Thursday, August 13, 2009

காவிரி-உடனே பேச்சு நடத்த ராமதாஸ் கோரிக்கை

திண்டிவனம்: திருவள்ளுவர்-சர்வஞ்னர் சிலைகள் திறப்பு மூலம் தமிழகம்- கர்நாடகம் இடையே இணக்கமான சூழல் நிலவும் இந்த சூழ்நிலையில் காவிரிப் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் முயற்சியை முதல்வர் கருணாநிதி தொடங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

திண்டிவனத்தையடுத்த தனது தைலாபுரம் தோட்டத்தில் நிருபர்களிடம் பேசிய அவர்,

பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட முடியாத பிரச்சனையே இல்லை என்றும், தமிழ்நாட்டிற்கும் கர்நாடகத்திற்கும் இடையே உள்ள பிரச்சனைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள முடியும் என்றும் கர்நாடக முதல்வர் எதியூரப்பா பெங்களூர் வள்ளுவர் சிலை திறப்பு விழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் தமிழக முதலமைச்சரின் முன்னிலையில் கூறியிருக்கிறார்.

1968ம் ஆண்டு நடந்த முதல் பேச்சுவார்த்தையில் பொதுப்பணித் துறை அமைச்சர் என்ற முறையில் கலந்து கொண்ட கருணாநிதி இன்றைக்கும் பொதுப் பணித்துறைக்கும் பொறுப்பு வகிப்பது பொருத்தமானது தான்.

32 முறை பேசி தீர்க்க முடியாத காவிரி சிக்கலுக்கு இப்போது பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காணும் முயற்சியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இதில் தாமதம் கூடாது. இணைந்த உள்ளங்கள் பிரிவதற்கு முன்பாகவே பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும்.

எதியூரப்பாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி காவிரி சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்பது கூட வேண்டாம். குறைந்தபட்சம் 2001ம் ஆண்டு நடுவர் நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பின்படி இப்போது உடனடியாக தமிழகத்திற்கு தண்ணீர் பெற வேண்டும்.

இடைக்காலத் தீர்ப்பின்படி ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மொத்தம் 102 டி.எம்.சி. தண்ணீரை தமிழகம் பெற்றிருக்க வேண்டும். கர்நாடகத்தில் உள்ள அனைத்து அணைகளும் இப்போது நிரம்பி வழிந்து கொண்டிருக்கின்றன. ஆனால் குறுவை நெல்லை தவறவிட்ட தமிழகத்திற்கு இப்போது மேட்டூரில் இருக்கும் நீர் சம்பா பருவத்திற்கு பற்றாக்குறையாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

எனவே, சம்பா பயிரை காக்கவாவது இடைக்காலத் தீர்ப்பின்படி தண்ணீரை திறந்து விடச் செய்வதற்கு எதியூரப்பாவை உடனடியாக சம்மதிக்க வைக்க வேண்டும்.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்து தேர்தல் முடிவை அடியோடு மாற்றிவிட முடியும் என்ற புகாரை செயல் விளக்கம் மூலம் நிரூபித்துக் காட்ட பாமகவுக்கு ஆகஸ்ட் 27ம் தேதி வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. உயர்நீதிமன்றத்தின் தலையீட்டிற்குப் பிறகு இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அன்றைய தினம் பாமக சார்பில் தொழில்நுட்ப நிபுணர்களும் சில நடுநிலையாளர்களும் தேர்தல் ஆணையத்தின் முன் இதை நிரூபித்துக் காட்டுவர் என்றார் ராமதாஸ்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: