Wednesday, September 30, 2015

நீதி கிடைக்க பன்னாட்டு போர்க்குற்ற நீதிமன்ற விசாரணை தேவை: ஐ.நா. மனித உரிமை பேரவையில் அன்புமணி பேச்சு

 

ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமை பேரவைக் கூட்டத்தில் பாமக எம்பி அன்புமணி இராமதாசு கலந்து கொண்டிருக்கிறார்.  இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான மனித உரிமை ஆணையர் தாக்கல் செய்த விசாரணை அறிக்கை மீதான பொது விவாதம் இன்று மாலை நடைபெற்றது. அந்த விவாதத்தில் அன்புமணி இராமதாசு பேசுகையில்,

இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஐ.நா. மனித உரிமை ஆணையர் அலுவலக விசாரணை அறிக்கையை பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் வரவேற்கிறேன்.

இலங்கைத் தமிழர்களின் நலன், உரிமைகள் மற்றும் கண்ணியம் காக்கப்பட வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள, 7.7 கோடி மக்களின் சார்பில் நான் இங்கு பேசுகிறேன். 

இலங்கையில் நடைபெற்ற போரின் போதும், போருக்கு பிறகும் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்தி வலிமையான, விரிவான  அறிக்கையை தாக்கல் செய்ததற்காக ஐ.நா. மனித உரிமை ஆணையர் அலுவலகத்திற்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். மனித உரிமை ஆணையர் அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு, இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களுக்கு காரணமானவர்கள் யார் என்பது  கண்டறியப்பட்டு தண்டிக்கப்பட வேண்டுமானால், உள்நாட்டு நீதிமன்ற விசாரணைக்கு மேலான விசாரணை அமைப்பு தேவையாகும்.

மனித உரிமை ஆணையர் தாக்கல் செய்த அறிக்கையில் போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான் குற்றச்சாற்றுகள் குறித்து கீழ்க்கண்ட தனித்தனி தலைப்புகளில் விரிவாக விவரிக்கப்பட்டிருக்கிறது.

*சட்டவிரோத படுகொலைகள்
*சுதந்திரம் பறிக்கப்பட்டது தொடர்பான விதிமீறல்கள்
*கட்டாயக் ஆள்கடத்தல்கள்
*சித்திரவதைகள் மற்றும் பிற வடிவிலான கொடுமைகள், மனிதத்தன்மையற்ற மற்றும் சிறுமைப்படுத்தும் வகையில் நடத்தப்படுதல்
*பாலியல் மற்றும் பாலினம் சார்ந்த வன்முறைகள்
*18 வயதுக்கு மேற்பட்டோரை கடத்துதல் மற்றும் கட்டாயப்படுத்தி படையில் சேர்த்தல்
*குழந்தைகளை படையில் சேர்த்து போரில் பயன்படுத்துதல்
*போரின் காரணமாக அப்பாவி மக்கள் மற்றும் அவர்களின் பயன்பாட்டுக்கான பொருட்கள் மீது ஏற்பட்ட தாக்கம்.
*மக்கள் நடமாட்டத்தின் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்
*மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளை செய்வதற்குக் கூட அனுமதி மறுத்தல்
* அடைக்கப்பட்ட முகாம்களுக்குள் தங்கவைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்த உள்நாட்டு மக்களின் சுதந்திரத்தை பறித்தல் மற்றும் அவர்களை சோதனைக்கு உள்ளாக்குதல்.

போர்க்குற்றங்கள் தொடர்பாக உள்ளக விசாரணையை மட்டுமே அனுமதிக்க முடியும் என்று இலங்கை திட்டவட்டமாக கூறிவிட்டது. இலங்கைப் போரில் பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாத வகையில் கூட்டுத் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டிருப்பதை மனதில் கொண்டு, போர்க்குற்ற விசாரணை அறிக்கைக்கு விடப்பட்டுள்ள இந்த சவாலை சமாளிக்க சரியான நடவடிக்கை தேவைப்படுகிறது. 

போர்க்குற்றச்சாற்றுக்கு ஆளாகியுள்ள இலங்கைக்கு, அதன் குற்றங்கள் குறித்து விசாரித்து தீர்ப்பளிக்க தார்மீக உரிமை கிடையாது. மனித உரிமை ஆணையர் அலுவலக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு இலங்கை புதிதாக பதவியேற்ற அரசு கூட மனித உரிமை ஆணையர் அலுவலக விசாரணைக் குழுவை  இலங்கைக்குள் அனுமதிக்கவில்லை என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

உள்நாட்டில் இடம் பெயர்ந்த மக்களாக இலங்கைத் தமிழர்கள் இன்னும் அவதிப்பட்டு வருகின்றனர். தமிழ் கிராமங்களில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. தமிழர்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்கள் இன்னும் திரும்ப ஒப்படைக்கப்படவில்லை. கற்பழிப்புகளும், சித்திரவதைகளும் தொடர்கின்றன. தமிழ் மக்கள் இன்னும் அச்சத்தில் வாழ்கின்றனர். அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் இன்னும் அப்படியே நீடிக்கின்றன. 

இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களுக்கு எதிராக பன்னாட்டு நீதிமன்ற விசாரணை கோரி ஐ.நா. மனித உரிமை பேரவையில் வலிமையான தீர்மானத்தை இந்திய அரசே கொண்டு வர வேண்டும் என்று கோரி 15.09.2015 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை உங்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.

இந்த விஷயத்தில் பன்னாட்டு விசாரணை கோர வேண்டும் என்ற தமிழக மக்களின் கோரிக்கைகள் தொடர்பாக இந்திய அரசு அமைதி காப்பது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.

போர்க்குற்றம் தொடர்பான விசாரணையின் சாட்சிகளுக்கு போதிய பாதுகாப்பு அளிப்பதற்கு வசதியாக  இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் கிளை அலுவலகங்களை அமைக்க வேண்டும்  என்று ஐ.நா. மனித உரிமை ஆணையத்தை பசுமைத்தாயகம் அமைப்பு கேட்டுக் கொள்கிறது. 

இலங்கையில் போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  நீதி கிடைப்பதை உறுதி செய்ய வசதியாக பன்னாட்டு நீதிமன்ற விசாரணை நடைமுறையையும், பொறுப்புடைமையை உறுதி செய்வதற்கான அமைப்பையும் ஏற்படுத்தும்படி சர்வதேச சமுதாயத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

Tuesday, September 29, 2015

மின் கொள்முதலில் ரூ.415 கோடி இழப்பு: சி.ஏ.ஜி. புகார் பற்றி விசாரணை தேவை: ராமதாஸ்

மின் கொள்முதலில் ரூ.415 கோடி இழப்பு: சி.ஏ.ஜி. புகார் பற்றி விசாரணை தேவை என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில் மின்சாரத் தட்டுப்பாட்டை சமாளிக்க தனியாரிடமிருந்து குறுகிய கால ஒப்பந்தங்களின்படி மின்சாரம் வாங்கியதில் மின்வாரியத்திற்கு ரூ.415 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில் குற்றஞ்சாற்றப்பட்டுள்ளது. திமுக, அதிமுக ஆகிய இரு ஆட்சிகளிலுமே மின்சாரக் கொள்முதலில் ஊழல் நடந்ததை இந்த அறிக்கை அம்பலப்படுத்தியிருக்கிறது.

2013-14 ஆம் ஆண்டில் தமிழக அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்த இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் தணிக்கை அறிக்கை சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. மின்சாரக் கொள்முதலில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து இந்த அறிக்கையில் விரிவாக விளக்கப்பட்டிருக்கிறது. 2010 ஆம் ஆண்டில் தொடங்கி 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை குறுகிய கால ஒப்பந்தங்களின் அடிப்படையில் மின்சாரம் வாங்கியதில் ரூ.109.60 கோடி மின்சார வாரியத்திற்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், அதே அளவு தொகை தனியார் நிறுவனங்களுக்கு லாபமாக கிடைத்திருப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மின்சாரத் தட்டுப்பாடு எவ்வளவு, எந்தெந்த காலத்தில் எவ்வளவு மின்சாரம் தேவைப்படும் என்பதை துல்லியமாக கணக்கிடாமல் ஒரே காலகட்டத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டது தான் இந்த இழப்புக்கு காரணம் என்றும் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், இந்த இழப்பு திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டது என்பது தான் உண்மை.தணிக்கை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள சில புள்ளி விவரங்களின் அடிப்படையில் இதை நிரூபிக்கலாம். உதாரணமாக, பவர் டிரேடிங் கார்ப்பரேசன்(Power Trading Corporation Limited-PTC) என்ற நிறுவனத்திடமிருந்து 2011 ஆம் ஆண்டு மார்ச் முதல் மே மாதம் வரை 1000 மெகாவாட் மின்சாரம் வாங்க 2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. இந்த மின்சாரம் போதாது என்று  தோன்றியதால் 2011 மார்ச், ஏப்ரல் மாதங்களில் கூடுதலாக 700 மெகாவாட் மின்சாரம் வாங்குவதற்கு 2011 பிப்ரவரியில் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. முதல் ஒப்பந்தத்தில் ஒரு யூனிட் ரூ.4.76 என்றும், இரண்டாவது ஒப்பந்தத்தில் ஒரு யூனிட் ரூ.6.75 என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. 

முதல் ஒப்பந்தப்படி 2011 மார்ச் மாதத்தில் ஒரு யூனிட் ரூ.4.76 என்ற விலையில் 2.02 கோடி யூனிட் மின்சாரத்தை வழங்கியிருக்க வேண்டும். ஆனால், அந்த நிறுவனம் அதில் பாதியளவு, அதாவது 1.18 கோடி யூனிட் மின்சாரத்தை மட்டுமே வழங்கியது. அதேநேரத்தில் யூனிட் ரூ.6.75 என்ற விலையில் 1.37 கோடி யூனிட் வழங்குவதற்கு பதிலாக 2.08 கோடி யூனிட் மின்சாரம் வழங்கியிருக்கிறது. ஒரே நிறுவனத்திடம் இரு விலைகளில் மின்சாரம் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டதால் குறைந்த விலையில் வழங்கப்பட வேண்டிய மின்சாரத்தை உரிய அளவில் வழங்காமல், அதிக விலைக்கு வழங்கப்பட வேண்டிய மின்சாரத்தை அதிக அளவில் வழங்கியிருக்கிறது. 2011 ஏப்ரல் மாதத்திலும் இதே நிலை  நீடித்தது. இதனால் 2 மாதங்களில் ஒரே ஒரு நிறுவனத்திடம் மட்டும் ரூ. 7.94 கோடி இழப்பு ஏற்பட்டது.

2014 ஆம் ஆண்டு வரை இதே போல் இரு விலைகளில் ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டு, அதிக விலையில் கூடுதல் மின்சாரம் வாங்கியதாக கணக்குக் காட்டப்பட்டிருக்கிறது. இந்த வகையில் தான் ரூ.109 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. முதல் ஒப்பந்தப்படி வழங்கப்பட வேண்டிய மின்சாரத்தை வழங்கி முடித்த பிறகு தான் இரண்டாவது ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் என நிபந்தனை விதிக்கப் பட்டிருந்தால் இந்த இழப்பு ஏற்பட்டிருக்காது. மின் நிறுவனங்களின் தவறுகளால் இழப்பு ஏற்படும் பட்சத்தில் அதை ஈடுகட்டவும் ஒப்பந்தத்தில் வகை செய்யப்பட்டிருக்கிறது. அதாவது குறைந்த விலையில் மின்சாரம் வழங்க ஒப்பந்தம் செய்து கொண்ட நிறுவனங்கள் அதன்படி மின்சாரம் வழங்கத் தவறினால் ஒரு யூனிட்டுக்கு ரூ.1 வீதம் இழப்பீடு வசூலிக்க முடியும். அந்த வகையில் தனியார் நிறுவனங்கள் குறித்த காலத்தில் வழங்காத 264.90 கோடி யூனிட்டுகளுக்கு ரூ.280.37 கோடி இழப்பீடு வசூலித்திருக்க வேண்டும். ஆனால், ஒரு பைசா கூட இழப்பீடாக வசூலிக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, 2011 நவம்பர் முதல் 2012 ஜூன் வரையிலான காலத்தில் ஒப்பந்தப்படி மின்சாரம் வழங்காததற்காக தனியார் நிறுவனங்களிடம் இழப்பீடாக வசூலிக்கப்பட்ட ரூ.36 கோடி காரணமின்றி திரும்பத் தரப்பட்டு விட்டது. 

மின்சாரம் வாங்குவதற்கான ஒப்பந்தங்களில் சில தி.மு.க. ஆட்சியிலும், பல அ.தி.மு.க. ஆட்சியிலும் கையெழுத்திடப்பட்டவை. அதனால் அதில் நடந்த ஊழலுக்கு இரு கட்சி அரசுகளும் பொறுப்பேற்க வேண்டும். ஆனால், வழங்கப்படாத மின்சாரத்திற்காக இழப்பீடு வசூலிக்க வேண்டிய பொறுப்பு அ.தி.மு.க. அரசுக்கு தான் இருந்தது. அந்த அரசு தான் இழப்பீட்டை வசூல் செய்திருக்க வேண்டும். ஆனால், மின் நிறுவனங்களுக்கும் ஆட்சியாளர்களுக்கு இடையிலான பேரங்கள் காரணமாக இழப்பீடு வசூலிக்கப்படவில்லை; இழப்பீட்டை வசூலிக்காமல் இருந்ததற்காக ஆட்சியாளர்களுக்கு பொருளாதாரப் பயன்கள் கிடைத்தன என்பதே உண்மை. இதுதவிர தனியார் நிறுவனங்கள் வழங்கும் மின்சாரத்திற்கான கடன் உத்தரவாதக் கடிதத்தை மின்சார வாரியம் தராததால் சில நிறுவனங்கள் மின்சாரம் தர மறுத்து விட்டன. அதே மின்சாரத்தை வேறு நிறுவனங்களிடமிருந்து  அதிக விலை கொடுத்து வாங்கியதால் கூடுதலாக அரசுக்கு ரூ.25.64 கோடி இழப்பு ஏற்பட்டதாக தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உடன்குடி மின்திட்டம் தொடர்பாக பெல் நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்டிருந்த கூட்டாண்மை ஒப்பந்தத்தை ரத்து செய்ததால் ரூ.21.64 கோடியும், நீர் மின் நிலையங்களில் மின்னுற்பத்தி கருவிகளை அமைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக ரூ.29.79 கோடியும் இழப்பு ஏற்பட்டன. இந்த இழப்புகள் தவறுதலாக ஏற்பட்டவை கிடையாது; இவை தி.மு.க., அ.தி.மு.க. அரசுகளால் திட்டமிட்டு ஏற்படுத்தப் பட்டவை என்பதால் இவற்றை ஊழலாகத் தான் கருத வேண்டும். எனவே, இந்த இழப்புகள் குறித்து விரிவான விசாரணை நடத்தி, இழப்புக்கு காரணமானவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஒரு பைசா ஊழல் இல்லாத தமிழகம் படைப்போம்... பாமகவின் அடுத்த பிரசார வாசகம்!

சென்னை: பாமக தனது 3வது பிரசார வாசகத்தை மக்கள் முன் வைத்துள்ளது. 50 ஆண்டு ஊழலுக்கு முடிவு கட்டுவோம். ஒரு பைசா ஊழல் இல்லா தமிழகம் படைப்போம் என்பதே அந்த மூன்றாவது வாசகம்.டாக்டர் அன்புமணி ராமதாஸை முதல்வர் வேட்பாளராக அறிவித்த கையோடு சட்டசபைத் தேர்தலுக்குத் தயாராகி விட்டது பாமக. ஊர் தோறும் மாநாடுகள், கூட்டங்கள் என டாக்டர் அன்புமணியும், டாக்டர் ராமதாஸும் தீவிரப் பணியாற்றி வருகின்றனர்.மேலும் மக்களிடம் ரீச் ஆகும் வகையில் புதுப் புது பிரசார வாசகங்களையும் அவர்கள் வெளியிட்டு வருகின்றனர்.
 
50 ஆண்டு ஊழலுக்கு முடிவு கட்டுவோம் இப்போது வெளியாகியுள்ள 3வது ஸ்லோகன் இது. 50 ஆண்டு ஊழலுக்கு முடிவு கட்டுவோம். ஒரு பைசா ஊழல் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்று இந்த வாசகம் கூறுகிறது.

Monday, September 28, 2015

பாமக மாநாட்டிற்கு வெற்றிலை–பாக்கு வைத்து அழைப்பு



 
 
 


நெல்லையில் நடைபெறும் மாநாட்டில் பொதுமக்கள் கலந்து கொள்வதற்காக தமிழர் மரபுப்படி பொதுமக்களை வெற்றிலை, பாக்கு வைத்து அழைக்கும் நிகழ்ச்சியை நெல்லை சந்திப்பில் ஜி.கே.மணி தொடங்கி வைத்தார். 

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,   ‘’நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய 3 மாவட்டங்கள் சார்பாக தென்மண்டல 9–வது அரசியல் மாநாடு வருகிற 11–ந்தேதி நெல்லையில் நடக்கிறது. இதற்கு பொதுமக்களை வெற்றிலை, பாக்கு வைத்து அழைக்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்துள்ளேன்’’என்று கூறினார்.
 

Thursday, September 24, 2015

மின்சாரக் கொள்முதலால் பல லட்சம் கோடி இழப்பு; கையெழுத்திட்ட ஒப்பந்தங்களை உடனடியாக ரத்து செய்க: ராமதாஸ்

மின்சாரக் கொள்முதலால் அரசுக்கு பல லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது, எனவே கையெழுத்திட்ட ஒப்பந்தங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாடு மின்வாரியத்திற்கு, தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதால் ஏற்படும் இழப்புகள் குறித்த விவரங்களை மின்வாரிய பொறியாளர்கள் அமைப்பு வெளியிட்டிருக்கிறது. மின்சாரக் கொள்முதலில் நடைபெற்று வரும் ஊழல்கள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளன.

தமிழ்நாட்டில் நிலவும் மின் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காக தனியாரிடமிருந்து மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. மொத்தம் 3,300 மெகாவாட் அளவுக்கு மின்சாரம் கொள்முதல் செய்ய 11 தனியார் மின் நிறுவனங்களுடன் மின் வாரியம் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறது. சந்தையில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.2.60க்கு கிடைக்கும் நிலையில், தனியார் நிறுவனங்களிடமிருந்து ஒரு யூனிட் ரூ.4.91 என்ற விலையில் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் ஆண்டுக்கு ரூ.2688 கோடி வீதம் ஒப்பந்த காலமான 15 ஆண்டுகளில் மொத்தம் ரூ.40,327 கோடி இழப்பு ஏற்படும் என மின்வாரிய பொறியாளர்கள் அமைப்பு குற்றஞ்சாற்றிருக்கிறது. இக்குற்றச்சாற்றுகளை ஆதாரமற்றவை என ஒதுக்கி விட முடியாது.

தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு மின்சாரம் கொள்முதல் செய்வதில் பெருமளவில் முறைகேடுகள் நடப்பதாக பல ஆண்டுகளாகவே நான் குற்றஞ்சாற்றி வருகிறேன். மின்தட்டுப்பாட்டைக் காரணம் காட்டி அதிக விலைக்கு மின்சாரம் வாங்கி ஊழல் செய்யும் கலாச்சாரம் முந்தைய தி.மு.க. ஆட்சியில்  தொடங்கியது. அ.தி.மு.க. ஆட்சியில் மின் கொள்முதல் ஊழல் தொடர்வது மட்டுமின்றி, அதிகரித்தும்  வருகிறது. தனியார் நிறுவனங்களுடன் தமிழ்நாடு மின்சார வாரியம் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தின் படி மின்சாரத்தை வாங்கினாலும், வாங்காவிட்டாலும் அவற்றுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். தமிழகத்தில் காற்றாலை மின்சாரம் அதிக அளவில் உற்பத்தியான நேரத்தில், தனியார் நிறுவனங்களிடம் இருந்து அனல் மின்சாரத்தை கொள்முதல் செய்யாமலேயே அதற்கான கட்டணத்தை மின்சார வாரியம் செலுத்தியது குறிப்பிடத்தக்கது. இதனால் மின்வாரியத்திற்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

அனல் மின்சாரம் மட்டுமின்றி சூரிய ஒளி மின்சாரத்தை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தங்களை செய்து கொள்வதிலும் மின்சார வாரியத்திற்கு திட்டமிட்டு இழப்பு ஏற்படுத்தப்படுகிறது. அதானி குழுமம் உட்பட மொத்தம் 32 நிறுவனங்களிடம் இருந்து 1084 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரத்தை  யூனிட் ரூ.7.01 என்ற விலையில் கொள்முதல் செய்ய மின்சார வாரியம் ஒப்பந்தம் செய்திருக்கிறது. இதுதவிர 107 நிறுவனங்களிடம் இருந்து 2722.5 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தங்களில் தமிழ்நாடு மின்சார வாரியம் விரைவில் கையெழுத்திடவிருக்கிறது. அதுமட்டுமின்றி, அண்மையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், பல்வேறு பன்னாட்டு  நிறுவனங்கள் 5345 மெகாவாட் திறன் கொண்ட சூரிய ஒளி மின் நிலையங்களை அமைக்க சம்மதம் தெரிவித்துள்ளன. இந்த நிறுவனங்கள் அனைத்திடமிருந்தும் ஒரு யூனிட் ரூ.7.01 என்ற விலையில்  சூரிய ஒளி மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய மின்சார வாரியம் முடிவு செய்திருக்கிறது. இதனால் ஒரு மெகாவாட்டுக்கு ரூ.9 கோடி வீதம் மொத்தம் ரூ.82,359 கோடி இழப்பு ஏற்படும் ஆபத்து உள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியம் ஏற்கனவே கடுமையான இழப்பை சந்தித்து வருகிறது. மின் வாரியத்தின் மொத்தக் கடன் சுமை ஒன்றரை லட்சம் கோடி ரூபாயைத் தாண்டி விட்டது. இந்த நிலையில் தமிழக ஆட்சியாளர்கள் கமிஷனுக்கு ஆசைப்பட்டு அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதால் ஏற்படும் இழப்புகளுக்கு யார் பொறுப்பேற்பார்கள் என்பதை தமிழக முதலமைச்சர் விளக்க வேண்டும். மக்கள் நலனில் தமிழக அரசுக்கு அக்கறை இருந்திருந்தால் தமிழக அரசே மின் திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தியிருக்க முடியும். அவ்வாறு செயல்படுத்தியிருந்தால் அதிக விலைக்கு மின்சாரம் வாங்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது. ஆனால், ஊழல் செய்வதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட தமிழக ஆட்சியாளர்கள் மின் நிலையங்களை அமைத்தால் தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்கி கமிஷன் பெற முடியாது என்பதால் மின் திட்டங்களைத் தாமதப்படுத்துகின்றனர். எண்ணூர் மின்திட்டம், உடன்குடி மின் திட்டம் ஆகியவற்றை குறைந்த செலவில் அமைத்துத் தர சீன நிறுவனம் முன்வந்த போதிலும், அதனால் மின்சார வாரியத்திற்கு ரூ.3000 கோடி அளவுக்கு லாபம் கிடைக்கும் என்றாலும், அதைப் பொருட்படுத்தாமல் அமைச்சருக்கு நெருக்கமான நிறுவனத்திற்கு தான் ஒப்பந்தம் தருவோம் என்று தமிழக அரசு கூறுவதில் இருந்தே ஆட்சியாளர்களின் நோக்கத்தை புரிந்து கொள்ள முடியும்.

தனியார் நிறுவனங்களுடன் தமிழக அரசு செய்து கொண்டுள்ள மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தங்கள்  தொடர்பான அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும். சந்தை விலையை விட அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்வதற்காக கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் அனைத்தையும் தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

சென்னை: தமிழக சட்டசபையில் இலங்கையின் போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இதுதொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தி, அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தீர்மானத்தை அவருக்கு விளக்கிட வேண்டும் என்று பாமக முதல்வர் வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவர் விரிவான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அனைத்துக் கட்சிக் குழு பிரதமரைச் சந்திக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்

சென்னை: தமிழக சட்டசபையில் இலங்கையின் போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இதுதொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தி, அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தீர்மானத்தை அவருக்கு விளக்கிட வேண்டும் என்று பாமக முதல்வர் வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவர் விரிவான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அனைத்துக் கட்சிக் குழு பிரதமரைச் சந்திக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்
 

Wednesday, September 23, 2015

எங்கு வேண்டுமானாலும் சொல்வேன்... ஜெயலலிதா நிர்வாகம் மிக மோசமான நிர்வாகம்.. ராமதாஸ்

எங்கு வேண்டுமானாலும் சொல்வேன்... ஜெயலலிதா நிர்வாகம் மிக மோசமான நிர்வாகம்.. ராமதாஸ்

சென்னை: ஜெயலலிதா அரசின் நிர்வாகம் நல்ல நிர்வாகம் அல்ல. மிக மோசமான நிர்வாகம். இதை எந்த மேடையில் வேண்டுமானாலும் வந்து சொல்ல நான் தயார் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.சென்னை தி.நகர் பஸ் நிலையம் அருகில் பாமக சார்பில் வரைவு தேர்தல் அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது.கூட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு தேர்தல் அறிக்கையை விளக்கிப் பேசினார். அவரது பேச்சிலிருந்து...

மோசமான நிர்வாகம் தமிழகத்தில் ஜெயலலிதா அளித்து வரும் நிர்வாகம் நல்ல நிர்வாகம் அல்ல. இதை எந்த மேடையில் வேண்டுமானாலும் பேச தயாராக இருக்கிறேன். அதிமுக சார்பில் யார் வேண்டுமானாலும் இது குறித்து என்னிடம் விவாதிக்கலாம். இதை சொன்னால் என் மீது அவதூறு வழக்கு தொடருவார்கள்.
தலையில்தான் அடித்திருப்பார்கள் இதைப் பார்த்து மாநாட்டிற்கு வந்தவர்கள் தலையில் தான் அடித்து கொண்டிருப்பார்கள். முதல்வர் கூறியபடி முதலீடா வரப்போகிறது? நிச்சயம் ஒரு முதலீடும் வராது.

விஷ்ணுப்பிரியா கொலை வழக்கு விஷ்ணு பிரியா கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். ஒவ்வொரு மணித்துளியும் பாமகவுக்கு ஆதரவு பெருகி வருகிறது.

நேர்மையான முதல்வரா நீங்கள்? நேர்மையான முதல்வராக இருந்தால் ஜெயலலிதா வரும் தேர்தலில் காசு கொடுக்க மாட்டேன் என்று அறிவிக்க தயாரா? தமிழ்நாடு தற்போது ஐசியூவில் இருக்கிறது.
அமைச்சர்களே முதல்வரைப் பார்க்க முடியவில்லை அன்றாட வாழ்க்கையில் ஒன்றாக ஊழல் மாறி விட்டது. அமைச்சர்களே கூட முதல்வரை பார்க்க முடியாது என்ற நிலை தான் உள்ளது.

வீடியோவில் மட்டுமே முதல்வரைப் பார்க்க முடிகிறது தனி மனிதருக்கு பிடிக்கவில்லை என்பதற்காக கடந்த ஆட்சியில் கட்டப்பட்ட கட்டிடத்தை மருத்துவமனையாக மாற்றினார்கள். காணொலி காட்சி மூலம் மட்டுமே முதல்வர் அனைத்து திட்டங்களையும் திறந்து வைக்கிறார். தற்போதைய ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடக்கிறது. மொத்தத்தில் சுனாமி ஊழல் கட்சியாக அதிமுக தற்போது விளங்கி வருகிறது என்று காட்டமாக பேசினார் டாக்டர் ராமதாஸ்.

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: