Monday, July 14, 2014

தருமபுரியில் கிடைத்தது வெற்றியின் தொடக்கம் தான்: ராமதாஸ்

 

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டு இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைகிறது. 25 ஆண்டு கால பயணத்தில் மக்களுக்காக பா.ம.க. ஆற்றிய பணிகள் மனநிறைவளிக்கின்றன. ஆனால், இன்னும் ஆற்ற வேண்டிய பணிகள் ஏராளமாக இருக்கின்றன. இதற்கான இலக்கை நோக்கி பா.ம.க. வேகமாக பயணித்து வரும் போதிலும், இன்னும் அதிகவேகம் தேவை என்பதை  நினைவூட்டுவதற்கான  நிகழ்வாகவே பாட்டாளி மக்கள் கட்சியின் வெள்ளி விழா இப்போது வந்திருப்பதாக நான் கருதுகிறேன்.

சமுதாயத்தின் அடித்தளத்திலுள்ள பாட்டாளி மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த கட்சிகள், துரோகத்தையும், உரிமைச் சுரண்டலையும் மட்டுமே நன்றிக் கடனாக செலுத்தின. இந்த நிலையை மாற்றி அடித்தட்டு மக்களுக்கு அரசியல் அதிகாரம் பெற்றுத் தர வேண்டும் என்ற நோக்குடன் தான் 16.07.1989 அன்று சென்னை கடற்கரை சீரணி அரங்கில் பாட்டாளி மக்கள் கட்சித் தொடங்கப்பட்டது. சமூகநீதி, சமத்துவம், சனநாயகம், மனித உரிமை ஆகிய முழக்கங்களுடன் பிறந்த பா.ம.க. இன்று வரை இந்த முழக்கங்களில் எந்த சமரசமும் செய்யாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

பாட்டாளி மக்கள் கட்சி இன்னும் ஆட்சி அதிகாரத்தை பிடிக்கவில்லை என்றாலும், அதிகாரத்தில் இருப்பவர்கள் செய்யும் தவறுகளை தட்டிக்கேட்டும், அடித்தட்டு மக்களின் பிரச்சினைகளை மக்கள் மன்றத்தில் எழுப்பி அவற்றுக்கு தீர்வு கண்டும் வந்திருக்கிறது. 

காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு  என தமிழகத்தின் உரிமை சார்ந்த பிரச்சினைகளாக இருந்தாலும், இலங்கை இனப்படுகொலை, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் போன்றவையாக இருந்தாலும்,  கல்வி, கலாச்சாரம், சமூக நீதி, இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதை தடுத்தல், மதுவின் தீமைகளிலிருந்து மக்களை பாதுகாத்தல் போன்ற சமூகம் சார்ந்த பிரச்சினைகளாக இருந்தாலும் மக்களின் நலனுக்காக குரல் கொடுக்கும் முதல் கட்சி; களமிறங்கி போராடும் முதல் இயக்கம் என்ற பெருமையை பாட்டாளி மக்கள் கட்சி பெற்றிருக்கிறது என்பதே ஆட்சியமைப்பதால் ஏற்படுவதை விட அதிக பெருமிதத்தைத் தருவதாகும்.

மதுவும், புகையும் கூடாது; சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டும்; அனைவருக்கும் தரமான, சுகமான, சுமையற்ற, கட்டாயக் கல்வி இலவசமாக வழங்கப்பட வேண்டும்;  தமிழ் வழிக் கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும்; உடற்கல்வி ஊக்குவிக்கப்பட வேண்டும்; உண்மையான சமூகநீதி கோட்பாட்டின்படி அனைவருக்கும் உரிய இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்; பெண்கள் மதிக்கப்பட வேண்டும்; நீர்நிலைகள் தூய்மையாக பராமரிக்கப்பட வேண்டும்; வேளாண்மை இலாபம் தரும் தொழிலாக மாற்றப்பட வேண்டும்; கல்வி, சுகாதாரம், விவசாயம் ஆகிய மூன்றுக்கும் அனைத்தும் இலவசமாக வழங்கப்பட வேண்டும்; இவற்றை தவிர மற்ற இலவசங்கள் ஒழிக்கப்பட வேண்டும்; எங்கும் தமிழ்& எதிலும் தமிழ் என்ற நிலை ஏற்படுத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட உன்னதமான  கொள்கைகளை கொண்டிருப்பதுடன், அவற்றில் உறுதியாகவும் இருக்கும் ஒரே கட்சி பா.ம.க. தான். பாட்டாளி மக்கள் கட்சிக்கு இணையாக கொள்கைக் கோட்டையாக விளங்கும் வேறு கட்சி எதுவும் தமிழகத்தில் இல்லை என்று அறுதியிட்டும், அறைகூவல் விடுத்தும் நம்மால் உறுதியாக கூற முடியும்.

இத்தனை சிறப்புகளும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு இருக்கும் போதிலும், அதனால் ஆட்சி என்ற அரியணையில் ஏற முடியவில்லையே என்ற ஏக்கக் குரல்களும் கேட்கத் தான் செய்கின்றன. இதற்குக் காரணமும் நாம் தான் என்பதை மறுக்க முடியாது. 1989 ஆம் ஆண்டு கட்சி தொடங்கப்பட்ட சில மாதங்களிலேயே மக்களவைத் தேர்தலை எதிர்கொண்ட பாட்டாளி மக்கள் கட்சி, ஒட்டுமொத்த இந்தியாவும் திரும்பிப் பார்க்கும் வகையில் வாக்குகளைப் பெற்றது. பல இடங்களில் அப்போதைய ஆளுங்கட்சிக்கு இணையாக வாக்குகளைப் பெற்ற பா.ம.க. சில இடங்களில் ஆளுங்கட்சியை மூன்றாவது இடத்திற்குத் தள்ளி அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன்பின் மிகப்பெரிய  அளவில் அலைவீசிய 1991 ஆம் ஆண்டு தேர்தலில் தி.மு.க.வுக்கு இணையான இடங்களையும், 1996 ஆம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு இணையான இடங்களையும் பா.ம.க. வென்றது. 

அதன்பின், இந்த இருகட்சிகளுக்கும் மாற்றாக உருவெடுக்கும் அரசியலைக் கையில் எடுத்திருக்க வேண்டிய பா.ம.க., இந்த இரு கட்சிகளிடமே மாறி மாறி கூட்டணி அமைத்தது தான் பெரும் சரிவை ஏற்படுத்தியது.1996 ஆம் ஆண்டு தேர்தலில் தனித்து நின்று பெரும் அலையை சமாளித்து 4 இடங்களை வென்ற பா.ம.க. 2011ஆம் ஆண்டு தேர்தலில் கூட்டணி அமைத்தும் 3 தொகுதிக்கு மேல் பிடிக்க முடியாததற்கு கூட்டணி தொடர்பான தவறான அணுகுமுறையே காரணம். இதை உணர்ந்து தான் 16 ஆண்டுகளுக்கு பின் தி.மு.க., அ.தி.மு.க. இல்லாத மாற்று அணியை உருவாக்கி கடந்த மக்களவைத் தேர்தலை பா.ம.க. எதிர்கொண்டது. அரசு எந்திரத்தின் உதவியுடன் முறைகேடுகள், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள், இவற்றுக்கெல்லாம் மேலாக வாக்குப்பதிவு எந்திரங்களில் மோசடி என எண்ணற்ற விதிமீறல்கள் நடந்த போதிலும், அவற்றையெல்லாம் முறியடித்து தருமபுரி தொகுதியில் பா.ம.க. வெற்றி பெற்றது. தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல்கள் முறையாக நடத்தப் பட்டிருந்தால், மேலும் சில தொகுதிகள் பாட்டாளி மக்கள் கட்சியின் வசமாகியிருக்கக் கூடும்.

தருமபுரியில் கிடைத்தது நமக்கான வெற்றியின் தொடக்கம் தான். எதிர்காலம் நமக்கானது என்பதற்கு கட்டியம் கூறுவது தான் இந்த வெற்றி ஆகும். தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளின் ஆட்சி தொடங்கி  வரும் 2016 ஆம் ஆண்டுடன் 50 ஆண்டுகள் நிறைவடைகிறது. அதுவே திராவிட ஆட்சியின் முடிவாகவும், பா.ம.க. தலைமையிலான மாற்று ஆட்சியின் தொடக்கமாகவும் இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இதையே இலக்காக கொண்டு நமது பயணம் அமைய வேண்டும். 2016 ஆம் ஆண்டில் நாம் கொண்டாடவிருக்கும் வெற்றி விழாவுக்கான அடித்தளமாக பா.ம.க.வின் வெள்ளி விழா கொண்டாட்டங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். திண்டிவனத்தில் கடந்த மாதம் 18ஆம் தேதி நடந்த செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி வரும் 25ஆம் தேதி  பா.ம.க.வின் வெள்ளி விழாவை சிறப்பாக கொண்டாடும்படி பாட்டாளி சொந்தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: