Monday, September 22, 2014

ஊரக வேலைத் திட்டத்தில் மாற்றம்: தமிழக மக்களை பெரிதும் பாதிக்கும்: ராமதாஸ்


பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் புதிய மாற்றங்களைச் செய்ய மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் நிதின்கட்கரி முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தன. இம்முடிவை கைவிடும்படி கடந்த 5 ஆம் தேதி மத்திய அமைச்சரை வலியுறுத்தியிருந்தேன். ஆனால், மத்திய அரசு அதன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை. மாறாக மத்திய அரசு முடிவால் ஏற்படும் பாதிப்புகள் எதிர்பார்க்கப்பட்டதைவிட அதிகமாக இருக்கும் என்று தெரிய வந்திருக்கிறது.

தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் தொடக்கத்தில் 100 மாவட்டங்களில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர் 250 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்ட இத்திட்டம், 2009 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக நாட்டிலுள்ள அனைத்து ஊரக மாவட்டங்களுக்கும் நீட்டிக்கப்பட்டது. இதனால் கிராமப்புற பொருளாதாரம் வலுவடைந்து வரும் நிலையில் தான் இந்தத் திட்டத்தில் மாற்றங்களைச் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

புதிய மாற்றங்களின்படி, இந்தியா முழுவதும் செயல்படுத்தப் பட்டு வந்த இத்திட்டம், இனி பின்தங்கிய பகுதிகள், பழங்குடியினர் அதிகம் வாழும் பகுதிகள் என  2,500 வட்டங்களில் மட்டுமே செயல்படுத்தப்படும். இதனால் மற்ற மாநிலங்களைவிட தமிழகத்திற்கு தான் மிக அதிக பாதிப்பு ஏற்படும். தமிழகத்தில் தற்போது 385 வட்டங்களில் செயல்படுத்தப்படும் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் இனி 98 வட்டங்களில் மட்டுமே நடைமுறைப்படுத்தப்படும். 

தமிழகத்தில் தற்போதுள்ள நிலையில் இத்திட்டத்தால் 63 லட்சத்து 20,339 குடும்பங்கள் பயனடைந்து வருகின்றன. அரசு அறிவித்துள்ள மாற்றங்கள் நடைமுறைக்கு வந்தால், 47 லட்சம் குடும்பங்களுக்கு  ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்படி கிடைத்து வந்த வேலைவாய்ப்பு பறிக்கப்படும். தமிழகத்தில் தொடர்ந்து கடுமையான வறட்சி நிலவி வருவதால் மக்களின் வேலைவாய்ப்பு பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதையே முக்கிய வாழ்வாதாரமாக நம்பியிருக்கும் 47 லட்சம் குடும்பங்களின் வேலைவாய்ப்பை பறிப்பது கிராமப்புற பொருளாதாரத்தில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி விடும்.

அதுமட்டுமின்றி, வேலை உறுதித் திட்டத்திற்கான நிதியில் 60% ஊதியத்திற்காகவும், 40% பொருட்களை வாங்குவதற்காகவும் பிரித்து வழங்கப்படுகிறது. ஊரக வேலை உறுதித் திட்டப்படி  நீர்ப் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வசதியாக ஊதியத்திற்கான நிதியை 51% ஆக குறைக்கவும் பொருட்களை வாங்குவதற்கான நிதியை 49% ஆக உயர்த்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் ஊதியத்திற்கான நிதி ரூ.8000 கோடி குறையும் என்பதால் பயனாளிகளுக்கு ஊதியம் வழங்க போதிய நிதி இருக்காது. இத்திட்டப்படி ஒதுக்கப்படும் நிதியில் பொருட்களை வாங்குவதற்காக அனைத்து மாநிலங்களும் சராசரியாக  25% முதல் 30% வரை மட்டுமே செலவிடுகின்றன. 

இத்தகைய சூழலில் பொருட்களை வழங்குவதற்கான நிதியை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பது, திட்ட நிதி செலவிடப்படாமல் முடங்குவதற்கே வழி வகுக்கும். வேலை உறுதித் திட்டத்திற்காக ஒதுக்கப்படும் நிதி 2010&11 ஆம் ஆண்டில் ரூ.40,100 கோடியாக இருந்து நடப்பாண்டில் ரூ.34,000 கோடியாக குறைக்கப்பட்டுவிட்டது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாற்றங்களால் இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு படிப்படியாக குறைக்கப்பட்டு, கடைசியில் மூடுவிழா நடத்துவதற்கே வழி வகுக்கும்.

தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படுவதாகும். இதற்கான செலவில் 25% பங்கை மாநில அரசுகள் வழங்குகின்றன. அவ்வாறு இருக்கும் போது மாநில அரசுகளிடம் பெயரளவில் கூட ஆலோசனை நடத்தாமல் மத்திய அமைச்சர் கட்கரி தன்னிச்சையாக மாற்றங்களை செய்யவிருப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது மட்டுமின்றி, நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் அவமதிக்கும் செயலாகும். இதை அனுமதிக்க முடியாது.
வேளாண் பணிகளுக்கும் இத்திட்டத்தை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாகவே வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்றால் விவசாயிகள் உட்பட அனைவருக்கும் பயனளிக்கும் திட்டமாக இது மாறும். இதைக்கருத்தில் கொண்டு ஊரக வாழ்வாதாரத்தை பறிக்கும் வகையிலான திருத்தங்களை கைவிட்டு, இத்திட்டத்தை வேளாண் பணிகளுக்கும் நீட்டிக்கும் வகையிலான மாற்றங்களைச் செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார். 

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: