Saturday, March 16, 2013

பாலுறவு சம்மத வயதை 16 ஆக குறைக்கக் கூடாது! ராமதாஸ் அறிக்கை!

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
டெல்லியில் ஓடும் பேரூந்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அதிக தண்டனை வழங்க வகை செய்யும் அவசர சட்டத்தை மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் 3-ஆம் தேதி பிறப்பித்தது.
இச்சட்டம் அடுத்த மாத தொடக்கத்தில் காலாவதியாகிவிடும் என்பதால், அதற்கு பதிலாக குற்றவியல் சட்டத் திருத்த மசோதா- 2013 என்ற சட்ட முன்வடிவை நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலேயே கொண்டுவந்து நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அதில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை தரும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வருவதை பாட்டாளி மக்கள் கட்சி வரவேற்கிறது.
அதேநேரத்தில், இந்த சட்டம் கொண்டுவரப்படுவதன் நோக்கத்திற்கு சற்றும் சம்பந்தமில்லாமல், பெண்கள் பாலுறவுக்கு சம்மதம் தெரிவிப்பதற்கான வயதை தற்போதுள்ள 18-லிருந்து 16-ஆக குறைப்பது என்று மத்திய அமைச்சர்கள் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டிருப்பதும், அதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதும் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
இந்தியாவில் ஒரு காலத்தில் 10 ஆக இருந்த பாலுறவு சம்மத வயது பல்வேறு கசப்பான நிகழ்வுகளுக்கு பின்னர் படிப்படியாக 18-ஆக உயர்த்தப்பட்டது. இந்த நிலையில், பாலியல் குற்றங்களில் இருந்து பெண்களை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் பாலுறவு சம்மத வயதை குறைக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பது ஏன்? என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.
மேலைநாடுகளில் பாலுறவு சம்மத வயது திருமண வயதை விட குறைவாக இருப்பது சாதாரணமான ஒன்றாகும். அது அவர்களின் கலாச்சாரத்துடன் சம்பந்தப்பட்ட ஒன்றாகும்.

ஆனால், இந்தியாவில் பெண்களின் திருமண வயது 18-ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கும் நிலையில், பாலுறவு சம்மத வயதை அதைவிட குறைவாக நிர்ணயிப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
அது நமது கலாச்சாரத்திற்கு சற்றும் ஒத்துவராத ஒன்றாகும். ஒட்டுமொத்த உலகமும் இந்தியக் கலாச்சாரத்தின் சிறப்புகளைக் கண்டு வியந்து, அதை பின்பற்ற தொடங்கியுள்ள நிலையில், மேலைநாட்டுக் கலாச்சாரத்தில் மயங்கி, பாலுறவு வயதைக் குறைப்பது என்பது விளக்கைப் பிடித்துக் கொண்டு கிணற்றில் விழுவதற்கு சமமானதாகும்.
குழந்தைத் திருமணம் தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், ‘‘ஹார்மோன் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஆண்களின் வலையில் எளிதாக விழுந்து விடுகின்றனர்.
21 வயதுக்குட்பட்ட சிறுமிகளால் தங்களின் வாழ்க்கைத்துணை தமக்கு ஏற்றவரா? என்பதை தீர்மானிக்க முடியாது என்பதால், திருமண வயதையே 21-ஆக உயர்த்த வேண்டும்’’ என நாடாளுமன்றத்திற்கு பரிந்துரைத்திருக்கும் நிலையில், பாலுறவு வயதை முன்பிருந்தபடி குறைக்க முயல்வது பிற்போக்குத் தனமான நடவடிக்கையாகும்.
பதின்வயதில் குழந்தைகளின் ஹார்மோன்களில் மாற்றம் ஏற்படும்; இதனால் அவர்கள் பல்வேறு பரிசோதனைகளை செய்ய முயலுவார்கள் என்பதால் அவர்களை அந்த வயதில் கவனமாக கையாள வேண்டும் என்று சட்டவல்லுனர்களும், மருத்துவ வல்லுனர்களும் எச்சரித்துள்ள நிலையில், இப்படி ஒரு முடிவை மத்திய அரசு எடுத்திருப்பது கலாச்சார தற்கொலைக்கு சமமானதாகும்.
எனவே, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் குற்றவியல் சட்டத் திருத்த மசோதாவில் பாலுறவு சம்மத வயது தொடர்பான பிரிவை நீக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி, கர்நாடக உயர்நீதிமன்றத்தின் அறிவுரையை ஆய்வு செய்து பெண்களின் திருமண வயதை 21-ஆக உயர்த்துவதற்கு தேவையான சட்டத்திருத்தங்களை செய்யவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

மாணவர்கள் போராட்டத்தை முடக்கினால் மக்கள் புரட்சி வெடிக்கும்! டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை

சென்னை: கல்லூரிகளை மூடி மாணவர்கள் போராட்டத்தை முடக்க முயன்றால் மக்கள் புரட்சி வெடிக்கும் என்று தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கும்படி அரசு மற்றும் தனியார் கல்லூரி நிர்வாகங்களுக்கு தமிழக அரசு வாய்மொழி உத்தரவை பிறப்பித்திருக்கிறது.
இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைகள் குறித்து பன்னாட்டு போர்க்குற்ற விசாரணை நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஐ.நா.மனித உரிமை ஆணையத்தில் இந்தியாவே தீர்மானம் கொண்டுவர வேண்டும் - தனித் தமிழீழம் அமைப்பது தொடர்பாக உலகம் முழுவதும் வாழும் ஈழத் தமிழர்களிடையே ஐ.நா. மூலம் பொதுவாக்கெடுப்பு நடத்த ஏற்பாடு செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் திங்கட்கிழமை வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தப்போவதாக மாணவர் அமைப்புகள் அறிவித்திருந்தன.
இந்த நிலையில், அவர்களின் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் தான் இந்த நடவடிக்கையை மாநில அரசு எடுத்திருக்கிறது.
கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா,‘‘இலங்கையில் இனப் படுகொலையை நிகழ்த்தி போர்க்குற்றம் புரிந்தவர்களை போர்க்குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்தியா வலியுறுத்த வேண்டும் - இலங்கை மீது இந்தியா பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்'' என்று வலியுறுத்தினார்.
இதே கோரிக்கையை வலியுறுத்திதான் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். முதலமைச்சரின் இந்த கோரிக்கையை வலியுறுத்தி போராடுவதற்காக, மாணவர்களுக்கு தமிழக அரசு ஆதரவு அளித்திருக்கவேண்டும்.
மாறாக கடந்த 10 நாட்களாக நடைபெற்றுவரும் மாணவர்களின் போராட்டத்தால் சிறு வன்முறையோ அல்லது பதற்றமோ ஏற்படாத நிலையில், அப்போராட்டத்தை ஒடுக்க நினைப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
இதன்மூலம் இலங்கைப் பிரச்சனையில் தமிழக முதலமைச்சர் மீது வைத்திருந்த சிறிதளவு நம்பிக்கையைக் கூட ஈழத்தமிழர்களும், தமிழ் உணர்வாளர்களும் இழந்துவிட்டனர்.
இலங்கை பிரச்சனையில், இனப்படுகொலையாளர்களை தண்டிக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காக மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்து, அவர்களின் போராட்டத்தை அனுமதிக்க வேண்டும். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக மக்கள் கொதித்தெழுந்துள்ள நிலையில், கல்லூரிகளை மூடுவதன் மூலம் மாணவர்கள் போராட்டத்தை ஒடுக்க நினைப்பது சீறிவரும் சுனாமியை செங்கற்களை காட்டி தடுக்க நினைப்பதற்கு சமமானதாகும். கல்லூரிகளை மூடுவதன் மூலம் மாணவர்களின் போராட்டத்தை முடக்க முடியாது; மாறாக இப்போராட்டம் மக்கள் புரட்சியாக வெடிக்கும் என்று தமிழக அரசை எச்சரிக்கிறேன் என்று ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

Thursday, March 7, 2013

இலங்கை போர் குற்றம் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் பசுமை தாயகம் அறிக்கை தாக்கல்:ராமதாஸ்

இலங்கையில் நடந்த போர் குற்றங்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் பசுமை தாயகம் அமைப்பு அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இலங்கையில் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்களை கொடூரமான முறையில் படுகொலை செய்த இலங்கை அதிபர் ராஜபக்சே மற்றும் அவனது கூட்டாளிகள் மீது போர்குற்ற விசாரணை நடத்த ஆணையிட வேண்டும் என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில், இலங்கைக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை நடத்தக் கோரும் தீர்மானத்தை அமெரிக்கா தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமெரிக்காவும் கடந்த ஆண்டு தாக்கல் செய்ததன் தொடர்ச்சியான நடைமுறை தீர்மானத்தையே தாக்கல் செய்யும் என்று தெரிகிறது.
இந்த நிலையில் ஐ.நா. அமைப்பால் அதிகாரப்பூர்வ ஆலோசனை அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ள பசுமைத்தாயகம் அறக்கட்டளை சார்பில், இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்தக்கோரும் அறிக்கை ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
என்னால் நிறுவப்பட்ட அமைப்பான பசுமைத்தாயகம், கடந்த 2009-ம் ஆண்டிலிருந்தே ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில், இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்களுக்கு எதிராக தொடர்ந்து போராடிவருகிறது. கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற இலங்கை அரசுக்கு எதிரான காலமுறை விசாரணையின் போது பசுமைத்தாயகத்தின் சார்பில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, பசுமைத் தாயகத்தின் செயலாளர் இர.அருள் ஆகியோர் பங்கேற்றனர்.
ஐ.நா.வின் அதிகாரப்பூர்வ ஆலோசனை அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ள பசுமைத் தாயகத்தின் பிரதிநிதிகளால் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் உரையாற்றவும், அறிக்கைத் தாக்கல் செய்யவும் முடியும். அதன்படி பசுமைத்தாயகம் தாக்கல் செய்துள்ள அறிக்கை மனித உரிமை ஆணையத்தின் அனைத்து உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் ஐ.நா. பொதுச்செயலாளரின் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
பசுமைத்தாயகத்தின் அறிக்கையில் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்தும், கடந்த ஆண்டு ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்குப் பிறகு இலங்கையில் நடைபெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் பட்டியலிடப்பட்டிருப்பதால் இலங்கைக்கு எதிரான தீர்மானம் மீது எத்தகைய நிலைப்பாட்டை எடுக்கலாம் என்பதிலும், போர்க்குற்ற விசாரணை நடத்துவதற்கான திருத்தத்தை கொண்டுவருவதிலும் மனித உரிமை ஆணைய உறுப்பு நாடுகளிடையே இந்த அறிக்கை தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
தமிழகத்தைச் சேர்ந்த தொண்டு நிறுவனமானபசுமை தாயகம் அதனால் முடிந்த அளவுக்கு இதை செய்துள்ளது. ஈழத்தமிழர் நலனில் அக்கறை உள்ளதாக காட்டிக்கொள்ளும் மத்திய அரசும் இதே போன்ற தீர்மானத்தைக் கொண்டுவரவேண்டும். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்

Monday, March 4, 2013

இனி யாரும் தீக்குளிக்க வேண்டாம் டாக்டர் ராமதாஸ்

சென்னை: இலங்கை பிரச்சினைக்காக இனி ஒருபோதும் யாரும் உயிரை மாய்த்துக் கொள்ளவேண்டாம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்,

இதுகுறித்து, இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடலூரை அடுத்த நல்லவாடு கிராமத்தைச் சேர்ந்த மணி என்ற தமிழ் உணர்வாளர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்திருக்கிறார்.

இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியே அவர் தீக்குளித்திருக்கிறார்.

தமிழ் உணர்வாளர் மணி தீக்குளித்த செய்தி கேட்டு நான் பேரதிர்ச்சியும், வேதனையும் துயரமும் அடைந்தேன். அப்பாவி தமிழர்களை படுகொலை செய்த சிங்களப்படையினருக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்பதற்காக உலகெங்கும் உள்ள தமிழர்கள் போராடிக்கொண்டிருக்கின்றனர். அத்தகைய போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வதில் ஆர்வம் காட்டுவதை விடுத்து, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது நமது நோக்கத்திற்கு எந்த வகையிலும் வலு சேர்க்காது.

எனவே, தமிழ் உணர்வாளர்கள் எவரும் இத்தகைய செயல்களில் ஈடுபடவேண்டாம் இவ்வாறு அந்த அறிக்கையில் டாக்டர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

Sunday, March 3, 2013

''அன்புமணியை முதல்வராக்குவோம்!: பார்லி. தேர்தலில் தனித்து போட்டியிட்டு 10 தொகுதிகளில் வெல்வோம்''



சேலம்: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிட்ட்டு 10 தொகுதிகளில் வெற்றி பெறுவதுதான் நமது இலக்கு. அடுத்து வருகிற சட்டமன்ற தேர்தலில் கோடி வன்னியர்களில் ஒருவரான டாக்டர் அன்புமணியை தமிழக முதல்வர் பதவிக்கு அனுப்பிட வேண்டும் என்று வன்னியர் சங்க மாநில தலைவர் காடுவெட்டி குரு கூறினார்.
வரும் ஏப்ரல் மாதம் 25ம் தேதி மாமல்லபுரத்தில் ‘சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா- மாநாடு‘ நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டில் சேலம் வடக்கு, தெற்கு, மேற்கு, வீரபாண்டி தொகுதிகளில் இருந்து வன்னியர் இளைஞர்கள் கலந்து கொள்வது குறித்த ஆலோசனை கூட்டம் சேலம் சிவதாபுரம் மாணிக்ககவுண்டர் திருமண மண்டபத்தில் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் காடுவெட்டி குரு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில்,
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய கட்சியுடனோ, திராவிட கட்சிகளுடனோ கூட்டணி அமைக்காமல் பாமக தனித்து போட்டியிடும் என்று டாக்டர் ராமதாஸ் ஐயா அறிவித்துள்ளார். தனித்து போட்டியிடுவதால் வன்னியர்களை ஒருங்கிணைக்கும் நோக்கில் பயணம் தொடரப்பட்டுள்ளது.
அன்புமணியை முதல்வராக்க வேண்டும்:
எனவே நாடாளுமன்றத் தேர்தலில் 10 தொகுதிகளில் வெற்றி பெறுவதுதான் நமது இலக்கு. அடுத்து வருகிற சட்டமன்ற தேர்தலில் கோடி வன்னியர்களில் ஒருவரான டாக்டர் அன்புமணியை தமிழக முதல் அமைச்சர் பதவிக்கு அனுப்பிட வேண்டும்.
வன்னியர் ஒருவர் முதல்வர் ஆனால்தான் நமது சமுதாயத்திற்கு பாதுகாப்பு கிடைக்கும். எனவே, யாரையும், எந்த சமுதாயத்தையும் நம்பாமல் வன்னியர்களை ஒருங்கிணைக்கும் பணியில் டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி மற்றும் என்னை போன்றவர்கள் ஈடுபட்டு வருகிறோம்.
இந்த வேளையில்தான் தர்மபுரி கலவர சம்பவம் நடந்து விட்டது. பாமக, விடுதலை சிறுத்தையுடன் ஒருங்கிணைந்து இருக்கும் வேளையில், தர்மபுரி சென்று வந்த திருமாவளவன் அங்கு நடந்த கலவர சம்பவத்திற்கு வன்னியர்களும், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்தான் காரணம் என்று முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் சொல்லிவிட்டார்.
அவரும் டாக்டர் ராமதாஸ்தான் காரணம் என்று அறிக்கை வெளியிட்டார். ஆனால், அங்கு உண்மையில் நடந்தது என்ன என்பது அனைவருக்கும் தெரியும். தர்மபுரி கலவரத்திற்கு பாமகவும் டாக்டர் ராமதாசும் பொறுப்பாக முடியாது. போலீசார் முறையான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றார் குரு.

தர்மபுரி ஜாதி கலவரத்துக்கும் எனக்கும் தொடர்பில்லை: ராமதாஸ்

புதுச்சேரி: தர்மபுரியில் நடந்த ஜாதி கலவரத்துக்கும் எனக்கும் தொடர்பில்லை என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

புதுச்சேரியில் அனைத்து சமுதாய பேரியக்கம் சார்பில் நடைபெற்ற கூட்டத்துக்கு பின் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி,

அனைத்து சமுதாய பேரியக்கம் சார்பில் தமிழகத்தில் 29 மாவட்டங்களில் கலந்தாய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. இந்த கூட்டங்களில் 2 முக்கியமான கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளோம். எஸ.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதில் சில திருத்தங்கள் வேண்டும். பல மாவட்டங்களில் இந்த சட்டம் தேவையில்லை என்றார்கள். ஆனால் நாங்கள் திருத்தங்கள்தான் கேட்கிறோம். இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும்.

சில சமுதாய தலைவர்கள் இளைஞர்களை காதல் செய்ய தூண்டுகிறார்கள். டீன் ஏஜ் என்பது காமவலையில் விழும் பருவம். அந்த நேரத்தில் மாணவிகள் பின்னால் சிலர் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து சுற்றுகிறார்கள். சில நாளில் பள்ளி, கல்லூரி சென்ற மாணவி வீட்டிற்கு வரமாட்டாள். அப்போது அந்த மாணவி ஓடிப்போய்விட்டாள் என்று தகவல் வரும். இந்த வலி அனுபவப்பட்ட குடும்பத்தினருக்கு நன்கு தெரியும்.

இதை இப்படியே விட்டால் வருங்காலத்தில் இன்னும் வலி அதிகரிக்கும். இந்த வேலையை நான் தொடங்கியதும் சிலர் இதை நீங்கள் 10 வருடத்துக்கு முன்பே செய்திருக்கலாம் என்றார்கள். தந்தை பெரியார் கூட பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்த வேண்டும் என்று கூறியுள்ளார். இளம் வயதில் திருமணம் செய்வதால் பெண்கள் துன்பப்படுகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

கர்நாடக ஐகோர்ட் நீதிபதிகள் பக்தவச்சலம், கோவிந்தராஜ் அடங்கிய பெஞ்ச் கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் 12ம் தேதி ஒரு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில் ஒரு பெண் 21 வயது ஆகும்போதுதான் மேஜர் ஆகிறாள் அதற்கு முன்பு இல்லை என்று கூறியுள்ளது. 21 வயதுக்குட்பட்ட சிறுமிகள் காதலிக்கும் ஆண் வாழ்க்கைக்கு ஏற்றவனா என்று தீர்மானிப்பது கிடையாது.

ஹார்மோன்கள் தூண்டுதலால் திருமணம் செய்துவிட்டு பாதிக்கப்படுகிறார்கள். எனவே சட்ட திருத்தம் செய்ய இதுவே சரியான தருணம் என்று கூறியுள்ளனர். 21 வயதுக்குட்பட்ட பெண்கள் காதலித்து திருமணம் செய்தால் பெற்றோர் ஒப்புதல் பெறவேண்டும். இல்லையேல் அத்தகைய திருமணம் செல்லாது, அல்லது ரத்து செய்யலாம் என்றும் இந்த தீர்ப்பினை நாடாளுமன்றச் செயலாளருக்கும் அனுப்பிவைக்க கூறியுள்ளனர்.

நாங்கள் ஒன்றும் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான கூட்டம் அல்ல. அவர்களுக்கு வழிகாட்டுவதாக கூறி சில தலைவர்கள் தவறான வழிக்கு அழைத்து செல்கின்றனர். அந்த இளைஞர்களை நன்கு படிக்க சொல்லுங்கள். வாழ்க்கையில் முன்னேற்றுங்கள். இதுபோன்ற சமூக பிரச்சனைகளில் ஈடுபடவேண்டாம். பிறர் மீது வன்கொடுமை தடுப்பு பிரிவில் வழக்குபோட்டு அலைக்கழிக்க வேண்டாம்.

எங்களது ஏப்ரல் மாத ஆர்ப்பட்டத்துக்குப்பின் மத்திய மாநில அரசுகள் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம். எங்கள் கோரிக்கையை விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட 32 அமைப்புகளை தவிர 81 சதவீத மக்கள் ஆதரிக்கிறார்கள்.

இவர்களின் வேலை எல்லாம் கட்டப்பஞ்சாயத்து, ரவுடித்தனம்தான். இதில் எங்களுக்கு எந்தவித அரசியல் நோக்கமும் கிடையாது. எங்களின் இந்த இயக்கத்துக்கு பக்கபலமாக அரசியல் கட்சிகள் உள்ளன. அவர்களில் சிலர் எங்களின் கூட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்துள்ளனர். 81 சதவீத மக்கள் ஒட்டுமொத்தமாக கூறும்போது, அவர்கள் எங்கள் வழிக்கு வந்தே ஆக வேண்டும்.

வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு கொடுக்கும் கூட்டத்தை கண்டு காவல்துறையே பயப்படுகிறது. வட மாநிலங்களில் விடுதலை சிறுத்தைகள் இல்லாததால் அங்கு சாதிக் கலவரங்கள் இல்லை என்றார் ராமதாஸ்.

கேள்வி: இது போன்ற சாதிக் கூட்டங்களில் நீங்கள் வைக்கும் கோரிக்கைகளை எந்த அரசியல் கட்சியும் ஆதரிக்கவில்லையே?

ராமதாஸ்: பெரும்பாலான அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் இதை ஆதரிக்கின்றனர். ஆனால் எங்கள் கட்சியில் இதை பேச முடியாது. நீங்கள் பேசுங்கள் என்று எங்களை முன்னுக்கு தள்ளுவது அவர்கள்தான்.

கேள்வி: தருமபுரியில் ஜாதி கலவரம் நடைபெற்ற பகுதியில் போடப்பட்டுள்ள 144 தடை உத்தரவு உங்களை மையப்படுத்தியா?

ராமதாஸ்: 144 தடை உத்தரவு போடப்பட்டால் நான் மட்டும் அல்ல, வேறு எந்த தலைவரும் அப்பகுதிக்கு செல்ல முடியாது. தர்மபுரியில் நடைபெற்ற கலவரத்துக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார்.

Friday, March 1, 2013

ஏழை மக்களின் துயரங்களைக் களைவதில் அக்கறையில்லை என்பதை மத்திய அரசு நிரூபித்திருக்கிறது: ராமதாஸ்

பெட்ரோல் விலை உயர்வுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக 01.03.2013 வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.50 உயர்த்தியிருப்பதன் மூலம் ஏழை மக்களின் துயரங்களைக் களைவதில் தங்களுக்கு எந்த அக்கறையுமில்லை என்பதை மத்திய அரசு மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது.
கடந்த பிப்ரவரி 16-ம் தேதிதான் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.1.50, டீசல் விலை 50 காசுகளும் உயர்த்தப்பட்டன.
அடுத்த 12 நாள்களிலேயே மீண்டும் விலை உயர்த்தியிருப்பது எந்த நீதிக்கும் பொருந்தாத ஒன்றாகும். இது மக்களுக்கு எதிராக மத்திய அரசு செய்துள்ள மனிதநேயமற்ற பொருளாதார குற்றமாகும்.
2009 ஆண்டில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சிப் பொறுப்பேற்றபோது ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 44.24 ஆக இருந்தது. கடந்த மூன்றரை ஆண்டுகளில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ.30 அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தியா வாங்கும் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் 113.86 டாலரிலிருந்து 109.74 டாலராக குறைந்திருப்பதாக பெட்ரோலியத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால் எண்ணெய் நிறுவனங்களோ கச்சா எண்ணெயின் விலை 128 டாலரிலிருந்து 131 டாலராக உயர்ந்திருப்பதாகக் கூறியிருக்கிறது.
இதைப் பார்க்கும்போது எண்ணெய் நிறுவனங்கள் தங்களின் லாபத்துக்காக பொய்யான புள்ளி விவரங்களை அளிக்கின்றனவோ என்று எண்ணத் தோன்றுகிறது.
எனவே, பெட்ரோல் விலை உயர்வை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும்.
மேலும் பெட்ரோல் விலை நிர்ணயக் கொள்கையில் மாற்றம் செய்வதுடன், விலை நிர்ணயம் செய்யும் பொறுப்பை எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து பறித்து, மத்திய அரசே வைத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: