Thursday, August 29, 2013

தமிழக அரசின் அடக்குமுறைகளை எதிர்த்து குரல் கொடுக்கும்படி அரசியல் கட்சிகளுக்கு பா.ம.க. கடிதம்



பா.ம.க. தலைமை நிலையம் 30.08.2013 வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலைமை நடைமுறைப் படுத்தப்பட்டிருக்கிறது. மக்களின் நலன்களுக்கான போராட்டங்களை நடத்துவதற்கும், பொதுக் கூட்டங்களை நடத்துவதற்கும் கூட அனுமதி மறுக்கப்படுகிறது. தருமபுரி, விழுப்புரம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பல வாரங்களாக 144 தடை உத்தரவு நடைமுறையில் உள்ளது. இதனால் இந்த மாவட்டங்களில் எந்த நிகழ்ச்சியையும் நடத்த முடியவில்லை.
மற்ற மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்றாலும், அடக்குமுறைகளுக்கு குறைவில்லை. காவல்துறை, 144 தடை உத்தரவு ஆகியவற்றின் உதவியுடன் ஆட்சியை நடத்தி விடலாம்; பொதுமக்களோ அல்லது எதிர்க்கட்சிகளோ எதிர்த்தால் அவர்களை ஒடுக்கிவிடலாம் என்று தமிழக ஆட்சியாளர்கள் நினைப்பதையே இது காட்டுகிறது. இது ஜனநாயகப் படுகொலை ஆகும்.
அ.தி.மு.க. அரசின் அடக்குமுறையால் பாதிக்கப்படாத அரசியல் கட்சிகளே தமிழகத்தில் இல்லை. அரசியல் கட்சிகள் மட்டுமின்றி, ஊடகங்கள், அரசு அதிகாரிகள், சமூக அமைப்புகள் என அனைத்து தரப்பினருமே அரசின் அடக்குமுறைக்கு ஆளாகியுள்ளனர். எனவே, அரசின் அடக்குமுறைக்கு எதிராக ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள அனைத்துக் கட்சிகளும், இயக்கங்களும் குரல் கொடுக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி கருதுகிறது. இதை வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர்  கடந்த 28.08.2013 அன்று அறிக்கை விடுத்தார்.
அதனடிப்படையில் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே. மணி 29.08.2013 அன்று கடிதம் எழுதினார். அக்கடிதத்தில்,‘‘ தமிழக அரசின் அடக்குமுறைகளை பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது. அரசின் இந்த அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையை எதிர்த்து ஜனநாயகத்தில் அக்கறை  உள்ள அனைத்துக்  கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும்’’ என்று  கேட்டுக்கொண்டுள்ளார். பா.ம.க. தலைவர் ஜி.கே. மணியின் கடிதம் கீழ்க்கண்ட தலைவர்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.
 1) கலைஞர் அவர்கள்,
 தலைவர், திராவிட முன்னேற்றக் கழகம்,

2) பி.எஸ்.ஞானதேசிகன் அவர்கள்,
 தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி,

3) பொன். இராதாகிருஷ்ணன் அவர்கள்,
  தலைவர், பாரதிய ஜனதா (தமிழ்நாடு),

4) விஜயகாந்த் அவர்கள்,
  தலைவர், தேசிய முற்போக்கு திராவிட கழகம்,

5) கி.வீரமணி அவர்கள்,
  தலைவர், திராவிடர்  கழகம்,

6) உயர்திரு. வைகோ அவர்கள்,
   பொதுச் செயலாளர், ம.தி.மு.க.

7) ஜி. இராமகிருஷ்ணன் அவர்கள்,
   தமிழ் மாநில செயலாளர்,
  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

8)  தா. பாண்டியன் அவர்கள்,
   தமிழ் மாநில செயலாளர்,
   இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

9)  ஜவாஹிருல்லாஹ் அவர்கள்,
    சட்டப்பேரவைக் கட்சி தலைவர்,
    மனிதநேய மக்கள் கட்சி,

10)  மருத்துவர். கிருஷ்ணசாமி அவர்கள்,
    தலைவர், புதிய தமிழகம் கட்சி,

11)  பி.வி. கதிரவன் அவர்கள்,
    பார்வர்டு பிளாக்,

12)  பி.டி. அரசகுமார் அவர்கள்,
    தலைவர், தேசிய பார்வர்டு பிளாக்

13)  ஜி.கே. நாகராஜ்  அவர்கள்,
    பொதுச் செயலாளர்,
    கொங்குநாடு முன்னேற்றக் கழகம்

14)  பாரிவேந்தர் அவர்கள்,
    தலைவர், இந்திய ஜனநாயகக் கட்சி,

15)  உ. தனியரசு  அவர்கள்,
    தலைவர், கொங்குநாடு இளைஞர் பேரவை

Monday, August 26, 2013

தமிழக மீனவர்கள் கைது: இந்திய இறையாண்மை மீதான தாக்குதல்: ராமதாஸ் கண்டனம்



பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் 27.08.2013 செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இராமேஸ்வரம் பகுதியிலிருந்து வங்கக்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் 35 பேரை சிங்களக் கடற்படையினர் நேற்று கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.  இலங்கைப் படையினரின் இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத் தக்கது.
 தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கைப் படையின் இந்த நடவடிக்கை திட்டமிட்டு மேற்கொள்ளப் படும் ஒன்றாகும். கடந்த சில மாதங்களுக்கு முன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இலங்கை அதிபர் இராஜபக்சே, தமிழக மீனவர்களை கைது செய்தால் குறைந்தது மூன்று மாதமாவது சிறையில் அடைத்த பிறகு தான் விடுதலை செய்வோம் என்று எச்சரித்திருந்தார். அதன்பிறகு தான் தமிழக மீனவர்கள் அதிக அளவில் கைது செய்யப்படுவதும், மாதக் கணக்கில் சிறையில் அடைக்கப்படுவதும் வழக்கமாகி விட்டது.
தமிழக மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்தாலும் கூட அவர்களை சிங்களப்படையினர் அத்துமீறி நுழைந்து கைது செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. நேற்று கூட இராமேஸ்வரம் மீனவர்கள்  தனுஷ்கோடிக்கும், கச்சத்தீவுக்கும் இடைப்பட்ட இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது தான் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். ஏற்கனவே தமிழகத்தைச் சேர்ந்த 106 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அவர்கள் மீதான வழக்கு விசாரணை முடிவடைந்து எப்போது விடுதலை ஆவார்கள் என்பதை யூகிக்கக் கூட முடியவில்லை. தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டது ஒரு புறமிருக்க நேற்று அதிகாலை கச்சத்தீவு பகுதியில்  மீன் பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் பகுதி மீனவர்களை இலங்கைப் படையினர் கற்களை வீசித் தாக்கியுள்ளனர்.
கொழும்பில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கும்படி அழைப்பதற்காக அண்மையில் தில்லி வந்த இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல். பெரிசிடம், இலங்கை சிறையில் அடைக்கப் பட்டுள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்யும்படி பிரதமர் வலியுறுத்தினார். அதற்கு முன்பு இதே கோரிக்கை இந்தியாவுக்கான இலங்கை தூதர் பிரசாத் கரியவாசத்திடம் வலியுறுத்தப்பட்டது. ஆனால், பிரதமரின் கோரிக்கை மீது இலங்கை இதுவரை எந்த நடவடிக்கையும்  எடுக்காத நிலையில், மேலும் 35 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது இந்திய இறையாண்மை மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும்.
உலகின் வல்லரசுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்து வருவதாக கூறப்படும் நிலையில், இந்தியாவுக்கு சவால் விடுக்கும் வகையில் இலங்கை நடந்து கொள்வதும், அதை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதும் உலக அரங்கில் இந்தியாவுக்கு உள்ள மதிப்பை குலைத்து விடும். இந்தியாவை இலங்கை சற்றும் மதிக்காத நிலையில், அந்த நாடு நடத்தும் காமன்வெல்த் தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் கலந்து கொண்டால் அவமானப்படுத்தப்பட்ட விருந்தாளியாகத்தான் கருதப்படுவார்.

எனவே, தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை இந்திய இறையாண்மைக்கு விடப்பட்ட சவாலாக எடுத்துக் கொண்டு, கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரையும் 24 மணி நேரத்திற்குள் விடுதலை செய்யும்படி இலங்கை அரசை பிரதமர் எச்சரிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, இலங்கை அரசின்  இனப்படுகொலைகளையும், போர்க்குற்றங்களையும் கண்டிக்கும் வகையில் வரும் நவம்பர் மாதம்  இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும். மீனவர்கள் கைது செய்யப்பட்டதால் வாழ்வாதாரத்தை இழந்துவாடும் அவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசி நிதிஉதவி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

Sunday, August 25, 2013

7 மாதங்களில் தமிழகத்தில் 1100 படுகொலைகள் : ராமதாஸ் கண்டனம்



பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘’விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றிய பாட்டாளி மக்கள் கட்சியின் செயலாளர் திருமலைவாசன் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பிற்பகலில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.
இந்த செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன். உயிரிழந்த திருமலை வாசனின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கி றேன்.பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகியான திருமலைவாசன் அவரது சொந்த பணிக்காக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த போது இந்த படுகொலை நிகழ்த்தப்பட்டிருக்கிறது.
மாவட்ட ஆட்சியர் வளாகத்தில், காவல்துறை கண்காணிப்பாளர் அலுவகத்திலிருந்து 50 மீட்டர் தொலை வில் பட்டப்பகலில் நடந்த இந்த படுகொலையை காவல்துறையினரால் தடுக்க முடியவில்லை. விழுப்புரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால் ஓரிடத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் மக்கள் கூடக் கூடாது என காவல்துறையினர் எச்சரித்துள்ள நிலையில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அருகிலேயே பத்துக்கும் மேற்பட்டோர் ஆயுதங்களுடன் கூடி கொடூர மான முறையில் கொலையை நிகழ்த்தி விட்டு எந்த எதிர்ப்பும் இல்லாமல் தப்பிச் சென்றுள்ளனர். கொலையாளிகளை கைது செய்ய காவல்துறையினர் எந்த முயற்சியும் செய்யவில்லை.
இந்தக் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள அனைவரும் கடலூர் மாவட்டம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் கூலிப்படையாக செயல்படுபவர்கள். விழுப்புரத்தைச் சேர்ந்த போக்கிலி தலைமையில் சதித் திட்டம் தீட்டப்பட்டு, அதனடிப்படையில் தான் இவர்களை அழைத்து வந்து இப்படுகொலை நடத்தப்பட் டிருக்கிறது.

இதையெல்லாம் காவல்துறை கண்காணித்திருந்தால் திருமலைவாசன் கொலையை தடுத்திருக்க முடியும். ஆனால், செயலிழந்த காவல்துறை அதை செய்வதற்கு தவறி விட்டது.திருமலைவாசனின் படுகொலை யால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பே விக்கிரவாண்டியை அடுத்த இராதாபுரத்தில் தி.மு.க. நிர்வாகி ஆசைத்தம்பி என்பவர் கூலிப்படையினரால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இன்று காலையில் கூட தமிழக& புதுவை எல்லையில் உள்ள மதகடிப்பட்டு என்ற இடத்தில் ஒருவரை விழுப்புரத்திலிருந்து சென்ற கூலிப்படையினர் வெட்டிக் கொன்றுள்ளனர்.
கடந்த 15 நாட்களில் மட்டும் விழுப்புரம் மாவட்டத்தில் பத்துக்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டி ருக்கின்றனர். இத்தகைய படுகொலைகளை தடுத்து மக்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறையினரோ எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் முயற்சியில் ஈட்டுபட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முடியவில்லை என்பதை ஒப்புக்கொள்ளும் வகையில் தான் விழுப்புரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அதற்குப் பிறகும் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க காவல்துறையினரால் முடியவில்லை.

இந்த அவல நிலைக்காக காவல்துறைக்கு பொறுப்பேற்றிருப்பவர்கள் வெட்கப்பட வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தில் மட்டுமின்றி தமிழகம் முழுவதுமே இதேநிலை தான் காணப்படுகிறது.
நடப்பு ஆண்டின் முதல் 7 மாதங்களில் மட்டும் தமிழகத்தில் 1100-க்கும் அதிகமான படுகொலைகள் நடைபெற்று ள்ளன. மக்கள் நிம்மதியாக வெளியில் சென்று வரமுடியாத நிலைதான் காணப்படுகிறது. காவல்துறை முற்றிலும் செயல் இழந்து விட்டதை தான் இது காட்டுகிறது. எனவே, இனியாவது எதிர்க்கட்சி யினரை பழிவாங்கும் செயல்களில் காவல்துறையினரை ஈடுபடுத்துவதை விட்டுவிட்டு, சட்டம்- ஒழுங்கை பாதுகாக்கும் பணியில் ஈடுபடுத்த வேண்டும். பா.ம.க. ஒன்றிய செயலாளர் திருமலைவாசன் படுகொலையில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும்’’என்று கூறியுள்ளார்

Thursday, August 22, 2013

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக வெளிமாநிலத்தவரை நியமிக்கக் கூடாது: ராமதாஸ்



பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதிகளாக நியமிக்கப்படுவதற்கு உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் குழுவால் பரிந்துரைக்கப்பட்டுள்ள 8 பேரில் வழக்கறிஞர்கள் பி.என். பிரகாஷ், எஸ். வைத்தியநாதன் ஆகிய இருவர் கேரளத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் என்று தெரியவந்திருக்கிறது.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் நேற்று போராட்டம் நடத்தியிருக்கின்றனர். தமிழர்களின் வாய்ப்பு பறிப்புக்கு எதிரான வழக்கறிஞர்களின் இந்த உணர்வும், போராட்டமும் மிகவும் நியாயமானதே.
தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் வகையில் ஒரு மாநிலத்தைச் சேர்ந்த நீதிபதி இன்னொரு மாநில உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக அமர்த்தப்படுவது வழக்கமானது தான். ஆனால், ஒரு உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக இருப்பவர் தான், இன்னொரு உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றோ அல்லது இடமாற்றம் செய்யப்பட்டோ  நியமிக்கப்படுவார்.
ஒரு மாநிலத்தில் பிறந்த வழக்கறிஞரை இன்னொரு மாநில உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக நேரடியாக நியமிப்பதில்லை. அவ்வாறு நியமிக்கப் படுவது மண்ணின் மைந்தர்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பைத் தட்டிப் பறிக்கும் செயலாக அமைந்து விடும் என்பது தான் இதற்கு காரணம் ஆகும்.
உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரும், தில்லி தமிழ் சங்கத்தின் தலைவருமான கிருஷ்ணமணியின் பெயர் சில ஆண்டுகளுக்கு முன் தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி பணிக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவரை தில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கக் கூடாது என்று அங்குள்ள வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அவரது பெயர் கடைசி நேரத்தில் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.

தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட பல வழக்கறிஞர்கள் கொச்சியிலுள்ள கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களாக பணியாற்றி வருகின்றனர். அவர்களில் ஒருவர் கூட இதுவரை அந்த உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டதில்லை. அவ்வாறு இருக்கும்போது தமிழகத்தை சாராதவர்களை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதை ஏற்க முடியாது.
உலகமே மெச்சக்கூடிய சிறந்த வழக்கறிஞர்கள் தமிழகத்தில் இருக்கும்போது  அவர்களையெல்லாம் விட்டுவிட்டு கேரளத்தைச் சேர்ந்தவர்களை நீதிபதிகளாக பரிந்துரைத்திருப்பது தமிழக மக்களை அவமதிக்கும் செயலாகும்.
அதுமட்டுமின்றி, வழக்கறிஞர்கள் பிரசாத், வைத்தியநாதன் ஆகிய இருவருமே நீதிபதி ஆவதற்கான தகுதி இல்லாதவர்கள் ஆவர். சில ஆண்டுகளுக்கு முன் மூத்த வழக்கறிஞர்களாக நியமிக்கக்கோரி இருவரும் உயர்நீதிமன்றத்தில் விண்ணப்பித்தனர். ஆனால், இவர்களுக்கு அந்த தகுதி இல்லை என்று கூறி அனைத்து நீதிபதிகளையும் கொண்ட முழு அமர்வு நிராகரித்து விட்டது. இத்தகைய வரலாறு கொண்டவர்களை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பது நீதித்துறையை கேலிக்கூத்தாக்கும்  செயலாக அமைந்து விடும். எனவே, இந்த இருவரையும் நீதிபதிகளாக அமர்த்துவதற்கான உச்சநீதிமன்ற நீதிபதிகள் குழுவின் பரிந்துரைகளை மத்திய சட்ட அமைச்சகம் நிராகரிக்க வேண்டும்.
உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் ஆகியவற்றுக்கு நீதிபதிகளை நியமிக்கும்போது அனைத்து சாதியினருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் கூறியிருந்தார். பெரும்பான்மை சமுதாயங்களைச் சேர்ந்த பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களாக இருக்கும் போதிலும் அவர்களுக்கு பிரதிநித்துவம் அளிக்கப்படாததை பார்க்கும்போது நீதிபதிகள் நியமனத்தில் தலைமை நீதிபதியின் அறிவுரையை அவரது தலைமையிலான நீதிபதிகள் குழுவே பின்பற்றப்படவில்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது.
இப்போது நிரப்பப்படும் பணியிடங்கள் தவிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக இருக்கும் மேலும் பத்துக்கும் மேற்பட்ட நீதிபதிகள் பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும். அவ்வாறு நிரப்பும்போது தமிழகத்தின் பெரும்பான்மை சமுதாயங்களைச் சேர்ந்தவர்களுக்கும், மிகப் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதை மூத்த நீதிபதிகள் குழுக்களும், மத்திய, மாநில அரசுகளும் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

அதிக எண்ணிக்கையில் அரசு கல்லூரிகளை தொடங்க வேண்டும்: ராமதாஸ் வேண்டுகோள்



பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் 22.08.2013 வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சென்னையில் கடந்த வாரம் நடைபெற்ற சென்னை பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பேசிய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, பல்கலைக் கழக கல்வியின் உலக மையமாக தமிழகத்தை உருவாக்குவதே தமது அரசின் நோக்கம் என்று கூறியிருந்தார்.
முதலமைச்சரின் இந்த தொலைநோக்குப் பார்வை மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. ஆனால், தமிழகத்தின் கல்வி நிலைமை குறித்த உண்மைகள் மிகுந்த வருத்தத்தையும், வேதனையையும் தான் அளிக்கின்றன.
சட்டப்பேரவையில் கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தில் நடப்பாண்டில் 8 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் ஏப்ரல் 8ஆம் தேதி அவை விதி எண் 110&ன் கீழ் அறிக்கை படித்த முதலமைச்சர், நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டதுடன் கூடுதலாக 4 கல்லூரிகளையும் சேர்த்து மொத்தம் 12 கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அறிவித்தார்.
அதன்படி, சிவகாசி, கோவில்பட்டி, கடலாடி, முதுகுளத்தூர்,  திருவாடானை, கரம்பக்குடி, ஓசூர், குமாரபாளையம், காங்கேயம், உத்திரமேரூர், பேராவூரணி ஆகிய 11 இடங்களில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளும், காரிமங்கலத்தில் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரிகளும் அமைக்கப்பட்டு மாணவர் சேர்க்கையும் 2 மாதங்களுக்கு முன்பே முடிவடைந்துவிட்ட நிலையில் இன்று வரை புதிய கல்லூரிகள் திறக்கப்பட வில்லை.
இதேபோல் பெரம்பலூர் மாவட்டம் வேப்பூரிலும், கடலூர் மாவட்டம் திட்டக்குடியிலும் அமைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளும் இன்னும் திறக்கப்படவில்லை.

தமிழகத்தின் மற்ற கல்லூரிகள் திறக்கப்பட்டு 50 நாட்களுக்கு மேலாகிவிட்ட நிலையில், இக்கல்லூரிகள் திறக்கப்படாததால் அதில் சேர்ந்த மாணவ, மாணவியரின் படிப்பு பாதிக்கப்பட்டிருக்கிறது. புதிய கல்லூரிகளை தமிழக முதலமைச்சர் தான்  காணொலி கலந்தாய்வு முறையில் தொடங்கி வைக்க வேண்டும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கூறிவிட்டதாகவும், ஆனால், கடந்த 50 நாட்களுக்கு மேலாக முதலமைச்சர் சென்னையில் இல்லாததால்  இக்கல்லூரிகள் திறக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. முதலமைச்சர் ஒருவருக்காக மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் படிப்பு பாழடிக்கப்படுவது கண்டிக்கத்தக்கதாகும்.
அதுமட்டுமின்றி, புதிய அரசு கலை அறிவியல் கல்லூரிகளை தொடங்குவதாக அறிவிக்கும் தமிழக அரசு அவற்றை பின்னர் ஏதேனும் பல்கலைக் கழகத்துடன் இணைத்து உறுப்புக் கல்லூரிகளாக மாற்றி விடுகிறது. அரசு நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டு விட்டதால் பல்கலைக் கழகங்கள் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில், புதிதாக இணைக்கப்படும் உறுப்புக் கல்லூரிகளில் போதிய வசதிகளை செய்து தர முடிய வில்லை. கடந்த 2 ஆண்டுகளில் தமிழகத்தில் 22 அரசு  கலை அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட்டு, உறுப்புக் கல்லூரிகளாக மாற்றப்பட்டிருக்கின்றன. தமிழகத்தில் மொத்தம் 35 உறுப்புக் கல்லூரிகள் செயல்பட்டு வரும் நிலையில், அவற்றில் எதிலும் அடிப்படை வசதிகள் கூட இல்லை. நெம்மேலி, திருவொற்றியூர், பாப்பிரெட்டிப்பட்டி, இடைப்பாடி, பெண்ணாகரம் உள்ளிட்ட இடங்களில்  அமைக்கப்பட்டுள்ள கல்லூரிகள் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தான் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக உயர்கல்வித்துறை அமைச்சரின் சொந்தத் தொகுதியான பாப்பிரெட்டிப் பட்டி கல்லூரியில் கழிப்பறைகள் கூட கட்டித்தரப் படாததால் மாணவ, மாணவியர் பெரும் துன்பத்திற்கு ஆளாகின்றனர். உறுப்புக்கல்லூரிகள் பெரும்பாலும் தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டே நடத்தப்படுவதால் கல்வித் தரமும் மிக மோசமாக உள்ளது. தமிழகத்தின் உயர்கல்விச் சூழல் இத்தகைய நிலையில் இருக்கும்போது, தமிழகத்தை பல்கலைக்கழக கல்விக்கான உலக மையமாக முதலமைச்சர் எப்படி மாற்றப்போகிறார் என்பது தெரியவில்லை.
தமிழகத்தில் 651 தனியார் கலை அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வரும் நிலையில், அரசு கல்லூரிகளின் எண்ணிக்கை 62 மட்டுமே. கடந்த 10 ஆண்டுகளில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை. அரசுக் கல்லூரிகளை அமைக்காமல், அடிப்படை வசதிகள் இல்லாத பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரிகளை மட்டும் திறப்பது தனியார் கல்லூரிகள் பெருகவே வழி வகுக்கும்.
எனவே, தமிழகத்தில் அறிவிக்கப்பட்டு  திறக்கப்படாமல் இருக்கும் 14 கல்லூரிகளையும் உடனடியாக திறப்பதுடன், மாவட்டத்திற்கு குறைந்தது 10 அரசு கலை அறிவியல் கல்லூரிகளாவது இருக்கும் நிலையை ஏற்படுத்த  வேண்டும். அதுமட்டுமின்றி, பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் என்ற முறையை ஒழித்து விட்டு, தற்போதுள்ள 35 உறுப்புக் கல்லூரிகளையும் நேரடி அரசு கல்லூரிகளாக

Sunday, August 18, 2013

நலிவடைந்த மாணவர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்பை பறிக்க கூடாது: தமிழக அரசுக்கு ராமதாஸ் கண்டனம்



பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களை சேர்ப்பதற்காக கடந்த ஆகஸ்ட் 6&ஆம் தேதி முதல் 12&ஆம் தேதி வரை நடைபெற்ற இரண்டாம் கட்ட கலந்தாய்வில் கடைபிடிக்கப்பட்ட தவறான முறை காரணமாக இட ஒதுக்கீட்டுப் பிரிவுகளைச் சேர்ந்த 116 மாணவ, மாணவியர் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் வாய்ப்பை இழந்துள்ளனர்.
மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. ஜூன் 18&ஆம் தேதி முதல் 22&ஆம்  தேதி வரை நடைபெற்ற முதல்கட்ட கலந்தாய்வின் போது  அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1823 இடங்கள் பல்வேறு குளறுபடிகளுடன் நிரப்பப்பட்டன. அதன்பின் அரசுக் கல்லூரிகளில் கூடுதலாக ஏற்படுத்தப்பட்ட இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என மொத்தம் 1141 இடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட கலந்தாய்வில் தான் சமூகநீதியின் அடிப்படைக்கே வேட்டு வைக்கும் வகையில் மிகவும் தவறான நடைமுறையை அதிகாரிகள் கடைபிடித்துள்ளனர்.
வழக்கமாக இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தப்படும்போது, இட ஒதுக்கீட்டிற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் புதிய தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும். ஆனால், அத்தகைய பட்டியல் எதையும் தயாரிக்காத மருத்துவக் கல்வித் துறை அதிகாரிகள் முதல்கட்ட கலந்தாய்வின் தொடர்ச்சியாக இரண்டாம் கட்ட கலந்தாய்வை நடத்தியுள்ளனர். இதனால், மிகவும் பிற்படுத்தப்பட்ட , தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, இஸ்லாமிய மற்றும் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த 116 மாணவ, மாணவியர் பாதிக்கப் பட்டுள்ளனர்.
முதல்கட்ட கலந்தாய்வின்போது பொதுப்பிரிவுக்கு மொத்தம் 565 ஒதுக்கப்பட்டிருந்தன. மீதமுள்ள இடங்கள் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வழங்கப்பட்டன. இரண்டாம் கட்ட கலந்தாய்வின்போது பொதுப் பிரிவுக்கு மொத்தம் 354 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்த இடங்களுக்கு புதிய தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டிருந்தால், ஏற்கனவே இட ஒதுக்கீட்டுப் பிரிவில் இடம்பெற்றிருந்த பலர் புதிய பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருப்பார்கள். இதனால், இட ஒதுக்கீட்டுப் பிரிவில் காலியான இடங்கள் அந்தந்த பிரிவினரைக் கொண்டு நிரப்பப் பட்டிருந்திருக்கும். அதுமட்டுமின்றி, முதல் கட்ட கலந்தாய்வில் சாதாரண மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களுக்கு  முன்னணி கல்லூரிகளில் இடம் கிடைத்திருக்கும். கடந்த காலங்களில் இத்தகைய நடைமுறை தான் கடைபிடிக்கப்பட்டு வந்தது.
ஆனால், இப்போது புதிய தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படாமல் முதல்கட்ட கலந்தாய்வின் தொடர்ச்சியாக இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தப்பட்டிருக்கிறது. இதனால், புதிய பொதுப்பட்டியலில் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கு கிடைக்க வேண்டிய 17 இடங்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கிடைக்க வேண்டிய 74 இடங்களும், பட்டியலினத்தவருக்கு கிடைக்க வேண்டிய 13 இடங்களும், பழங்குடியினருக்கு கிடைக்க வேண்டிய 2 இடங்களும் பறிக்கப்பட்டிருக்கின்றன. இது இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு இழைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய அநீதி ஆகும்.
2006 மற்றும் 2007 ஆண்டுகளில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினரின் வாய்ப்புகள் பறிக்கப்பட்டன. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 20.03.2008 அன்று தீர்ப்பளித்த நீதியரசர்கள் எலிப்பி தருமாராவ், சிங்காரவேலு ஆகியோர் அடங்கிய சென்னை உயர்நீதிமன்ற அமர்வு, இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான வாய்ப்புகளை குறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல் என்று  கண்டனம் தெரிவித்தது. இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு செயல்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டை கடைபிடிக்காமல் பின்தங்கிய மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடிய தமிழக அரசு, நலிவடைந்த மாணவர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்பை பறிக்க கூடாது. எனவே, மருத்துவ மாணவர் சேர்க்கையை ரத்து செய்துவிட்டு அனைத்து இடங்களுக்கும் புதிய தரவரிசைப் பட்டியலை தயாரித்து அதன் அடிப்படையில் கலந்தாய்வு

மருத்துவ மாணவர் சேர்க்கையில் குளறுபடி, மோசடி.. ராமதாஸ் புகார்

சென்னை: மருத்துவ மாணவர் சேர்க்கையில் மிகப் பெரிய அளவில் மோசடிகளும், குளறுபடிகளும் நிகழ்த்தப்பட்டுள்ளன. எனவே நடந்து முடிந்த மாணவர் சேர்க்கையை ரத்து செய்து விட்டு புதிதாக நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கைதமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களை சேர்ப்பதற்காக கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை நடைபெற்ற இரண்டாம் கட்ட கலந்தாய்வில் கடைபிடிக்கப்பட்ட தவறான முறை காரணமாக இட ஒதுக்கீட்டுப் பிரிவுகளைச் சேர்ந்த 116 மாணவ, மாணவியர் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் வாய்ப்பை இழந்துள்ளனர்.மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. ஜூன் 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடைபெற்ற முதல்கட்ட கலந்தாய்வின் போது அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1823 இடங்கள் பல்வேறு குளறுபடிகளுடன் நிரப்பப்பட்டன.அதன்பின் அரசுக் கல்லூரிகளில் கூடுதலாக ஏற்படுத்தப்பட்ட இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என மொத்தம் 1141 இடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட கலந்தாய்வில் தான் சமூகநீதியின் அடிப்படைக்கே வேட்டு வைக்கும் வகையில் மிகவும் தவறான நடைமுறையை அதிகாரிகள் கடைபிடித்துள்ளனர். வழக்கமாக இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தப்படும்போது, இட ஒதுக்கீட்டிற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் புதிய தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும்.ஆனால், அத்தகைய பட்டியல் எதையும் தயாரிக்காத மருத்துவக் கல்வித் துறை அதிகாரிகள் முதல்கட்ட கலந்தாய்வின் தொடர்ச்சியாக இரண்டாம் கட்ட கலந்தாய்வை நடத்தியுள்ளனர். இதனால், மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, இஸ்லாமிய மற்றும் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த 116 மாணவ, மாணவியர் பாதிக்கப்பட்டுள்ளனர்.முதல்கட்ட கலந்தாய்வின்போது பொதுப்பிரிவுக்கு மொத்தம் 565 ஒதுக்கப்பட்டிருந்தன. மீதமுள்ள இடங்கள் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வழங்கப்பட்டன. இரண்டாம் கட்ட கலந்தாய்வின்போது பொதுப் பிரிவுக்கு மொத்தம் 354 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்த இடங்களுக்கு புதிய தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டிருந்தால், ஏற்கனவே இட ஒதுக்கீட்டுப் பிரிவில் இடம்பெற்றிருந்த பலர் புதிய பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருப்பார்கள். இதனால், இட ஒதுக்கீட்டுப் பிரிவில் காலியான இடங்கள் அந்தந்த பிரிவினரைக் கொண்டு நிரப்பப்பட்டிருந்திருக்கும்.அதுமட்டுமின்றி, முதல் கட்ட கலந்தாய்வில் சாதாரண மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களுக்கு முன்னணி கல்லூரிகளில் இடம் கிடைத்திருக்கும். கடந்த காலங்களில் இத்தகைய நடைமுறை தான் கடைபிடிக்கப்பட்டு வந்தது.ஆனால், இப்போது புதிய தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படாமல் முதல்கட்ட கலந்தாய்வின் தொடர்ச்சியாக இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தப்பட்டிருக்கிறது. இதனால், புதிய பொதுப்பட்டியலில் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கு கிடைக்க வேண்டிய 17 இடங்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கிடைக்க வேண்டிய 74 இடங்களும், பட்டியலினத்தவருக்கு கிடைக்க வேண்டிய 13 இடங்களும், பழங்குடியினருக்கு கிடைக்க வேண்டிய 2 இடங்களும் பறிக்கப்பட்டிருக்கின்றன.இது இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு இழைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய அநீதி ஆகும். 2006 மற்றும் 2007 ஆண்டுகளில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினரின் வாய்ப்புகள் பறிக்கப்பட்டன.இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 20.03.2008 அன்று தீர்ப்பளித்த நீதியரசர்கள் எலிப்பி தருமாராவ், சிங்காரவேலு ஆகியோர் அடங்கிய சென்னை உயர் நீதிமன்ற அமர்வு, இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான வாய்ப்புகளை குறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல் என்று கண்டனம் தெரிவித்தது.இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு செயல்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டை கடைபிடிக்காமல் பின்தங்கிய மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடிய தமிழக அரசு, நலிவடைந்த மாணவர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்பை பறிக்க கூடாது.எனவே, மருத்துவ மாணவர் சேர்க்கையை ரத்து செய்துவிட்டு அனைத்து இடங்களுக்கும் புதிய தரவரிசைப் பட்டியலை தயாரித்து அதன் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தி மாணவர்களை சேர்க்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
 

Saturday, August 17, 2013

உண்ணாவிரதமிருக்கக் கூட விஜய்க்கு அனுமதி மறுப்பதா?- அரசுக்கு ராமதாஸ் கண்டனம்

சென்னை: தலைவா படம் வெளியாகாததால் உண்ணாவிரதமிருக்க முயற்சித்த விஜய்க்கு அனுமதி மறுத்திருப்பது தமிழகத்தில் ஜனநாயக ஆட்சிதான் நடக்கிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது என டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.இது தொடர்பாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:தலைவா திரைப்படத்தை வெளியிடுவதற்கு முட்டுக் கட்டை போடப்படுவதை எதிர்த்து நடிகர் விஜய் உண்ணாவிரதம் இருப்பதற்குக் கூட அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.சட்டம் - ஒழுங்கை பாதுகாக்கவும், கொலை, கொள்ளைகளை தடுக்கவும் உருவாக்கப்பட்ட காவல் துறை முழுக்க முழுக்க எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்காகவே பயன்படுத்தப்படுகிறது. அரசின் குறைகளை சுட்டிக் காட்டும் அரசியல் கட்சித் தலைவர்கள் மீதும், அவர்களின் கருத்துக்களை வெளியிடும் ஊடகங்கள் மீதும் அவதூறு வழக்குகள் தொடரப்படுவதன் மூலம் மறைமுக மிரட்டல்கள் விடப்படுகின்றன.இவற்றையெல்லாம் பார்க்கும்போது தமிழ் நாட்டில் ஜனநாயக ஆட்சி நடைபெறுகிறதா அல்லது சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறதா? என்ற ஐயம் எழுவதை தவிர்க்க முடியவில்லை. அரசியல் கட்சிகளின் ஜனநாயக உரிமைகளை பறிக்கும் வகையில் செயல்பட்ட அரசுகள் அனைத்தும் கடந்த காலங்களில் மக்களால் தண்டிக்கப்பட்டிருக்கின்றன.இதை உணர்ந்தாவது அடக்கு முறைகளை கைவிடுவதுடன், தருமபுரி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நடைமுறையில் உள்ள 144 தடையாணையை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

 

Thursday, August 15, 2013

'கேஸ்' போடாம விட மாட்டோம்.. அதிகாரிகளுக்கு அன்புமணி எச்சரிக்கை!

வந்தவாசிக்கு வந்த அவர் அங்கு நடந்த பாமக கூட்டத்தில் பேசுகையில்,தருமபுரி இளவரசன் மரணத்துக்கு நீதி விசாரணை நடத்துகின்றனர். ஆனால் மரக்காணத்தில் வன்னியர் இருவர் இறந்ததை யாரும் கண்டு கொள்ளவில்லை.நாங்கள் தலித்துகளுக்கு எதிரானவர்கள் அல்ல. எங்கள் மீது வழக்கு போட்ட அதிகாரிகள் மீது நாங்கள் வழக்கு போடுவோம். அப்போது அதிகாரிகளை காப்பாற்ற ஜெயலலிதா வரப்போவதில்லை.பெண்ணின் திருமண வயதை 21-ஆக உயர்த்த வேண்டும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்ற இந்த இரு கோரிக்கைகளை மக்களிடம் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டும் என்றார் அன்புமணி.

Tuesday, August 13, 2013

சென்னையில் மட்டும் ரூ. 6000 கோடி திட்டங்கள் முடக்கம்: வளர்ச்சியை தடுக்கும் தமிழக அரசு: ராமதாஸ் குற்றச்சாட்டு

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மத்திய -மாநில அரசுகளுக்கிடையே நிலவி வரும் மோதல் காரணமாக சென்னை மாநகரில் மட்டும் ரூ. 6 ஆயிரம் கோடி மதிப்புள்ள வளர்ச்சித் திட்டங்கள் முடங்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. இதுதவிர பல்லாயிரம் கோடி மதிப்புள்ள 7 நெடுஞ்சாலைத் திட்டங்கள் மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் தாமதமாவதால் தமிழகத்தின் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
மத்திய-மாநில அரசுகள் ஒன்றுக்கொன்று உறுதுணையாக செயல்பட்டால் தான் நாடு முன்னேற முடியும். ஆனால், துரதிருஷ்டவசமாக காலம்காலமாக நிலவி வரும் தமிழக அரசியல் மோதல் காரணமாக மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும்  இடையே சரியான ஒத்துழைப்பு இல்லை என்பது ஊரறிந்த உண்மை. மத்திய, மாநில அரசுகளுக்கிடையிலான மோதல் மாநிலத்தின் வளர்ச்சிக்கான திட்டங்களிலும் எதிரொலிப்பது தான் மிகவும் கவலை அளிக்கிறது.
சென்னை துறைமுகத்தின் வளர்ச்சிக்காகவும், சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும் சென்னை மதுரவாயல் முதல் துறைமுகம் வரை 19 கி.மீ தொலைவுக்கு பறக்கும் சாலை அமைக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டது. அத்திட்டத்திற்கு கடந்த 2010-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிரதமர் மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டினார். திட்டமிட்டபடி பணிகள் நடைபெற்றிருந்தால் இந்நேரம் பணிகள் முடிவடைந்து அப்பாலத்தில் போக்குவரத்து தொடங்கியிருக்கும்.
ஆனால், கடந்த 2011-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. அரசு உள்ளூர் அரசியல் மோதல்களை மனதில் வைத்துக் கொண்டு இத்திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டது. 10% பணிகள் கூட முடிவடையாத நிலையில் இத்திட்டம் தடைபட்டதால் இதுவரை ரூ.872 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இது இத்திட்டத்திற்கான மொத்த மதிப்பீட்டில் சுமார் பாதியளவாகும். இந்த அளவு இழப்பீட்டை செலுத்துவது சாத்தியமல்ல என்பதால் இத்திட்டத்தை கைவிடலாமா? என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பரிசீலித்து வருகிறது.
இத்திட்டம் கைவிடப்படும் ஆபத்து இருப்பதால் சென்னை துறைமுகத்தில் ரூ.3686 கோடி செலவில் செயல்படுத்தப்படவுள்ள மெகா சரக்குப் பெட்டக முனையம் அமைக்கும் திட்டமும், திருப்பெரும்புதூர் அருகில் ரூ. 415 கோடியில் உலர் துறைமுகம் அமைக்கும் திட்டமும் தடைபட்டிருக்கின்றன. மதுரவாயல்-துறைமுகம் இடையிலான பறக்கும் பாலத்தை அடிப்படையாக வைத்து தான் இந்த இரு திட்டங்களும் தயாரிக்கப்பட்டுள்ளன என்பதால், தமிழக அரசின் தடை காரணமாக மொத்தம் சுமார் ரூ. 6000 கோடி மதிப்புள்ள திட்டங்கள் கைவிடப்படக்கூடும். இத்திட்டங்கள் கைவிடப்பட்டால், சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, சென்னை துறைமுகத்தின்  விரிவாக்கமும், தமிழகத்திலிருந்து செய்யப்படும் ஏற்றுமதிகளும் பாதிக்கப்படும். இது தமிழகத்தின்  வளர்ச்சியிலும், வேலை வாய்ப்பு உருவாக்கத்திலும் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும்.
மதுரவாயல் - துறைமுகம் பறக்கும்பாலத் திட்டம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் தான் அதற்கு தடை விதித்திருப்பதாக தமிழக அரசு கூறுவதை ஏற்க முடியாது. ஒட்டுமொத்த மாநிலத்திற்கும் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய கூடங்குளம் அணு உலைத் திட்டத்திற்கும், கல்பாக்கம் அணுமின் திட்ட விரிவாக்கத்திற்கும் ஒப்புதலும், ஒத்துழைப்பும் அளித்த தமிழக அரசு, சாதாரண பாலம் அமைக்கும் திட்டத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுவிடும் என்று கூப்பாடு போடுவது விந்தையாக உள்ளது.
இவைமட்டுமின்றி, எண்ணூர்- மணலி சாலை மேம்பாட்டுத் திட்டம், திருச்சி- காரைக்குடி தேசிய நெடுஞ்சாலைத் திட்டம், திருச்சி-கரூர் சாலைத் திட்டம், திண்டிவனம் - கிருஷ்ணகிரி சாலைத் திட்டம் உள்ளிட்ட மேலும் 7 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களும் தமிழக அரசின் ஒப்புதல் கிடைக்காததால்  இன்னும் செயல்படுத்தப்படாமல் உள்ளன. பல ஆயிரம் கோடி மதிப்புள்ள இத்திட்டங்கள் முடக்கப்பட்டிருப்பதால் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி பாதிக்கப்படும். மாநிலத்தின் வளர்ச்சிக்கு வகை செய்ய வேண்டியது தான் மாநில அரசின் நோக்கமாக இருக்க வேண்டுமே தவிர, வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவதாக இருக்கக் கூடாது. எனவே, மாநிலத்தின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு இந்த திட்டங்கள் அனைத்துக்கும் போடப்பட்டுள்ள முட்டுக்கட்டைகளை அகற்றி, இவற்றை விரைந்து செயல்படுத்த மாநில அரசு ஒத்துழைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

Monday, August 12, 2013

கிராமசபைகளில் மதுவிலக்கு தீர்மானம் : ராமதாஸ் வலியுறுத்தல்

கிராம சபைகளில் மதுவிலக்கு தீர்மானம் நிறைவேற்றி, அதன் மூலம் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை ஏற்படுத்த ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் மதுவிலக்கை ஏற்படுத்துவதற்கு வழிகாட்டும் வகையில் மிகச் சிறப்பான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை அளித்திருக்கிறது. இந்தத் தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ள கருத்துக்கள்  தமிழ்நாட்டில் விரைவில் மதுவிலக்கை ஏற்படுத்திவிட முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கின்றன.
விருதுநகர் மாவட்டம் வடமலாபுரத்தில் புதிய மதுக்கடை திறக்கப்பட இருப்பதை அறிந்த அந்த ஊர் மக்கள் அதை எதிர்த்து போராட்டம் நடத்தியுள்ளனர். அதுமட்டுமின்றி, மதுக்கடையை திறக்கக் கூடாது என்று வலியுறுத்தி ஊராட்சி மன்றக் கூட்டத்திலும் கடந்த ஜூலை ஒன்றாம் தேதி தீர்மானம் நிறைவேற்றினர். ஆனால், அதை மதிக்காத தமிழக அரசு வடமலாபுரத்தில் மதுக்கடையை திறக்க ஜூலை 24-ஆம் தேதி அனுமதி அளித்துள்ளது. இதை எதிர்த்து அந்த ஊரைச் சேர்ந்த ஒருவர் தொடர்ந்த பொதுநல வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன் தீர்ப்பளித்த நீதிபதிகள் பால் வசந்த குமார், தேவதாஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு,‘‘ ஓர் ஊரில் மதுக்கடை திறக்கக் கூடாது என்று அந்த ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், அதை ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மதிக்க வேண்டும்; அவர்களின் கோரிக்கையை முறையான கோணத்தில் ஆய்வு செய்து முடிவெடுக்க வேண்டும்’’ என்று அறிவுறுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி, வடமலாபுரத்தில் புதிய மதுக்கடையை திறக்கக் கூடாது என்றும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது.
மதுக்கடைகளை எதிர்த்து போராடும் மக்கள் மீது தடியடி நடத்தி கலைத்து விட்டு, விருப்பம் போல புதிய மதுக்கடைகளை தமிழக அரசு திறந்து வரும் நிலையில், மக்களின் உணர்வுகளை அரசு மதிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஒரு கிராமத்தில் உள்ள மதுக்கடைக்கு எதிராக அந்த கிராம சபையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டால், அந்த மதுக்கடையை உடனடியாக மூட வேண்டும் என்ற சட்டம் மராட்டியத்தில் உள்ளது. அதேபோன்ற சட்டத்தையாவது தமிழகத்தில் கொண்டுவாருங்கள் என கடந்த 6 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறேன். ஆனால், அதற்கு தமிழகத்தில் இருந்த அரசுகள் முன்வராத நிலையில், அந்த சட்டத்தின் அம்சங்களை தமிழகத்திலும் செயல்படுத்துவதற்கான விதையை தனது தீர்ப்பின் மூலம் உயர்நீதிமன்றம் விதைத்துள்ளது. இந்தத் தீர்ப்பை பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் பாராட்டி, வரவேற்கிறேன்.
அதுமட்டுமின்றி, ‘‘புதிய மதுக்கடைகளை திறந்து அரசுக்கு அதிக வருமானத்தை ஈட்டித் தருவதே டாஸ்மாக் அதிகாரிகளின் கொள்கையாக உள்ளது. மதுக்கடைகளின் பெயர்ப்பலகையில் கூட மதுவால்  நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு கேடு என்று சுட்டிக்காட்டப்படுகிறது. ஆனால், நடைமுறையில் இந்த அக்கறையை அரசு காட்டுவதில்லை. மதுக்கடைகளால் வருமானம் வருகிறது என்பதற்காக மக்களின் உணர்வுகளையும், மக்கள் நலனையும் புறக்கணித்துவிட்டு புதிய மதுக்கடைகளை அரசு திறப்பதை அனுமதிக்க முடியாது’’ என்றும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் சவுக்கடி கொடுத்துள்ளனர்.  நீதிபதிகளின்  அறிவுரையையும், மக்கள் நலனையும் மதிக்க வேண்டும் என்ற எண்ணம் தமிழக அரசுக்கு இருக்குமானால் தமிழகத்தில் உள்ள மதுக்கடைகள் அனைத்தையும் உடனடியாக மூட வேண்டும். ஆனால், மதுவை கொடுத்து மக்களைக் கொள்ளும் இந்த அரசிடமிருந்து அப்படிப்பட்டதொரு மக்கள் நலன் காக்கும் செயலை எதிர்பார்க்க முடியாது.
ஆனால், கிராம ஊராட்சியிலோ அல்லது கிராமசபையிலோ மதுக்கடைகளை மூட வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், அதை மதித்து மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. எனவே, வடமலாபுரம் மக்களுக்கு இருந்த அதே சமூக அக்கறையுடன், வரும் 15-ஆம் தேதி விடுதலை நாளையொட்டி அனைத்து கிராமங்களிலும் நடைபெறவுள்ள கிராமசபைக் கூட்டங்களில் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற தமிழக மக்கள் முன்வர வேண்டும். அவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், அதை அடிப்படையாக வைத்து நீதிமன்றத்தின் உதவியுடன் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மதுவிலக்கை ஏற்படுத்த முடியும். இதன் மூலம் மது அரக்கனிடமிருந்து மக்களுக்கு உண்மையான விடுதலையை பெற்றுத் தர முடியும் என்பதால், கிராம சபைகளில் மதுவிலக்கு தீர்மானத்தை கொண்டுவருவதை தங்களின் விடுதலை நாள் கடமையாக நினைத்து நிறைவேற்றும்படி பொதுமக்களையும், சமூக ஆர்வலர்களையும் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் ராமதாஸ்.

Saturday, August 10, 2013

ஆந்திராவில் திருப்பதி, காளஹஸ்தி உள்ளிட்டவற்றை தமிழகத்துடன் இணையுங்கள்: ராமதாஸ்!

சென்னை: ஆந்திராவில் தமிழர் வாழும் பகுதிகளை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆந்திரத்தை இரண்டாக பிரித்து தெலுங்கானா தனி மாநிலத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், சித்தூர் மாவட்டத்தில் தமிழர் பெரும்பான்மையினராக வாழும் பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.ஆந்திரத்தில் உரிமை இழந்து வாடும் நமது தமிழ் சொந்தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக மக்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் உள்ளது.
மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட துரோகத்தை சரி செய்ய இப்போது மிகச்சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. அப்போது ஆந்திரத்துடன் இணைக்கப்பட்ட தமிழர்கள் அதிகம் வாழும் திருப்பதி, திருகாளஹஸ்தி, புத்தூர், சத்தியவேடு, சித்தூர் உள்ளிட்ட 8 வட்டங்களை மீண்டும் தமிழகத்துடன் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இக்கோரிக்கையை தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒரே குரலில் வலியுறுத்த வேண்டும்.
 
 

டோல்கேட் தாக்குதல் சம்பவம்: அன்புமணிக்கு சென்னை ஹைகோர்ட் முன்ஜாமீன்!

சென்னை: உளுந்தூர்பேட்டை அருகே டோல்கேட்டில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.சேலத்தில் இருந்து வந்த பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸின் கார் சென்னை, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உளுந்தூர்பேட்டை டோல்கேட்டை கடக்கும் முயன்றபோது தானியங்கி டோல்கேட் மூடிக்கொண்டது. சுங்க கட்டணம் அல்லது வி.ஐ.பி. பாஸ் காட்டினால் தான் கேட் திறக்கும் என டோல்கேட் ஊழியர்கள் கூறியுள்ளனர். இதை ஏற்க மறுத்த பா.ம.க.வினர் டோல்கேட்டை திறக்க வேண்டும் என்று கூறி ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளனர்.பிரச்சனை பெரிதாகி அன்புமணி ராமதாஸுடன் வந்த பா.ம.க.வினர் சிவகொழுந்து என்ற டோல்கேட் ஊழியரை தாக்கியதுடன் அதை தடுக்க வந்த மேலும் இரண்டு ஊழியர்களையும் தாக்கியுள்ளனர். மேலும், டோல்கேட்டில் இருந்த கண்ணாடி, கதவுகள், 3 கம்யூட்டர்களையும் பா.ம.கவினர் அடித்து நொறுக்கியுள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பாக, அன்புமணி ராமதாஸ் உள்பட பா.ம.க.வினர் மீது விழுப்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதையடுத்து, விழுப்புரம் டி.எஸ்.பி. சங்கர் தலைமையிலான போலீஸ் படையினர் இன்று இரவு சுமார் 8.30 மணியளவில் அன்புமணி ராமதாஸை கைது செய்வதற்காக சென்னை, தி.நகரில் உள்ள அவரது வீட்டை முற்றுகையிட்டனர்.இதைத்தொடர்ந்து வீட்டில் இருந்த அன்புமணி ராமதாஸின் உதவியாளர் மற்றும் பா.ம.க.வினருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் அன்புமணி சார்பாக வழக்கறிஞர் பாலு சென்னை உயர்நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதி ஆர்.கே. அகர்வாலை சந்தித்து, முன் ஜாமீன் கோரும் மனுவை அவரச மனுவாக கருதி விசாரிக்குமாறு கேட்டுக்கொண்டார். இதனை கேட்ட நீதிபதி, ஜாமீன் மனுக்களை விசாரிக்கும் நீதிபதி ராஜேந்திரன் இதனை விசாரிப்பார் என உத்தரவிட்டார்.இதனை தொடர்ந்து அன்புமணி ராமதாஸின் முன் ஜாமீன் மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு மேல் விசாரணைக்கு வந்தது அப்போது மனுவை விசாரித்த நீதிபதி அன்புமணிக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.2 லட்சம் ரூபாய் வங்கியில் பிணைத்தொகையாக செலுத்தவேண்டும் எனவும். 2 நாட்கள் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகவேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.

Thursday, August 8, 2013

அ.தி.மு.க., அரசு மீது மக்கள் அதிருப்தி:பா.ம.க., பாய்ச்சல்

சேலம்: ""அ.தி.மு.க., அரசு மீது, மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது,'' என்று அன்புமணி கூறினார்.சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள, பா.ம.க., நிர்வாகிகளை சந்தித்து விட்டு, சேலம் மாவட்ட, பா.ம.க.,பொதுக்குழுவில் அன்புமணி கலந்து கொண்டார்.
அன்புமணி நிருபர்களிடம் கூறியதாவது:சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள, 21 பேர் மீது, குண்டர் தடுப்பு சட்டம், தேசிய பாதுகாப்பு சட்டம் போடப்பட்டுள்ளது. இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு மூன்று மாதங்களாகி விட்டன. வன்னியர் சமுதாயத்தை பழி வாங்கும் நோக்கில், அரசு இப்படி செய்துள்ளது.தமிழகம் முழுவதும், 123 பேர் தேசிய பாதுகாப்பு சட்டம், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இவர்களில், 30 பேர் நீதிமன்றம் மூலம் விடுவிக்கப்பட்டுள்ளனர்.லோக்சபா தேர்தல் அ.தி.மு.க.,வுக்கு பலத்த தோல்வியை அளிக்கும். நகரங்களில் மட்டுமின்றி, கிராமங்களிலும் மக்கள் மத்தியில் அரசு மீது அதிருப்தி நிலவுகிறது. தமிழகத்தில், இரண்டு ஆண்டுகளில், 4,000 கொலை நடந்துள்ளது. தமிழகத்தில், போலீஸ் ஆட்சியே நடக்கிறது.
போலீஸ் துறையில் இருப்பவர்கள் இறந்தால், மூன்று லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. ஆனால், பிற துறைகளில் அது போன்று வழங்கப்படுவது இல்லை. பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் உட்பட அனைவருக்கும், போலீஸ் பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான காரணம் தெரிவிக்கப்பட வில்லை. மக்கள் சொத்துக்களை சுரண்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்த தூத்துக்குடி கலெக்டர் மாற்றப்பட்டுள்ளார். இதை, பா.ம.க., வன்மையாக கண்டிக்கிறது.
இவ்வாறு அன்புமணி கூறினார்

ஈழப்போரை கொச்சைப்படுத்தும் 'மெட்ராஸ் கஃபே'வுக்கு தடை விதியுங்கள்: ராமதாஸ் கோரிக்கை

சென்னை: ஈழப்போரை கொச்சைப்படுத்தும் மெட்ராஸ் கஃபே படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஹிந்தி திரைப்பட நடிகர் ஜான் ஆபிரகாம் 'மெட்ராஸ் கஃபே' என்ற பெயரில் ஹிந்தித் திரைப்படம் ஒன்றை தயாரித்து நடித்துள்ளார். இலங்கையில் நடைபெற்ற விடுதலைப் போராட்டத்தை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தில் விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக சித்தரித்திருப்பதாக செய்திகள் வெளியானதை அடுத்து அப்படத்தை தமிழகத்தில் வெளியிடுவதற்கு ஈழ ஆதரவாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது.ஈழ ஆதரவாளர்களின் ஐயங்களுக்கு இதுவரை தெளிவான விளக்கம் எதையும் அளிக்காத நடிகர் ஜான் ஆபிரகாம் இப்போது மெட்ராஸ் கஃபே திரைப்படம் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வரும் 23-ஆம் தேதி தமிழகத்தில் வெளியிடப்படும் என்று அறிவித்திருக்கிறார்.இந்தப்படத்தில் விடுதலைப் புலிகளை தீவிரவாதிகளாக சித்தரித்திருக்கிறீர்களா? என்று அவரிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, "விடுதலைப்புலிகளை நாங்கள் ஆதரிக்கவும் இல்லை எதிர்க்கவும் இல்லை" என்று மழுப்பலாக பதிலளித்திருக்கிறார். ஆனால், இந்தத் திரைப்படத்தின் பெரும்பகுதி இலங்கையில் படம் பிடிக்கப்பட்டிருக்கிறது; இலங்கையில் இராஜபக்சே அரசின் ஆதரவுடன் அதிக திரை அரங்குகளில் திரையிடப்பட உள்ளது என்பதிலிருந்தே இந்தப் படம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை யூகிக்க முடியும்.1980-களின் இறுதியில் இந்திய அமைதிப்படை இலங்கைக்கு சென்றது முதல் 2009-ஆம் ஆண்டில் நடைபெற்ற ஈழப்போர் வரை விவரிக்கும் இப்படத்தில் விடுதலைப் புலிகள் மோசமானவர்களாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஈழ விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையிலும் காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக தெரிகிறது. மொத்தத்தில் இலங்கை அரசின் பிரச்சாரப் படத்தைப் போன்று இது தயாரிக்கப்பட்டிருக்கிறது.இலங்கையில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டை வேறு நாட்டிற்கு மாற்ற வேண்டும் என உலகம் முழுவதும் கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், இலங்கைப் படையினரை உத்தமர்களாக காட்டி, அவர்களுக்கு எதிரான போர்க்குற்றங்களையும், எதிர்ப்புகளையும் நீர்த்து போகச் செய்யலாம் என்ற எண்ணத்தில் தான் இந்தத் திரைப்படத்தை தயாரிக்க இலங்கை அரசு பல்வேறு உதவிகளை செய்திருக்கிறது.ஏற்கனவே, இந்தியாவில் ஈழத் தமிழர்களுக்கு எதிரான உணர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக மத்தியப் பிரதேசம், பீகார், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்குள்ள தலைவர்களை சந்தித்து பேசியுள்ளார். இந்த நிலையில் திரைப்படங்களின் மூலம் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எதிராக இந்திய மக்களிடையே நச்சு விதைகளைத் தூவுவதற்காகவே, இராஜபக்சே ஏற்பாட்டில் இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.இலங்கையில் நடைபெற்ற ஈழப்போர், இழந்த நாட்டை மீட்பதற்காக தமிழர்கள் நடத்திய போராட்டம்; இது மிகவும் உன்னத வரலாறு ஆகும். இத்தகைய ஒரு விடுதலை இயக்கத்தை கொச்சைப் படுத்தும் வகையில் திரைப்படம் தயாரித்திருப்பது உலகம் முழுவதும் உள்ள 10 கோடி தமிழர்களை அவமதிக்கும் செயலாகும். இதை நான் கடுமையாக கண்டிக்கிறேன்.பொதுவாக கருத்து சுதந்திரம் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும், திரைப்படங்கள் நல்ல விசயங்களை துணிச்சலாக எடுத்துக் கூற வேண்டும் என்பதுதான் எனது நிலைப்பாடு ஆகும். ஆனாலும், ஓர் இனத்தின் விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட படத்தை கருத்து சுதந்திரம் என்ற பெயரில் வெளியிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, மெட்ராஸ் கஃபே திரைப்படத்தின் அனைத்து மொழிப் பதிப்புகளுக்கும் தடை விதிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Read more at: http://tamil.oneindia.in/news/2013/08/08/tamilnadu-ban-madras-cafe-ramadoss-urges-centre-state-governments-180812.html

Wednesday, August 7, 2013

ராமதாஸ் இரமலான் வாழ்த்து



பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
முப்பது நாட்கள் பகலில் உண்ணாமலும், பருகாமலும் நோன்பிருந்து ஈகைத் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நல் உபதேசமான குர்&ஆனில் அருளப்பட்ட போதனைகள் அனைத்தையும் இந்நாளில் நினைவு கூர்ந்து அவற்றை கடைபிடிக்க உறுதியேற்க வேண்டும் என்றும், இல்லாதவர்களுக்கு உதவ வேண்டும் என்றும் இஸ்லாம் போதிக்கிறது. அதன்படியே இஸ்லாமியர்கள் தங்களால் இயன்ற கொடைகளை வழங்குகிறார்கள். ஆனாலும் பெரும்பாலான இஸ்லாமியர்களின் வாழ்க்கை நிலை சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவை அவர்களுக்கு போதிய அளவில் கிடைக்காததே இதற்கு காரணம் ஆகும். இக்குறையை போக்க இஸ்லாமிய பெருமக்களுக்கு தேசிய அளவில் போதுமான அளவுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யப்பட வேண்டும்.
இறைதூதர் நபிகள் நாயகம் ஆற்றிய இறுதி உரையில் தெரிவிக்கப்பட்ட அறிவுரைகள் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி, மனித நேயத்திலும், நீதி நேர்மையிலும் நம்பிக்கை கொண்ட அனைவரும் கடைபிடிக்க வேண்டியவை ஆகும். அவற்றை கடைபிடித்து, உலகில் அமைதி, வளம், நல்லிணக்கம் ஆகியவற்றை பெருக்கவும், தீமைகளை
 

தாதுமணல் கொள்ளையை தடுத்த ஆட்சியர் இடமாற்றம் : ராமதாஸ் கண்டனம்

 

கடமையை செய்ததற்காக நியாயமான அதிகாரி ஒருவர் பழி வாங்கப்பட்டிருப்பது கண்டிக்கத் தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் வட்டத்திற்குட்பட்ட வைப்பாறு, வேம்பார் உள்ளிட்ட கிராமங்களில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த தாது மணல் குவாரிகளில் ஆய்வு நடத்த ஆணையிட்ட மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் அவசர அவசரமாக இடமாற்றம் செய்யப்பட்டு முக்கியத்துவம் இல்லாத பதவியில் அமர்த்தப்பட்டிருக்கிறார். கடமையை செய்ததற்காக நியாயமான அதிகாரி ஒருவர் பழி வாங்கப்பட்டிருப்பது கண்டிக்கத் தக்கது.
விளாத்திக்குளம் வட்டத்தில் 23 ஏக்கரில் மட்டும் கார்னெட் மணலை தோண்டி எடுப்பதற்கான உரிமம் தொழிலதிபர் வைகுந்தராஜனுக்கு சொந்தமான வி.வி. மினரல்ஸ், அவரது சகோதரர் சுகுமாறனுக்கு சொந்தமான பீச் மினரல்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.
ஆனால், உள்ளூர் அதிகாரிகள் மற்றும் ஆளுங்கட்சியினர் துணையுடன் அப்பகுதியில் உள்ள 200&க்கும் அதிகமான ஏக்கரில் சட்டவிரோதமாக சுரங்கங்களை அமைத்து இந்த இரு நிறுவனங்களும் கார்னெட் எனப்படும் தாது மணலை கொள்ளையடித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளன. இதுதொடர்பாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து அதிகாரிகள் குழுவை அனுப்பி சட்டவிரோத மணல் குவாரிகளில் அதிரடி ஆய்வு நடத்த மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் ஆணையிட்டுள்ளார். அதன்படி அந்தக் குழுவினர் ஆய்வை முடித்து திரும்புவதற்குள்ளாகவே ஆட்சியர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.
சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வந்த தாது மணல் குவாரிகளின் உரிமையாளர்களில் ஒருவரான வி. வைகுந்தராஜன் தென்கோடி மாவட்டங்களின் அதிகார மையங்களையே ஆட்டிப்படைக்கும் சக்தி கொண்டவர் ஆவார்.
ஆளுங்கட்சித் தொலைக்காட்சியின் உரிமையாளரான இவர் மீது கடந்த ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்ட போது, இவருக்காக தற்போதைய முதலைமைச்சரும், அப்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான ஜெயலலிதா நேரடியாக களமிறங்கி அப்போதைய அரசை எதிர்த்து குரல் கொடுத்தார் என்பதிலிருந்தே இவரின் அரசியல் செல்வாக்கு எப்படிப்பட்டது என்பதையும், இவரை எதிர்த்ததற்கான தண்டனையாகவே மாவட்ட ஆட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார் என்பதையும் புரிந்து கொள்ள முடியும்.
நாடு முழுவதும் நடைபெறும் மணல் கொள்ளைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் & மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியின்றி நடத்தப்படும் மணல் குவாரிகளை மூட வேண்டும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நேற்று முன்தினம் தான் உத்தரவிட்டிருந்தது. அதன் தீர்ப்பை முழுமையாக செயல்படுத்துவதுடன், சட்டவிரோத மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நேற்று நான் வலியுறுத்தியிருந்தேன். ஆனால், அதே நாளில் தாது மணல் கொள்ளையை தடுக்க முயன்ற அதிகாரியை தமிழக அரசு பணியிட மாற்றம் செய்திருக்கிறது. மணல் கொள்ளையை தடுப்பதில் தமிழக அரசின் அக்கறை இந்த லட்சனத்தில் தான் இருக்கிறது.
ஒரு மாநிலத்தின் இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதை தடுப்பது தான் அம்மாநில அரசின்  முதன்மைக் கடமையாக இருக்க வேண்டும். ஆனால், தமிழக அரசோ இதற்கு மாறாக செயல்பட்டு வருகிறது.
மதுரை மாவட்டத்தில் கிரானைட் ஊழலில் சம்பந்தப்பட்டவர்களுடன் சேர்ந்து கொண்டு, அந்த ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளை இடமாற்றம் செய்தது, வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் பகுதியில் மணல் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுத்ததற்காக காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தர்மராஜை பணியிட மாற்றம் செய்தது, கன்னியாகுமரி மாவட்டத்தில் தாது மணல் கடத்தலைத் தடுத்தற்காக கல்பனா சாவ்லா விருது பெற்ற மாவட்ட ஆட்சியர் ஜோதி நிர்மலாவை அதிகாரம் இல்லாத பதவியில் முடக்கி வைத்திருப்பது என தமிழக அரசின் நடவடிக்கைகள் அனைத்தும்  மணல் கொள்ளையர்களுக்கு ஆதரவாகவே உள்ளது.
இனியாவது தமிழக அரசு அதன் கடமையை உணர்ந்து, தாது மணல் கடத்தலை தடுக்க முயன்ற மாவட்ட ஆட்சியரின் பணியிட மாற்றத்தை ரத்து செய்து அவரை மீண்டும் அதே பதவியில் அமர்த்த வேண்டும். அதுமட்டுமின்றி, தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் நடைபெற்று வரும் ஆற்று மணல் கடத்தல் மற்றும் தாது மணல் கடத்தல் , இதில் நடந்துள்ள பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முறைகேடுகள் மற்றும் இதில் சம்பந்தப்பட்டவர்கள் குறித்து அதிகாரமளிக்கப்பட்ட குழுவைக் கொண்டு விசாரணை நடத்த ஆணையிட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன்’’ என்று கூறியுள்ளார்.

Tuesday, August 6, 2013

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவு தமிழகத்தின்



பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ’’இந்தியாவிலுள்ள அனைத்து ஆறு களிலும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் இல்லாமல் மணல் அள்ளக் கூடாது என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஆணையிட்டிருக்கிறது.
இயற்கை வளங்களையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் நோக்குடன் அளிக்கப்பட்டுள்ள இந்த இடைக் காலத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.
மணல் கொள்ளையில் மிகப்பெரிய அளவில் ஊழலும் நடக்கிறது. தமிழ் நாட்டில் ஆண்டுக்கு சுமார் 20 ஆயிரம் கோடி மணல் விற்பனை நடப்பதாக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், இதன் மூலம் அரசுக்கு கிடைக்கும் வருமானம் வெறும் ரூ.200 கோடிக்கும் குறைவு என்பதிலிருந்தே மணல் கொள்ளை மற்றும் அதில் நடைபெறும் முறை கேடுகளின் தீவிரத்தை புரிந்து கொள்ள முடியும்.
மணல் கொள்ளையை தடுப்பதற்காக சென்னை உயர்நீதிமன்றமும், மதுரை உயர்நீதிமன்றக் கிளையும் ஏற்கனவே வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகளை வழங்கியுள்ளன. ஆனால், அவை எதுவும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வில்லை.
தமிழகத்தின் பெரும்பான்மையான மணல் வளம் கொள்ளையடிக்கப்பட்டு விட்ட நிலையில், மீதமுள்ள மணலையும் சுரண்டி எடுக்க அரசு மற்றும் அதிகாரிகளின் துணையுடன் முயற்சி நடைபெற்று வருகிறது. இத்தகைய சூழலில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்துள்ள இந்த உத்தரவு தமிழகத்தின் மணல் வளத்தை பாதுகாப்பதற்கு கிடைத்த வரப்பிரசாதம் ஆகும்.
எனவே, மணல் கொள்ளையை தடுக்கும் நோக்குடன் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அளித்துள்ள இந்த தீர்ப்பை தமிழக அரசு முழுமையாக செயல்படுத்த வேண்டும். இதற்காக காவல் துறையில் தனிப் பிரிவை ஏற்படுத்துதல், கண்காணிப்புக் குழுக்களை அமைத்தல், கடுமையான தண்டனை வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
இதுகுறித்த செயல் திட்டத்தை தமிழக அரசு தயாரித்து வரும் 14–ஆம் தேதி இந்த வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மீண்டும் விசாரணைக்கு வரும் போது தாக்கல் செய்ய வேண்டும் என்று வலியுறுத் துகிறேன்’’என்று கூறியுள்ளார்.

Sunday, August 4, 2013

லோக்சபா தேர்தலில் 40திலும் தனித்து போட்டி... 15ல் வெற்றி: அன்புமணி ராமதாஸ்

சென்னை: லோக்சபா தேர்தலில் பாமக 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் 15 தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று அக் கட்சியின் இளைஞர் அணி தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் மேற்கு மாம்பலத்தில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு அன்புமணி தலைமை வகித்துப் பேசினார் அப்போது அவர் கூறியதாவது:லோக்சபா தேர்தல் நவம்பர் மாதமே நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே பாமகவினர் அதைச் சந்திக்க நாம் தயாராக இருக்க வேண்டும். தற்போது கட்சி தொடங்கி வெள்ளி விழா கொண்டாடுகிறோம். கட்சியின் கொள்கைகள் தொடர்பாக மக்களிடம் தெரிவிக்க கூட்டங்கள், கருத்தரங்குகள் நடத்த வேண்டும்.மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும்.இதில் 15 தொகுதிகளில் நிச்சயம் வெற்றிபெறுவோம்.ராமதாஸ் கைதுக்கு முன்பு 10 தொகுதிகளில்தான் வெற்றிபெறுவோம் என்ற நிலைதான் இருந்தது.தற்போது அது அதிகரித்துள்ளது.தமிழக மக்கள் மாற்றம் வராதா என்று ஏங்கிக் கொண்டுள்ளனர். அந்த மாற்றத்தை பாமகவால்தான் கொடுக்க முடியும்.பாமகவினர் ஐந்து ஐந்து பேராக பிரிந்து, வீடு வீடாகச் சென்று, எங்களுக்கு ஒருமுறை வாய்ப்பு தாருங்கள், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை ஒழிப்போம், ஒரு பைசா செலவு இல்லாமல் கல்வியைக் கொடுப்போம், இந்தியாவில் 108 ஆம்புலன்ஸ் திட்டத்தைக் கொண்டு வந்தது நாங்கள்தான் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.சமச்சீர் கல்வியைக் கொண்டுவர பல்வேறு போராட்டங்களை நடத்தியது பாமகதான். நுழைவுத் தேர்வு ரத்து, லாட்டரி ஒழிப்பு, புகையிலைக்குத் தடை போன்றவற்றுக்குப் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றோம். இதையெல்லாம் மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்.ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள ஜெ.குருவுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் சிகிச்சை அளிக்காதது கண்டிக்கத்தக்கது. பொது சொத்துக்கு சேதம் விளைவித்தோம் என்று 70 லட்சம் தர வேண்டும் என்று செய்தி வருகிறது.ஆனால் ஒரு பைசாகூட தரமாட்டோம் என்றார் அவர்.

சேரன் கூறுவதைப் பார்த்தால் அவரது மகளின் காதல் நாடகக் காதலாகவே தோன்றுகிறது: ராமதாஸ்

சென்னை: தனது மகள் காதல் விவகாரத்தில் அவரை காப்பாற்ற போராடும் இயக்குனர் சேரனுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழ்திரைப்பட இயக்குனரும், நடிகருமான சேரனின் மகள் தாமினியின் காதல் விவகாரம் பற்றி ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கின்றன. ஒரு பொறுப்புள்ள, பாசமுள்ள தந்தை என்ற வகையில் இந்த விசயத்தில் சேரனின் மனம் எந்த அளவுக்கு காயப்பட்டிருக்கும் என்பதை என்னால் உணர முடிகிறது.

தமது காதலை எதிர்ப்பதாகவும், தனது காதலனை மிரட்டுவதாகவும் சேரன் மீது அவரது மகள் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார். இது தொடர்பான விசாரணைக்கு நேர் நின்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சேரன், ‘‘எனது மகளின் காதலை நான் முதலில் ஆதரித்தேன். ஆனால், ஒரு தகப்பன் என்ற முறையில் எனது மகளுக்கு கணவனாக வருபவரையும், எனக்கு மருமகனாக வருபவரையும் நல்லவரா, கெட்டவரா என்று பார்க்கக்கூடாதா? ஒரு தவறான பையனை எப்படி எனது மகளின் கணவனாக ஏற்றுக் கொள்ள முடியும்?'' என்று கேட்டிருக்கிறார். இந்த விசயத்தில் சேரனின் கேள்விகள் நியாயமானவை.

இது தவிர சேரன் தெரிவித்துள்ள வேறு சில கருத்துக்களையும், குற்றச்சாட்டுகளையும் வைத்து பார்க்கும் போது இதுவும் ஒரு நாடகக் காதலாகவே தோன்றுகிறது. சேரன் கூறியுள்ள கருத்துக்களைத் தான் நானும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

அனைத்து சமுதாய பேரியக்கத்தின் கூட்டங்களில் கூட இதே கருத்தை வலியுறுத்தி தான் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ‘‘பள்ளி, கல்லூரி மாணவிகளின் படிப்பைக் கெடுக்காமல், காதல் நாடகம், கட்டப்பஞ்சாயத்து, பணப் பறிப்பு இல்லாமல், சாதி ஒழிப்பு எனும் போலி வேடம் போடாமல், கல்வி, வேலைவாய்ப்பு, வருமானம் ஆகியவற்றுக்கு முன்னுரிமைத் தந்து 21 வயதுக்கு மேல் நடக்கும் காதல் திருமணங்களை நாங்கள் எதிர்க்கவில்லை'' என்று தீர்மானத்தில் தெளிவாகக் கூறியிருந்தோம்.

எங்களின் நிலைப்பாட்டில் உள்ள நியாயத்தை இயக்குனர் சேரனும், அவரைப் போன்ற சூழலில் உள்ள பெற்றோரும் இப்போது உணர்ந்திருப்பார்கள். இந்த விவகாரத்தில் சென்னை மாநகர காவல்துறை கடைப்பிடித்து வரும் முதிர்ச்சியான அணுகுமுறையும் வரவேற்கத் தக்கது.

சேரனின் மகளும், அவரது காதலரும் சட்டப்படி திருமணம் செய்து கொள்வதற்கான வயதை அடைந்து விட்டவர்கள் என்பதைக் காரணம் காட்டி, அவர்களின் பொறுப்பற்ற செயலுக்கு பச்சைக் கொடி காட்டிவிடாமல், படிப்பை முடிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், வேலை வாய்ப்பு பெற்று வாழ்க்கையில் நிலை நிறுத்திக் கொண்ட பின்னர் காதல் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அறிவுரை கூறியிருப்பது பாராட்டத்தக்கது.

தருமபுரி இளவரசன் - திவ்யா காதல் நாடகத் திருமண விவகாரத்திலும் அங்குள்ள காவல்துறை அதிகாரிகள் இத்தகைய அணுகு முறையை கடைபிடித் திருந்தால், திவ்யாவின் தந்தை நாகராஜன் தேவையின்றி தற்கொலை செய்து கொண்டிருக்க மாட்டார். அதைத் தொடர்ந்து நடந்த விரும்பத்தகாத நிகழ்வுகளும் தவிர்க்கப்பட்டிருக்கும்.

ஆனால், முற்போக்கு வாதிகள் என்ற போர்வையில் செயல்பட்டுவரும் சில பிற்போக்கு சக்திகள் ‘ஆதலினால் காதல் செய்வீர்' என்று கூறி படிக்கும் வயதில் காதல் செய்யும்படி பிரச்சாரம் செய்து வருகின்றனர். குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்படுவதற்கும், கலாச்சார சீரழிவுக்கும் மட்டுமே இத்தகைய பிரச்சாரங்கள் வழி வகுக்கும்.

இனி வரும் காலங்களிலாவது நல்லது, கெட்டது அறியாத வயதில் வரும் காதல் பிரச்சினைகளில் அனைத்து தரப்பினரும் முதிர்ச்சியுடனும், பொறுப்புடனும் நடந்து கொள்ள வேண்டும். இதன் மூலமாக மட்டுமே அப்பாவி பெற்றோர் தற்கொலை செய்து கொள்வதை தடுக்க முடியும்.

பதின்வயதில் வயதில் ஏற்படும் ஹார்மோன் கோளாறுகள் காரணமாக ஏற்படும் காதலித்து திருமணம் செய்து கொள்ளும் பெண் களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கு ஏற்படும் துயரங்கள் மற்றும் கொந்தளிப்புகள் குறித்து ஒரு வழக்கில் விரிவாக விளக்கியுள்ள கர்நாடக உயர்நீதி மன்றம், இந்தப் பிரச்சினைக்கான தீர்வையும் வழங்கியுள்ளது.

21 வயதுக்குட்பட்ட பெண்கள் காதலித்து திருமணம் செய்து கொள்ளும் போது அத்திருமணத்திற்கு அவர்களின் பெற்றோர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும் இல்லா விட்டால் அத்தகைய திருமணங்கள் செல்லாதவை அல்லது ரத்து செய்யத் தகுந்தவை என அறிவிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று மத்திய அரசுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் பரிந் துரைத்திருக்கிறது.

21 வயதுக்கு முன்பாக திருமணம் செய்யும்போது அதற்கு பெற்றோரின் ஒப்புதல் பெற வேண்டும் என்பது சிங்கப்பூர், ஜப்பான், பிரேசில் ஆகிய நாடுகளில் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. எனவே, இதில் உள்ள நியாயத்தை உணர்ந்து, 21 வயதுக்கு முன்பாக நடைபெறும் திருமணங்களுக்கு பெற்றோரின் ஒப்புதல் கட்டாயமாக்கும் வகையில் உடனடியாக சட்டத் திருத்தம் கொண்டு வரும்படி வலியுறுத்துகிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்

Saturday, August 3, 2013

பள்ளிகளுக்கு சேவை வரி விதிப்பைக் கைவிட வேண்டும் : ராமதாஸ்

பள்ளிகளுக்கு சேவை வரி விதிப்பதைக் கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிளுக்கு சேவை வரி விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள 5500 பள்ளிகளுக்கும், ஏராளமான கல்லூரிகளுக்கும் சேவை வரி செலுத்தும்படி கலால் மற்றும் சுங்கத்துறை அறிவிக்கை அனுப்பியிருப்பதாகக் கூறப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் வழங்கப்படும் கல்வி தவிர்த்த பிற சேவைகள் அனைத்துக்கும் சேவை வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அப்போதே, கல்விச் சேவைகள் மீதான வரிகளை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினேன். ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாத மத்திய அரசு அதன் முடிவில் உறுதியாக இருந்துவிட்டது. இப்போது பள்ளி மற்றும் கல்லூரிகளில் வழங்கப்படும் போக்குவரத்து வசதி,  மாணவர் விடுதிகள், தேனீர் மற்றும் சிற்றுண்டி வசதி, நுழைவுத் தேர்வு பயிற்சி, யோகா வகுப்புகள், சிறப்புப் பயிற்சி வகுப்புகள், கணிணி பயிற்சி ஆகிய சேவைகளுக்கு 12.36 விழுக்காடு வீதம் சேவைவரி செலுத்தவேண்டும் என்று மத்திய அரசு நெருக்கடி அளித்துவருகிறது.
தரமான கல்வியை வழங்க முடியாமல் கல்வித் துறையை தனியாரிடம் தாரை வார்த்து கல்விக் கொள்ளை நடப்பதற்கு துணை போன மத்திய அரசு இப்போது கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் சேவைகளுக்கு சேவைவரி விதித்திருப்பது ‘குப்புறத் தள்ளிய குதிரை குழியும் பறித்ததாம்’ என்ற கதையாக உள்ளது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது. போக்குவரத்து வசதி, உணவகம், தனிப்பயிற்சி வகுப்பு ஆகியவை அத்தியாவசிய சேவை இல்லை என்றும், இவை வணிக நோக்கம் கொண்டவை என்றும் கூறி இந்த வரிவிதிப்பை நியாயப்படுத்த மத்திய அரசு முயல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.
மத்திய அரசு கூறுவதை போல இவை வணிக நோக்கம் கொண்டவை என்றே வைத்துக் கொண்டாலும், இவற்றுக்கு சேவை வரி விதிக்கப்பட்டால் அதனால் பாதிக்கப்படுபவர்கள் மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் தானே தவிர, பள்ளி நிர்வாகங்கள் அல்ல. ஏற்கனவே கல்வியை வணிகமாக்கி கொள்ளையடித்து வரும் தனியார் பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள் இந்த சேவைவரியை தங்களது கையிலிருந்து ஒருபோதும் கட்ட மாட்டார்கள். இந்த வரியையும் மாணவர்கள் தலையில் தான் சுமத்துவார்கள்.
இதனால், ஒவ்வொரு மாணவரும் ஆண்டுக்கு 5 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். தனியார் பள்ளிகளில் நடக்கும் கல்விக் கொள்ளையை கட்டுப்படுத்த தவறிவிட்ட மத்திய, மாநில அரசுகளுக்கு கல்வி சம்பந்தமான எந்த சேவைக்கும் வரி விதிக்க உரிமை இல்லை. இந்த வரிவிதிப்பால் மாணவர்கள் தான் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே, தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சேவை வரி விதிக்கப்பட்டிருப்பதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Friday, August 2, 2013

இடஒதுக்கீட்டை பாதுகாக்க கூட்டு இயக்கம்! சரத்யாதவுடன் அன்புமணி சந்திப்பு!



 


பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மருத்துவர் அன்புமணி இராமதாசு டெல்லியில் 02.08.2013 வெள்ளிக்கிழமை ஐக்கிய ஜனதாயதளத் தலைவர் சரத் யாதவை சந்தித்து பேசினார்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கழகத்தில் மருத்துவ பேராசிரியர்களுக்கான வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்திருப்பதால் ஏற்பட்டுள்ள சூழல் குறித்தும், இதனால் மற்ற பல்கலைக் கழகங்களின் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு பாதிக்கப்படும் ஆபத்து இருப்பது குறித்தும் இருவரும் விவாதித்தனர்.
அப்போது இட ஒதுக்கீட்டை பாதுகாக்க கூட்டு இயக்கம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக சரத் யாதவுக்கு மருத்துவர் இராமதாசு எழுதிய கடிதத்தையும் சரத் யாதவிடம் அன்புமணி ஒப்ப்டைத்தார்.
தொடர்ந்து ராஷ்ட்ரீய ஜனதாதளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ், சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் ஆகியோரையும் அன்புமணி இராமதாஸ் சந்தித்து பேச உள்ளார் என பாமக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: