Friday, June 21, 2013

என்.எல்.சி. பங்கு விற்பனை முடிவை கைவிட வேண்டும்: அன்புமணி ராமதாஸ்



பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாஸ்  வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான 93.56 % பங்குகளில் 5 விழுக்காட்டை தனியாருக்கு விற்க பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்திருக்கிறது.
நெய்வேலி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய கடந்த 17 ஆண்டுகளாகவே மத்தியில் உள்ள அரசுகள் முயற்சி செய்து வருகின்றன. இம்முடிவை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தியிருக்கிறது ; மற்ற கட்சிகளும் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் பங்கு விற்பனை முடிவை மத்திய அரசு தற்காலிகமாக கைவிட்டிருந்தது.
இம்மாத தொடக்கத்தில் நெய்வேலி பழுப்பு நிறுவனத்தின் 5% பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு தீர்மானித்த போதும், தமிழக மக்களின் எதிர்ப்பு காரணமாக அம்முடிவு நிறுத்தி வைக்கப்பட்டது. என்.எல்.சி பங்குகளை விற்கும் முடிவை நிரந்தரமாக கைவிட வேண்டும் என தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும், தொழிற்சங்கங்களும் வலியுறுத்தி வரும் நிலையில், அதை நிராகரித்து விட்டு  பங்குகளை விற்க மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்திருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
என்.எல்.சி. நிறுவனத்தின் 5% பங்குகளை விற்பதால் அரசுக்கு ரூ. 466 கோடி தான் கிடைக்கும். ஆனால், என்.எல்.சி.  கடந்த ஆண்டில் வரிக்கு முந்தைய இலாபமாக ரூ. 2045 கோடியை ஈட்டியுள்ளது.  லாபத்தில் மத்திய அரசின் பங்குக்கான ஈவுத் தொகையாக கடந்த ஆண்டில் ரூ. 440 கோடியை என்.எல்.சி செலுத்தியிருந்தது. நடப்பாண்டில் ரூ. 500 கோடிக்கும் அதிக தொகையை செலுத்தவுள்ளது. இதனுடன் ஒப்பிடும் போது பங்கு விற்பனை மூலம் கிடைக்கும் தொகை பெரிதல்ல; இதனால் எந்த பயனும் ஏற்பட்டுவிடாது. மாறாக என்.எல்.சி. நிறுவனத்திலிருந்து மத்திய அரசுக்கு இவ்வளவு வருவாய் கிடைத்து வரும் நிலையில், ரூ. 466 கோடிக்கு ஆசைப்பட்டு பங்குகளை விற்பது  பொன் முட்டையிடும் வாத்தை அறுப்பதை போன்றதாகும்.

பொதுத்துறை நிறுவனங்களின் 10% பங்குகள் பொது மக்களுக்கு விற்பனை செய்யப்பட வேண்டும்  என்ற இந்திய பங்கு மற்றும் பரிமாற்ற வாரியத்தின் (செபி) நிபந்தனைப்படி தான் பங்குகளை விற்கும் முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய அரசு கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மத்திய அரசு நினைத்தால்,  இந்த நிபந்தனையிலிருந்து என்.எல்.சி.க்கு விதிவிலக்கு வழங்க முடியும். என்.எல்.சி நிறுவனத்தின் பங்குகள் விற்பனை செய்யப்பட்டால் அது தமிழகத்திற்கும், என்.எல்.சி.யில் பணியாற்றும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தி விடும். எனவே, என்.எல்.சி பங்கு விற்பனை முடிவை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும்.
என்.எல்.சி. நிறுவனத்தின் 5% பங்குகளை விற்பனை செய்ய அனுமதித்தால், அது மீதமுள்ள பங்குகளையும் படிப்படியாக விற்பனை செய்து, நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்க்க வகை செய்து விடும். எனவே, என்.எல்.சி. நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்யும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து அனைத்து கட்சிகளும் ஒரே அணியில் திரண்டு போராட முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: