Wednesday, October 22, 2014

போலி பதிவுத் திருமணங்களைத் தடுக்க கடுமையான சட்டம் தேவை! ராமதாசு அறிக்கை!


பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

சென்னையில் உள்ள இரு சார்பதிவாளர் அலுவலகங்களில் மட்டும் கடந்த 2013&ஆம் ஆண்டில்  விதிகளுக்கு முரணான முறைகளில் செய்யப்பட்ட திருமணங்களின் எண்ணிக்கை குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. ஓராண்டில் மட்டும் 3500&க்கும் மேற்பட்ட திருமணங்கள் இவ்வாறு பதிவு செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த ஒருவர் தாம் காதல் மணம் செய்து கொண்ட மனைவி அவரின் பெற்றோரது சட்டவிரோதக் காவலில் அடைத்து வைக்கப் பட்டிருப்பதாகவும், அவரை மீட்டுத்தர வேண்டும் என்றும் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இன்னொருவரும் அதேபோன்ற மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இதில் சம்பந்தப்பட்ட பெண்களை நீதிமன்றத்திற்கு அழைத்து விசாரித்த போது, தங்களின் கணவர் என்று கூறிக்கொள்பவரை தெரியும்; ஆனால் அவரைத் திருமணம் செய்துகொள்ளவில்லை என்றும் போலியாக திருமணப் பதிவுச் சான்றிதழ் பெறப்பட்டிருக்கிறது என்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து போலிப்பதிவுத் திருமண மோசடி குறித்து உயர்நீதிமன்ற கண்காணிப்பில் தமிழக காவல்துறையின் குற்றப்புலனாய்வுப் பிரிவு (சி.பி.சி.சி.டி) நடத்திய விசாரணையில் தான் வடசென்னை, இராயபுரம் ஆகிய பதிவாளர் அலுவலகங்களில் நடந்துள்ள இந்த மோசடி அம்பலத்திற்கு வந்திருக்கிறது.

வடசென்னை சார்பதிவாளர் அலுவலகத்தில் 1559 திருமணங்களும், இராயபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் 1937 திருமணங்களும் விதிகளுக்கு முரணாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலான திருமணங்கள் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் தான் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் ஏராளமான திருமணங்கள் மணமகள் இல்லாமலேயே பதிவு செய்யப்பட்டிருப்பதாக விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இத்தகைய திருமணங்களை குறிப்பிட்ட சில வழக்குரைஞர்கள் தான் செய்து வைத்திருப்பதாகவும், அவர்களது இந்த சட்டவிரோத செயலுக்கு சார் பதிவாளர்கள் துணை போயிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள நீதிபதிகள், வழக்கறிஞர்களால் அவர்களின் அறைகளில் சட்டவிரோதமாக செய்து வைக்கப்பட்ட திருமணங்கள் செல்லாது என்றும் தீர்ப்பளித்திருக்கின்றனர்.

உயர்நீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பு வரவேற்கப்பட வேண்டிய ஒன்று என்ற போதிலும், இத்தகைய போலிப் பதிவுத் திருமணங்கள் சமூகத்தில், குறிப்பாக இளம்பெண்களின் வாழ்க்கையில், மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை சமூகநலனில் அக்கறையுள்ளவர்கள் கருத்தில் கொள்ளவேண்டும். ஒரு பெண்ணின் சம்மதம் இல்லாமல், அப்பெண் சார்பதிவாளர் அலுவலகத்திற்கே வராமல், அவரை ஒருவர் திருமணம் செய்து கொண்டதாக பதிவுத் திருமணச் சான்றிதழை தயாரிக்க முடியும் என்றால், தமிழகத்தில் உள்ள எந்த இளம் பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லை என்று தான் கருத வேண்டும்.

சில ஆண்டுகளுக்கு முன் கடலூர் மாவட்டத்தில் சமூக விரோத கும்பலுக்கு ஆதரவாகச் செயல்படும் வழக்கறிஞர் ஒருவர், பதிவுத்துறையில் பணியாற்றும் தமது மனைவியின் உதவியுடன் 2000-க்கும் மேற்பட்ட காதல் நாடகத் திருமணங்களை பதிவு செய்து, பெண்ணின் பெற்றோரிடம் பணம் பறிக்க உதவினார். இதற்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய தொடர் போராட்டங்களுக்குப் பிறகே சமூக விரோத கும்பல்கள் நடத்திய காதல் நாடகத் திருமணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அதேபோன்ற திருமணங்கள் சென்னையில் வேறு வடிவில் அரங்கேற்றப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. 

இவ்வாறு செய்யப்பட்ட திருமணங்களில் பெரும்பாலானாவை பணம் பறிக்கும் நோக்கத்துடன் பதிவு செய்யப்பட்ட காதல் நாடகத் திருமணங்களாகத் தான் இருக்க வேண்டும். உயர்நீதிமன்றத்திற்கு அழைத்து விசாரிக்கப்பட்ட இரு பெண்கள், தாங்கள் யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை  என்றும், தங்களுக்கு அறிமுகமான இளைஞர்கள் தங்களைத் திருமணம் செய்துகொண்டதாக போலிப் பதிவு சான்றைத் தயாரித்து தங்களின் பெற்றோருக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து மிரட்டுவதாகவும் கூறியுள்ளனர். அவர்களில் ஒரு பெண் தங்கள் வீட்டிற்கு வேலை செய்ய வந்த ஒருவர், தம்மை திருமணம் செய்து கொண்டது போல ஆவணம் தயாரித்து மிரட்டுவதாக நீதிபதிகளிடம் முறையீடு செய்திருக்கிறார். பெண்களைக் கவர்ந்து, காதல் நாடகத் திருமணங்களை அரங்கேற்றி சம்பந்தப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரிடம் லட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும் பணம் பறிக்கும் செயல்களில்  ஒரு கும்பல் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இப்போது போலி பதிவுச் சான்றிதழ்களைத் தயாரித்து, அப்பாவி பெண்களை தங்களின் மனைவி என்று உரிமை கோரி சிலர் மிரட்டுவதன் நோக்கமும் பணம் பறிப்பதாகவே இருக்கும் என்று பெற்றோரிடையே எழுந்துள்ள அச்சத்தை ஒதுக்கிவிட முடியாது.

வடசென்னை, இராயபுரம் சார்பதிவாளர் அலுவலகங்களில் சில வழக்கறிஞர்களின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட போலிப் பதிவு திருமணச் சான்றுகளில் எத்தனை அப்பாவிப் பெண்களின் பெயர்கள் அவர்களுக்கு தெரியாமலேயே சேர்க்கப்பட்டிருக்கிறது என்பது தெரியவில்லை. எந்தத் தவறும் செய்யாத அவர்கள் பெற்றோர் சம்மதத்துடன் முறைப்படி திருமணம் செய்து கொண்டு சென்ற பின், அவர்கள் வேறு யாரையோ திருமணம் செய்ததாக போலியாகத் தயாரிக்கப்பட்ட பதிவுத் திருமணச் சான்றிதழ் வெளியானால், அப்பெண்களின் வாழ்க்கை என்னவாகும்? என்பதை நினைக்கவே அச்சமாக உள்ளது.

சென்னையில் இரு சார்பதிவாளர் அலுவலகங்களில் மட்டும் ஒரே ஆண்டில் 3500க்கும் மேற்பட்ட திருமணங்கள் போலியாக பதிவு செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் இதேபோல் எத்தனை திருமணங்கள் செய்யப்பட்டுள்ளன? எத்தனை அப்பாவிப் பெண்களின்  வாழ்க்கைக் கேள்விக்குறியாகியிருக்கிறது? என்பது தெரியவில்லை. இது குறித்து விரிவான விசாரணை நடத்தி போலிப்பதிவு திருமணங்களின் பின்னணியில் இருப்பவர்கள், அவர்களுக்கு துணை போன பதிவுத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரையும் கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய போலிப் பதிவுத் திருமணங்களால் அப்பாவி பெண்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இனி, இத்தகைய போலிப் பதிவுத் திருமணங்கள் நடக்காமல் தடுக்கத் தேவையான சட்டத்திருத்தங்களைச் செய்ய மத்திய, மாநில அரசுகள் முன்வர  வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார். 

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: