Tuesday, August 19, 2014

மக்கள் நலப் பணியாளர்களை மதுவிலக்கு பணியாளர்களாக நியமிக்க வேண்டும் : ராமதாஸ் வலியுறுத்தல்


பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

மக்கள் நல பணியாளர் பணி நீக்கம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,   அனைத்து பணியாளர்களுக்கும் வரும் அக்டோபர் மாத இறுதிக்குள் வேலை வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்திருக்கிறது. அதுமட்டுமின்றி, மதுவிலக்கு குறித்த அரசின் நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்துள்ள நீதிபதிகள், இப்பணியாளர்களை மது எதிர்ப்பு பரப்புரைக்கு பயன்படுத்திக்கொள்ளவும் ஆணையிட்டுள்ளனர். ஒரே ஆணையில் இரு நண்மைகளை செய்துள்ள இத்தீர்ப்பு பாராட்டத்தக்கது.

மக்கள் நலப்பணியாளர்களுக்கு இந்த ஆட்சியில் இழைக்கப்பட்ட கொடுமைகள் கொஞ்சநஞ்சமல்ல. அ.தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற 6 மாதங்களில் எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல் சுமார் 13 ஆயிரம் பணியாளர்கள் திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து அவர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற ஒற்றை நீதிபதி, பணி நீக்கப்பட்ட  மக்கள் நலப்பணியாளர்கள் அனைவருக்கும் உடனடியாக வேலை வழங்க ஆணையிட்டார். ஆனால், இந்த தீர்ப்பை மதிக்காத தமிழக அரசு அதை எதிர்த்து மேல்முறையீடு செய்தது. அதன்மீது தீர்ப்பளித்த 2 நீதிபதிகள் அமர்வு மக்கள் நல பணியாளர்களுக்கு 5 மாத ஊதியத்தை இழப்பீடாக வழங்கிவிட்டு அவர்களை பணிநீக்கம் செய்யலாம் என்று ஆணையிட்டது. இதற்கு எதிரான தொழிலாளர்களின் மேல்முறையீட்டை  விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ததுடன்  இவ்வழக்கை மறு விசாரணை செய்யும்படி ஆணையிட்டது. அதன்படி வழக்கை விசாரித்த நீதிபதிகள் பால்வசந்தகுமார், சத்யநாராயணா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த சிறப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது.

மக்கள்நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க முடியாது என்பதற்காக அரசுத் தரப்பில் கூறப்பட்ட காரணங்கள் அனைத்தையும் நிராகரித்த நீதிபதிகள், அவர்களை ஆக்கபூர்வமான வழியில் எப்படியெல்லாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதையும் விளக்கியுள்ளனர்.

மக்களின் நுண்ணூட்ட சத்து அளவு, வாழ்க்கைத்தரம், பொது சுகாதாரம் ஆகியவற்றை மேம்படுத்துவது தான் மக்கள் நல அரசின் பணியாக இருக்க வேண்டும்; மருத்துவ பயன்பாட்டை தவிர்த்து முழுமையான மதுவிலக்கு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தான் அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டிருக்கிறது. ஆனால்,  தமிழக அரசோ ஆண்டு தோறும் மதுவிற்பனையை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டில் மது விற்பனை மூலம் ரூ.21,641 கோடி வருவாய் கிடைத்துள்ள போதிலும், கூடுதலாக ரூ.2000 கோடி லாபம் ஈட்டும் நோக்குடன் வரி மற்றும் விலையை உயர்த்த சட்டத்திருத்தம் செய்திருக்கிறது. இவ்வளவு  வருவாய் கிடைக்கும் போதிலும், மதுவின் தீமைகள் குறித்து பரப்புரை செய்ய வெறும் ரூ.1 கோடியை  மட்டுமே ஒதுக்கீடு செய்திருக்கிறது. இது போதுமானதல்ல என்பதால் மக்கள் நலப் பணியாளர்களை மீண்டும் பணியமர்த்தி மது எதிர்ப்பு பரப்புரையில் ஈடுபடுத்தலாம்’’ என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.


பணி நீக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்குவது குறித்த வழக்கின் தீர்ப்பில், தமிழகத்தில் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படாதது குறித்தும், மதுவின் தீமைகள் குறித்து பரப்புரை செய்யாமல் மது விற்பனையை அதிகரித்து மக்களை கெடுப்பதில் அரசு கவனம் செலுத்தி வருவது குறித்தும் நீதிபதிகள் குறிப்பிட்டிருப்பது அவர்களின் சமூக அக்கறையை வெளிப்படுத்துகிறது. இந்த சமூக அக்கறை தமிழக அரசுக்கு இல்லாதது தான் அனைத்து சீரழிவுகளுக்கும் அடிப்படை ஆகும்.

இதை உணர்ந்து, மீண்டும் மீண்டும் தவறு செய்யாமல், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யாமல் பணி நீக்கப்பட்ட அனைத்து மக்கள் நலப்பணியாளர்களுக்கும் மீண்டும் வேலை வழங்கி, அவர்களை மது எதிர்ப்பு பரப்புரையாளர்களாக அறிவிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படாதது குறித்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ள கவலையை உணர்ந்து  தமிழ்நாட்டில் மதுவை அறவே ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: