Friday, July 31, 2015

சொத்துக் குவிப்பு : ஜெ. விடுதலையை போற்றி அரசு செலவில் ஆவணப்படமா? ராமதாஸ் கண்டனம்

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை போற்றும் வகையில் அரசு செலவில் ஆவணப்படம் எடுப்பதா என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் சாடியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வருவாய்க்கு மீறிய வகையில் ரூ.66.65 கோடி சொத்துக் குவித்த வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை  உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டிருக்கிறது. அதேநேரத்தில் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை போற்றும் வகையில் ‘தர்மம் வெல்லும்’ என்ற தலைப்பில் ஆவணப்படம் தயாரிக்கப்பட்டு அனைத்து திரையரங்குகளிலும் திரையிடப்பட்டு வருகிறது.

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு  அரசியல் பழிவாங்கலுக்காகத் தொடரப்பட்ட பொய் வழக்கு என்றும், அந்த வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதன் மூலம் நீதி வெற்றி பெற்றிருக்கிறது என்றும் அந்த ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சொத்துக் குவிப்பு வழக்கில்  ஜெயலலிதா எப்படி விடுதலை செய்யப்பட்டார்? இவ்வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்ற சிறப்பு நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பு எவ்வளவு தரமானது என்பதை அனைவரும் அறிவார்கள். ஜெயலலிதா சட்டவிரோதமாக வாங்கிய பரிசுப் பொருட்கள், சேர்க்காத சந்தாவுக்காக நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் மூலம் கிடைத்த வருமானம் போன்றவற்றை வருவாயாக கணக்கிட்டும், ஜெயலலிதா செய்த செலவுகள் மற்றும் சொத்து மதிப்பைக் குறைவாக கணக்கிட்டும் தான் அவர் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.

இவை மட்டுமின்றி, ஜெயலலிதாவின் வருவாயை ரூ.10.67 கோடி என்று கூட்டுவதற்கு பதிலாக ரூ.24.17 கோடி என்று கூட்டி, அதனடிப்படையில் அவரும், அவரது கூட்டாளிகளும் விடுவிக்கப்பட்டது  நீதித்துறை வரலாற்றில் இதுவரை நடக்காதது ஆகும். இந்த அளவுக்கு சட்டத்தை வளைத்தும் கூட  ஜெயலலிதா விடுதலை ஆவதற்கு வாய்ப்பு ஏற்படவில்லை. அதன்பின் 10% வரை கூடுதலாக சொத்து சேர்க்கலாம் என்று பொருந்தாத உச்சநீதிமன்றத் தீர்ப்பை மேற்கோள்காட்டியும், 20% வரை கூடுதலாக சொத்து சேர்க்கலாம் என்ற சம்பந்தமே இல்லாத ஆந்திர அரசின் சுற்றறிக்கையைக் காரணம் காட்டியும் தான் சொத்து வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டார். இப்படி ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டதை சட்ட வல்லுனர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் முடிவில் நீதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய சூழலில் தம்மைத் தாமே போற்றிக் கொள்ளும் வகையில், அரசு செலவில் ஆவணப்படத்தை ஜெயலலிதா தயாரித்து வெளியிட்டு மகிழ்வதை ஏற்க முடியாது; இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

ஒரு வகையில் பார்த்தால் இந்த ஆவணப்படம் தமிழக அரசுக்கு எதிரானது ஆகும். ஜெயலலிதா  மீது சொத்துக்குவிப்பு வழக்கைத் தொடர்ந்தது தமிழக அரசின் கையூட்டு ஒழிப்புத் துறை தான். ஜெயலலிதா மீது வழக்குத் தொடர்ந்ததை விமர்சிப்பது அரசின் செயல்பாட்டை குறை கூறுவதாகும். ஜெயலலிதாவை போற்ற வேண்டும் என்பதற்காக அரசு செலவில் அரசை விமர்சிப்பது சரியானதல்ல.

சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டது சரியா.... தவறா? என்ற வாதத்தை  ஒதுக்கி வைத்து விட்டு பார்த்தால் கூட, ஜெயலலிதாவைப் பற்றி இப்படி ஒரு ஆவணப்படம் அரசு செலவில் வெளியிடப்படுவதை நியாயப்படுத்த முடியாது. ஏனெனில், ஜெயலலிதா மீது சொத்துக்குவிப்பு வழக்குத் தொடரப்பட்டதும், அதிலிருந்து விடுவிக்கப்பட்டதும் அரசு நிர்வாகத்துடன் எவ்வகையிலும்   தொடர்பில்லாதவை. சொத்துக்குவிப்பு வழக்கு என்பது ஜெயலலிதா என்ற தனி மனிதர் மீது தொடரப் பட்டதாகும். அவ்வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்பட்டதும், பின்னர் அவ்வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டதும் அவரது தனிப்பட்ட விஷயங்கள். தமிழ்நாட்டில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய விஷயங்கள் ஏராளமாக இருக்கும் போது அவற்றை விட்டு விட்டு, ஜெயலலிதாவின் புகழ் பாடும் ஆவணப்படத்தை வெளியிடுவது தமிழ்நாட்டு மக்களுக்கு இழைக்கப்படும் பெருந்துரோகமாகும்.

எனவே, தர்மம் வெல்லும் என்ற தலைப்பிலான ஆவணப்படம் திரையரங்குகளில் திரையிடப் படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். அத்திரைப்படத்தை தயாரிக்கவும், இதுவரை திரையிடவும் ஆன செலவுகளை ஜெயலலிதாவிடமிருந்து வசூலிக்க மாநில ஆளுனர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: