கிராம சபைகளில் மதுவிலக்கு தீர்மானம் நிறைவேற்றி, அதன் மூலம் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை ஏற்படுத்த ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் மதுவிலக்கை ஏற்படுத்துவதற்கு வழிகாட்டும் வகையில் மிகச் சிறப்பான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை அளித்திருக்கிறது. இந்தத் தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ள கருத்துக்கள் தமிழ்நாட்டில் விரைவில் மதுவிலக்கை ஏற்படுத்திவிட முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கின்றன.
விருதுநகர் மாவட்டம் வடமலாபுரத்தில் புதிய மதுக்கடை திறக்கப்பட இருப்பதை அறிந்த அந்த ஊர் மக்கள் அதை எதிர்த்து போராட்டம் நடத்தியுள்ளனர். அதுமட்டுமின்றி, மதுக்கடையை திறக்கக் கூடாது என்று வலியுறுத்தி ஊராட்சி மன்றக் கூட்டத்திலும் கடந்த ஜூலை ஒன்றாம் தேதி தீர்மானம் நிறைவேற்றினர். ஆனால், அதை மதிக்காத தமிழக அரசு வடமலாபுரத்தில் மதுக்கடையை திறக்க ஜூலை 24-ஆம் தேதி அனுமதி அளித்துள்ளது. இதை எதிர்த்து அந்த ஊரைச் சேர்ந்த ஒருவர் தொடர்ந்த பொதுநல வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன் தீர்ப்பளித்த நீதிபதிகள் பால் வசந்த குமார், தேவதாஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு,‘‘ ஓர் ஊரில் மதுக்கடை திறக்கக் கூடாது என்று அந்த ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், அதை ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மதிக்க வேண்டும்; அவர்களின் கோரிக்கையை முறையான கோணத்தில் ஆய்வு செய்து முடிவெடுக்க வேண்டும்’’ என்று அறிவுறுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி, வடமலாபுரத்தில் புதிய மதுக்கடையை திறக்கக் கூடாது என்றும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது.
மதுக்கடைகளை எதிர்த்து போராடும் மக்கள் மீது தடியடி நடத்தி கலைத்து விட்டு, விருப்பம் போல புதிய மதுக்கடைகளை தமிழக அரசு திறந்து வரும் நிலையில், மக்களின் உணர்வுகளை அரசு மதிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஒரு கிராமத்தில் உள்ள மதுக்கடைக்கு எதிராக அந்த கிராம சபையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டால், அந்த மதுக்கடையை உடனடியாக மூட வேண்டும் என்ற சட்டம் மராட்டியத்தில் உள்ளது. அதேபோன்ற சட்டத்தையாவது தமிழகத்தில் கொண்டுவாருங்கள் என கடந்த 6 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறேன். ஆனால், அதற்கு தமிழகத்தில் இருந்த அரசுகள் முன்வராத நிலையில், அந்த சட்டத்தின் அம்சங்களை தமிழகத்திலும் செயல்படுத்துவதற்கான விதையை தனது தீர்ப்பின் மூலம் உயர்நீதிமன்றம் விதைத்துள்ளது. இந்தத் தீர்ப்பை பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் பாராட்டி, வரவேற்கிறேன்.
அதுமட்டுமின்றி, ‘‘புதிய மதுக்கடைகளை திறந்து அரசுக்கு அதிக வருமானத்தை ஈட்டித் தருவதே டாஸ்மாக் அதிகாரிகளின் கொள்கையாக உள்ளது. மதுக்கடைகளின் பெயர்ப்பலகையில் கூட மதுவால் நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு கேடு என்று சுட்டிக்காட்டப்படுகிறது. ஆனால், நடைமுறையில் இந்த அக்கறையை அரசு காட்டுவதில்லை. மதுக்கடைகளால் வருமானம் வருகிறது என்பதற்காக மக்களின் உணர்வுகளையும், மக்கள் நலனையும் புறக்கணித்துவிட்டு புதிய மதுக்கடைகளை அரசு திறப்பதை அனுமதிக்க முடியாது’’ என்றும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் சவுக்கடி கொடுத்துள்ளனர். நீதிபதிகளின் அறிவுரையையும், மக்கள் நலனையும் மதிக்க வேண்டும் என்ற எண்ணம் தமிழக அரசுக்கு இருக்குமானால் தமிழகத்தில் உள்ள மதுக்கடைகள் அனைத்தையும் உடனடியாக மூட வேண்டும். ஆனால், மதுவை கொடுத்து மக்களைக் கொள்ளும் இந்த அரசிடமிருந்து அப்படிப்பட்டதொரு மக்கள் நலன் காக்கும் செயலை எதிர்பார்க்க முடியாது.
ஆனால், கிராம ஊராட்சியிலோ அல்லது கிராமசபையிலோ மதுக்கடைகளை மூட வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், அதை மதித்து மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. எனவே, வடமலாபுரம் மக்களுக்கு இருந்த அதே சமூக அக்கறையுடன், வரும் 15-ஆம் தேதி விடுதலை நாளையொட்டி அனைத்து கிராமங்களிலும் நடைபெறவுள்ள கிராமசபைக் கூட்டங்களில் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற தமிழக மக்கள் முன்வர வேண்டும். அவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், அதை அடிப்படையாக வைத்து நீதிமன்றத்தின் உதவியுடன் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மதுவிலக்கை ஏற்படுத்த முடியும். இதன் மூலம் மது அரக்கனிடமிருந்து மக்களுக்கு உண்மையான விடுதலையை பெற்றுத் தர முடியும் என்பதால், கிராம சபைகளில் மதுவிலக்கு தீர்மானத்தை கொண்டுவருவதை தங்களின் விடுதலை நாள் கடமையாக நினைத்து நிறைவேற்றும்படி பொதுமக்களையும், சமூக ஆர்வலர்களையும் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் ராமதாஸ்.
Monday, August 12, 2013
கிராமசபைகளில் மதுவிலக்கு தீர்மானம் : ராமதாஸ் வலியுறுத்தல்
Subscribe to:
Post Comments (Atom)
காப்புரிமை(Copyrights)
--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------ Users Visited:
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------ Users Visited:
No comments:
Post a Comment