சென்னை: சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே உள்ள நிலையில் திமுக, தேமுதிகவிற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் வகையில் பாட்டாளி மக்கள் கட்சி முதற் கட்டமாக 120 தொகுதிகளில் வீடு வீடாக துண்டுப் பிரசுரம் கொடுத்துப் பிரச்சாரம் செய்யும் பணியைத் தொடங்கியுள்ளது.முதல்வராக இருந்த ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறை சென்ற போது எதிர்கட்சியினர் பலரும் முதல்வர் கனவில் வலம் வந்தனர். பாஜக தலைமையில் ஒரு அணி, திமுக தலைமையில் ஒரு அணி பாமக தலைமையில் அன்புமணியை முதல்வராக அறிவித்து ஒரு அணி, விஜயகாந்த் தலைமையில் ஒரு அணி என எதிர்கட்சியினர் தேர்தலுக்கு தயாராகி வந்தனர். இந்த நிலையில் கர்நாடக உயர்நீதிமன்றம் ஜெயலலிதாவை சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவித்தது. இதனையடுத்து அரசியல் வானில் காட்சிகள் மாறின.ஆளும் அதிமுகவிற்கு எதிராக மெகா கூட்டணி அமைக்க தயாராகி வருகிறது திமுக. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய தயாராகிவிட்டார். இதேபோல தேமுதிக தலைவர் விஜயகாந்தும் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.
Monday, August 10, 2015
தகவல் ஆணையர் நியமனங்கள்: செஞ்சோற்று கடன் தீர்த்திருக்கிறார் ஜெ. ஜெயலலிதா: ராமதாஸ் கண்டனம்
பல்வேறு கால கட்டங்களில் தமக்கு உதவி செய்தவர்களுக்கு தகவல் ஆணையர்கள் பணி நியமனம் மூலம் செஞ்சோற்று கடன் தீர்த்திருக்கிறார் ஜெ. ஜெயலலிதா என்றும், உண்மையை குழி தோண்டி புதைக்கவா தகவல் ஆணையர் நியமனங்கள்? என்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டு தகவல் ஆணையத்தில் தலைமை ஆணையராக ஓய்வு பெற்ற காவல்துறை தலைமை இயக்குனர் கே. இராமானுஜமும், ஆணையர்களாக ஓய்வு பெற்ற நீதிபதி தட்சிணாமூர்த்தி, அ.தி.மு.க. வழக்கறிஞர் செல்வம் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். முக்கியம் வாய்ந்த தகவல் ஆணையர்கள் நியமனத்தில் சட்ட விதிகள் பெயரளவில் கூட கடைபிடிக்கப்படாதது கடும் கண்டனத்துக்குரியதாகும்.
தலைமைத் தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள இராமானுஜம் தமிழக அரசின் ஆலோசகராக பணியாற்றி, அரசு ஊதியத்தில் அ.தி.மு.க.வுக்கு ஆலோசனை வழங்கும் பணியை செய்தவர். சட்டத்தை செயல்படுத்தும் காவல்துறையில் தலைமை பொறுப்பில் இருந்த அவர் சட்டவிரோத செயல்களுக்கு எல்லாம் எப்படி துணை போனார்? வருவாய்க்கு மீறி சொத்துக்குவித்த வழக்கில் தமது அதிகாரத்தை பயன்படுத்தி என்னென்ன உதவிகளையெல்லாம் செய்தார் என்பது தமிழகத்தின் அரசியலை உன்னிப்பாக கவனித்து வருபவர்களுக்கு நன்றாகத் தெரியும். அதே சொத்துக்குவிப்பு வழக்கிற்கு அடிப்படையாக இருந்த வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதது குறித்த வழக்கில் ஜெயலலிதாவுடன் சமரசம் செய்து கொண்டதாக கூறி, அவ்வழக்கை திரும்பப் பெறுவதாக வருமான வரித்துறை மனுத் தாக்கல் செய்த போது, எதிர் கேள்வி எழுப்பாமல் அதை அனுமதித்த நீதிபதி தட்சினாமூர்த்தி தான் தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டிருக்கிறார். மூன்றாவது நபரைப் பற்றி கேட்கவே தேவையில்லை. அவர் அ.தி.மு.க.வின் நிர்வாகி. மொத்தத்தில் பல்வேறு கால கட்டங்களில் தமக்கு உதவி செய்தவர்களுக்கு தகவல் ஆணையர்கள் பணி நியமனம் மூலம் செஞ்சோற்று கடன் தீர்த்திருக்கிறார் ஜெ. ஜெயலலிதா.
தகவல் பெறும் உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் நோக்கமே அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை ஏற்படுத்த வேண்டும்; ஊழலை தடுக்க வேண்டும் என்பதற்காகத் தான். ஆனால், தகவல் ஆணையர்களை நியமிப்பதிலேயே வெளிப்படைத் தன்மை கடைபிடிக்கப்படுவதில்லை என்பது தான் கொடுமை. தகவல் ஆணையர்களை முதலமைச்சர், முதலமைச்சரால் நியமிக்கப்படும் அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரைக் கொண்ட குழுவின் பரிந்துரைப்படி தான் நியமிக்கப்பட வேண்டும் என்று தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் 15 (3) ஆவது பிரிவில் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், அதை மதிக்காமல் எதிர்க்கட்சித் தலைவரிடம் கருத்து மட்டும் கேட்டுக் கடிதம் எழுதுவதும், அக்கடிதம் அவருக்கு கிடைப்பதற்கு முன்பே கூட்டத்தைக் கூட்டி தகவல் ஆணையர்களை நியமிப்பதும் அந்த சட்டத்தின் நோக்கத்தையே சிதைக்கும் செயல் என்பதில் எள் முனையளவு கூட ஐயமில்லை.
முந்தைய தி.மு.க. ஆட்சியிலும் தகவல் ஆணையர்களை நியமிப்பதில் இத்தகைய அணுகுமுறை தான் கடைபிடிக்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் அவசர, அவசரமாக அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரைக் கூட அழைக்காமல் கூட்டத்தைக் கூட்டி இ.ஆ.ப. அதிகாரி பி.ஏ.இராமையா, சி. மனோகரன், ஆறுமுகநயினார் ஆகியோர் தகவல் ஆணையர்களாக நியமிக்கப்பட்டனர். இதற்கு அப்போதைய ஆளுனரான பர்னாலாவிடம் ஒரேநாளில் அனுமதி பெறப்பட்டது. ஆனால், விதிமுறைகளை மீறிய இந்த நியமனம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் பின்நாளில் தீர்ப்பளித்தது. அத்தீர்ப்பிலிருந்து இப்போதைய அரசு பாடம் கற்கவில்லை.
தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் பல பதவிகள் காலியாக இருப்பதையும், அவற்றை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் முதன்முதலில் நான் தான் குரல் கொடுத்தேன். இதற்காக 22.06.2015 அன்று சென்னையில் போராட்டம் நடத்தினேன். ஆனால், இப்போது நியமிக்கப்பட்டுள்ள தலைமைத் தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையர்களின் பின்னணியை பார்க்கும் போது இந்த நியமனமே தேவையில்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது. அரசின் செயல்பாடுகள் குறித்த தகவல்களை வழங்குவது தான் தகவல் ஆணையர்களின் பணி ஆகும். ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை தகவல்களை கசிய விடாமல் பாதுகாப்பவர்களும், ஆளுங்கட்சிக்கு விசுவாசமாக பணியாற்றுபவர்களும் தான் தகவல் ஆணையர்களாக நியமிக்கப்படுகின்றனர். முந்தைய ஆட்சியில் தலைமைத் தகவல் ஆணையராக நியமிக்கப்பட்ட ஸ்ரீபதி, இப்போது தலைமைத் தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள இராமானுஜம் ஆகிய இருவருமே ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் தான். இவர்கள் தகவல் மறைப்பு ஆணையர்களாக செயல்படுவார்களே தவிர தகவல் வழங்கும் ஆணையர்களாக செயல்பட மாட்டார்கள்.
தமிழக காவல்துறையின் தலைமை இயக்குனராக இராமானுஜம் நியமிக்கப்பட்டதில் ஏராளமான சர்ச்சைகள் உள்ளன. அது குறித்து எவரேனும் தகவல் கேட்டால், அதற்கு இராமானுஜத்தின் எதிர்வினை எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதிலிருந்தே தகவல் ஆணையம் எவ்வாறு செயல்படும் என்பதை உணர்ந்து கொள்ள முடியும். மொத்தத்தில் தமிழகத்தில் தகவல் பெறும் உரிமையை குழி தோண்டி புதைக்க கடந்த ஆட்சியில் குழி தோண்டப்பட்டது; இப்போது அதை மூட கற்கள் அடுக்கப்படுகின்றன என குற்றம் சாட்டியுள்ளார்.
Sunday, August 9, 2015
அமைச்சர்கள் மாற்றம்: ஜெயலலிதா விளக்கமளிக்க வேண்டும்; ராமதாஸ்
4 ஆண்டுகளில் 30 அமைச்சர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர், மாற்றம் குறித்து ஜெயலலிதா விளக்கமளிக்க வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக அமைச்சரவை மீண்டும் ஒரு முறை மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. திருப்பூரைச் சேர்ந்த ஆனந்தன் புதிய அமைச்சராக பதவியேற்றுக் கொண்டிருக்கிறார். இது தமிழக அமைச்சரவையில் செய்யப்படும் 24 ஆவது மாற்றமாகும். இதுவரை மொத்தம் 30 அமைச்சர்கள் பதவி நீக்கப்பட்டுள்ளனர்.
அமைச்சரவையை மாற்றியமைப்பது முதலமைச்சரின் சிறப்பு உரிமையாகும். நிர்வாக வசதிக்காக அமைச்சர்களையோ, அவர்களின் துறைகளையோ எத்தனை முறை வேண்டுமானாலும் முதலமைச்சர் மாற்றியமைக்கலாம்; இதற்கான அதிகாரம் அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்பதை நான் அறிவேன். எனினும், அந்த அதிகாரம் ஆக்கபூர்வமான தேவைகளுக்கு மட்டும் தான் பயன்படுத்தப்பட வேண்டும். ஒருவருக்கு எவ்வளவு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறதோ, அதைவிட அதிகமாக அவருக்கு பொறுப்பு இருக்க வேண்டும். ஆனால், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அதிகாரத்தை பயன்படுத்துவதில் உள்ள துடிப்பு பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்பதில் இல்லாமல் போனது தான் தமிழகத்தின் சாபக்கேடு.
2011 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் தேதி ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவை பதவி ஏற்றது. அதில் ஜெயலலிதாவையும் சேர்த்து 34 பேர் இடம் பெற்றிருந்தனர். ஆனால், அவர்களில் 11 பேர் மட்டுமே இதுவரை அமைச்சர் பதவியில் நீடிக்கின்றனர். மீதமுள்ளோர் வெவ்வேறு காலக்கட்டத்தில், வெவ்வேறு காரணங்களுக்காக பதவி நீக்கப்பட்டிருக்கிறார்கள். நிர்வாக வசதிக்காகவே அமைச்சர்கள் மாற்றப்படுகிறார்கள் என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டாலும், அவர்களின் மாற்றத்திற்கான உண்மையான காரணம் ஊழல், நிர்வாகத் திறமையின்மை ஆகிய இரண்டில் ஒன்றாகத் தான் இருக்க முடியும். இந்த இரண்டில் ஒரு காரணத்திற்காக நீக்கப்பட்ட அமைச்சர்களுக்கு மீண்டும் பதவி தரப்படக்கூடாது.
ஆனால், ஆர்.பி. உதயகுமார், எஸ்.பி. சண்முகநாதன், எஸ்.பி. வேலுமணி, கோகுல இந்திரா, பி.வி. ரமணா ஆகியோரும், அவர்களுக்குப் பிறகு இப்போது ஆனந்தனும் ஏற்கனவே பதவி நீக்கப்பட்டு இரண்டாவது முறையாக அமைச்சர்களாக்கப்பட்டுள்ளனர். ஊழலோ, நிர்வாகத் திறமையின்மையோ. ஏதோ ஒரு காரணத்திற்காக நீக்கப்பட்டவர்கள் மீண்டும் எதற்காக அமைச்சர்களாக்கப்பட்டனர் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. ஒருவேளை அவர்கள் ஊழல் புகார்களின் அடிப்படையில் நீக்கப்பட்டு, அவர்கள் மீதான புகாரில் உண்மையில்லை என்ற காரணத்தினால் மீண்டும் பதவி வழங்கப்பட்டதா? அல்லது நிர்வாகத் திறமையின்மைக்காக நீக்கப்பட்டு, அதன்பின் ஏதேனும் ஒரு ஐ.ஐ.எம்.மில் சேர்ந்து நிர்வாகத்திறமை பெற்று வந்ததால் பதவி வழங்கப்பட்டதா? என்பது குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா விளக்கமளிக்க வேண்டும். இதற்கான தார்மீகக் கடமை ஜெயலலிதாவுக்கு உள்ளது.
இவர்கள் இப்படியென்றால் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, என்.ஆர். சிவபதி ஆகியோரின் கதை இன்னும் சுவையானது. இவர்கள் இருவருமே இரு முறை அமைச்சர்களாக்கப்பட்டு, இரு முறை நீக்கப்பட்டவர்கள். இவர்கள் இரண்டாவது முறை அமைச்சராக்கப்பட்ட போது தான் இருவர் மீதும் கடுமையான ஊழல் குற்றச்சாற்றுகள் எழுந்தன. குறிப்பாக அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் ஊழல் வெறியால் நேர்மையான வேளாண்துறை அதிகாரியான முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொள்ள வேண்டிய அவலம் நேர்ந்தது. ஊழலில் திளைத்த இவர்கள் எந்த அடிப்படையில் மீண்டும் அமைச்சர்களாக்கப்பட்டார்கள்? என்பதையும் ஜெயலலிதா விளக்க வேண்டும் என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு கல்வித்துறை மிகவும் முக்கியமானது. இத்துறையில் அனுபவம் வாய்ந்த ஒருவர் இருந்தால் தான் கல்வி வளர்ச்சிக்கான திட்டங்களைத் தீட்டி செயல்படுத்த முடியும். ஆனால், பள்ளிக் கல்வித்துறைக்கு கடந்த 4 ஆண்டுகளில் சி.வி. சண்முகம், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, என்.ஆர்.சிவபதி, வைகைச் செல்வன், பழனியப்பன், கே.சி. வீரமணி ஆகிய 6 பேர் அமைச்சர்களாக இருந்துள்ளனர். இவர்களில் வீரமணியைத் தவிர வேறு எவரும் கல்வி அமைச்சர் பதவியில் ஓராண்டு கூட நீடிக்கவில்லை. இவ்வாறு இருந்தால் பள்ளிக்கல்வித் துறையை எவ்வாறு முன்னேற்ற முடியும்?
கடந்த மே மாதம் அமைச்சர் ஆனந்தன் நீக்கம் செய்யப்பட்ட போது, அவருக்கு எதிராக பெண்மணி ஒருவர் அளித்த மோசடி புகாரும், வனத்துறையில் நடந்த ஊழல்களும் தான் காரணம் என கூறப்பட்டது. ஆனந்தன் மீண்டும் அமைச்சராக அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் மீது அந்த பெண்மணி மீண்டும் புகார் கூறியுள்ளார். இடைப்பட்ட 3 மாதங்களில் ஆனந்தன் எப்படி உத்தமர் ஆனார் என்பதையும் அரசு விளக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் 4 ஆண்டுகளில் 30 அமைச்சர்கள் நீக்கப்படுவது இதுவரை நடக்காத ஒன்றாகும். இவ்வளவு அமைச்சர்கள் நீக்கப்பட்டதற்கும், நீக்கப்பட்டவர்களில் சிலரே மீண்டும் அமைச்சராக்கப்பட்டதற்கும் என்ன காரணம்? என்பதை ஜெயலலிதா விளக்க வேண்டும். இல்லாவிட்டால், செய்த ஊழலில் மேலிடத்திற்கு செலுத்த வேண்டிய பங்கை முறையாக செலுத்தாததால் தான் பல அமைச்சர்கள் நீக்கப்பட்டனர்; அவர்களில் கணக்கை சரி செய்தவர்கள் மீண்டும் அமைச்சர்கள் ஆக்கப்பட்டனர் என்று கூறப்படும் புகார்களை உண்மை என்று நம்ப வேண்டியிருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
|
Friday, August 7, 2015
தேர்தல் கூட்டணிக்காக தி.மு.க. அடித்த பல்டிகளை பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது... ராமதாஸ்
சென்னை :கடந்த 60 ஆண்டுகளில் 13 சட்டமன்றத் தேர்தல்களுக்கு கூட்டணி மாறியதில் தி.மு.க அடித்த பல்டிகளை பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.புதுச்சேரியில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் மதுவிலக்கு என்பதே பாமகவின் நிலைப்பாடு என்று திமுக தலைவர் கருணாநிதியின் குற்றச்சாட்டுக்கு அவர் விளக்கமளித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது..மது விலக்கு குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி மீண்டும் ஓர் கடிதம் எழுதியிருக்கிறார். மது தொடர்பான தி.மு.க.வின் கடந்த கால நிலைப்பாட்டை நியாயப்படுத்த அண்டை மாநிலமான புதுச்சேரி முதல் அமெரிக்கா, நார்வே, ஃபின்லாந்து மற்றும் துருக்கி வரை பல உதாரணங்களைக் கூறியிருக்கிறார்.‘‘கொள்கைகளையும், நிலைப்பாட்டையும் காலப்போக்கில் அந்தந்தக் காலத்தின் தேவைக்கு ஏற்கவும், கட்சியின் எதிர்காலம், மக்கள் நலன் ஆகியவற்றைக் கருதியும் மாற்றிக் கொள்வது என்பது மாபாதகம் அல்ல'' என்பது தான் தமது தடுமாற்றம் நிறைந்த கொள்கைகளை நியாயப்படுத்த அவர் முன்வைக்கும் சப்பைக்கட்டு வாதம் ஆகும்.கொள்கைகளும், நிலைப்பாடுகளும் மாறலாம்... அதில் தவறில்லை. ஆனால், அவை மக்கள் நலன் சார்ந்ததாக இருக்க வேண்டும். 1947 ஆம் ஆண்டு வரை மதுவை அனுமதிக்கலாம் என்பது அப்போதிருந்த மெட்ராஸ் மாகாண அரசின் நிலைப்பாடு.1948 ஆம் ஆண்டில், மக்களுக்கு மது தேவையில்லை என்று முடிவெடுத்து கள் மற்றும் சாராயக்கடைகளை ஓமந்தூரார் மூடினார். இதுதான் வரவேற்கத்தக்க கொள்கை மாற்றம்.மாறாக 1971 வரை மது தேவையில்லை என்ற நிலைப்பாட்டை மாற்றி, மூடிக்கிடந்த கள் மற்றும் சாராயக்கடைகளை திறக்க அனுமதித்தது மக்கள் நலன் சார்ந்த மாற்றம் அல்ல. இதை நியாயப்படுத்த ஒரு நூறு சான்றுகள் அல்ல.... ஓர் ஆயிரம் சான்றுகளை கூறினாலும் அவற்றை நம்பி ஏமாறுவதற்கு தமிழ்நாட்டு மக்கள் இனி தயாராக இல்லை.சான்றுகளைக் கூறுவதில் கூட கருணாநிதிக்கு சறுக்கியிருக்கிறது. மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவதைப் போல, ஒரு தேர்தலில் தி.மு.க.வை ஆதரித்த பா.ம.க. அடுத்த தேர்தலில் அ.தி.மு.க.வை ஆதரித்தது இல்லையா? என்று கேட்டு, அதை தி.மு.க.வின் மதுவிலக்கு குறித்த நிலைப்பாட்டுடன் ஒப்பிட்டிருக்கிறார்.இரண்டுக்கும் என்ன சம்பந்தம் எனத் தெரியவில்லை. ஒருவேளை சம்பந்தம் இல்லாமல் பேசுவது என கருணாநிதி சபதம் செய்திருக்கிறாரா? என்பதும் தெரிய வில்லை. 1957 ஆம் ஆண்டில் தொடங்கி இதுவரையிலான 60 ஆண்டுகளில் 13 சட்டமன்றத் தேர்தல்களுக்கு கூட்டணி மாறியதில் தி.மு.க. அடித்த பல்டிகளை பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது.‘‘தமிழ்நாட்டில் மதுவிலக்கு என்று பேசும் இதே ராமதாஸ், பக்கத்திலே உள்ள புதுவை மாநிலத்திலே மதுவிலக்குக் கொள்கையை கொண்டு வர வேண்டும் என்று ஒரு நாளாவது பேசியிருக்கிறாரா?'' என்றும் கலைஞர் வினா எழுப்பியிருக்கிறார்.தமிழகம், புதுச்சேரி மட்டுமல்ல... நாடு முழுவதும் மதுவிலக்கு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது தான் எங்கள் கொள்கை. பலமுறை இதை நானும், பா.ம.க. முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளர் மருத்துவர் அன்புமணி இராமதாசும் வலியுறுத்தியிருக்கிறோம்.மதுவிலக்கை தாமே ரத்து செய்து பின்னர் தானே மீண்டும் மது விலக்கு கொண்டு வந்ததாக கருணாநிதி மீண்டும் மீண்டும் கூறுவதன் மூலம், கடந்த காலங்களில் மதுவிலக்கை அமல்படுத்துவதாக 5 முறை அறிவித்து ஏமாற்றியதை மறைக்க முயல்கிறார்.முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதில் கருணாநிதிக்கு விருப்பம் கிடையாது... அவ்வாறு விருப்பம் இருந்திருந்தால் கடந்த காலங்களில் பதவியில் இருந்த போதே செய்திருப்பார்;அதுமட்டுமின்றி, தி.மு.க.வினருக்கும் திமுக ஆதரவாளர்களுக்கு மது ஆலைகள் நடத்துவதற்கான உரிமங்களை வாரி வழங்கியிருக்க மாட்டார். இத்தனை தீமைகளையும் செய்து விட்டு இப்போது மதுவிலக்கு.... மது விலக்கு என முழங்குவதன் நோக்கம் விரைவில் வரும் தேர்தலில் மக்களை ஏமாற்றி வாக்குகளை வாங்க வேண்டும் என்பதைத் தவிர வேறு எதுவுமில்லை.இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
Thursday, August 6, 2015
மதுவிலக்கு போராட்டத்தை நான் அரசியலாக கருதவில்லை:
தி.மு.க. தலைவர் கலைஞர்,‘நெஞ்சில் ஓர் வஞ்சமில்லா நீட்டோலை’ என்ற தலைப்பில் நேற்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் தி.மு.க.வின் மதுவிலக்கு வாக்குறுதி குறித்து நான் எழுப்பிய வினாக்களுக்கு விடை சொல்வதை விட, ஏதோ கேட்கக்கூடாத கேள்விகளை கேட்டதைப் போல கொந்தளித்திருக்கிறார் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் மது ஒழிப்பு இன்று தலையாய பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. மதுவிலக்கை வலியுறுத்தி கடந்த 35 ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வருகிறேன். கடந்த காலங்களில் நான் எதற்காக போராடினேனோ, அதற்காக இப்போது மற்ற கட்சிகளும், மாணவர்களும், பொதுமக்களும் போராடத் தொடங்கியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று எந்த நேரமும் பின்வாங்குவதற்கு வசதியாக ஓர் அறிவிப்பை கலைஞர் வெளியிட்ட போது, ‘‘1996 ஆம் ஆண்டில் தொடங்கி 2010 ஆம் ஆண்டு வரை 5 முறை இதே வாக்குறுதியை அளித்தீர்களே? முதல் வாக்குறுதி அளிக்கப்பட்ட நாளிலிருந்து 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தீர்களே... அப்போதெல்லாம் இந்த வாக்குறுதியை நிறைவேற்றாதது ஏன்? இந்த 5 வாக்குறுதிகளில் நான்கை ஆட்சியில் இருந்த போது தானே அளித்தீர்கள்... நீங்கள் நினைத்திருந்தால் ஒற்றைக் கையெழுத்தில் அவற்றை நிறைவேற்றியிருக்கலாமே?, ஆனால், அப்படி செய்யாமல் தி.மு.க.வினருக்கும், உங்களுக்கு திரைக்கதை எழுத வாய்ப்பளித்தவர்களுக்கும் மது ஆலை அமைக்க வாய்ப்பளித்தீர்களே? இதற்குப் பிறகும் மது விலக்கை நடைமுறைப்படுத்தப் போவதாக நீங்கள் அளிக்கும் வாக்குறுதியை மக்கள் நம்ப மாட்டார்கள்; அவை காற்றில் எழுதப்பட்ட எழுத்துக்கள்’’ என்று கூறினேன். இதில் என்ன தவறு? என்பதை கலைஞர் அவரது மனசாட்சியிடம் கேட்கட்டும்.
மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதாக 5முறை அளித்த வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றாதது ஏன்? என்ற கேள்விக்கு இதுவரை கலைஞரிடமிருந்து பதில் வரவில்லை. மாறாக, ஒவ்வொரு தேர்தலிலும் தி.மு.க.வுடனோ, அ.தி.மு.க.வுடனோ கூட்டணி அமைத்துக் கொண்டு போட்டியிட்ட போது மதுவிலக்கை ஒரு நிபந்தனையாக எந்தக் கட்டத்திலாவது பா.ம.க. வைத்தது உண்டா? என்று எதிர் கேள்வி எழுப்பியுள்ளார். தி.மு.க.வின் கடைநிலை பேச்சாளர் பொதுக்கூட்டத்தில் இக்கேள்வியை கேட்டிருந்தால் அதன் அர்த்தத்தை புரிந்து கொள்ள முடியும். ஆனால், ‘‘தேர்தல் கூட்டணி என்பது கொள்கைக் கூட்டணி அல்ல... அது தொகுதிப் பங்கீடு தான்’’ என்று தொடர்ந்து கூறிவரும் கலைஞர் இப்படி ஒரு கேள்வியை எழுப்பியிருப்பது இந்த விஷயத்தில் அவர் குழம்பிப் போயிருப்பதை காட்டுகிறது.
மத்தியில் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் போதெல்லாம் குறைந்தபட்ச பொது செயல் திட்டம் தயாரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் தான் ஆட்சி நடைபெறும். அதேபோன்ற ஏற்பாட்டை தமிழகத்தில் தி.மு.க.வோ, அ.தி.மு.க.வோ செய்திருந்தால் நிச்சயமாக அதில் மதுவிலக்கை சேர்க்க வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தியிருந்திருக்கும். ஆனால், அத்தகையதொரு ஏற்பாட்டுக்கு தி.மு.க.வோ, அ.தி.மு.க.வோ இதுவரை முன்வந்தது உண்டா? என்பதை முத்தமிழ் அறிஞர் தான் விளக்க வேண்டும்.
சரி... கலைஞரின் வாதப்படியே வைத்துக் கொண்டாலும் 1957, 1962, 1967 ஆகிய தேர்தல்களில் தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கைகளில் 1. இந்திய ஒன்றியத்திலிருந்து பிரிந்து செல்வதற்கான சுயநிர்ணய உரிமை, 2. அனைத்து மாநிலங்களுக்கும் சம எண்ணிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதிகள், 3. நடுவண் அரசின் அதிகாரங்களுக்கு வரம்பு, 4. விகிதாச்சார தேர்தல் முறையை ஏற்படுத்துதல், 5. முக்கிய முடிவுகளை பொது வாக்கெடுப்புக்கு விடுதல், 6. நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களை மக்களே திருப்பி அழைக்கும் முறை, 7. தொழில்களை தேசிய மயமாக்குதல், 8.முறையான நிலச் சீர்திருத்தம், 9. ஊழலுக்கு எதிர்ப்பு, 10. தாய்மொழி வழியில் கல்வி, 11. பத்தாம் வகுப்பு வரை இலவசக் கட்டாயக்கல்வி, 12. தமிழை ஆட்சி மொழியாக்குதல், 13.தேவிகுளம், பீர்மேடு, திருத்தணி உள்ளிட்ட பகுதிகளை தமிழகத்துடன் இணைத்தல் போன்ற வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு இருந்தன. நாடாளுமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ், பாரதிய ஜனதா, ஜனதா ஆகிய கட்சிகளுடன் தி.மு.க. மாறி மாறி கூட்டணி அமைத்தபோது இந்த கோரிக்கைகளையெல்லாம் கலைஞர் நிபந்தனையாக வைத்தாரா? குறைந்த பட்சம்... 1989 ஆம் ஆண்டில் வி.பி.சிங் தலைமையிலான அரசு, 1996 ஆம் ஆண்டில் தேவேகவுடா அரசு, 1997 ஆம் ஆண்டில் ஐ.கே. குஜ்ரால் அரசு, 1999 ஆம் ஆண்டில் வாஜ்பாய் அரசு, 2004 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் மன்மோகன்சிங் அரசு ஆகியவற்றில் சேரும் போது இந்த கோரிக்கைகளையெல்லாம் ஏற்றுக்கொண்டால் தான் அமைச்சர் பதவியை ஏற்போம்... இல்லாவிட்டால் கொள்கை என்ற வேட்டியை வைத்துக் கொண்டு அமைச்சர் பதவி எனும் துண்டை வீசி எறிவோம் என்று கொண்ட கொள்கையில் உறுதியானவர் எனக் கூறிக்கொள்ளும் கலைஞர் எப்போதாவது கூறினாரா?
தி.மு.க. ஆட்சியில் தான் முதன்முதலில் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டதாக பலரும் பிரச்சாரம் செய்வதாக கலைஞர் கூறியிருக்கிறார். மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்திய மதுவிலக்கு ரத்து 1971 ஆம் ஆண்டில் திமுக ஆட்சியில் தான் செய்யப்பட்டது என்பது உண்மைதானே. 1948 ஆம் ஆண்டுக்கு முன் வரை தமிழகத்தில் ஏதோ ஒரு வடிவத்தில், ஏதோ ஒரு பகுதியில் மது இருந்து கொண்டு தான் இருந்தது. 1948 ஆம் ஆண்டில் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் ஆட்சியில் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு 1971 ஆம் ஆண்டு வரையிலான 23 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ஒரு தலைமுறைக்கு மது என்றால் என்ன என்பதே தெரியாமல் இருந்தது. 1971 ஆம் ஆண்டில் 45 வயது வரை இருந்தவர்கள் மது போதையை அறியாதவர்களாக இருந்தனர். அப்போது கலைஞர் மதுவிலக்கை ரத்து செய்ததன் காரணமாகத் தானே நன்றாக இருந்த தலைமுறை மதுவுக்கு அடிமையானது. அதனால் தானே 1974 ஆம் ஆண்டில் மதுவிலக்கு மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகும் மதுவை ஒழிக்க முடியவில்லை. மது அணையின் கதவுகளை திறந்து விட்டு, ஊர் முழுவதையும் அது கெடுத்த பிறகு அணையை மூடிவிட்டேன் என்று சொல்வது அர்த்தமுள்ளதா? என கலைஞர் சிந்திக்க வேண்டும்.
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடத்தப்பட்ட அனைத்துப் போராட்டங்களிலும் நான் கலந்து கொண்டிருக்கிறேன். வழக்கறிஞர்கள் சமூகநீதிப்பேரவை மூலம் சட்டப்போராட்டம் நடத்தி தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்த 604 மதுக்கடைகளை அகற்ற வைத்திருக்கிறோம். உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கின் முடிவில் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 1500 மதுக்கடைகள் மூடப்படும் என்று நம்புகிறேன்.
மதுவிலக்கு போராட்டத்தை நான் அரசியலாக கருதவில்லை... மாறாக சமூகக் கடமையாகவே கருதுகிறேன். தேர்தலுக்காகவோ, வாக்குகளை வாங்குவதற்காகவோ இந்த போராட்டங்களை நான் நடத்தவில்லை. அதேபோல், நான் ஏற்கனவே கூறியதைப் போலவே மது விலக்கில் திமுகவுக்கு அக்கறை இருந்தால், அதன் மீதான அக்கட்சியின் உறுதிப்பாட்டை மது ஆலைகளை மூடி காட்ட வேண்டும். அதைவிடுத்து வார்த்தை சிலம்பம் ஆடுவதில் எந்த பயனும் இல்லை. மற்றபடி மதுவிலக்கு கோரி இதயசுத்தியுடன் பொதுமக்கள் நடத்தும் போராட்டங்களை நான் ஆதரிக்கிறேன். அதேநேரத்தில் மாணவர்கள் தங்களின் கல்வி மற்றும் எதிர்காலத்தை பாதிக்காத வகையில் செயல்படும்படி கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் கடைசி சொட்டு மது ஒழிக்கப்படும் வரை நான் தொடர்ந்து போராடுவேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Wednesday, August 5, 2015
வி.வி.மினரல்சுக்கு ஆதரவாக 32 தீர்ப்புகள்.. ஹைகோர்ட் தலைமை நீதிபதி தலையிட ராமதாஸ் கோரிக்கை
சென்னை: தாது மணல் கொள்ளையில் ஈடுபட்டுள்ள வி.வி.மினரல்ஸ் நிறுவனத்துக்கு ஆதரவாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரே நீதிபதியால் 32 தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்வதில் திட்டமிட்டு முட்டுக்கட்டைகள் ஏற்படுத்தப்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.இதுதொடர்பாக ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் தாது மணல் கொள்ளையில் ஈடுபட்டுள்ள வி.வி. மினரல்ஸ் நிறுவனத்துக்கு ஆதரவாக சென்னை உயர்நீதிமன்றத்தில் 32 தீர்ப்புகள் வழங்கப்பட்டிருப்பதாகவும், அந்த தீர்ப்புகளுக்கு எதிராக மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்வதில் திட்டமிட்டு முட்டுக்கட்டைகள் ஏற்படுத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இச்செய்திகள் பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் அளிக்கின்றன
தென் மாவட்டங்களில் வி.வி. மினரல்ஸ் நிறுவனம் சட்டவிரோதமாகவும், சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் தாது மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனம் விதிமுறைகளை மீறி தாது மணல் அள்ளியது பல்வேறு ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.விதிகளை பின்பற்றி நடக்காததால் அந்த நிறுவனம் தாது மணல் அள்ள தடை விதித்து மத்திய அரசு ஆணையிட்டிருந்தது. அதை எதிர்த்து வி.வி. மினரல்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த 32 வழக்குகளில் இந்த நிறுவனத்திற்கு ஆதரவாக ஒற்றை நீதிபதி ஒருவர் தீர்ப்பளித்திருப்பதாகக் கூறப்படுகிறது.மத்திய அரசின் முடிவுக்கு எதிராக நெல்லை மாவட்டத்தில் உள்ள குடிமையியல் நீதிமன்றத்தில் வி.வி. மினரல்ஸ் நிறுவனம் பல வழக்குகளைத் தொடர்ந்துள்ளது. அந்த வழக்குகளில் தீர்ப்பளிக்கப்பட்ட பிறகு தான் இந்த விஷயத்தில் உயர்நீதிமன்றத்தை வி.வி. மினரல்ஸ் அணுக முடியும். ஆனால், அந்த நிறுவனம் அவசர அவசரமாக உயர்நீதிமன்றத்தை அணுகி சாதகமான தீர்ப்புகளை பெற்றிருப்பது பல ஐயங்களை ஏற்படுத்தியிருக்கிறது.அதுமட்டுமின்றி, இவ்வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளை எதிர்த்து உரிய காலத்தில் மேல்முறையீடு செய்வதும் திட்டமிட்டு தடுக்கப்பட்டிருக்கிறது. நீதிப்பேராணை வழக்குகளில் தீர்ப்பின் ஆணை தயாரான நாளில் இருந்து 30 நாட்களில் மேல்முறையீடு செய்யப்பட வேண்டும். ஆனால், வி.வி. மினரல்ஸ் நிறுவனம் தொடர்பான வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டு 6 மாதங்களாகியும் அதன் சான்றளிக்கப்பட்ட நகல்கள் வழங்கப்படவில்லை.அதுமட்டுமின்றி, அந்த வழக்குகளில் மத்திய அரசின் விளக்கத்தைக் கேட்காமலேயே, வி.வி. மினரல்ஸ் நிறுவனத்திற்கு சாதகமாக தீர்ப்பளிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. சான்றளிக்கப்பட்ட தீர்ப்பாணை குறித்த காலத்தில் வழங்கப்படாவிட்டாலும் கூட, அதைக் காரணம் காட்டி, தீர்ப்பாணை இல்லாமலேயே மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்ய முடியும். ஆனாலும் அந்த வாய்ப்பை மத்திய அரசு வழக்கறிஞர்கள் ஏன் பயன்படுத்தவில்லை என்பதும் தெரியவில்லை.வி.வி. மினரல்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்குகளில் தீர்ப்பளிக்கப்பட்ட விதமும், தீர்ப்பாணைகளை வழங்குவதில் திட்டமிட்டு செய்யப்பட்ட காலதாமதமும் நீதித்துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை சிதைத்து விட்டன. 2ஜி ஊழல் தொடர்பான வழக்கில் கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம், இயற்கை வளங்கள் தேசிய சொத்தாக கருதப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது.தாது மணலை பொறுத்த வரை, அது பொருளாதாரம் சார்ந்த விஷயம் மட்டுமல்ல. நாட்டின் பாதுகாப்பு தொடர்புடைய விஷயமும் ஆகும். அவ்வாறு இருக்கும் போது தாது மணல் குவாரிகள் தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட வேண்டும். ஆனால், மத்திய அரசின் விதிகளை மீறும் வி.வி. மினரல்ஸ் நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட தடையை உடனடியாக அகற்றுவதும், அதை எதிர்த்து மேல்முறையீடு செய்யவிடாமல் முட்டுக்கட்டை போடுவதும் நீதித்துறை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு துரோகம் செய்யும் செயலாகும்.ஏழை, எளிய மக்களின் கடைசி நம்பிக்கையாக நீதிமன்றங்கள் தான் உள்ளன. ஆட்சியாளர்களாலோ, அதிகாரிகளாலோ அநீதி இழைக்கப்படும்போது நீதிமன்றங்களை அணுகி நீதி பெறலாம் என்று மக்கள் நம்புகிறார்கள். அந்த நம்பிக்கை தோற்கும் வகையில் நீதிமன்றங்களின் செயல்பாடுகள் அமையக் கூடாது.வி.வி. மினரல்ஸ் நிறுவனத்துக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது யார்? தீர்ப்பாணைகள் குறிப்பிட்ட காலத்திற்குள் மத்திய அரசுக்கு வழங்கப்படாததற்கு காரணம் யார்? என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரியவில்லை. ஆனாலும், வி.வி. மினரல்ஸ் போன்ற நிறுவனங்களுக்கு சாதகமாக ஒருசிலர் செயல்படுவது தொடர்ந்தால், ஏழைகளின் கடைசி நம்பிக்கையாக இருக்கும் மேல்நிலை நீதிமன்றங்கள், பணக்காரர்களின் முதல் நம்பிக்கையாக மாறிவிடும் ஆபத்து இருப்பதை உரியவர்கள் உணர வேண்டும்.எனவே, வி.வி. மினரல்ஸ் நிறுவனம் தொடர்பான வழக்குகளில் தவறு செய்தவர்கள் யார்? என்பதை கண்டறிவதுடன், இனியும் இத்தகைய தவறுகள் நடக்காமல் தடுக்க சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதன் மூலம் காலம் காலமாக கட்டிக்காக்கப்பட்டு வரும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மாண்பை பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.Sunday, August 2, 2015
தடையை மீறி கனிம மணல் ஏற்றுமதி: ராமதாஸ் குற்றச்சாட்டு
கனிம மணல் அள்ள தடை விதிக்கப்பட்டபோதிலும், 2 லட்சம் கோடி ரூபாய்க்கு கனிம மணல் ஏற்றுமதி நடைபெற்றிருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கனிம மணல் தொடர்பான வழக்கில், வி.வி.மினரல்ஸ் மற்றும் டிரான்ஸ்வேர்ல்ட் கார்னெட் ஆகிய நிறுவனங்களுக்கு ஆதரவாக தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் செயல்பட்டிருப்பதாக குற்றம்சாட்டினார்.
கனிம மணல் முறைகேடு புகார் குறித்து ஆய்வு நடத்திய ககன்தீப்சிங் பேடியின் அறிக்கையை தமிழக அரசு உடனே வெளியிட வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கனிம மணல் தொடர்பான வழக்கில், வி.வி.மினரல்ஸ் மற்றும் டிரான்ஸ்வேர்ல்ட் கார்னெட் ஆகிய நிறுவனங்களுக்கு ஆதரவாக தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் செயல்பட்டிருப்பதாக குற்றம்சாட்டினார்.
கனிம மணல் முறைகேடு புகார் குறித்து ஆய்வு நடத்திய ககன்தீப்சிங் பேடியின் அறிக்கையை தமிழக அரசு உடனே வெளியிட வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Subscribe to:
Posts (Atom)
காப்புரிமை(Copyrights)
--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
Users Visited:
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------