Sunday, March 16, 2014

வாகன சோதனையால் வணிகர்கள் பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடாது : ராமதாஸ்


பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பண பலம் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும், வாக்குக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதைத் தடுக்கவும் தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பான தேர்தல் ஆணையத்தின் நோக்கமும், அதற்காக அதன் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளும் பாராட்டத் தக்கவை ஆகும்.

தேர்தலில் பயன்படுத்துவதற்காக ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குப் பணம் கொண்டு செல்லப்படு வதை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனச் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து இன்று வரை சுமார் ரூ. 7 கோடி ரொக்கப்பணமும், ரூ. 50 லட்சம் மதிப்புள்ள நகைகள், சேலைகள் உள்ளிட்ட பரிசுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் ஆணையம் நல்ல நோக்கத்துடன் தான் இந்த நடவடிக்கையை மேற்கொள்கிறது என்ற போதிலும், இந்த நடவடிக்கைகளால் அப்பாவி பொதுமக்களும், வணிகர்களும் தான் கடுமையாக பாதிக்கப்பட்டி ருக்கிறார்கள். மருத்துவச் செலவு, வீட்டு விசேஷங்கள் உள்ளிட்ட தேவைகளுக்காக பொதுமக்கள் கொண்டு செல்லும் பணமும், வணிகத்திற்கான பொருட்களை கொள்முதல் செய்ய வணிகர்கள் கொண்டு செல்லும் பணமும் தான் பெரு மளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


கடந்த சில நாட்களுக்கு முன் திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தங்கள் குழந்தைக்கு கோயிலில் வைத்து காது குத்துவதற்காக சென்ற போது, அவர்களின் வாகனத்தை மறித்து சோதனை செய்த அதிகாரிகள் அவர்களிடம் இருந்த ரூ. 35 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். காதணி விழா செலவுக்காக இந்த பணத்தை கொண்டு செல்வதாக அவர்கள் கூறியதை அதிகாரிகள் ஏற்கவில்லை.

இதனால் அக்குடும்பத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தமிழகம் முழுவதும் இதேபோல் ஏராளமான மக்களும், வணிகர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். உரிய ஆவணங்கள் இன்றி இல்லாமல் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் கொண்டு செல்லப்படும் பணத்தை மட்டும் தான் பறிமுதல் செய்ய வேண்டுமென ஆணையம் உத்தரவிட்டுள்ள போதிலும் அதிகாரிகள் பணம் பறிக்கும் நோக்குடன் தேவையற்ற கெடுபிடி காட்டு கின்றனர்.
ரூ. 50 ஆயிரத்திற்கும் கூடுதலான பணத்தை கொன்டு செல்லும் மக்கள் அதற்கான ஆவணங்களை கொண்டு செல்ல வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவம் உள்ளிட்ட அவசரத் தேவைக்காக பணத்தை திரட்டிக்கொண்டும், கடன் வாங்கிக் கொண்டும் செல்லும்போது அதற்கான ஆவணங்களை பெறுவது சாத்தியமல்ல. உண்மையாகவே தவறான நோக்கத்திற்காக பணத்தை கொண்டு செல்பவர்கள் தங்களின் செல்வாக்கைப் பயன்படுத்தி ஆதாரங்களை தயாரிக்கும் நிலையில், நடைமுறைச் சிக்கல்களால் ஆவணங்களை பெற முடியாத அப்பாவிகள் தான் பாதிக்கப் படுகிறார்கள்.


தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆளும்கட்சியான அ.தி.மு.க.வும், ஆண்ட கட்சியான தி.மு.க.வும் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாகவே ஒவ்வொரு தொகுதிக்கும் நூற்றுக்கணக்கான கோடிகளை கொண்டு சென்று பத்திரமாக பதுக்கி வைத்து விட்டனர். அவற்றை தங்களுக்கு சாதகமான அதிகாரிகளின் துணையுடன் வாக்காளர்களுக்கு வினியோகிப்பதற்கான திட்டங்களையும் வகுத்துள்ளனர். இத்தகைய திட்டங்களை முறியடித்து, அவர்கள் பதுக்கி வைத்துள்ள பணத்தை பறிமுதல் செய்வதன் மூலம் தான் தேர்தலில் பண பலம் பயன்படுத்தப்படுவதையும், ஓட்டுக்கு பணம் தரப்படுவதையும் தடுக்க முடியுமே தவிர, இத்தகைய நடவடிக்கைகளால் பெரிதாக எதையும் சாதிக்க முடியாது.


எனவே, அப்பாவி மக்களையும், வணிகர்களையும் பாதிக்கும் வகையில் வாகன சோதனை என்ற பெயரில் கெடுபிடி காட்டுவதை தேர்தல் ஆணையம் தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக சாத்தியமான, ஆக்கபூர்வமான திட்டங்களை வகுத்துச் செயல்படுத்துவதன் மூலம் வாக்குகள் விலைக்கு வாங்கப்படுவதை தடுக்க இந்திய தேர்தல் ஆணையம் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்று தெரிவித்துள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: