பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக் குறைந்திருப்பதையடுத்து டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.65 குறைக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில் இனிவரும் காலங்களில் டீசல் விலையை விருப்பம் போல நிர்ணயித்துக் கொள்ளும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்திருப்பது வருத்தமளிக்கிறது.
மத்தியில் எந்தக் கட்சியின் ஆட்சி நடந்தாலும் எரிபொருள் மானியத்தை முழுமையாக ஒழித்துவிட வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக இருக்கிறது. ஏற்கனவே பெட்ரோல் மீதான விலைக் கட்டுப்பாட்டை நீக்கியதன் மூலம் அதற்கு அளிக்கப்பட்டு வந்த மானியத்தை முந்தைய காங்கிரஸ் அரசு ரத்து செய்தது. தொடர்ந்து டீசல் மானியத்தையும் ஒழிக்க மத்திய அரசு திட்டமிட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், 2009 ஆம் ஆண்டு ஜனவரியில் தொடங்கி இரு மாதங்களுக்கு முன்பு வரை மொத்தம் 31 முறை ரூ. 30.10 அளவுக்கு டீசல் விலை உயர்த்தப்பட்டது. இதனாலும், கடந்த சில மாதங்களாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்ததாலும் டீசல் விற்பனையில் ஏற்பட்ட இழப்பு நீங்கி லாபம் கொட்டத் தொடங்கியது. அதன்பயனாகத் தான் டீசல் விலையை 70 மாதங்களில் முதன்முறையாக மத்திய அரசு குறைத்துள்ளது.
அதேவேளையில், டீசலுக்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தையும் மத்திய அரசு படிப்படியாக குறைத்து விட்டது. 2011ஆம் ஆண்டு மே மாதத்தில் ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.18 மானியம் வழங்கப்பட்டுவந்தது. இந்த மானியம் இப்போது முழுமையாக ரத்து செய்யப்பட்டு விட்டது. இனியும் டீசலுக்கு மானியம் வழங்கக்கூடாது என்று நினைத்ததால் தான் டீசல் மீதான விலைக்கட்டுப்பாட்டை தளர்த்திய மத்திய அரசு, விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களிடமே ஒப்படைத்திருக்கிறது. இதன்மூலம் டீசல் விலையை கட்டுக்குள் வைத்திருப்பதற்கான பொறுப்பை தட்டிக் கழித்திருக்கிறது. டீசல் விலை உச்சத்தில் இருக்கும்போது விலைக் கட்டுப்பாட்டைத் தளர்த்தினால் மக்கள் மத்தியில் எதிர்ப்பு எழும் என்பதால், சரியான நேரத்திற்கு காத்திருந்து உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ள நேரத்தில் இத்தகைய நடவடிக்கையை மத்திய அரசு எடுத்திருக்கிறது. இது புத்திசாலித்தனமான முடிவாக இருக்கலாம்; ஆனால், நிச்சயமாக மக்கள் நலனுக்கு உகந்த முடிவல்ல.
டீசல் மீதான விலைக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டதால் உடனடியாக பாதிப்பு ஏற்படாமல் போகலாம். ஆனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்கும் பட்சத்தில் அதனால் ஏற்படும் பாதிப்புகள் மிகவும் அதிகமாக இருக்கும். உதாரணமாக 2008 ஆம் ஆண்டில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மிக அதிகபட்சமாக ஒரு பீப்பாய் 147 டாலர் என்ற அளவை எட்டியது. இப்போது மீண்டும் கச்சா எண்ணெய் விலை அந்த அளவுக்கு உயர்ந்தால், இந்தியாவில் டீசல் விலை லிட்டருக்கு ரூ.26 வரை அதிகரிக்கும். அவ்வாறு உயர்ந்தால் பாசனத் தேவைக்காக டீசலை நம்பியிருக்கும் விவசாயிகளும், விசைப்படகுகளுக்காக டீசலை நம்பியுள்ள மீனவர்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் விண்ணைத் தொடும் அளவுக்கு அதிகரிக்கும். இது ஏழை மற்றும் நடுத்தர மக்களை மிக மோசமாக பாதிக்கும்.
எனவே, டீசல் விலையை சந்தை நிலவரத்திற்கு ஏற்றவகையில் உயர்த்திக் கொள்வதற்கு எண்ணெய் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இந்த அதிகாரத்தை மத்திய அரசு அதன் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்க வேண்டும். உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும், மக்கள் நலன் கருதி உள்நாட்டில் டீசல் விலையை உயர்த்தாமல் தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment