Thursday, March 20, 2014

தமிழக மீனவர்களைக் காப்பதில் மத்திய, மாநில அரசுகள் தோல்வி: ராமதாஸ் கண்டனம்

 
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வங்கக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை, தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 50 பேரை நேற்று மாலை சிங்களக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் நிகழ்ந்த  சில மணி நேரத்தில் இராமேஸ்வரம் மீனவர்கள் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீனவர்கள் கைது தொடர்பான இரு நிகழ்வுகளுமே இந்திய கடல் எல்லைக்குட்பட்ட பகுதியில் தான் நடைபெற்றுள்ளன. இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களை சட்டவிரோதமாக சிறை பிடித்துச் சென்றதுடன் அவர்களுக்கு சொந்தமான 18 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
வங்கக்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்குடன் தமிழ்நாடு மற்றும் இலங்கை மீனவர் சங்கங்களுக்கு இடையிலான பேச்சுக்களை இருநாட்டு அரசுகளும் ஏற்பாடு செய்துள்ளன. கடந்த ஜனவரி மாத இறுதியில் முதல் கட்ட பேச்சுக்கள் நடத்தப்பட்ட நிலையில்,  அடுத்த சில நாட்களிலேயே 172 தமிழக மீனவர்கள் இலங்கைப் படையினரினரால் கைது செய்யப்பட்டனர்.
2ஆம் கட்ட பேச்சுக்கள் கடந்த 13 ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில், அதற்கும் முன்பாக தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை  ஏற்க மறுத்துவிட்டது. மீனவர்களை விடுவிக்காத நிலையில் அந்நாட்டு மீனவர்களுடன் பேச்சு நடத்த முடியாது என தமிழக அரசு எச்சரித்தது. இதற்கு பயந்து 172 மீனவர்களை கடந்த வாரம் விடுதலை செய்த இலங்கை அரசு, அடுத்த சில நாட்களிலேயே வேறு 75 மீனவர்களை இந்திய கடல் எல்லைக்குள் புகுந்து கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.
முதல்கட்ட பேச்சுக்கள் முடிவடைந்ததற்கு அடுத்த நாளே ஏராளமான மீனவர்களை கைது செய்வதும்,  இரண்டாம் கட்ட பேச்சுக்களுக்கு முன்பாக இந்தியாவின் எச்சரிக்கைக்கு பணிந்து மீனவர்களை ஒருபுறம் விடுதலை செய்வதை போல செய்துவிட்டு, இன்னொரு புறம் கொத்துக்கொத்தாக மீனவர்களை கைது செய்வதும் எதேச்சையாக நடப்பதைப் போல தெரியவில்லை. மாறாக, இந்தியாவை  சீண்டிப் பார்க்கும் நடவடிக்கையாக இலங்கைக் கடற்படையினரின் இத்தகைய செயல்பாடுகள் தோன்றுகின்றன.
கடந்த ஓராண்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களை சிங்களக் கடற்படை கைது செய்துள்ளது. ஆனால், இதற்காக இலங்கை மீது நடவடிக்கை எடுக்காதது மட்டுமல்ல, இந்த அத்துமீறலை கண்டிக்கக் கூட இந்திய அரசு முன்வரவில்லை. தமிழ்நாட்டு மீனவர்களை என்ன செய்தாலும் இந்திய அரசு கேட்காது என்ற துணிச்சலில் தான் இலங்கை கடற்படை இதுபோன்ற அத்துமீறல்களில் ஈடுபடுகிறது.

தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க தமிழக அரசும் எந்தவிதமான நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. மீனவர்கள் கைது செய்யப்படும் போதெல்லாம் பிரதமருக்கு கடிதம் எழுதுவதுடன் தமது கடமை முடிந்துவிட்டதாக முதல்வர் ஜெயலலிதா நினைத்துக் கொள்கிறார்.
கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு பாதுகாப்பாக தமிழக காவல்துறையின் கடலோர பாதுகாப்புப் பிரிவு காவலர்களை அனுப்பலாம் என பலமுறை நான் ஆலோசனை கூறியும், அதை செயல்படுத்த தமிழக அரசுக்கு துணிச்சல் வரவில்லை. தமிழக மீனவர்களை அத்துமீறி கைது செய்ததற்காக சிங்களக் கடற்படையினர் மீது இராமேஸ்வரம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதன்மீது நடவடிக்கை எடுத்திருந்தாலாவது இலங்கை அரசு பயந்திருக்கும். ஆனால், தமிழக அரசு அதையும் செய்ய முன்வராததால் தான் தமிழக மீனவர்களை சிங்களப்படை தொடர்ந்து சிறைப்பிடித்து வருகிறது.
எனவே, இனியாவது மத்திய, மாநில அரசுகள் விழித்துக் கொண்டு தமிழக மீனவர்களை பாதுகாக்க முன்வர வேண்டும். இலங்கை அரசிடம் பேசி, இப்போது கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யும்படி அறிவுறுத்த வேண்டும். அதுமட்டுமின்றி, மீனவர்கள் கைது செய்யப்படுவது இனியும் தொடர்ந்தால், சிங்களப்படையினரை கைது செய்வது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என இலங்கை அரசை இந்தியா கடுமையாக எச்சரிக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: