பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அரசியல் கட்சிகளுக்கு இடையே கூட்டணி பேச்சு வார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது. புதுவை பாராளுமன்ற தேர்தலை பொருத்தவரையில் பா.ம.க. போட்டியிடும் என்று டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார். அதன்படி புதுவை தொகுதி வேட்பாளராக பா.ம.க. மாநில செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான அனந்தராமன் அறிவிக்கப்பட்டார். தற்போது அவர் வாக்குசேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுவை முதலமைச்சர் ரங்கசாமியை, முன்னாள் மத்திய மந்திரி அன்புமணி ராமதாஸ் சந்தித்து பா.ம.க.வுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதாவுடன் கூட்டணியில் சேரும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் புதுவை 100 சாலையில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் நேற்று இரவு 10.30 மணிக்கு முன்னாள் மத்திய மந்திரியும், தமிழக இளைஞர் அணி தலைவருமான அன்புமணி ராமதாசும், முதலமைச்சர் ரங்கசாமியும் சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடம் நீடித்தது. பின்னர் அவர்கள் இருவரும் ஒன்றாக அறையை விட்டு வெளியே வந்தனர். அதன்பிறகு அவர்கள் தனித்தனி காரில் சென்றுவிட்டனர்.
இந்த சந்திப்பின் போது அவர்கள் இருவரும் என்ன பேசினார்கள் என்பது தெரியவில்லை. பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து அவர்கள் பேசி இருக்கலாம் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் அவர்களின் இந்த திடீர் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சந்திப்பின் போது புதுவை மாநில பா.ம.க. செயலாளர் அனந்தராமன் மற்றும் பா.ம.க. நிர்வாகிகள் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment