Tuesday, February 17, 2015

குற்றவாளி ஜெ.வைப் புகழ்ந்ததால் சட்டசபை மாண்பு அதளபாதாளத்திற்குப் போய் விட்டது: ராமதாஸ்

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவை, சட்டசபையில் ஆளுநர் புகழ்ந்து பேசியதால், சட்டசபையின் மாண்பு அதளபாதாளத்திற்கு சென்று விட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-தமிழக சட்டப்பேரவையில் ஆளுனர் உரை அ.தி.மு.க.வின் புகழ்பாடும் நிகழ்வாக நடைபெற்று முடிந்துள்ளது. ஆளுனர் உரையின் நோக்கமே வரும் நிதியாண்டில் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்கள் குறித்த முன்னோட்டம் தருவது தான் என்ற வழமையை மாற்றிய அரசின் செயல் கண்டிக்கத்தக்கது.ஆளுனரின் உரையில் தமிழகம் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான திட்டங்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை. தமிழகத்தில் விலைவாசியும், வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இதை சரி செய்வதற்கான திட்டங்கள் எதுவும் ஆளுனர் உரையில் இல்லை. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான நடவடிக்கைகளை கர்நாடக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதைத் தடுக்க எந்த நடவடிக்கையையும் எடுக்காத நிலையில், நதிநீர் பிரச்சினைகளில் தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுத்ததாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை பாராட்டும் வகையில் ஆளுனர் உரையை தமிழக அரசு வடிவமைத்திருக்கிறது. ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு, முதல்வர் பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்ட குற்றவாளி ஜெயலலிதாவை பாராட்டும் வகையில் ஆளுனர் உரை அமைந்ததன் மூலம் சட்டப்பேரவையின் மாண்பு அதலபாதாளத்தில் தள்ளப்பட்டுவிட்டது.மக்களவைத் தேர்தலிலும், திருவரங்கம் சட்டப்பேரவை இடைத் தேர்தலிலும் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டு, முறைகேடு மற்றும் பணத்தைக் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்கியதன் மூலம் தான் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. மோசடியின் மூலம் அ.தி.மு.க. பெற்ற வெற்றியை, தமிழக அரசின் வெற்றியைப் போன்று ஆளுனர் உரையில் சித்தரித்திருப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. மொத்தத்தில் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தை அ.தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டத்தைப் போலவும், தமிழக ஆளுனர் ரோசய்யாவை அ.தி.மு.க. நிர்வாகி போலவும் தமிழக ஆட்சியாளர்கள் மாற்றிவிட்டனர்.அ.தி.மு.க. மற்றும் ஊழல் குற்றவாளி ஜெயலலிதாவின் புகழ் பாடியதைத் தவிர ஆளுனர் உரையில் சொல்லிக் கொள்ளும்படியாக எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை. தமிழகத்தின் சட்டம் & ஒழுங்கு நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. கொலை, கொள்ளை மற்றும் பாலியல் வன்கொடுமைகள் நடக்காத நாளே இல்லை என்று கூறும் அளவுக்கு நிலைமை மோசமடைந்திருக்கிறது.ஆனால், இவை அனைத்தையும் ஒட்டுமொத்தமாக மறைக்கும் வகையில் தமிழகத்தில் சட்டம் &ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்படுவதாக பாராட்டுத் தெரிவிக்கப்பட்டிருப்பது முரண்பாடுகளின் உச்சம் ஆகும். தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் அனைத்திலும் ஆங்கில வழிக் கல்வியை புகுத்திவிட்டு, தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக எண்ணற்றத் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தியிருப்பதாக ஆளுனர் உரையில் குறிப்பிடப்பட்டிருப்பதை பார்க்கும் போது வேதனை கலந்த சிரிப்பு வருவதை தடுக்க முடியவில்லை.கடந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் பெரும்பாலானவை செயல்படுத்தப்படவில்லை. மின்வெட்டு தொடர்ந்து கொண்டிருக்கிறது.லட்சக்கணக்கானோருக்கு வழங்கப்பட்டு வந்த முதியோர் ஓய்வூதியமும், ஆதரவற்றோர் உதவித் தொகையும் நிறுத்தப்பட்டுவிட்ட நிலையில், இத்திட்டங்களின் பயனாளிகள் எண்ணிக்கை உயர்ந்திருப்பதாக ஆளுனர் உரையில் குறிப்பிடப்பட்டிருப்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. ஆளுனர் உரை வளர்ச்சித் திட்டங்களை வகுத்துத் தரும் ஆவணமாக அமைய வேண்டும்; ஆனால், இந்த ஆளுனர் உரை பழைய திட்டங்களின் தொகுப்பாக அமைந்திருக்கிறது.நிதியமைச்சர் தாக்கல் செய்யும் நிதிநிலை அறிக்கையாக இருந்தாலும், அமைச்சர்கள் தாக்கல் செய்யும் மானியக் கோரிக்கைகளாக இருந்தாலும் அதில் எந்த திட்டங்களும் இடம் பெறக்கூடாது; அனைத்துத் திட்டங்களும் அவை விதி எண் 110&ன் கீழ் ஜெயலலிதா படிக்கும் அறிக்கையில் தான் இடம் பெற வேண்டும் என்பது கடந்த 4 ஆண்டுகளாக எழுதப்படாத விதியாக மாறிவிட்ட நிலையில், ஆளுனர் உரையில் புதிய திட்டங்கள் இடம் பெற்றிருக்கும் என்று எதிர்பார்ப்பதே தவறு தான். மொத்தத்தில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று ஆளுனர் உரை என்ற சடங்கு நிறைவேற்றப் பட்டிருக்கிறது என்பதைத் தவிர இதில் சொல்வதற்கு எதுவுமில்லை.இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Friday, February 13, 2015

பிப்.18-இல் மதுக் கடைகளை மூடும் போராட்டம்: அன்புமணி ராமதாஸ்


  
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள மதுக் கடைகளை அகற்றாவிட்டால் பிப்ரவரி 18-ஆம் தேதி மதுக் கடைகளை மூடும் போராட்டம் நடைபெறும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
தேசிய, மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள டாஸ்மாக் மதுக் கடைகளை அகற்றக் கோரி, பாமக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் குமரிஅனந்தன், மத்திய முன்னாள் இணை அமைச்சர் ஏ.கே. மூர்த்தி, கணேஷ்குமார் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
அப்போது அன்புமணி ராமதாஸ் பேசியது:
மதுவை ஒழிப்பதற்காக கடந்த 35 ஆண்டுகளாக பாமக போராடி வருகிறது. வரும் 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நல்ல தீர்ப்பை வழங்குவார்கள். பாமக ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து மதுவை ஒழிப்பதற்கான ஆணையாக இருக்கும்.
தேசிய, மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள மதுக் கடைகளை அகற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மதுக் கடைகளை அகற்றாவிட்டால் பிப்ரவரி 18-ஆம் தேதி தமிழகம் முழுவதும் மதுக் கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் நடைபெறும்.
தமிழகத்தில் நெடுஞ்சாலை ஓரங்களில் சுமார் 2 ஆயிரம் மதுக் கடைகள் உள்ன. அதில் 89 கடைகள் தருமபுரி தொகுதிக்குள் உள்ளன. சட்டம் - ஒழுங்கு சீர்குலைவதற்கும், சாலை விபத்துகளுக்கும் மதுவே மூல காரணமாக உள்ளது. எனவே உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மதுக் கடைகளை மூட வேண்டும் என்றார் அன்புமணி ராமதாஸ்

Thursday, February 12, 2015

பா.ம.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க. வரும் என்று எதிர்பார்க்கிறோம்: அன்புமணி ராமதாஸ்

 

பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ், வியாழக்கிழமை டெல்லியில் ரெயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவை சந்தித்து தமிழக ரெயில்வே திட்டங்கள் குறித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், 

டெல்லியில் கெஜ்ரிவால் மிகப்பெரிய வெற்றி பெற்று உள்ளார். தமிழக மக்கள் மனங்களிலும் உடனடி மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு உள்ளது. 

மத்தியில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க. இடம்பெற்று உள்ளது. தமிழகத்தில், சட்டசபை தேர்தலில் பா.ம.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க. வரும் என்று எதிர்பார்க்கிறோம். ஏனெனில் தமிழ்நாட்டில் நாங்கள் பா.ஜ.க.வை விட பெரிய கட்சி. கடந்த காலங்களில் 21 எம்.எல்.ஏ.க்கள், 7 எம்.பி.க்கள் என்று வெற்றி பெற்று இருக்கிறோம். 

தி.மு.க.,அ.தி.மு.க. தவிர வேறு எந்த கட்சி எங்கள் தலைமையை ஏற்றுக்கொண்டு வந்தாலும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

Wednesday, February 11, 2015

தமிழக அரசு இனியும் உறங்கக் கூடாது: ராமதாஸ்



 
 

மேகதாது அணைக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் ஒப்பந்தம் வழங்குவதற்கான இறுதிகட்ட பரிசீலனைக்கு 3 நிறுவனங்களை கர்நாடக அரசு தேர்வு செய்திருக்கிறது. வழக்கம் போலவே, இந்த பிரச்சினை குறித்தும் பிரதமருக்கு கடிதம் எழுதியதுடன் தமது பணி முடிவடைந்து விட்டதாக தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நினைத்துக் கொண்டிருக்கிறார். தமிழக அரசு  இனியும் உறங்கக் கூடாது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்டுவதற்கான ஏற்பாடுகளை கர்நாடகம் முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது. இதன் அடுத்தகட்டமாக மேகதாது அணைக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் ஒப்பந்தம் வழங்குவதற்கான இறுதிகட்ட பரிசீலனைக்கு 3 நிறுவனங்களை கர்நாடக அரசு தேர்வு செய்திருக்கிறது. இவற்றில் ஒன்றுக்கு ஒப்பந்தம் வழங்கப்படும் என்றும், அதன்பின் அணை கட்டும் பணிகள் தீவிரமடையும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

மேகதாது அணை கட்டுவதற்கான முயற்சிகளை பல ஆண்டுகளாக கர்நாடக அரசு மேற்கொண்டு வருகிறது.  காவிரியின் குறுக்கே தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் அணை கட்டுவது காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கு எதிரானது என்பதை சுட்டிக்காட்டி தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்ததாலும், மத்திய அரசிடம் முறையிட்டதாலும் கர்நாடக அரசின் முயற்சிகள் பல முறை முறியடிக்கப்பட்டன.  கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மேகதாது பகுதியில் அணை கட்டும் பணிகளுக்காக உலகளாவிய ஒப்பந்தப்புள்ளிகளை கர்நாடக அரசு கோரிய போது, அதற்கு ஒட்டுமொத்த தமிழகமும் கண்டனம் தெரிவித்தது. புதிய அணை கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று கர்நாடக அரசையும், இந்த திட்டத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசையும் தமிழகம் வலியுறுத்தியது.

எனினும், தமிழகத்தின் எதிர்ப்பை பொருட்படுத்தாத கர்நாடக அரசு உலகளாவிய ஒப்பந்தப்புள்ளியை இறுதி செய்து, அணை கட்டுவதை நோக்கி அடுத்த அடியை எடுத்து வைத்திருக்கிறது. கர்நாடக அரசின் நடவடிக்கை நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கு எதிரானது என்பதை நன்றாக உணர்ந்திருந்தும் அதை தடுக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சர்ச்சைக்குரிய இத்திட்டத்திற்கு எந்த அடிப்படையில் உலகளாவிய ஒப்பந்தப் புள்ளி கோர அனுமதிக்கப்பட்டது என்றே தெரியவில்லை. 

 குடிநீர் திட்டத்திற்காக மேகதாது அணை கட்டப்படுவதாக கர்நாடக அரசு கூறும்போதிலும், அதன் உண்மையான நோக்கம் காவிரி நீர் தமிழகத்திற்கு செல்லாமல் தடுக்க வேண்டும் என்பது தான். அதனால் தான் மேகதாதுவில் நீர் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் மொத்தம் 48 டி.எம்.சி. கொள்ளளவுள்ள அணையை அமைக்க கர்நாடகம் முயன்று வருகிறது. இந்த அணை மட்டும் கட்டப்பட்டால் தமிழகத்திற்கு காவிரி நீர் வருவது முற்றிலுமாக தடுக்கப்பட்டு விடும். எனவே, எப்பாடுபட்டாவது காவிரியின் குறுக்கே புதிய அணை கட்டும் திட்டத்தை தமிழகம் தடுக்க வேண்டும்.

ஆனால், தமிழக அரசுக்கு அத்தகைய எண்ணம் இருப்பதாக தெரியவில்லை. வழக்கம் போலவே, இந்த பிரச்சினை குறித்தும் பிரதமருக்கு கடிதம் எழுதியதுடன் தமது பணி முடிவடைந்து விட்டதாக தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நினைத்துக் கொண்டிருக்கிறார். மேகதாது அணை கட்டும் திட்டத்தை எதிர்த்து கடந்த ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதியே உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடர்ந்தது. அந்த வழக்கின் கதி என்னவானது என்பது கூட தெரியவில்லை. அந்த வழக்கின் விசாரணையை விரைவுபடுத்தவோ அல்லது மேகேதாது அணை கட்டும் திட்டத்திற்கு உச்சநீதிமன்றத்தில் தடை ஆணை பெறவோ தமிழக அரசு எந்த நடவடிக்கையுமே மேற்கொள்ளவில்லை.

காவிரி பாசன மாவட்ட உழவர்களின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட இப்பிரச்சினையில் தமிழக அரசு இனியாவது விழித்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று போற்றப்படும் காவிரி பாசன மாவட்டங்களில் இனி விவசாயமே செய்ய முடியாத சூழல் உருவாகிவிடும். எனவே, தமிழக அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தை அணுகி ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கை விரைவுபடுத்தியோ அல்லது புதிதாக வழக்கு தொடர்ந்தோ மேகதாது அணை திட்டத்திற்கு தடை ஆணை பெற வேண்டும். அத்துடன், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக தொடரப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ள வழக்கையும் விரைவு படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார். 

வனக் கல்லூரி மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுக: தமிழக அரசுக்கு ராமதாஸ் வேண்டுகோள்


கடந்த 17 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் வனக் கல்லூரி மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு தமிழக அரசுக்க ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வனக்கல்லூரி மாணவர்கள் 2 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 17 நாட்களாக வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத் தக்கது.

வனக் கல்லூரி மாணவர்களின் கோரிக்கைகள் மிகவும் நியாயமானவை. பறிக்கப்பட்ட உரிமைகளை திரும்ப வழங்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்திற்காகத் தான் அவர்கள் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். காடுகளை சிறப்பான முறையில் பராமரிப்பதற்கான மனித வளத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தேசிய வேளாண் குழு அளித்த பரிந்துரைப்படி அனைத்து மாநிலங்களிலும் வேளாண் பல்கலைக்கழகங்களின் கட்டுப்பாட்டில் வனக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. தமிழ்நாட்டில் கடந்த 1985 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இக்கல்லூரிகளில் வனவியல் பட்டப்படிப்பு படித்த மாணவர்களுக்கு  25 ஆண்டுகளாக எந்த வேலைவாய்ப்பும் வழங்கப்படவில்லை. இந்நிலையில், மாணவர்களின் போராட்டம் காரணமாக வனச் சரகர் பணியில்  வனவியல் மாணவர்களுக்கு 100% இடஒதுக்கீடு வழங்க  வேண்டும் என்று கடந்த 2010 ஆம் ஆண்டு தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அதன்படி கடந்த ஆண்டில்  74 வனவியல் பட்டதாரிகளுக்கு வனச்சரகர் வேலை வழங்கப்பட்டது.

ஆனால், திடீரென இந்த இடஒதுக்கீட்டை 25% ஆக குறைத்து தமிழக அரசு புதிய அரசாணையை   பிறப்பித்தது. இதனால் வனவியல் பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து கடந்த ஆண்டே மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்போதே அவர்களின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். அப்போது இந்த கோரிக்கை குறித்து பேச்சு நடத்துவதாக உறுதியளித்த தமிழக அரசு இதுவரை பேச்சு நடத்தவில்லை. அதுமட்டுமின்றி, 181 வனவர் பணிக்காக ஆள்தேர்வு அறிவிக்கையை வெளியிட்டுள்ள தமிழக அரசு அதில் வனவியல் பட்டதாரிகளுக்கு எந்த இட ஒதுக்கீடும் வழங்க வில்லை. இதைக் கண்டித்து தான் வனவியல் மாணவர்கள் பல்வேறு வடிவங்களில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

வனவியல் மாணவர்கள் வனவர், வனச்சரகர் உள்ளிட்ட பணிகளைத் தவிர வேறு பணிகளுக்கு செல்வது மிகவும் கடினம். அவர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் வகையில் அரசு செயல்படக் கூடாது. எனவே, வனவியல் மாணவர்களை தமிழக அரசு அழைத்துப் பேசி வனச்சரகர் பணியில் 100% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்& வனவர் பணிக்கான ஆள்தேர்வு அறிவிக்கையை ரத்து செய்துவிட்டு, வனவியல் பட்டதாரிகளுக்கான இடஒதுகீட்டுடன் கூடிய புதிய அறிவிக்கையை வெளியிட வேண்டும் என்ற 2 கோரிக்கைகளையும் நிறைவேற்றி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார். 

Tuesday, February 10, 2015

நெடுஞ்சாலையோர மதுக்கடைகளை மூட வலியுறுத்தி போராட்டம்: ராமதாஸ் அறிவிப்பு


தமிழகத்தில் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து மதுக்கடைகளை மூட வலியுறுத்தி 13-ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று ராமதாஸ் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள மதுக்கடைகள் தான் சாலை விபத்துக்கள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக உள்ளன. இதனால் மாநில நெடுஞ்சாலைகளில் செயல்பட்டு வரும் மதுக்கடைகளை அங்கிருந்து வேறு இடங்களுக்கு மாற்றுவது அல்லது நிரந்தரமாக மூடுவதற்கான திட்டத்தை இம்மாதம் 17 ஆம் தேதிக்குள் தயாரிக்கும்படி தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கடந்த மாதம் ஆணையிட்டிருந்தது.

உச்சநீதிமன்றத்தின் இந்த ஆணை வரலாற்று சிறப்பு மிக்கதாகும். என்னால் உருவாக்கப்பட்ட வழக்குரைஞர்கள் சமூகநீதிப்பேரவை தொடர்ந்த  வழக்கில் தான் இந்த ஆணை கிடைத்துள்ளது. தமிழகத்தைப் போலவே பஞ்சாப், ஹரியானா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கும் இதே உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்திருந்தது. உச்சநீதிமன்றத்தின் ஆணையை செயல்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து மற்ற மாநில அரசுகள் ஆராய்ந்து வரும் நிலையில், தமிழகம் மட்டும் உச்சநீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்தாமல் இருப்பதற்கான சாத்தியக் கூறுகளை தேடிக் கண்டுபிடித்து வருகிறது. தமிழகத்தின் மாநில நெடுஞ்சாலைகளில் 1500&க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் உள்ள நிலையில், அவற்றில் சிலவற்றை மட்டும் இடமாற்றம் செய்துவிட்டு, மீதமுள்ள கடைகளை மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக அளவில் சாலை விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட சாலை விபத்துக்களும் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவற்றுக்கு குடிபோதையில் வாகனங்களை ஓட்டியது தான் காரணம் என்பதை எவரும் மறுக்க முடியாது. சமூக நீதிப் பேரவை தொடர்ந்த இந்த வழக்கில், உச்சநீதிமன்றம் ஏற்கனவே அளித்த உத்தரவின்படி தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்த மதுக்கடைகள் மூடப்பட்டதால் கடந்த இரு ஆண்டுகளாக தமிழ்நாட்டில் சாலைவிபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைந்திருப்பதே இதற்கு ஆதாரம் ஆகும்.

நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் இருப்பது தான் சாலை விபத்துக்களுக்கு காரணம் என்பதையும்,  இவை மிகப்பெரிய சமூக அச்சுறுத்தல் என்று உச்சநீதிமன்றமே கூறியிருப்பதையும் நன்றாக அறிந்துள்ள போதிலும் மாநில நெடுஞ்சாலைகளிலுள்ள மதுக்கடைகளை மூட தமிழக அரசு தயங்குவது கடுமையாக கண்டிக்கத்தக்கது. இதற்காக தமிழக அரசு சார்பில் கூறப்படும் காரணம் மிகவும் கொடுமையானது. ‘‘மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து மதுக்கடைகளை அகற்றினால், அவற்றை குடியிருப்பு பகுதிகளில் தான் அமைக்க வேண்டும்; அது மக்களுக்கு இன்னும் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் தான் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்றுவதை எதிர்க்கிறோம்’’ என்று அரசு கூறியுள்ளது. மக்கள் மீது அக்கறை இருப்பதைப் போல காட்டிக்கொண்டு நெடுஞ்சாலைகளிலுள்ள மதுக்கடைகளை அப்படியே தொடரச் செய்யும் அணுகுமுறை மிகவும் ஆபத்தானது. ஒருவேளை மக்கள் மீது தமிழக அரசுக்கு உண்மையான அக்கறை இருந்தால் தமிழ்நாடு முழுவதும் உள்ள 6800&க்கும் அதிகமான     மதுக்கடைகளை உடனடியாக மூடி மதுவிலக்கை ஏற்படுத்துவது தான் சரியான தீர்வாக அமையும்.

எனவே, இந்த வழக்கு இம்மாதம் 17 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரும் போது ‘‘தமிழகத்தில் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து மதுக்கடைகளும் மூடப்படும்’’  என்று தமிழக அரசின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, மீதமுள்ள மதுக்கடைகளையும் படிப்படியாக மூடி தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும். இவற்றை வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நாளை மறுநாள் (13.02.2015) வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் தொடர் முழக்க அறப் போராட்டம் நடைபெறவுள்ளது. பா.ம.க. இளைஞரணித் தலைவரும், தருமபுரி தொகுதி மக்களவை உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி இராமதாசு தலைமையில் நடைபெறவிருக்கும் இப்போராட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள். மது விலக்கில் விருப்பமுள்ள அனைவரும் இப்போராட்டத்தில்  பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 

இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார். 

Saturday, February 7, 2015

வரலாறு காணாத நஷ்டம்: மின்வாரிய ஊழல்கள் பற்றி விசாரணை தேவை: ராமதாஸ்

 

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:
’’2013-14 ஆம் ஆண்டில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் ஆண்டு இழப்பு ரூ. 13,985.03 கோடியாக அதிகரித்திருக்கிறது. மின்வாரிய வரலாற்றில் இது தான் மிகப்பெரிய இழப்பாகும். 2011 ஆம் ஆண்டில் ரூ.8,000 கோடிக்கு மின்கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகும் இந்த அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

 இதேநிலை தொடர்ந்தால் மின்சார வாரியத்தை யாராலும் காப்பாற்ற முடியாது.
பொதுத்துறை நிறுவனங்கள் அவற்றின் வரவு - செலவு கணக்குகளை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் வெளியிடுவது  வழக்கம். தமிழ்நாடு மின்சார வாரியம் அதன்  வரவு- செலவு கணக்குகளை நவம்பர் மாதத்திற்குள் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று மின்சார ஒழுங்குமுறை சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், வரவு-செலவு கணக்கை தாக்கல் செய்யாமல் காலம் தாழ்த்தி வந்த மின்சார வாரியம் வேறு வழியின்றி நேற்று தான் இந்த விவரங்களை வெளியிட்டிருக்கிறது. 

கடந்த 2012-13 ஆம் ஆண்டில் ரூ.11,679 கோடியாக இருந்த மின்சார வாரியத்தின் நஷ்டம், 2013-14 ஆம் ஆண்டில் ரூ.13,985 கோடியாக அதிகரித்திருக்கிறது. மின்வாரியத்தின் அத்தியாவசிய செலவுகள் எதுவும் அதிகரிக்காத நிலையில், நஷ்டம் மட்டும் ஒரே ஆண்டில் ரூ.2305 கோடி அதிகரித்திருப்பதற்கான காரணத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

அதுமட்டுமின்றி, 2013-14 ஆம் ஆண்டில் மின் விற்பனை மூலமான வருவாய் ரூ. 2,847.57 கோடி மட்டுமே அதிகரித்துள்ள நிலையில், மின்சாரம் வாங்குவதற்கான செலவு மட்டும் ரூ. 4,788.47 கோடி அளவுக்கு அதிகரித்தது ஏன்? என்பதும் மின்சார வாரியத்திற்கே வெளிச்சம். 2013 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 2550 மெகாவாட் அளவுக்கான புதிய மின்திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்ததாகவும், அதனால் வெளிச்சந்தையிலிருந்து மின்சாரம் வாங்குவது பெருமளவில் குறைந்துள்ளதாகவும் மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பலமுறை கூறி வந்த நிலையில், மின்சார கொள்முதலுக்கான செலவு சுமார் 20% அதிகரித்திருப்பது ஏன்? என்பதை தமிழ்நாடு மின்சார வாரியம் தான் விளக்க வேண்டும்.

தமிழ்நாடு மின்சார வாரியம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இதனால், மின்வாரியத்தின் கடன் கடந்த நிதியாண்டின் இறுதியில் ரூ.74,113 கோடியாக அதிகரித்திருக்கிறது. கடனுக்கான வட்டியாக மட்டும் ஆண்டுக்கு ரூ. 7,933 கோடி செலுத்தும் அளவுக்கு மின்சார வாரியத்தின் நிதிநிலைமை மோசமடைந்திருக்கிறது. 

புதிய மின்சாரத் திட்டங்களை செயல்படுத்துவதற்கான மூலதனம் மின்சார வாரியத்திடம் இல்லை என்பதால், தனியாரிடம் கடன் வாங்கியும், நுகர்வோரிடம் கூடுதல் வைப்பீட்டு தொகையை வசூலித்தும் நிலைமையை மின்வாரியம் சமாளித்து வருகிறது. இது மிகவும் ஆபத்தான நிலை என்றும், இதேநிலை நீடித்தால் மின்வாரியத்தை கடன் வலையிலிருந்து  மீட்க முடியாத நிலை உருவாகிவிடும் என்றும் வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.

மின்சார வாரியத்தின் நஷ்டம் வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்ததற்கு காரணம் தனியாரிடம் இருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதில் நடைபெறும் ஊழல்களும், நிர்வாகக் குளறுபடிகளும் தான் என்பதில் சந்தேகமில்லை. 

பொதுத்துறை நிறுவனங்களிடம் யூனிட் ரூ.2.95 என்ற விலையில் கிடைக்கும் மின்சாரத்தை தனியார் நிறுவனங்களிடமிருந்து ரூ. 15.10 கொடுத்து வாங்குவதால் தான் மின்சார வாரியத்திற்கு பெருமளவில் இழப்பு ஏற்படுகிறது. மின்சார உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் மட்டுமே இதை தடுக்க முடியும். ஆனால், மின்சார உற்பத்தியை பெருக்குவதற்காக எந்த நடவடிக்கையையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை. 

2007 முதல் 2012 வரையிலான 11- ஆவது ஐந்தாண்டு திட்டகாலத்தில் 7,808 மெகாவாட் திறன் கொண்ட புதிய மின் நிலையங்களை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டிருந்த நிலையில், ஒரு மெகாவாட் அளவுக்குக் கூட புதிய அனல் நிலையங்கள் அமைக்கப்படவில்லை என்று இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில் குற்றஞ்சாற்றப்பட்டிருக்கிறது. மின்திட்டங்களை செயல்படுத்தி மின் உற்பத்தியை பெருக்கினால், தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்கி ஊழல் செய்ய முடியாது என்பதாலேயே புதிய மின்திட்டங்களை அரசு செயல்படுத்த மறுக்கிறது என்ற குற்றச்சாற்றை புறந்தள்ளி விட முடியாது.

மின்சார வாரியத்திற்கு ஏற்படும் இழப்பைக் காரணம் காட்டி இரண்டரை ஆண்டுகளில் இருமுறை மின்கட்டணம் உயர்த்தப்பட்டு விட்ட நிலையில், மின்சார வாரியத்தின் இழப்பு அதிகரித்து வருவதற்கான காரணத்தை அறிந்து கொள்ளும் உரிமை மக்களுக்கு உள்ளது. எனவே, மின்சார வாரியத்தின் நிலவும் ஊழல்கள் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகள் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மேற்பார்வையில் விரிவான விசாரணை நடத்த தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.’’

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: