Monday, July 30, 2012

தொடர்வண்டித்துறை சார்பில் 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்: ராமதாஸ்





டெல்லியில் இருந்து சென்னை நோக்கி வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் ஆந்திர மாநிலம் நெல்லூரில் வந்த போது திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதில் 35 பயணிகள் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
‘மின்கசிவு காரணமாக ரயில் விபத்து ஏற்பட்ட போதிலும், விபத்துக்கான உண்மையான காரணம் என்ன என்பது தெரியவில்லை. தீ விபத்து ஏற்பட்ட பெட்டியின் கதவுகளை திறக்க முடியவில்லை என்றும், அதனால்தான் உயிரிழப்பு அதிகரித்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இவை உண்மையாக இருந்தால் தொடர்வண்டி பராமரிப்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காட்டிய அலட்சியம் கண்டிக்கத்தக்கது.

இந்த விபத்துக்கான காரணம் என்ன என்பதை அறிய விசாரணை நடத்தப்பட வேண்டும். விபத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். விபத்தில் உயிரிழந்தேரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

அவர்களின் குடும்பங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள 5 லட்சம் ரூபாய் இழப்பீடு போதுமானதல்ல. தொடர்வண்டித்துறை சார்பில் 10 லட்சம் ரூபாயும், அவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பும் வழங்கப்பட வேண்டும். தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் தனியாக இழப்பீடு வழங்கப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார்.

Sunday, July 29, 2012

நடிகர்களுக்கு ரசிகர் மன்றங்களை வைக்க வேண்டாம்: ராமதாஸ் பேச்சு

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தேரடியில் வந்தவாசி சட்டமன்ற தொகுதி பா.ம.க. சார்பில் பொதுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது:-

இந்த கூட்டத்தில் இளைஞர் அதிகமாக உள்ளனர். வன்னியர்கள் இதுவரை ஆளவில்லை. காரணம் வன்னியர்களிடம் ஒற்றுமை இல்லை என்றனர். ஆனால் இப்போது ஒற்றுமை வந்து விட்டது. நாம் ஆள வேண்டும்.

இந்த முறை நாம் ஆண்டே தீரணும். இதற்கு எந்த தியாகத்தையும் செய்ய நமது இளைஞர்கள் தயாராக உள்ளனர். நமது இனத்தை சேர்ந்த மாணவர்கள், இளைஞர்கள், இளம் பெண்கள் மாம்பழத்திற்கு ஒட்டு மொத்தமாக ஒட்டு போட தயாராகி விட்டனர்.

தமிழகத்தில் தடுக்கி விழுந்தால் அரசியல் கட்சிகள். இதில் எந்த அரசியல் கட்சி தலைவர்களும் வன்னியரை பற்றி சிந்தித்தது கிடையாது, பேசியது கிடையாது.

சினிமா படங்களை பாருங்கள் ஆனால் அடிமைகளாக மாறிவிடாதீர்கள். நடிகர்களுக்கு ரசிகர் மன்றங்களை வைக்க வேண்டாம். இவ்வாறு அவர் பேசினார்.

போதை பாக்குகளுக்கு தடை கோரி ராமதாஸ் போராட்டம்


 பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’இந்தியாவில் மிகப்பெரிய உயிர்க் கொல்லியாக குட்கா மற்றும் போதை பாக்குகள் உருவெடுத்துள்ளன. போதைப் பாக்குகளில் புகை யிலை, சுண்ணாம்பு போன்றவை கலந்திருப்பதால் அவை புற்றுநோயை உருவாக்கும் தொழிற் சாலை களாக திகழ்கின்றன.
போதைப் பாக்குகளின் தீமையை உணர்ந்த மத்திய அரசு, அவற்றை தடை செய்வதற்கு வசதியாக உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் விதி முறைகள் -2011 என்ற பெயரில் புதிய விதிமுறைகளை கொண்டுவந்துள்ளது.

இந்த விதிமுறைகளின்படி குட்கா, போதைப் பாக்குகள் மற்றும் பிற புகையிலை பொருட்கள் தடை செய்ய மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த விதிமுறைகளை பயன்படுத்தி கடந்த சில மாதங்களில் மத்தியபிரதேசம், கேரளா, பீகார், மராட்டியம், இமாச்சலபிரதேசம், ராஜஸ்தான், அரியானா, சண்டிகார், சத்தீஸ்கர் ஆகிய 9 மாநிலங்கள் போதைப் பாக்குகளுக்கு தடை விதித்துள்ளன.

ஆந்திரா, அசாம், ஒரிசா, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் போதைப் பாக்குகளுக்கு தடை விதிப்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றன.

மத்திய அரசின் விதிமுறைகளை பயன்படுத்தி தமிழ்நாட்டில் குட்கா, போதைப் பாக்குகள் மற்றும் பிற புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசை இரண்டு முறை அறிக்கைகள் மூலம் நான் வலியுறுத்தியிருந்தேன்.
முன்னாள் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் மே 31-ந்தேதியும், ஜூலை 16-ந்தேதியும் தமிழக முதல் - அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

ஆனால் போதைப் பாக்குகளை தடை செய்ய தமிழக அரசு இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வாய் மற்றும் தொண்டை புற்றுநோய் தாக்குவதற்கு போதைப் பாக்குகள்தான் 90 விழுக்காடு காரணம் என்பதால், அதை தடுத்து நிறுத்தவேண்டிய பெரும் கடமை தமிழக அரசுக்கு உண்டு.
எனவே குட்கா, போதைப் பாக்கு மற்றும் பிற புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்கக்கோரி, பசுமை தாயம் அமைப்பின் சார்பில் வரும் ஆகஸ்டு 2-ந்தேதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை நினைவரங்கம் எதிரில் தொடர் முழுக்க போராட்டம் நடைபெற உள்ளது.

இந்த போராட்டத்திற்கு நான் தலைமை ஏற்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

Monday, July 23, 2012

விலையை உயர்த்தி மக்களை கொள்ளையடிக்கும் சிமெண்ட் நிறுவனங்கள்! ராமதாஸ் கண்டனம்!




பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களில் சிமெண்ட் மற்றும் பிற கட்டுமான பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. சிமெண்ட் விலை மூட்டைக்கு 60 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டிலும் பிற தென் மாநிலங்களிலும் உள்ள சிமெண்ட் ஆலைகள் தங்களுக்குள் முறைகேடான கூட்டணியை ஏற்படுத்திக்கொண்டு, செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்துகின்றன.

சிமெண்ட் ஆலைகளில் வாரத்தின் 7 நாட்களும் சிமெண்ட் உற்பத்தி நடைபெறும் போதிலும், 4 நாட்கள் மட்டுமே சிமெண்ட் மூட்டைகள் சந்தைகளுக்கு அனுப்பப்படுகின்றன. இதனால், ஏற்படும் தேவை அதிகரிப்பை பயன்படுத்திக்கொண்டு சிமெண்ட் நிறுவனங்கள் விருப்பம்போல விலையை உயர்த்துகின்றன.

சிமெண்ட் நிறுவனங்களின் இந்த முறைகேடான செயலுக்கு இந்திய போட்டித்தன்மை ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்ததுடன் 6300 அகாடி ரூபாய் அபராதமும் விதித்தது. அதன்பிறகும் சிமெண்ட் நிறுவனங்கள் விலையை உயர்த்தி மக்களை கொள்ளையடிப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
கடந்த 2010ஆம் ஆண்டு ஜுலை மாதத்தில் ரூ.180ஆக இருந்த ஒரு மூட்டை சிமெண்டின் விலை தற்போது 2 மடங்கு உயர்ந்து ரூ.350 என்ற விலையை எட்டியுள்ளது. சிமெண்ட் நிறுவனங்களின் சட்டவிரோத கூட்டணியை தகர்த்து, சிமெண்ட் விலையை கட்டுக்குள் கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்காதது வேதனையளிக்கிறது.

சிமெண்ட் விலை உயர்வால் தமிழகத்தில் கட்டுமான பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. வறட்சி காரணமாக வேளாண் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ள நிலையில், கட்டுமான தொழிலும் முடங்கினால் இலட்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து, அவர்களின் குடும்பங்கள் வறுமையில் வாடும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.


இந்த ஆபத்தை தடுக்க, தமிழ்நாட்டில் சிமெண்ட் விலையை அத்துறை வல்லுனர்களின் உதவியுடன் அரசு நிருணயிக்கவேண்டும். அந்த விலைக்கு சிமெண்ட் மூட்டைகளை விற்பனை  செய்ய மறுக்கும் சிமெண்ட் நிறுவனங்களை அரசுடமையாக்கவேண்டும். கடந்த 2008ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட மலிவு விலை சிமெண்ட் விற்பனை திட்டம் தற்போது தொய்வடைந்துள்ளது. இத்திட்டத்தை சீரமைத்து, வெளிநாடுகளில் இருந்து சிமெண்ட் மூட்டைகளை இறக்குமதி செய்து, அவற்றை மூட்டை ரூ.200 என்ற விலையில் தமிழகத்தின் அனைத்து வட்ட தலைநகரங்களிலும் நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

பூமி, கடல், மேகம் உள்ளவரை பாமக தனித்து தான் போட்டியிடும்.. ராமதாஸ்

செய்யாறு: பூமி, கடல், மேகம் உள்ளவரை பாமக தனித்து தான் போட்டியிடும். கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும் இனி யாருடனும் கூட்டணி வைக்க மாட்டேன். இனி மற்ற கட்சி கொடியை வன்னியர் பிடிக்க மாட்டான் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
செய்யாறில் பாமக சார்பில் 'புதிய அரசியல், புதிய நம்பிக்கை' விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. ஜி.கே.மணி தலைமை தாங்கிய அக் கூட்டத்தில் பேசிய கூறுகையில்,
இந்த மாவட்டத்தை ஆண்ட மன்னர் சம்புவராயர் அவரது பெயரில் இந்த மாவட்டம் திருவண்ணாமலை சம்புவராயர் மாவட்டம் என இருந்தது. இதனை பொறுக்காதவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் என மாற்றி விட்டனர். நாங்கள் ஆள வந்தவுடன் மீண்டும் திருவண்ணாமலை சம்புவராயர் மாவட்டம் என மாற்றுவோம்.
ஆட்சி வரும் முன்னே 10 வருடங்களாக தனி பட்ஜெட் போட்ட ஒரே கட்சி பா.ம.க மட்டும் தான். எங்களுக்கு யார் குடியையும் கெடுக்க தெரியாது நீங்கள் குடியை கொடுத்து எங்கள் குடியை கெடுக்கிறீர்கள்.
இனியும் இலவசங்களை பெற கியூவில் நிற்க மாட்டோம், தன்மானம் உள்ளவர்கள் நாங்கள். உயர் நீதிமன்றத்தில் 54 பதவிகளில் 1 வன்னியர் மட்டும்தான் நீதிபதியாக உள்ளார். 32 மாவட்டக் கலெக்டர்களில் ஒருவர் மட்டும்தான் வன்னியர்.
இலவசம் வேண்டாம், தரமான கல்வி, கட்டாய கல்வியை கொடுங்கள், அம்பானி குழந்தைகளுக்கு கிடைக்கும் கல்வி கிராமத்தில் இருக்கும் குழந்தைகளுக்கும் கொடுக்க வேண்டும். அதற்காக தான் 10 வருடங்களுக்கு முன்பே சமச்சீர் கல்வி முறைக்கு போராட்டம் செய்தேன்.
உங்களில் சிலருக்கு சந்தேகம் இருக்கும். தி.மு.க, அ.தி.மு.கவுடன் கூட்டனி வைப்பாரா என சந்தேகம் வேண்டாம்.
கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும் இனி யாருடனும் கூட்டணி வைக்க மாட்டேன். பூமி, கடல், மேகம் உள்ளவரை பாமக தனித்து போட்டியிடும். இனி மற்ற கட்சி கொடியை வன்னியர் பிடிக்க மாட்டான்.
வரும் செப்டம்பர் 17ம் தேதி வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் 20 சதவீதம் இடஓதுக்கீடு வன்னியருக்கு வழங்கிட வலியுறுத்தி நாடே மிறளும் அளவிற்கு போராட்டம் நடத்த உள்ளோம் என்றார் ராமதாஸ்.

Sunday, July 22, 2012

விவசாயிகளின் பயிர் கடனை ரத்து செய்வதோடு, ஏக்கருக்கு ரூ.10,000 இழப்பீடு வேண்டும்: ராமதாஸ்


சென்னை: 10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மீண்டும் வறட்சி ஏற்பட்டுள்ளதால், தமிழ்நாட்டை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர். ராமதாஸ் கோரியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை பொய்த்ததாலும், காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிட கர்நாடகா மறுத்துவிட்டதாலும், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கடுமையான வறட்சி ஏற்பட்டு இருக்கிறது. காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 12-ம் தேதி தண்ணீர் திறந்துவிடப்படுவது வழக்கம்.
ஆனால் கர்நாடக அரசு தண்ணீர் வழங்க மறுத்துவிட்டதாலும், மேட்டூர் அணையில் 75 அடி மட்டுமே தண்ணீர் இருப்பதாலும், உரிய காலம் கடந்து 50 நாட்கள் ஆகியும் இன்று வரை தண்ணீர் திறக்கப்படவில்லை.
விவசாயிகளுக்கு நாள்தோறும் 12 மணி நேரம் இலவச மின்சாரம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தபோதும் அதனால் எந்த பயனும் ஏற்படவில்லை. காவிரி பாசன மாவட்டங்களில் பம்பு செட்டுகளை நம்பி பயிரிடப்பட்ட குறுவைப்பயிர்கள் வாடும்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும் இழப்பு ஏற்பட்டு, அங்குள்ள உழவர்கள் கடன் வலையில் சிக்கும் ஆபத்து உருவாகியுள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் ஏரி, குளங்கள் வறண்டு வருவதால் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 2002-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு கடுமையான வறட்சி ஏற்பட்டது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மீண்டும் பெரும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் அனைத்து தரப்பினருக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரிசெய்யும் நோக்குடன் தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும்.
காவிரிப் பாசனத்தை நம்பியுள்ள 11 மாவட்டங்களில் மூன்றில் ஒரு பங்கு பரப்பளவில் கூட குறுவை சாகுபடி செய்யப்படவில்லை. ஆடி மாதம் பிறந்தும் தண்ணீர் திறக்கப்படாததால் சம்பா சாகுபடிக்கும் வாய்ப்பில்லை என உழவர்கள் கூறியுள்ளனர். 'தானே' புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் வறட்சி காரணமாக விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
தென் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இதே நிலைதான் காணப்படுகிறது. அனைத்து மாவட்டங்களிலும் ஏரி, குளங்கள் வறண்டு வருவதால் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
இதனால் அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்யும் நோக்குடன் தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும். உழவர்கள் பெற்ற பயிர் கடனையும், நில வரியையும் ரத்து செய்வதுடன், ஏக்கருக்கு ரூ.10,000 வீதம் இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வேலை நாள்களின் எண்ணிக்கையை 100 நாள்களில் இருந்து 300 நாள்களாக உயர்த்த மத்திய அரசுடன் தமிழக அரசு கலந்து பேச வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Saturday, July 21, 2012

தமிழகத்தில் சட்டம் இருக்கிறது; ஒழுங்கு இல்லை: ராமதாஸ்

கோவை:""தமிழகத்தில் சட்டம் இருக்கிறது; ஒழுங்கு இல்லை. போதை மருந்து, மதுபானத்தால் பாலியல் வன்முறைகள் பெருகியுள்ளன; குடும்ப வன்முறைகள் அதிகரிக்கின்றன'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

கோவை, காந்திபுரத்தில் பா.ம.க., சார்பில், நேற்று மது ஒழிப்பு விழிப்புணர்வு கண்காட்சி நடந்தது. கண்காட்சியை, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் துவக்கி வைத்தார்.

முன்னதாக, நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது, ராமதாஸ் கூறியதாவது:

அக்கறை இல்லை:
தமிழகம் மதுவால் தள்ளாடிக் கொண்டுள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன்பு, குடிக்கும் வயது 25 ஆக இருந்தது. தற்போது 13 வயதிலேயே, பள்ளிச் சிறுவர்கள் கூட, குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி விடுகின்றனர். 2003ம் ஆண்டு, "டாஸ்மாக்' துவங்கியபோது, 2,800 கோடி ரூபாய் ஆண்டு வருமானம் கிடைத்தது. தற்போது, 18 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. திராவிட கட்சிகளுக்கு, மக்கள் நலனில் அக்கறை இல்லை. ஆனால், 22 ஆண்டுகளாக, பா.ம.க., மது ஒழிப்பு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.மதுக்கடைகளை, அரசே நடத்தும் கொடுமை, தமிழகத்தில் மட்டுமே உள்ளது.

ஆறு மாதம் கெடு:தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளை மூட, அரசுக்கு, நாங்கள் ஆறு மாதம் "கெடு' விதிக்கிறோம். அதற்குள் படிப்படியாக, அனைத்து மதுக்கடைகளையும் மூட வேண்டும்; பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும். மதுக்கடைகளை அரசு மூடாவிட்டால், நாங்களே பூட்டு போட்டு, கடைகளை மூடி, போராட்டம் நடத்துவோம். தமிழகத்தில் சட்டம் இருக்கிறது; ஒழுங்கு இல்லை. போதை மருந்து, மதுபானத்தால் பாலியல் வன்முறைகள் பெருகியுள்ளன. தினமும் 100 ரூபாய்க்கு மது குடிப்பதால், தனி மனிதன் ஒருவரிடம் இருந்து, ஐந்தாண்டுகளுக்கு அரசுக்கு, ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 500 ரூபாய் வருமானம் கிடைக்கிறது. ஆனால், குடிப்பழக்கம் மனிதனை மிருகமாக்குகிறது.போதையில் வரும் கணவன், மனைவியை தாக்கி, துன்புறுத்துகிறான்; மகளிடம் கூட தவறாக நடக்கிறான். மதுவை ஒழிப்பதால், இது போன்ற வன்முறைகள் நடக்காமல் இருக்கும்.இவ்வாறு, ராமதாஸ் தெரிவித்தார்.

"இனி, தனியாக நிற்கப் போகிறோம்!'"சட்டசபை தேர்தலில் கூட்டணி வைக்கும்போது, தமிழகத்தில் பூரண மதுவிலக்கு என்ற நிபந்தனையை, நீங்கள் முன் வைத்திருக்கலாமே...' என, ராமதாசிடம் கேட்டபோது, ""இனி தான், நாங்க, தனியாக நிற்கப்போகிறோமே... திராவிடக் கட்சிகளை ஒழிப்பதற்கு காலம் எங்களுக்கு இட்டிருக்கிற கட்டளை இது. தமிழகத்தில், ஒரு அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. திராவிடக் கட்சிகளை அப்புறப்படுத்த யார் முன்வருவார்கள் என்ற எண்ணம், மக்களிடம் ஏற்பட்டுள்ளது. அடுத்த தேர்தலில், மது ஒழிப்பு கொள்கையை மட்டும் முன்வைத்து, நாங்கள் தேர்தலில் போட்டியிடுவோம். நாங்கள் ஆட்சியமைத்தால், முதல் கையெழுத்தே, தமிழகத்தில் பூரண மது விலக்கு அமல்படுத்தும் உத்தரவு தான்,'' என்றார்

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: