Monday, July 14, 2014

தருமபுரியில் கிடைத்தது வெற்றியின் தொடக்கம் தான்: ராமதாஸ்

 

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டு இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைகிறது. 25 ஆண்டு கால பயணத்தில் மக்களுக்காக பா.ம.க. ஆற்றிய பணிகள் மனநிறைவளிக்கின்றன. ஆனால், இன்னும் ஆற்ற வேண்டிய பணிகள் ஏராளமாக இருக்கின்றன. இதற்கான இலக்கை நோக்கி பா.ம.க. வேகமாக பயணித்து வரும் போதிலும், இன்னும் அதிகவேகம் தேவை என்பதை  நினைவூட்டுவதற்கான  நிகழ்வாகவே பாட்டாளி மக்கள் கட்சியின் வெள்ளி விழா இப்போது வந்திருப்பதாக நான் கருதுகிறேன்.

சமுதாயத்தின் அடித்தளத்திலுள்ள பாட்டாளி மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த கட்சிகள், துரோகத்தையும், உரிமைச் சுரண்டலையும் மட்டுமே நன்றிக் கடனாக செலுத்தின. இந்த நிலையை மாற்றி அடித்தட்டு மக்களுக்கு அரசியல் அதிகாரம் பெற்றுத் தர வேண்டும் என்ற நோக்குடன் தான் 16.07.1989 அன்று சென்னை கடற்கரை சீரணி அரங்கில் பாட்டாளி மக்கள் கட்சித் தொடங்கப்பட்டது. சமூகநீதி, சமத்துவம், சனநாயகம், மனித உரிமை ஆகிய முழக்கங்களுடன் பிறந்த பா.ம.க. இன்று வரை இந்த முழக்கங்களில் எந்த சமரசமும் செய்யாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

பாட்டாளி மக்கள் கட்சி இன்னும் ஆட்சி அதிகாரத்தை பிடிக்கவில்லை என்றாலும், அதிகாரத்தில் இருப்பவர்கள் செய்யும் தவறுகளை தட்டிக்கேட்டும், அடித்தட்டு மக்களின் பிரச்சினைகளை மக்கள் மன்றத்தில் எழுப்பி அவற்றுக்கு தீர்வு கண்டும் வந்திருக்கிறது. 

காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு  என தமிழகத்தின் உரிமை சார்ந்த பிரச்சினைகளாக இருந்தாலும், இலங்கை இனப்படுகொலை, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் போன்றவையாக இருந்தாலும்,  கல்வி, கலாச்சாரம், சமூக நீதி, இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதை தடுத்தல், மதுவின் தீமைகளிலிருந்து மக்களை பாதுகாத்தல் போன்ற சமூகம் சார்ந்த பிரச்சினைகளாக இருந்தாலும் மக்களின் நலனுக்காக குரல் கொடுக்கும் முதல் கட்சி; களமிறங்கி போராடும் முதல் இயக்கம் என்ற பெருமையை பாட்டாளி மக்கள் கட்சி பெற்றிருக்கிறது என்பதே ஆட்சியமைப்பதால் ஏற்படுவதை விட அதிக பெருமிதத்தைத் தருவதாகும்.

மதுவும், புகையும் கூடாது; சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டும்; அனைவருக்கும் தரமான, சுகமான, சுமையற்ற, கட்டாயக் கல்வி இலவசமாக வழங்கப்பட வேண்டும்;  தமிழ் வழிக் கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும்; உடற்கல்வி ஊக்குவிக்கப்பட வேண்டும்; உண்மையான சமூகநீதி கோட்பாட்டின்படி அனைவருக்கும் உரிய இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்; பெண்கள் மதிக்கப்பட வேண்டும்; நீர்நிலைகள் தூய்மையாக பராமரிக்கப்பட வேண்டும்; வேளாண்மை இலாபம் தரும் தொழிலாக மாற்றப்பட வேண்டும்; கல்வி, சுகாதாரம், விவசாயம் ஆகிய மூன்றுக்கும் அனைத்தும் இலவசமாக வழங்கப்பட வேண்டும்; இவற்றை தவிர மற்ற இலவசங்கள் ஒழிக்கப்பட வேண்டும்; எங்கும் தமிழ்& எதிலும் தமிழ் என்ற நிலை ஏற்படுத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட உன்னதமான  கொள்கைகளை கொண்டிருப்பதுடன், அவற்றில் உறுதியாகவும் இருக்கும் ஒரே கட்சி பா.ம.க. தான். பாட்டாளி மக்கள் கட்சிக்கு இணையாக கொள்கைக் கோட்டையாக விளங்கும் வேறு கட்சி எதுவும் தமிழகத்தில் இல்லை என்று அறுதியிட்டும், அறைகூவல் விடுத்தும் நம்மால் உறுதியாக கூற முடியும்.

இத்தனை சிறப்புகளும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு இருக்கும் போதிலும், அதனால் ஆட்சி என்ற அரியணையில் ஏற முடியவில்லையே என்ற ஏக்கக் குரல்களும் கேட்கத் தான் செய்கின்றன. இதற்குக் காரணமும் நாம் தான் என்பதை மறுக்க முடியாது. 1989 ஆம் ஆண்டு கட்சி தொடங்கப்பட்ட சில மாதங்களிலேயே மக்களவைத் தேர்தலை எதிர்கொண்ட பாட்டாளி மக்கள் கட்சி, ஒட்டுமொத்த இந்தியாவும் திரும்பிப் பார்க்கும் வகையில் வாக்குகளைப் பெற்றது. பல இடங்களில் அப்போதைய ஆளுங்கட்சிக்கு இணையாக வாக்குகளைப் பெற்ற பா.ம.க. சில இடங்களில் ஆளுங்கட்சியை மூன்றாவது இடத்திற்குத் தள்ளி அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன்பின் மிகப்பெரிய  அளவில் அலைவீசிய 1991 ஆம் ஆண்டு தேர்தலில் தி.மு.க.வுக்கு இணையான இடங்களையும், 1996 ஆம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு இணையான இடங்களையும் பா.ம.க. வென்றது. 

அதன்பின், இந்த இருகட்சிகளுக்கும் மாற்றாக உருவெடுக்கும் அரசியலைக் கையில் எடுத்திருக்க வேண்டிய பா.ம.க., இந்த இரு கட்சிகளிடமே மாறி மாறி கூட்டணி அமைத்தது தான் பெரும் சரிவை ஏற்படுத்தியது.1996 ஆம் ஆண்டு தேர்தலில் தனித்து நின்று பெரும் அலையை சமாளித்து 4 இடங்களை வென்ற பா.ம.க. 2011ஆம் ஆண்டு தேர்தலில் கூட்டணி அமைத்தும் 3 தொகுதிக்கு மேல் பிடிக்க முடியாததற்கு கூட்டணி தொடர்பான தவறான அணுகுமுறையே காரணம். இதை உணர்ந்து தான் 16 ஆண்டுகளுக்கு பின் தி.மு.க., அ.தி.மு.க. இல்லாத மாற்று அணியை உருவாக்கி கடந்த மக்களவைத் தேர்தலை பா.ம.க. எதிர்கொண்டது. அரசு எந்திரத்தின் உதவியுடன் முறைகேடுகள், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள், இவற்றுக்கெல்லாம் மேலாக வாக்குப்பதிவு எந்திரங்களில் மோசடி என எண்ணற்ற விதிமீறல்கள் நடந்த போதிலும், அவற்றையெல்லாம் முறியடித்து தருமபுரி தொகுதியில் பா.ம.க. வெற்றி பெற்றது. தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல்கள் முறையாக நடத்தப் பட்டிருந்தால், மேலும் சில தொகுதிகள் பாட்டாளி மக்கள் கட்சியின் வசமாகியிருக்கக் கூடும்.

தருமபுரியில் கிடைத்தது நமக்கான வெற்றியின் தொடக்கம் தான். எதிர்காலம் நமக்கானது என்பதற்கு கட்டியம் கூறுவது தான் இந்த வெற்றி ஆகும். தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளின் ஆட்சி தொடங்கி  வரும் 2016 ஆம் ஆண்டுடன் 50 ஆண்டுகள் நிறைவடைகிறது. அதுவே திராவிட ஆட்சியின் முடிவாகவும், பா.ம.க. தலைமையிலான மாற்று ஆட்சியின் தொடக்கமாகவும் இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இதையே இலக்காக கொண்டு நமது பயணம் அமைய வேண்டும். 2016 ஆம் ஆண்டில் நாம் கொண்டாடவிருக்கும் வெற்றி விழாவுக்கான அடித்தளமாக பா.ம.க.வின் வெள்ளி விழா கொண்டாட்டங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். திண்டிவனத்தில் கடந்த மாதம் 18ஆம் தேதி நடந்த செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி வரும் 25ஆம் தேதி  பா.ம.க.வின் வெள்ளி விழாவை சிறப்பாக கொண்டாடும்படி பாட்டாளி சொந்தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

Saturday, July 12, 2014

கிளப்களில் தமிழர்களின் பாரம்பரிய உடை வேட்டிக்கு தடை :

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’சென்னையில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கிளப்பில் நேற்று மாலை நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக சென்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டி. பரந்தாமன், மூத்த வழக்கறிஞர் ஆர். காந்தி ஆகியோர் அனுமதி மறுக்கப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இதற்குக் காரணம் அவர்கள் தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்திருந்திருந்தது தானாம். உயர்நீதிமன்ற நீதிபதியும், மூத்த வழக்கறிஞரும் அவமதிக்கப்பட்டிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. சென்னையில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கிளப் மட்டுமின்றி, ஜிம்கானா கிளப், மெட்ராஸ் கிளப், போட் கிளப், மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் உட்பட பத்துக்கும் மேற்பட்ட கிளப்களில் வேட்டிக்கு தடை விதிக்கப் பட்டிருக்கிறது.
இங்கு வேட்டி அணிந்து செல்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு அனுமதி கிடையாது. அதே நேரத்தில் நாகரீக ஆடை அணிந்து செல்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு அனுமதி உண்டு. மொத்தத்தில் மனிதர்களை மதிக்காமல் அவர்களின் ஆடைகளுக்கு மதிப்பளிக்கும் மோசமான கலாச்சாரத்திற்கு இந்த அமைப்புகள் அடிமையாகி வருகின்றன.
தமிழுக்கும், தமிழ் பாரம்பரியத்திற்கு எதிராக செயல்படுவது தான் நாகரீகம் என்ற நஞ்சு கலந்த எண்ணம் மேல்தட்டு மக்களுக்கான இந்த கிளப்களின் நிர்வாகிகளிடையே நிலவுவது தான் இதற்கு காரணம் ஆகும். வேட்டிக்கு தடை விதித்துள்ள கிளப்களில் பெரும்பாலானவை வெள்ளையரால் தொடங்கப்பட்டவை. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தியர்கள் அடிமைகளாக கருதப்பட்டதால், அவர்கள் இத்தகைய கிளப்களில் நுழையக் கூடாது என்ற எண்ணத்தில் ஆடை விதிகள் என்ற பெயரில் இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
ஆங்கிலேயர்களிடமிருந்து நாம் விடுதலை பெற்று 68 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் - ஆங்கிலேயர் உருவாக்கிய கிளப்கள் பெரும்பாலும் தமிழர்களின் கைகளுக்கு வந்து விட்ட நிலையில், தமிழர்களின் ஆடை அணிந்தவர்களை அடிமைகளைப் போல கருதி உள்ளே நுழைய அனுமதி மறுப்பது ஏற்றுக் கொள்ள முடியாததாகும். இப்போக்கு கடுமையாக கண்டிக்கத்தக்கது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்திய விடுதலை தொடர்பாக லண்டனில் நடைபெற்ற பல்வேறு பேச்சுக்களில் பங்கேற்பதற்காக மகாத்மா காந்தி வேட்டியில் தான் சென்றார். ஒருகாலத்தில் காந்தியை அவரது ஆடையின் அடிப்படையில் விமர்சித்த இங்கிலாந்து பிரதமர் சர்ச்சில் கூட பின்னர் அதற்காக வருத்தம் தெரிவித்து, காந்தியை அவரது வழக்கமான உடையில் பேச்சுக்களில் பங்கேற்க அனுமதி அளித்தார்.
ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ஜி.கே. மணி கூட தமிழர்களின் பாரம்பரிய உடையில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டார். தமிழ் நாட்டுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டவர்கள் கூட தமிழர்களின் பண்பாட்டைப் பற்றி அறிந்து, வேட்டி, புடவை போன்ற ஆடைகளை அணிவதை பெருமையாக கருதுகிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி அவமதிக்கப்படுவது மன்னிக்க முடியாத குற்றம் ஆகும்.
சமுதாயத்தில் புகழ் பெற்ற மனிதர்கள் வேட்டி அணிந்து வந்ததற்காக கிளப்களுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படுவது இது முதல் முறையல்ல. 1980களில் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான வி.ஆர். கிருஷ்ணய்யருக்கும் இதே போன்ற அவமதிப்பு நிகழ்ந்திருக்கிறது. அதன்பிறகும் அரசியல் கட்சித் தலைவர்களும், அதிகாரிகள், வழக்கறிஞர்கள் போன்றவர்களும் ஆடையை காரணம் காட்டி கிளப்களில் நுழைய தடை விதிக்கப்பட்டிருக்கிறது. தமிழர்களின் பாரம்பரிய ஆடைகள் தொடர்ந்து அவமதிக்கப்படும் போதிலும் அதைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது வருத்தமளிக்கிறது.
மேல்தட்டு மக்களுக்கான கிளப்கள் அரசின் எந்த சட்ட திட்டத்திற்கு கட்டுப்படாமல், தங்களுக்கென விதிகளை வகுத்துக் கொண்டு தனித்தீவாக செயல்படுவதை அனுமதிக்கக்கூடாது. சங்கங்களின் பதிவுச் சட்டப்படி தான் இவை ஒழுங்குப்படுத்தப்படுகின்றன. தமிழுக்கும், தமிழர்களின் கலாச்சாரம் மற்றம் பாரம்பரிய ஆடைகளுக்கு மரியாதை அளிக்காத கிளப்களை தடை செய்யும் வகையில், அதற்குரிய சட்டங்களில் தமிழக அரசு உடனடியாக திருத்தம் செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்’’என்று குறிப்பிட்டுள்ளார்.

Tuesday, July 8, 2014

அழுகுரல் ஓய்வதற்குள் பாராட்டு விழா! தமிழக அரசு மீது ராமதாஸ் குற்றச்சாட்டு!



சென்னை மவுலிவாக்கம் கட்டிட இடிபாட்டு முறைகேடுகளை மறைப்பதற்காகவே தமிழக அரசு தற்போது பாராட்டு விழா நடத்தியுள்ளது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
சேலம் மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர்,

சென்னை மவுலிவாக்கம் 11 மாடி கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தாரின் அழுகுரல் ஓய்வதற்கு முன்பாகவே, மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களுக்கு தமிழக அரசு பாராட்டு விழா நடத்தியது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஊழ-ல் அதிகாரிகளுக்கு பங்கு இருக்கிறது என்றார்.
கடந்த மாதம் 28 ஆம் தேதி சென்னை மவுலிவாக்கத்த்தில் 11 மாடி கட்டிட விபத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை ஜெயலலிதா வழங்கினார். நேரு உள்விளையாட்டு அரங்கில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், தீயணைப்புத்துறை, காவல்துறை, தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தமிழ்நாடு ஊர்காவல் படையினர் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 3 ஆயிரத்து 750 பேருக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

Sunday, July 6, 2014

நத்தம் காலனியில் ஆயுதம் வைத்திருந்த 6 இளைஞர்களுக்கும் நக்சலைட்டுகளுடன் தொடர்பு உள்ளது: அன்புமணி



தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேட்டூர் பகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க வந்த நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் அன்புமணி செய்தியாளர்களிடம் பேசியபோது,  ’’நத்தம் காலனியில் ஆயுதம் வைத்திருந்த 6 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களுக்கு நக்சலைட்டுகளுடன் தொடர்பு உள்ளது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். இதில் ஒரு சில அரசியல் கட்சிகளும் சம்மந்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள முக்கிய தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.
தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு எந்தளவுக்கு உதவியது என்பது குறித்தும், மின்னணு வாக்குப்பதிவில் முறைகேடு குறித்தும் திமுக தலைவர் கலைஞர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதே கருத்தை தான் நாங்களும் கூறுகிறோம்.
மின்வெட்டால் 3 ஆண்டு அதிமுக ஆட்சி இருண்ட ஆட்சியாக உள்ளது. சட்டம், ஒழுங்கு கெட்டு விட்டது. 6500 கொலைகள், 65 ஆயிரம் கொள்ளைகள் நடந்துள்ளது.
இந்தியாவில் அதிக சாலை விபத்துகள், தற்கொலைகள் தமிழகத்தில் தான் அதிகம் நடக்கிறது. 2வது அதிக கற்பழிப்பு தமிழகத்தில் தான் நடக்கிறது. அனைத்து பிரச்னைக்கும் காரணம் மது’’என்று கூறினார்.

பாமக பெண்கள் அணியினர் வீடு வீடாக சென்று கையெழுத்து வேட்டை



தென் சென்னை மேற்கு மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் தாமோதரன் தலைமையில் இன்று நடந்தது. பா.ம.க. துணை பொதுச் செயாலளர் முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் மது ஒழிப்பை வலியுறுத்தும் வகையில் மது வேண்டுமா? வேண்டாமா என்று வீடு வீடாக சென்று பெண்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த இயக்கத்தை வருகிற 8–ந்தேதி முதல் சென்னையில் பா.ம.க. மகளிர் அணியினர் தொடங்க உள்ளனர்.
கட்சியின் 25–ம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி தென் சென்னை மேற்கு மாவட்டத்தில் 250 இடங்களில் கட்சி கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்க முடிவு செய்யபட்டது.

Friday, July 4, 2014

11 மாடி கட்டிட விபத்து குறித்து சி.பி.ஐ. விசாரணை வேண்டும் : ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் :



சென்னையை அடுத்த மௌலிவாக்கத்தில் 11 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்து தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த மோசமான விபத்தில் இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளனர். 27 பேர் படுகாயமடைந்து மருத்துவம் பெற்று வருகின்றனர்.

தமிழக வரலாற்றில் இப்படி ஒரு மோசமான விபத்து நடந்திருப்பது இதுவே முதல்முறையாகும். இடிந்து விழுந்த கட்டிடத்திற்கு அருகில் உள்ள இன்னொரு 11 மாடிக் கட்டிடமும் மிகவும் வலுவிழந்து காணப்படுவதால் அதையும் இடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் ஆணையிட்டுள்ளனர். இவ்விபத்தில் விலைமதிப்பற்ற 61 உயிர்கள் பறிபோயிருப்பதால், அவர்களின் குடும்பங்கள் வீதிக்கு வந்துள்ளன. இதுதவிர, சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவில் தங்களின் வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் இடிந்து போன கட்டிடங்களில் முதலீடு செய்த 88 குடும்பங்கள் தாங்கள் செலுத்திய பணம் திரும்பக் கிடைக்குமா? என்பது தெரியாமல் தவித்து வருகின்றன. 88 அடுக்குமாடி குடியிருப்புகளை விலைக்கு வாங்குவதற்காக இவர்கள் இதுவரை செலுத்தியுள்ள பணம் மட்டும் ரூ.60 கோடி என்று கூறப்படுகிறது.

இந்த விபத்துக்கு காரணமானவர்கள்  கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதே  மக்களின் எதிர்பார்ப்பாகும். இதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்கும் என அனைவரும் நம்பியிருந்த நேரத்தில், இந்த விபத்துக் குறித்து விசாரணை நடத்துவதற்காக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.இரகுபதி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்து முதல்வர் ஆணையிட்டிருக்கிறார். 61 பேரின் உயிரைப் பறித்த விபத்துக்கு காரணமானவர்களை கண்டறிவதற்காக இந்த ஆணையம் அமைக்கப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா கூறியிருக்கும் போதிலும், கடந்த சில நாட்களாக நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும்போது, விபத்துக்கு காரணமான உண்மைக் குற்றவாளிகளை காப்பாற்றவும், இந்த கட்டிடத்திற்கு கட்டுமான அனுமதி தருவதில் நடந்த விதிமீறல்களையும், முறைகேடுகளையும் மூடி மறைக்கவே இப்படி ஒரு விசாரணைக்கு ஆணையிடப்பட்டிருப்பதாக எண்ணத் தோன்றுகிறது.

இடிந்து தரைமட்டமான கட்டிடம் கட்டப்பட்ட இடம் ஏரிக் கால்வாய் என பத்திரப் பதிவுத் துறை ஆவணங்களில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இத்தகைய பகுதிகளில் மிகச்சிறிய கட்டிடம் கூட கட்டுவதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்பது தான் விதியாகும். அதுமட்டுமின்றி, 18 மீட்டர் மட்டுமே அகலமுள்ள சாலையில் வானுயர்ந்த கட்டிடங்களைக் கட்ட அனுமதி கிடையாது. 30 மீட்டர் அல்லது அதற்கு அதிக அகலம் கொண்ட சாலைகளில் தான் இத்தகைய கட்டிடங்களுக்கு அனுமதி அளிக்கப்படும். இந்தக் கட்டிடத்திற்காக சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் விதிமுறைகளை தளர்த்தி அனுமதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, முதலில் 6 மாடிகளை மட்டுமே கட்ட அனுமதி அளிக்கப்பட்டதாகவும், அதற்குரிய வகையில் அடித்தளம்  அமைக்கப்பட்டதாகவும் தெரிகிறது. அதன்பின், விதிகளை மீறி 11 மாடிகளை கட்ட அனுமதி பெறப்பட்டுள்ளது. அதற்கேற்றவாறு, அடித்தளம் வலுப்படுத்தப் படாமலேயே 11  மாடி கட்டிடம் எழுப்பப்பட்டதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

இடிந்த கட்டிடத்தை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா, 11 மாடி கட்டிடத்திற்கு அனுமதி அளித்ததில் எந்த விதிமீறலும் நடக்கவில்லை என்றும், கட்டுமான நிறுவனத்தினர் தான் முறையாக கட்டிடம் கட்ட வில்லை என நற்சான்றிதழ் அளித்திருந்தார். கட்டிடம் கட்ட அனுமதி அளித்ததில் எந்த முறைகேடும் நடக்கவில்லை தமிழக முதலமைச்சரே கூறிவிட்டபிறகு, அவரால் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம், நியாயமாக விசாரணை நடத்தி உண்மைகளைக் கண்டறியும் என நம்புவதைவிட பெரிய அறியாமை உலகில் இருக்க முடியாது. மேலும், இக்கட்டிடத்திற்கு அனுமதி அளிப்பதற்காக விதிமுறைகள் தளர்த்தப்பட்டதாக செய்தி வெளியிட்ட செய்தித்தாள் மீது  ஜெயலலிதாவே அவதூறு வழக்குத் தொடர்ந்து, இவ்விஷயத்தில்  உண்மையை வெளிக்கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் என ஊடகங்களுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில்,  விசாரணை ஆணையத்தின் முடிவு என்னவாக இருக்கும் என்பதை அனைவராலும் உணர முடியும்.

மௌலிவாக்கம் விபத்துக்கு கட்டுமான நிறுவனத்தினரும், அனுமதி அளித்த சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் உள்ளிட்ட அமைப்புகளின் அதிகாரிகளும் தான் காரணம் என்பது உள்ளங்கை நெல்லிக் கனியாக தெரிகிறது. இந்த சூழலில் நீதி விசாரணை நடத்துவது உண்மையை புதைப்பதற்கு தான் உதவுமே தவிர, உண்மையை வெளிக்கொண்டுவர உதவாது. இந்த முறைகேட்டில் தமிழக அரசு அதிகாரிகளும், அவர்களைவிட உயர்ந்த நிலையில் இருப்பவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுவதால், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத அமைப்பைக் கொண்டு விசாரணை நடத்தினால் தான் உண்மைகளை வெளிக்கொண்டுவர முடியும். எனவே, 11 மாடிக் கட்டிட விபத்து குறித்து நடுவண் புலனாய்வு அமைப்பு (சி.பி.ஐ) விசாரணைக்கு தமிழக அரசு  ஆணையிட வேண்டும்.   இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்

Thursday, July 3, 2014

தென் மாவட்டங்களில் பாமகவை பலப்படுத்துவது

சென்னை: தென் மாவட்டங்களில் பாமகவை பலப்படுத்துவது குறித்தும், கட்சியை வளர்ப்பது குறித்த பிற அம்சங்கள் குறித்தும் டாக்டர் ராமதாஸ் தலைமையில் அவரது தைலாபுரம் தோட்டத்தில் வைத்து பாமகவினர் ஆலோசனை நடத்தினர்.இதுதொடர்பாக பாமக வெளியிட்டுள்ள அறிக்கையில், பா.ம.க. தென் மாவட்ட பொறுப்பாளர்களுடனான ஆலோசனைக்கூட்டம் தைலாபுரத்தில் உள்ள பா.ம.க. அரசியல் பயிலரங்கில் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் புதுக்கோட்டை, திருச்சி, கரூர், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள மாநில துணைப்பொதுச்செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் துணை அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்து எடுத்துக் கூறினார். தென்மாவட்டங்களில் உள்ள அனைத்துக் கிராமங்களிலும் கிளைகளைத் தொடங்கி பா.ம.க.வை வலுப்படுத்துவதென கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.பா.ம.க. வெள்ளி விழாவையும், பசுமைத்தாயகம் தினத்தையும் வரும் 25-ம் தேதி கிராமங்கள், நகரங்கள், தெருக்கள் தோறும் கொடியேற்றியும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடுவது என்றும் முடிவெடுக்கப்பட்டது. தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல், தமிழக மக்களை பாதிக்கும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

 

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: