பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதிகளாக நியமிக்கப்படுவதற்கு உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் குழுவால் பரிந்துரைக்கப்பட்டுள்ள 8 பேரில் வழக்கறிஞர்கள் பி.என். பிரகாஷ், எஸ். வைத்தியநாதன் ஆகிய இருவர் கேரளத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் என்று தெரியவந்திருக்கிறது.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் நேற்று போராட்டம் நடத்தியிருக்கின்றனர். தமிழர்களின் வாய்ப்பு பறிப்புக்கு எதிரான வழக்கறிஞர்களின் இந்த உணர்வும், போராட்டமும் மிகவும் நியாயமானதே.
தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் வகையில் ஒரு மாநிலத்தைச் சேர்ந்த நீதிபதி இன்னொரு மாநில உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக அமர்த்தப்படுவது வழக்கமானது தான். ஆனால், ஒரு உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக இருப்பவர் தான், இன்னொரு உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றோ அல்லது இடமாற்றம் செய்யப்பட்டோ நியமிக்கப்படுவார்.
ஒரு மாநிலத்தில் பிறந்த வழக்கறிஞரை இன்னொரு மாநில உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக நேரடியாக நியமிப்பதில்லை. அவ்வாறு நியமிக்கப் படுவது மண்ணின் மைந்தர்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பைத் தட்டிப் பறிக்கும் செயலாக அமைந்து விடும் என்பது தான் இதற்கு காரணம் ஆகும்.
உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரும், தில்லி தமிழ் சங்கத்தின் தலைவருமான கிருஷ்ணமணியின் பெயர் சில ஆண்டுகளுக்கு முன் தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி பணிக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவரை தில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கக் கூடாது என்று அங்குள்ள வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அவரது பெயர் கடைசி நேரத்தில் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.
தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட பல வழக்கறிஞர்கள் கொச்சியிலுள்ள கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களாக பணியாற்றி வருகின்றனர். அவர்களில் ஒருவர் கூட இதுவரை அந்த உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டதில்லை. அவ்வாறு இருக்கும்போது தமிழகத்தை சாராதவர்களை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதை ஏற்க முடியாது.
தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட பல வழக்கறிஞர்கள் கொச்சியிலுள்ள கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களாக பணியாற்றி வருகின்றனர். அவர்களில் ஒருவர் கூட இதுவரை அந்த உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டதில்லை. அவ்வாறு இருக்கும்போது தமிழகத்தை சாராதவர்களை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதை ஏற்க முடியாது.
உலகமே மெச்சக்கூடிய சிறந்த வழக்கறிஞர்கள் தமிழகத்தில் இருக்கும்போது அவர்களையெல்லாம் விட்டுவிட்டு கேரளத்தைச் சேர்ந்தவர்களை நீதிபதிகளாக பரிந்துரைத்திருப்பது தமிழக மக்களை அவமதிக்கும் செயலாகும்.
அதுமட்டுமின்றி, வழக்கறிஞர்கள் பிரசாத், வைத்தியநாதன் ஆகிய இருவருமே நீதிபதி ஆவதற்கான தகுதி இல்லாதவர்கள் ஆவர். சில ஆண்டுகளுக்கு முன் மூத்த வழக்கறிஞர்களாக நியமிக்கக்கோரி இருவரும் உயர்நீதிமன்றத்தில் விண்ணப்பித்தனர். ஆனால், இவர்களுக்கு அந்த தகுதி இல்லை என்று கூறி அனைத்து நீதிபதிகளையும் கொண்ட முழு அமர்வு நிராகரித்து விட்டது. இத்தகைய வரலாறு கொண்டவர்களை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பது நீதித்துறையை கேலிக்கூத்தாக்கும் செயலாக அமைந்து விடும். எனவே, இந்த இருவரையும் நீதிபதிகளாக அமர்த்துவதற்கான உச்சநீதிமன்ற நீதிபதிகள் குழுவின் பரிந்துரைகளை மத்திய சட்ட அமைச்சகம் நிராகரிக்க வேண்டும்.
உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் ஆகியவற்றுக்கு நீதிபதிகளை நியமிக்கும்போது அனைத்து சாதியினருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் கூறியிருந்தார். பெரும்பான்மை சமுதாயங்களைச் சேர்ந்த பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களாக இருக்கும் போதிலும் அவர்களுக்கு பிரதிநித்துவம் அளிக்கப்படாததை பார்க்கும்போது நீதிபதிகள் நியமனத்தில் தலைமை நீதிபதியின் அறிவுரையை அவரது தலைமையிலான நீதிபதிகள் குழுவே பின்பற்றப்படவில்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது.
இப்போது நிரப்பப்படும் பணியிடங்கள் தவிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக இருக்கும் மேலும் பத்துக்கும் மேற்பட்ட நீதிபதிகள் பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும். அவ்வாறு நிரப்பும்போது தமிழகத்தின் பெரும்பான்மை சமுதாயங்களைச் சேர்ந்தவர்களுக்கும், மிகப் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதை மூத்த நீதிபதிகள் குழுக்களும், மத்திய, மாநில அரசுகளும் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.
No comments:
Post a Comment