Sunday, August 8, 2010

எல்லோரும் தனித்துப் போட்டியிடட்டும், பார்க்கலாம்-அன்புமணி சவால்

சேலம்: பாமகவை யாராலும் அழிக்க முடியாது. பாமக பலமில்லை என்று சொல்கிறார்கள். அனைத்துக் கட்சிகளையும் வரும் தேர்தலில் தனித்து நிற்கச் சொல்லுங்கள். நாங்களும் தனியாக நிற்கிறோம். அப்போது தெரியும் யார் பலமாக இருக்கிறார்கள் என்று என்று சவால் விட்டுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ்.

சேலத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த 400 கோடி செலவாகும் என்று சொல்கிறார்கள். இந்த கணக்கெடுப்பை கிராம நிர்வாக அலுவலரை பயன்படுத்தியே எடுக்கலாம். 30 அல்லது 40 கோடி ரூபாய்தான் செலவாகும்.

பாமகவை யாராலும் அழிக்க முடியாது. கடந்த 10 வருடத்தில் நாங்கள் இல்லாமல் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியவில்லை. பாமக பலமில்லை என்று சொல்கிறார்கள். அனைத்துக் கட்சிகளையும் வரும் தேர்தலில் தனித்து நிற்கச் சொல்லுங்கள். நாங்களும் தனியாக நிற்கிறோம். அப்போது தெரியும் யார் பலமாக இருக்கிறார்கள் என்று.

20 விழுக்காடு தனி இடஒதுக்கீடு கேட்டு பாமக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இது சமூக நீதி போராட்டம். தமிழக அரசின் ஆய்வு 7 மாவட்டங்களை பின்தங்கிய மாவட்டங்களாக குறிப்பிடுகிறது. அதில் வேலூர் முதலிடம், சேலம் ஆறாவது இடம். மொத்தம் 7 மாவட்டங்களும் வடமாவட்டங்கள்.

விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 73 சதவீதம் குடிசைகள் இருக்கிறது அதில் 42 சதவீதம் வன்னியர்கள் குடிசை. 36 சதவீதம் தாழ்த்தப்பட்டவர்கள் குடிசைகள். இதிலிருந்து வன்னியர்கள் பின்தங்கி இருப்பது தெரியவந்துள்ளது.

வன்னியர்கள் முன்னேற்றம் இல்லாமல், தமிழகம் முன்னேறாது. வன்னியர்கள் முன்னேறினால் தமிழகம் முன்னேறும்.

ஈழத் தமிழர்கள் இலங்கையில் இதுவரை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த விஷயத்தில் மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கைகள் திருப்தி தரவில்லை. சிறப்புக்குழு இலங்கைக்கு செல்வதால் ஈழத்தமிழர்களுக்கு எந்தவித பலனும் இல்லை. ஈழத்தமிழர்களுக்கு நலன் கிடைக்க வேண்டும் என்றால், அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து மத்திய மாநில அரசுகளை வலியுறுத்த வேண்டும்.

காவிரியை வைகையில் இணைப்பதாக தமிழக அரசு கூறுகிறது. ஏன் தெற்கு பகுதிகளுக்கே அனைத்து நலன்களையும் கொண்டு செல்கிறார்கள். பாலாற்றில் இணைக்க வேண்டியதுதானே?

வாய்தா ராணி என்று திமுக போராட்டம் நடத்தியது. இதற்கு பதிலாக விலைவாசி உயர்வுக்கு எதிராக போராட்டம் நடத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

சேலத்தில் புதிய மருத்துவமனை வருவதற்கு நான்தான் காரணம். ஆனால் மருத்துவமனை திறப்பு விழாவுக்கு இதுவரை எனக்கு முறைப்படி அழைப்பிதழ் வரவில்லை என்றார் அன்புமணி

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: