சென்னையை அடுத்த மௌலிவாக்கத்தில் 11 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்து தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த மோசமான விபத்தில் இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளனர். 27 பேர் படுகாயமடைந்து மருத்துவம் பெற்று வருகின்றனர்.
தமிழக வரலாற்றில் இப்படி ஒரு மோசமான விபத்து நடந்திருப்பது இதுவே முதல்முறையாகும். இடிந்து விழுந்த கட்டிடத்திற்கு அருகில் உள்ள இன்னொரு 11 மாடிக் கட்டிடமும் மிகவும் வலுவிழந்து காணப்படுவதால் அதையும் இடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் ஆணையிட்டுள்ளனர். இவ்விபத்தில் விலைமதிப்பற்ற 61 உயிர்கள் பறிபோயிருப்பதால், அவர்களின் குடும்பங்கள் வீதிக்கு வந்துள்ளன. இதுதவிர, சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவில் தங்களின் வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் இடிந்து போன கட்டிடங்களில் முதலீடு செய்த 88 குடும்பங்கள் தாங்கள் செலுத்திய பணம் திரும்பக் கிடைக்குமா? என்பது தெரியாமல் தவித்து வருகின்றன. 88 அடுக்குமாடி குடியிருப்புகளை விலைக்கு வாங்குவதற்காக இவர்கள் இதுவரை செலுத்தியுள்ள பணம் மட்டும் ரூ.60 கோடி என்று கூறப்படுகிறது.
இந்த விபத்துக்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும். இதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்கும் என அனைவரும் நம்பியிருந்த நேரத்தில், இந்த விபத்துக் குறித்து விசாரணை நடத்துவதற்காக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.இரகுபதி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்து முதல்வர் ஆணையிட்டிருக்கிறார். 61 பேரின் உயிரைப் பறித்த விபத்துக்கு காரணமானவர்களை கண்டறிவதற்காக இந்த ஆணையம் அமைக்கப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா கூறியிருக்கும் போதிலும், கடந்த சில நாட்களாக நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும்போது, விபத்துக்கு காரணமான உண்மைக் குற்றவாளிகளை காப்பாற்றவும், இந்த கட்டிடத்திற்கு கட்டுமான அனுமதி தருவதில் நடந்த விதிமீறல்களையும், முறைகேடுகளையும் மூடி மறைக்கவே இப்படி ஒரு விசாரணைக்கு ஆணையிடப்பட்டிருப்பதாக எண்ணத் தோன்றுகிறது.
இடிந்து தரைமட்டமான கட்டிடம் கட்டப்பட்ட இடம் ஏரிக் கால்வாய் என பத்திரப் பதிவுத் துறை ஆவணங்களில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இத்தகைய பகுதிகளில் மிகச்சிறிய கட்டிடம் கூட கட்டுவதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்பது தான் விதியாகும். அதுமட்டுமின்றி, 18 மீட்டர் மட்டுமே அகலமுள்ள சாலையில் வானுயர்ந்த கட்டிடங்களைக் கட்ட அனுமதி கிடையாது. 30 மீட்டர் அல்லது அதற்கு அதிக அகலம் கொண்ட சாலைகளில் தான் இத்தகைய கட்டிடங்களுக்கு அனுமதி அளிக்கப்படும். இந்தக் கட்டிடத்திற்காக சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் விதிமுறைகளை தளர்த்தி அனுமதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, முதலில் 6 மாடிகளை மட்டுமே கட்ட அனுமதி அளிக்கப்பட்டதாகவும், அதற்குரிய வகையில் அடித்தளம் அமைக்கப்பட்டதாகவும் தெரிகிறது. அதன்பின், விதிகளை மீறி 11 மாடிகளை கட்ட அனுமதி பெறப்பட்டுள்ளது. அதற்கேற்றவாறு, அடித்தளம் வலுப்படுத்தப் படாமலேயே 11 மாடி கட்டிடம் எழுப்பப்பட்டதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
இடிந்த கட்டிடத்தை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா, 11 மாடி கட்டிடத்திற்கு அனுமதி அளித்ததில் எந்த விதிமீறலும் நடக்கவில்லை என்றும், கட்டுமான நிறுவனத்தினர் தான் முறையாக கட்டிடம் கட்ட வில்லை என நற்சான்றிதழ் அளித்திருந்தார். கட்டிடம் கட்ட அனுமதி அளித்ததில் எந்த முறைகேடும் நடக்கவில்லை தமிழக முதலமைச்சரே கூறிவிட்டபிறகு, அவரால் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம், நியாயமாக விசாரணை நடத்தி உண்மைகளைக் கண்டறியும் என நம்புவதைவிட பெரிய அறியாமை உலகில் இருக்க முடியாது. மேலும், இக்கட்டிடத்திற்கு அனுமதி அளிப்பதற்காக விதிமுறைகள் தளர்த்தப்பட்டதாக செய்தி வெளியிட்ட செய்தித்தாள் மீது ஜெயலலிதாவே அவதூறு வழக்குத் தொடர்ந்து, இவ்விஷயத்தில் உண்மையை வெளிக்கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் என ஊடகங்களுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், விசாரணை ஆணையத்தின் முடிவு என்னவாக இருக்கும் என்பதை அனைவராலும் உணர முடியும்.
மௌலிவாக்கம் விபத்துக்கு கட்டுமான நிறுவனத்தினரும், அனுமதி அளித்த சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் உள்ளிட்ட அமைப்புகளின் அதிகாரிகளும் தான் காரணம் என்பது உள்ளங்கை நெல்லிக் கனியாக தெரிகிறது. இந்த சூழலில் நீதி விசாரணை நடத்துவது உண்மையை புதைப்பதற்கு தான் உதவுமே தவிர, உண்மையை வெளிக்கொண்டுவர உதவாது. இந்த முறைகேட்டில் தமிழக அரசு அதிகாரிகளும், அவர்களைவிட உயர்ந்த நிலையில் இருப்பவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுவதால், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத அமைப்பைக் கொண்டு விசாரணை நடத்தினால் தான் உண்மைகளை வெளிக்கொண்டுவர முடியும். எனவே, 11 மாடிக் கட்டிட விபத்து குறித்து நடுவண் புலனாய்வு அமைப்பு (சி.பி.ஐ) விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்
No comments:
Post a Comment