Friday, September 11, 2009

சென்னை: புதிதாக கொண்டுவரப்பட்ட விவசாய சட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளதை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வரவேற்றுள்ளார

சென்னை: புதிதாக கொண்டுவரப்பட்ட விவசாய சட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளதை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வரவேற்றுள்ளார்.

சமீபத்தில் தமிழக அரசு கொண்டு வந்த தமிழ்நாடு மாநில வேளாண்மை சட்டம்-2009 விவசாயிகளுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என பல்வேறு விவசாய அமைப்புகளும் பொது நல ஆர்வலர்களும் சுட்டிக் காட்டியுள்ளனர்.

இந்த சட்டத்துக்கு எதிராக ராமதாஸ் சென்னையில் ஒரு கருத்தரங்கமும் நடத்தினார். பன்னாட்டு நிறுவனங்களின் நெருக்கடியால் வேளாண் தொழிலில் இருந்து விவசாயிகளை வெளியேற்றும் நடவடிக்கையாகவே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக அதில் பேசியவர்கள் கூறினர்.

மேலும் இந்தச் சட்டம் இந்தியாவின் பாரம்பரிய விவசாய முறைகளுக்கு எப்படியெல்லாம் சாவு மணி அடிக்கும் என்றும் விளக்கினர்.

முதல்வர் அறிக்கை..

இதையடுத்து இந்த சட்டத்தை நிறுத்தி வைப்பதாக முதல்வர் அறிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,

பேரவையில் இந்தச் சட்ட மசோதா அறிமுகப்படுத்தப்பட்ட போதோ, பிறகு விவாதிக்கப்பட்ட போதோ எதிர்க்கட்சிகளின் சார்பிலோ, தோழமைக் கட்சிகளின் சார்பிலோ யாரும் எந்தவிதமான எதிர்ப்பும் தெரிவிக்காத நிலையில், அந்த மசோதா ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

எனினும், பாரம்பரிய விவசாயம் தொடர்ந்து காப்பாற்றப்பட வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையுள்ள திமுக அரசு விவசாயப் பெருங்குடி மக்களின் எண்ணங்களுக்கும், பத்திரிகையாளர்களின் கருத்துக்களுக்கும் மதிப்பளித்திடும் வகையில் `தமிழ்நாடு மாநில வேளாண்மை மன்றச் சட்டம்' நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.

ராமதாஸ் வரவேற்பு:

இதை வரவேற்றுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாடு மாநில வேளாண்மை மன்றச் சட்டம் நிறுத்தி வைக்கப்படுகிறது என்று முதல்வர் கருணாநிதி அறிவித்திருக்கிறார். தமிழகத்தின் பாரம்பரியமான விவசாயத்திற்கு எதிரானதாகவும், நமது உழவர்களுக்குச் சொந்தமான விளை நிலங்களெல்லாம் பன்னாட்டு நிறுவனங்களின் கைகளுக்கு மாற தூண்டுகோலாகவும் அமையும் என்ற காரணத்தால், இந்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் நானும், அதில் பங்கேற்ற இதர தலைவர்களும் வலியுறுத்தினோம்.

பசுமைத் தாயகம் மற்றும் தமிழ்நாடு உழவர் பேரியக்கம் போன்ற அமைப்புகள் இணைந்து நடத்திய இந்த கருத்தரங்கத்தில் வலியுறுத்தப்பட்ட கருத்துகளும், முன் வைக்கப்பட்ட விவாதங்களும் நியாயமானவை என்பதை உணர்ந்து இப்போது, இந்தச் சட்டத்தை நிறுத்தி வைக்க முதல்வர் முன்வந்திருக்கிறார்.

எதிர்காலத்தில், இது போன்ற முக்கிய சட்ட மசோதாக்களை கொண்டு வரும் போது, பேரவையிலும், பேரவைக்கு வெளியிலும் விரிவான விவாதங்களை நடத்துவதற்கு அரசு முன்வர வேண்டும். அப்படி விவாதங்கள் நடைபெறும் போது தெரிவிக்கப்படும் கருத்துகளையும், பரிந்துரைகளையும் உள்ளடக்கி சட்ட மசோதாக்களை கொண்டு வர வேண்டும்.

அப்படி கொண்டு வந்தால், இது போன்ற இடையூறுகளை தவிர்க்க முடியும். பாராளுமன்ற ஜனநாயகத்திலும், விவாதங்களிலும் பெரும் ஈடுபாடு வைத்துள்ள முதல்-அமைச்சர் இதனை நிச்சயம் பரிசீலிப்பார் என்ற நம்பிக்கையுடன் இப்போது, போதிய விவாதமின்றி நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு மாநில வேளாண்மை மன்றச் சட்டம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது என்ற அறிவிப்பை வரவேற்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கண்டனம் :

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வேளாண் மன்றச் சட்ட முன்வடிவின் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் டெல்லிபாபு, அவருக்கு அனுமதிக்கப்பட்ட ஒரு சில மணித்துளிகளைப் பயன்படுத்தி கட்சியின் சார்பில் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். இந்த உண்மையைத் திரையிடுவது போன்று, முதல்வரின் அறிக்கை அமைந்துள்ளது கண்டனத்துக்கு உரியது என்று கூறியுள்ளார்

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: