பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:
’’பருவக்கோளாறு காரணமாக ஏற்படும் காதலால் பெண்களின் வாழ்க்கை பாதிக்கப்படுவ தைத் தடுக்க அவர்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த வேண்டும் என உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை யோசனை தெரிவித்திருக்கிறது. நடைமுறை யதார்த்தங்களை உணர்ந்து, பெண்களின் நலனில் அக்கறை கொண்டு உயர்நீதிமன்றம் அளித்துள்ள இப்பரிந்துரை வரவேற்கத்தக்கது; பாராட்டத்தக்கது.
காதல் என்பது ஒரு காலத்தில் புனிதமானதாக இருந்த நிலை மாறி, இப்போது பொழுதுபோக்கான ஒன்றாகிவிட்டது.
பெண் வீட்டாரை மிரட்டி பணம் பறிக்கும் நோக்குடன் காதல் நாடகத் திருமணங்கள் நடத்தப்படுவது அண்மைக்காலங்களில் அதிகரித்து விட்டது. இதைத் தடுக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன், பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த வேண்டும் என்று நீண்டநாட்களாக வலியுறுத்தி வருகிறேன். தருமபுரியில் திட்டமிட்டு நடத்தப்பட்ட காதல் நாடகத் திருமணம் மற்றும் அதைத் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தோராலும், அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகளாலும் இழைக்கப்பட்ட அவமானத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அப்பாவி தந்தை ஒருவர் உயிரிழக்க நேரிட்டது. இதையடுத்து இத்தகைய நாடகக் காதல் திருமணங்களைத் தடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கேட்டுக் கொண்டதையடுத்து, எனது தலைமையில் உருவாக்கப்பட்ட அனைத்து சமுதாய பேரியக்கத்தின் முதல் கூட்டத்திலேயே பெண்களின் திருமண வயதை 18&லிருந்து 21 ஆக உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தக் கோரிக்கையை பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் தான் , பொறியியல் கல்லூரி மாணவி ஒருவர் கடத்தி திருமணம் செய்யப்பட்டது குறித்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றம் இப்படி ஒரு பரிந்துரையை அளித்திருக்கிறது. காதல் நாடகத் திருமணங்கள ாலும், கடத்தல் திருமணங்களாலும் பாதிக்கப்பட்ட பெண்களும், அவர்களின் பெற்றோரும் அனுபவித்துவரும் வேதனைகளையும், மன உளைச்சலையும் உள்வாங்கி நீதிபதிகள் அளித்துள்ள பரிந்துரையும், தெரிவித்த கருத்துக்களும் பாதிக்கப்பட்ட பெற்றோரின் மனக்காயங்களை ஆற்றும் மாமருந்தாக அமைந்துள்ளன.
‘‘ பல பெண்கள் பருவக்கோளாறால் காதல் வயப்பட்டு 18 வயதில் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செ ய்து கொள்கின்றனர். திருமணம் என்பது மிகவும் புனிதமானது. பெண் குழந்தைகளை பாசத்துடன் வளர்த்து, கடன் வாங்கி படிக்க வைப்பதுடன் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றும் பெற்றோர் நிச்சயமாக தங்களின் பிள்ளைகளுக்கு நல்ல துணையைத் தேடித் தருவார்கள். ஆனால், பெற்றோரை மீறி காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொள்ளும் பெண்கள் கணவனால் கைவிடப்பட்டு திரும்பும்போது, அவர்களை பாதுகாக்கும் கடமை முழுவதும் பெற்றோரின் தலையில் தான் விழுகிறது.
இன்றைய சூழலில் திரைப்படங்களும், மற்ற ஊடகங்களும் பெண் குழந்தைகளிடையே காதலை விதைக்கின்றன.அறிவியல் வளர்ச்சி காரணமாக பெருகிவரும் இணையதளம், செல்பேசி ஆகியவற்றின் மூலம் காதல் எளிதாகிறது. இப்படியெல்லாம் காதலிக்கும் பெண்களின் திருமணம் தோல்வியடையும் போது அவர்கள் படும் வேதனைகளை வார்த்தைகளால் வரையறுக்க முடியாது.
பெண்கள் ஓட்டுனர் உரிமம் வாங்குவதற்கும், வாக்குரிமை பெறுவதற்கும் வேண்டுமானால் 18 வயது சரியானதாக இருக்கும். ஆனால், காதலித்து மணம் புரிவதற்கான பக்குவமும், உளவியல் முதிர்ச்சியும் 18 வயதில் நிச்சயமாக கிடைக்காது. எனவே, பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்துவது குறித்து அரசு ஆராய வேண்டும்’’ என்று நீதிபதிகள் மணிக்குமார், ரவி ஆகியோர் அடங்கிய அமர்வு பரிந்துரைத்துள்ளது.
காதல் நாடகத் திருமணங்களால் ஏற்படும் பாதிப்புகளையும், அதைத் தடுப்பதற்கான வழிகளையும் இதைவிட சிறப்பாகவும், பொறுப்பாகவும் எவராலும் கூற முடியாது. மெத்தப்படித்தவர்களுக்கே சரியான வேலை கிடைக்காத நிலையில், 21 வயதுக்கு முன்பாக காதல் திருமணம் செய்து கொள்பவர்கள் எத்தகைய இன்னல்களை எதிர்கொள்வார்கள் என்பதை சொல்லித் தெரியவில்லை என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். இதே கருத்தைத் தான் அனைத்து சமுதாய பேரியக்கத்தின் ஆலோசனைக் கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில்,‘‘ பள்ளி&கல்லூரி மாணவிகளின் படிப்பைக் கெடுக்காமல், காதல் நாடகம், கட்டப்பஞ்சாயத்து, பணப்பறிப்பு இல்லாமல், சாதி ஒழிப்பு எனும் போலிவேடம் பூணாமல் கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் வருமானத்திற்கு முன்னுரிமை அளித்து 21 வயதுக்கு மேல் நடக்கும் காதல் திருமணங்களை நாங்கள் எதிர்க்கவில்லை’’ என்று குறிப்பிட்டிருந்தோம்.
இந்தக் கருத்துக்களை உயர்நீதிமன்றமும் தெரிவித்திருப்பதை எங்கள் நிலைப்பாட்டுக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கிறேன்.
காதல் திருமணம் தொடர்பான வழக்குகளில், பெண்கள் அவர்களாகவே முன்வந்து காதலனை திருமணம் செய்து கொண்டிருந்தாலும், பெண்ணின் பெற்றோர் புகார் அளிக்கும்பட்சத்தில், அவரை நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி உரிய ஆணையை பெற வேண்டும் என்று நீதிபதிகள் பிறப்பித்துள்ள ஆணை உள்நோக்கத்துடன் செய்யப்படும் நாடகக்காதல் திருமணங்களை தடுக்க நிச்சயமாக உதவும்.
மொத்ததில், திருமண வயது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றம் அளித்துள்ள பரிந்துரை வரலாற்று சிறப்பு மிக்கதாகும். இந்த பரிந்துரைகள் பெண் குழந்தைகளை பெற்றவர்கள் அனைவரின் வயிற்றிலும் பால் வார்க்கும்.
இப்பரிந்துரையை அனைத்துத் தரப்பினரும் வரவேற்பார்கள். பெண்களின் திருமண வயது தொடர்பாக 12.05. 2011 அன்று கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பிலும் இதே கருத்து தான் வலியுறுத்தப்பட்டிருந்தது. எனவே, திருமண வயது தொடர்பான உயர்நீதிமன்றத்தின் பரிந்துரைகள் அனைத்தையும் உடனடியாக சட்டமாக்கி செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.’’
No comments:
Post a Comment