பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’இந்தியாவிலுள்ள அனைத்து ஆறு களிலும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் இல்லாமல் மணல் அள்ளக் கூடாது என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஆணையிட்டிருக்கிறது.
இயற்கை வளங்களையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் நோக்குடன் அளிக்கப்பட்டுள்ள இந்த இடைக் காலத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.
மணல் கொள்ளையில் மிகப்பெரிய அளவில் ஊழலும் நடக்கிறது. தமிழ் நாட்டில் ஆண்டுக்கு சுமார் 20 ஆயிரம் கோடி மணல் விற்பனை நடப்பதாக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், இதன் மூலம் அரசுக்கு கிடைக்கும் வருமானம் வெறும் ரூ.200 கோடிக்கும் குறைவு என்பதிலிருந்தே மணல் கொள்ளை மற்றும் அதில் நடைபெறும் முறை கேடுகளின் தீவிரத்தை புரிந்து கொள்ள முடியும்.
மணல் கொள்ளையை தடுப்பதற்காக சென்னை உயர்நீதிமன்றமும், மதுரை உயர்நீதிமன்றக் கிளையும் ஏற்கனவே வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகளை வழங்கியுள்ளன. ஆனால், அவை எதுவும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வில்லை.
தமிழகத்தின் பெரும்பான்மையான மணல் வளம் கொள்ளையடிக்கப்பட்டு விட்ட நிலையில், மீதமுள்ள மணலையும் சுரண்டி எடுக்க அரசு மற்றும் அதிகாரிகளின் துணையுடன் முயற்சி நடைபெற்று வருகிறது. இத்தகைய சூழலில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்துள்ள இந்த உத்தரவு தமிழகத்தின் மணல் வளத்தை பாதுகாப்பதற்கு கிடைத்த வரப்பிரசாதம் ஆகும்.
எனவே, மணல் கொள்ளையை தடுக்கும் நோக்குடன் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அளித்துள்ள இந்த தீர்ப்பை தமிழக அரசு முழுமையாக செயல்படுத்த வேண்டும். இதற்காக காவல் துறையில் தனிப் பிரிவை ஏற்படுத்துதல், கண்காணிப்புக் குழுக்களை அமைத்தல், கடுமையான தண்டனை வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
இதுகுறித்த செயல் திட்டத்தை தமிழக அரசு தயாரித்து வரும் 14–ஆம் தேதி இந்த வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மீண்டும் விசாரணைக்கு வரும் போது தாக்கல் செய்ய வேண்டும் என்று வலியுறுத் துகிறேன்’’என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment