பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருப்பதாலும், வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதாலும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மாநிலம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. தென் தமிழகத்திலும், காவிரி பாசன மாவட்டங்களிலும் இடைவிடாமல் பெய்துவரும் மழையால் பெருஞ்சேதம் ஏற்பட்டிருப்பதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் குறுவை நடவு மிகவும் தாமதமாகவே தொடங்கியது. இதனால் செப்டம்பர் மாத இறுதிக்குள்ளாக முடிவடைந்திருக்க வேண்டிய அறுவடை தாமதம் ஆன நிலையில், இப்போது பெய்த மழையில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் அழிந்து விட்டன. நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்களும் மழை நீரில் மூழ்கி சேதமடைந்து விட்டன. இதேபோல், திருநெல்வேலி, தூத்துக்குடி, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் பல லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் மழை, வெள்ளத்தால் நாசமடைந்திருக்கின்றன.கடந்த ஆண்டில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், நடப்பாண்டில் மழையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
பயிர்களுக்கு மட்டுமின்றி, வீடுகள், உட்கட்டமைப்பு வசதிகளும் மழையால் சேதமடைந்திருக்கின்றன. திருநெல்வேலி மாவட்டம் ஊத்துமடை, வீரவநல்லூர் ஆகிய இடங்களில் தூர்வாரப்படாத ஏரி, குளங்கள் உடைந்ததால் பல ஊர்களுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பொது இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சென்னை உட்பட தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் ஒரு சில நாட்கள் பெய்த மழையையே தாக்குப்பிடிக்க முடியாமல் சாலைகள் பல்லாங்குழிகளைப் போல மாறிவிட்டன. சென்னையின் பல பகுதிகளில் ஒரு மாதத்திற்கு முன்பு போடப்பட்ட சாலைகள் கூட இந்த மழையில் காணாமல் போய்விட்டன. சேதமடைந்த சாலைகளில் மழை நீர் தேங்கி நிற்கும் நிலையில் அதில் தடுமாறி விழுந்து 500&க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இரு சக்கர ஊர்திகள் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் பழுதடைந்து விட்டன.
மழையால் இவ்வளவு பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும் போதிலும் இவற்றையெல்லாம் தமிழக அரசு கண்டு கொண்டதாக தெரியவில்லை. திண்டுக்கல் மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டத்திலும் வெள்ளத்தில் சிக்கித் தவித்த சிலரை மீட்டதைத் தவிர அரசின் சார்பில் இன்று வரை எந்த வகையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து நெடுஞ்சாலைத்துறை மற்றும் வருவாய்த்துறை அமைச்சர்கள் தங்களின் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தி 5 நாட்களாகியும் குறிப்பிடும்படியாக எந்தவிதமான சீரமைப்பு பணிகளும் நடைபெறவில்லை. சென்னையில் தொடர்மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை மாநகராட்சி நிர்வாகம் இன்று வரை கண்டுகொள்ளவில்லை. மழை தொடங்கி ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையில் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைப்பதற்கான அதிகாரிகளையே மாநகராட்சி நிர்வாகம் இப்போது தான் நியமித்திருக்கிறது.
ஊழல் குற்றவாளி ஜெயலலிதாவின் வழியில் செயல்படுவதாகக் கூறிக்கொள்ளும் முதலமைச்சரும், அமைச்சர்களும் மழை நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்குக் கூட அவரது அனுமதியை வேண்டி காத்திருக்கிறார்களா? என்று தெரியவில்லை. இனி வரும் நாட்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. எனவே, தமிழக அரசு இனியாவது விழித்துக் கொண்டு சேதமடைந்த சாலைகளை சீரமைத்தல், தாழ்வானப் பகுதிகளிலிருந்து வெள்ளநீரை அகற்றுதல், மழை காரணமாக நோய்கள் பரவாமல் தடுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை போர்க்கால வேகத்தில் அரசு மேற்கொள்ள வேண்டும். மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும். வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிளிலும் இதேபோன்ற நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்கும், உழவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் புதுவை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment