Saturday, March 16, 2013

மாணவர்கள் போராட்டத்தை முடக்கினால் மக்கள் புரட்சி வெடிக்கும்! டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை

சென்னை: கல்லூரிகளை மூடி மாணவர்கள் போராட்டத்தை முடக்க முயன்றால் மக்கள் புரட்சி வெடிக்கும் என்று தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கும்படி அரசு மற்றும் தனியார் கல்லூரி நிர்வாகங்களுக்கு தமிழக அரசு வாய்மொழி உத்தரவை பிறப்பித்திருக்கிறது.
இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைகள் குறித்து பன்னாட்டு போர்க்குற்ற விசாரணை நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஐ.நா.மனித உரிமை ஆணையத்தில் இந்தியாவே தீர்மானம் கொண்டுவர வேண்டும் - தனித் தமிழீழம் அமைப்பது தொடர்பாக உலகம் முழுவதும் வாழும் ஈழத் தமிழர்களிடையே ஐ.நா. மூலம் பொதுவாக்கெடுப்பு நடத்த ஏற்பாடு செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் திங்கட்கிழமை வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தப்போவதாக மாணவர் அமைப்புகள் அறிவித்திருந்தன.
இந்த நிலையில், அவர்களின் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் தான் இந்த நடவடிக்கையை மாநில அரசு எடுத்திருக்கிறது.
கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா,‘‘இலங்கையில் இனப் படுகொலையை நிகழ்த்தி போர்க்குற்றம் புரிந்தவர்களை போர்க்குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்தியா வலியுறுத்த வேண்டும் - இலங்கை மீது இந்தியா பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்'' என்று வலியுறுத்தினார்.
இதே கோரிக்கையை வலியுறுத்திதான் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். முதலமைச்சரின் இந்த கோரிக்கையை வலியுறுத்தி போராடுவதற்காக, மாணவர்களுக்கு தமிழக அரசு ஆதரவு அளித்திருக்கவேண்டும்.
மாறாக கடந்த 10 நாட்களாக நடைபெற்றுவரும் மாணவர்களின் போராட்டத்தால் சிறு வன்முறையோ அல்லது பதற்றமோ ஏற்படாத நிலையில், அப்போராட்டத்தை ஒடுக்க நினைப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
இதன்மூலம் இலங்கைப் பிரச்சனையில் தமிழக முதலமைச்சர் மீது வைத்திருந்த சிறிதளவு நம்பிக்கையைக் கூட ஈழத்தமிழர்களும், தமிழ் உணர்வாளர்களும் இழந்துவிட்டனர்.
இலங்கை பிரச்சனையில், இனப்படுகொலையாளர்களை தண்டிக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காக மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்து, அவர்களின் போராட்டத்தை அனுமதிக்க வேண்டும். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக மக்கள் கொதித்தெழுந்துள்ள நிலையில், கல்லூரிகளை மூடுவதன் மூலம் மாணவர்கள் போராட்டத்தை ஒடுக்க நினைப்பது சீறிவரும் சுனாமியை செங்கற்களை காட்டி தடுக்க நினைப்பதற்கு சமமானதாகும். கல்லூரிகளை மூடுவதன் மூலம் மாணவர்களின் போராட்டத்தை முடக்க முடியாது; மாறாக இப்போராட்டம் மக்கள் புரட்சியாக வெடிக்கும் என்று தமிழக அரசை எச்சரிக்கிறேன் என்று ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: