மத்திய -மாநில அரசுகளுக்கிடையே நிலவி வரும் மோதல் காரணமாக சென்னை மாநகரில் மட்டும் ரூ. 6 ஆயிரம் கோடி மதிப்புள்ள வளர்ச்சித் திட்டங்கள் முடங்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. இதுதவிர பல்லாயிரம் கோடி மதிப்புள்ள 7 நெடுஞ்சாலைத் திட்டங்கள் மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் தாமதமாவதால் தமிழகத்தின் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
மத்திய-மாநில அரசுகள் ஒன்றுக்கொன்று உறுதுணையாக செயல்பட்டால் தான் நாடு முன்னேற முடியும். ஆனால், துரதிருஷ்டவசமாக காலம்காலமாக நிலவி வரும் தமிழக அரசியல் மோதல் காரணமாக மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே சரியான ஒத்துழைப்பு இல்லை என்பது ஊரறிந்த உண்மை. மத்திய, மாநில அரசுகளுக்கிடையிலான மோதல் மாநிலத்தின் வளர்ச்சிக்கான திட்டங்களிலும் எதிரொலிப்பது தான் மிகவும் கவலை அளிக்கிறது.
சென்னை துறைமுகத்தின் வளர்ச்சிக்காகவும், சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் சென்னை மதுரவாயல் முதல் துறைமுகம் வரை 19 கி.மீ தொலைவுக்கு பறக்கும் சாலை அமைக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டது. அத்திட்டத்திற்கு கடந்த 2010-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிரதமர் மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டினார். திட்டமிட்டபடி பணிகள் நடைபெற்றிருந்தால் இந்நேரம் பணிகள் முடிவடைந்து அப்பாலத்தில் போக்குவரத்து தொடங்கியிருக்கும்.
ஆனால், கடந்த 2011-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. அரசு உள்ளூர் அரசியல் மோதல்களை மனதில் வைத்துக் கொண்டு இத்திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டது. 10% பணிகள் கூட முடிவடையாத நிலையில் இத்திட்டம் தடைபட்டதால் இதுவரை ரூ.872 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இது இத்திட்டத்திற்கான மொத்த மதிப்பீட்டில் சுமார் பாதியளவாகும். இந்த அளவு இழப்பீட்டை செலுத்துவது சாத்தியமல்ல என்பதால் இத்திட்டத்தை கைவிடலாமா? என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பரிசீலித்து வருகிறது.
இத்திட்டம் கைவிடப்படும் ஆபத்து இருப்பதால் சென்னை துறைமுகத்தில் ரூ.3686 கோடி செலவில் செயல்படுத்தப்படவுள்ள மெகா சரக்குப் பெட்டக முனையம் அமைக்கும் திட்டமும், திருப்பெரும்புதூர் அருகில் ரூ. 415 கோடியில் உலர் துறைமுகம் அமைக்கும் திட்டமும் தடைபட்டிருக்கின்றன. மதுரவாயல்-துறைமுகம் இடையிலான பறக்கும் பாலத்தை அடிப்படையாக வைத்து தான் இந்த இரு திட்டங்களும் தயாரிக்கப்பட்டுள்ளன என்பதால், தமிழக அரசின் தடை காரணமாக மொத்தம் சுமார் ரூ. 6000 கோடி மதிப்புள்ள திட்டங்கள் கைவிடப்படக்கூடும். இத்திட்டங்கள் கைவிடப்பட்டால், சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, சென்னை துறைமுகத்தின் விரிவாக்கமும், தமிழகத்திலிருந்து செய்யப்படும் ஏற்றுமதிகளும் பாதிக்கப்படும். இது தமிழகத்தின் வளர்ச்சியிலும், வேலை வாய்ப்பு உருவாக்கத்திலும் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும்.
மதுரவாயல் - துறைமுகம் பறக்கும்பாலத் திட்டம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் தான் அதற்கு தடை விதித்திருப்பதாக தமிழக அரசு கூறுவதை ஏற்க முடியாது. ஒட்டுமொத்த மாநிலத்திற்கும் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய கூடங்குளம் அணு உலைத் திட்டத்திற்கும், கல்பாக்கம் அணுமின் திட்ட விரிவாக்கத்திற்கும் ஒப்புதலும், ஒத்துழைப்பும் அளித்த தமிழக அரசு, சாதாரண பாலம் அமைக்கும் திட்டத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுவிடும் என்று கூப்பாடு போடுவது விந்தையாக உள்ளது.
இவைமட்டுமின்றி, எண்ணூர்- மணலி சாலை மேம்பாட்டுத் திட்டம், திருச்சி- காரைக்குடி தேசிய நெடுஞ்சாலைத் திட்டம், திருச்சி-கரூர் சாலைத் திட்டம், திண்டிவனம் - கிருஷ்ணகிரி சாலைத் திட்டம் உள்ளிட்ட மேலும் 7 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களும் தமிழக அரசின் ஒப்புதல் கிடைக்காததால் இன்னும் செயல்படுத்தப்படாமல் உள்ளன. பல ஆயிரம் கோடி மதிப்புள்ள இத்திட்டங்கள் முடக்கப்பட்டிருப்பதால் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி பாதிக்கப்படும். மாநிலத்தின் வளர்ச்சிக்கு வகை செய்ய வேண்டியது தான் மாநில அரசின் நோக்கமாக இருக்க வேண்டுமே தவிர, வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவதாக இருக்கக் கூடாது. எனவே, மாநிலத்தின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு இந்த திட்டங்கள் அனைத்துக்கும் போடப்பட்டுள்ள முட்டுக்கட்டைகளை அகற்றி, இவற்றை விரைந்து செயல்படுத்த மாநில அரசு ஒத்துழைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.
No comments:
Post a Comment