Monday, September 29, 2014

வரலாறு திரும்பியிருக்கிறது: அதிமுக தலைமையிடம் இழப்பீடு வசூலிக்க வேண்டும்: ராமதாஸ் அறிக்கை

 

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் 29.09.2014 திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், 

வருவாய்க்கு மீறி சொத்துக் குவித்த வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் வன்முறை வெடித்திருக்கிறது. இதனால் இயல்பு வாழ்க்கையும், அப்பாவி மக்களும் பாதிக்கப் பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி அரசு & தனியார் சொத்துக்கள் பெர்ருமளவில் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

பூந்தமல்லியிலிருந்து வந்த அரசுப் பேரூந்தை காஞ்சிபுரத்தில் தடுத்து நிறுத்திய அ.தி.மு.க.வினர் அப்பேரூந்தை தீயிட்டு எரித்தனர். இதே நிகழ்வில் ஒரு மகிழுந்தும், சில இரு சக்கர ஊர்திகளும் எரிக்கப்பட்டன. விளாத்திக்குளத்தில் மற்றொரு பேரூந்து தீக்கிரையாக்கப்பட்டது. தொடர்ச்சியாக நடைபெற்ற வன்முறையில் விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டியில் நேற்று இன்னொரு பேரூந்து தீ வைத்து எரிக்கப்பட்டிருக்கிறது. இவை தவிர 50க்கும் மேற்பட்ட அரசு பேரூந்துகளும், நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன. கடைகள் மீது அ.தி.மு.க.வினர் கல்வீசித் தாக்கியதில் மிகப்பெரிய அளவில் சேதம் ஏற்பட்டிருக்கிறது. அ.தி.மு.க.வின் காட்டுமிராண்டித் தனமான தாக்குதலுக்கு எதிர்க்கட்சித் தலைவர்களின் இல்லங்களும், அலுவலகங்களும் தப்பவில்லை. ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டு மூன்று நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இன்னும் வன்முறை தொடர்கிறது. அ.தி.மு.க.வினரின் வன்முறையை காவல்துறை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆளுனரும், மத்திய அரசும் தலையிட்டு தமிழகத்தில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.

மரக்காணம் கலவரத்தில் சமூகவிரோத சக்திகளால் படுகொலை செய்யப்பட்ட பா.ம.கவினரின் சாவுக்கு நீதி வழங்கக் கோரி 30.04.2013 அன்று விழுப்புரத்தில் போராட்டம் நடத்துவதற்காக சென்ற என்னையும், நூற்றுக்கணக்கான பா.ம.க.வினரையும் ஜெயலலிதா ஆணைப்படி காவல்துறை கைது செய்தது. இதைக்கண்டித்து அறவழியில் போராடிய ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து ஆளுங்கட்சி மற்றும் காவல்துறை தூண்டுதலின் பேரில் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. பா.ம.க.வினர் 134 பேர் தடுப்புக்காவல் சட்டங்களில் கைது செய்யப்பட்டனர். 

இதுதொடர்பாக 13.05.2013 அன்று தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்துப் பேசிய அன்றைய முதல்வர் ஜெயலலிதா,‘‘ அரசியல் கட்சி என்பது நாட்டின் முன்னேற்றத்திற்கு அனைத்து வகையிலும் பாடுபடக்கூடியதாகவும், பொதுமக்களின் நலனை முன்வைத்து செயல்படக்கூடியதாகவும், மற்ற அமைப்புகளுக்கு முன்னுதாரணமாக விளங்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு பொருள் குறித்து எதிர்ப்பை தெரிவிக்க வேண்டுமெனில் அதனை ஜனநாயக ரீதியாக, அறவழியில் மட்டுமே தெரிவிக்க வேண்டும். எதிர்ப்பை வன்முறை மூலம் தெரிவிப்பது என்பது எவராலும் ஏற்றுக்கொள்ள இயலாதது. மேலும் கட்சியினரை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதுடன், அவர்களை சமுதாயத்தின் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்று, சட்டவிரோத செயல்கள் எதிலும் ஈடுபடாமல் பார்த்துக் கொள்வது கட்சித் தலைவர்களின் பொறுப்பும் கடமையும் ஆகும்’’ என்று கூறினார். ஜெயலலிதா அன்று  கூறிய இலக்கணத்தின்படி தான் அவரும், அவரது கட்சியும் இப்போது நடந்து கொள்கிறார்களா? செய்த ஊழலுக்காக ஜெயலலிதா தண்டிக்கப்பட்டதை தவறு என்று கூறி வன்முறையில் ஈடுபட்டு, அதன்மூலம் தவறே செய்யாத அப்பாவி மக்களை தண்டிப்பது தான் பொறுப்பான அரசியல் கட்சிக்கு இலக்கணமா? அதை கண்டும் காணாமலும் இருந்து மறைமுகமாக ஊக்குவிப்பது தான் பொறுப்பான கட்சித் தலைவருக்கு அழகா?

பா.ம.க.வுக்கு எதிராக கைது நடவடிக்கைகளை கட்டவிழ்த்து விட்ட ஜெயலலிதா, அடுத்தகட்டமாக  ஆளுங்கட்சியின் துணையுடன் சமூகவிரோதிகள் நடத்திய வன்முறையில் சேதமான சொத்துக்களுக்கு பா.ம.க. ரூ.100 கோடி இழப்பீடு அளிக்க வேண்டும் என்று கூறி அதை வசூலித்து தருவதற்காக வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையில் தனி அமைப்பை ஏற்படுத்தினார். மதுக்கடைகள் மூடப்பட்டதால் மது வணிகம் பாதிக்கப்பட்டதாகக் கூறி பா.ம.க. ரூ.28 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று அறிவிக்கை அனுப்பப்பட்டது. இப்போது வரலாறு திரும்பியிருக்கிறது. அப்போது பா.ம.க. செய்யாத தவறுகளுக்காக இழப்பீடு வசூலிக்க நடவடிக்கை  எடுக்கப்பட்டது. இப்போது அ.தி.மு.க.வினர் வன்முறை செய்ததுடன், பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததற்கான ஆதாரங்கள் வெளியாகியுள்ளன; ஊடகங்கள் ஒளிபரப்பிய காட்சிகளும் உள்ளன. அந்த ஆதாரங்களின் அடிப்படையில் அ.தி.மு.க.விடம் உரிய இழப்பீட்டை வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். 

பொதுச் சொத்துக்களுக்கு அரசியல் கட்சிகள் சேதம் ஏற்படுத்தினால் அதை எவ்வாறு வசூலிப்பது என்பதற்கான வழிகாட்டுதல்கள் 1992ஆம் ஆண்டின் தமிழ்நாடு பொதுச் சொத்து(சேதம் மற்றும் இழப்பைத் தடுத்தல்) சட்டத்தில் தெளிவாக உள்ளன. இதற்காக கடந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இ.ஆ.ப. அதிகாரி ஸ்ரீதர் தலைமையிலான அமைப்பும் இப்போது செயல்பாட்டில் உள்ளது. இதன் மூலம் இழப்பீட்டை  வசூலிப்பதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட துறைகள்  தொடங்க வேண்டும். 

 அ.தி.மு.க.வினரால் எரிக்கப்பட்ட  எரிக்கப்பட்ட பேரூந்துகள், சேதப்படுத்தப்பட்ட பேரூந்துகள் ஆகியவற்றுக்கான இழப்பீடு கோடிக்கணக்கில் இருக்கும் என்று கருதப்படுகிறது. வன்முறையால் ஏற்பட்ட பதற்றம் காரணமாக மதுக்கடைகள், திரையரங்குகள் ஆகியவை செயல்படவில்லை. தனியார் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. இதனால் ஒரு நாளில் ஏற்பட்ட இழப்பு மட்டும் ரூ. 500 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இவை தவிர, தனியார் சொத்துக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட சேதத்தின் மதிப்பு பல கோடி ரூபாய்  என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.  

இத்தகைய சூழலில் அ.தி.மு.க.வினரின் வன்முறையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி  இன்று புதிதாக பதவியேற்கவிருக்கும் அரசுக்கு  தமிழக ஆளுனர் ஆணையிட வேண்டும்.

1)  அ.தி.மு.க.வினரின் வன்முறையால் அரசு மதுக்கடைகள் மூன்று நாட்களாக மூடப்பட்டிருப்பதால் குறைந்தது ரூ.210 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட இழப்பீட்டையும் துல்லியமாக கணக்கிட்டு அ.தி.மு.க. தலைமையிடமிருந்து வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2)  அரசு மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கான இழப்பீடுகளையும்,  வணிகம் பாதிக்கப்பட்டதால் ஏற்பட்ட வருவாய் இழப்பீட்டையும் கணக்கிட்டு, அதற்குக் காரணமான அக்கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் மீது வழக்குத் தொடர்ந்து வசூலிக்க வேண்டும்.

3)  பேரூந்து எரிப்பு, உடைப்பு, கடைகள் சூறை உள்ளிட்ட வன்முறைகளில் ஈடுபட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளை தேசியப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

4)  கடந்த ஆண்டில் ஜெயலலிதாவே கூறியவாறு, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் வகையிலும், சட்டம்-ஒழுங்கை சீரழிக்கும் வண்ணமும், வன்முறை செயல்களிலும் ஈடுபட்ட அ.தி.மு.க.வை தடை செய்யவும் அரசு தயங்கக்கூடாது. இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார். 

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: