லட்சத்துக்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்திலிருந்து 537 பேர் தேர்ச்சி பெற்றிருப்பதே அப்பாடத்திட்டத்தின் வலிமையை உணர்த்தும்.
தமிழ்நாட்டில் கல்வித்தரத்தை உயர்த்த வேண்டும்; பணக்காரர்களுக்கு கிடைக்கும் அதே தரத்திலான கல்வி ஏழை மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் தான் சமச்சீர் கல்வி முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். ஆனால், பள்ளிக்கூட அதிபர்களின் நிர்பந்தத்திற்கு பணிந்து, துணைவேந்தர் முத்துக்குமரன் குழு அறிக்கையின் பரிந்துரைகளை புறக்கணித்து விட்டு ஒரு சமரசக் கல்வித்திட்டத்தை சமச்சீர் கல்வித்திட்டமாக செயல்படுத்தியதால் தான் தேசிய அளவிலான உயர்படிப்புகளில் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்ட மாணவர்களால் சாதிக்க முடிவதில்லை. இத்தகைய சமரசங்களையெல்லாம் தகர்த்தெறிந்தால் தான் தமிழகம் சாதிக்க முடியும்.
இதற்காக தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ., ஆந்திர மாநில பாடத்திட்டம் ஆகியவற்றுக்கு இணையான பாடத்திட்டத்தை தமிழ் வழியில் உருவாக்கி செயல்படுத்த வேண்டும்.
உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்புகளில் ஒவ்வொரு நாளும் குறைந்தது 2 பாட வேளைகளாவது போட்டித்தேர்வுகளுக்கு தயாராகுதல், பொது அறிவை வளர்த்துக் கொள்ளுதல் ஆகியவற்றுக்காக ஒதுக்கப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, தேசிய அளவிலான அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் தாய்மொழியில் எழுத மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தி அனுமதி பெறவேண்டும்" இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.