Thursday, July 30, 2015

மீண்டும் தாதுமணல் அள்ள அனுமதியா? அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும் : ராமதாஸ்

 



மீண்டும் தாதுமணல் அள்ள அனுமதியா? அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில் தாது மணல் அள்ளுவதற்கு தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த இரு உத்தரவுகள் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. இதன்மூலம் 23 மாதங்களாக மூடப்பட்டிருந்த குவாரிகள் திறக்கப்பட்டு தாது மணல் அள்ளும் பணி மீண்டும் தொடங்கவிருக்கிறது.

தொழிலதிபர் வைகுண்டராஜனுக்கு சொந்தமான வி.வி. மினரல்ஸ், டிரான்ஸ்வேர்ல்ட் கார்னெட் ஆகிய நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில் தான் உயர்நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது. மேலும் இந்த இரு நிறுவனங்களுக்கு மட்டுமே இந்தத் தீர்ப்பு பொருந்தும் என்றும், மற்ற நிறுவனங்களுக்கு  விதிக்கப்பட்ட தடை தொடரும்; மற்ற நிறுவனங்கள் குறித்து ககன்தீப்சிங் பேடி குழு தாக்கல் செய்த அறிக்கை செல்லும் என்றும் நீதிமன்றம் அறிவித்திருக்கிறது. இந்தத் தீர்ப்பு மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். தூத்துக்குடி மாவட்டத்தில் தாது மணல் அள்ளுவதற்காக வி.வி. மினரல்ஸ் நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்ட இடங்களில் சட்டவிரோதமாக மணல் வெட்டி எடுக்கப்பட்டு கடத்தப்படுவதாகவும், இதுகுறித்து சிறப்புக் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அப்போதைய தூத்துக்குடி ஆட்சியர் ஆஷிஷ்குமார் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தார். அதன்படி 08.08.2013 முதல் தூத்துக்குடி மாவட்டத்தில் தாது மணல் அள்ள தடை விதித்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, அம்மாவட்டத்தில் உள்ள தாது மணல் குவாரிகளில் ஆய்வு நடத்த அப்போதைய வருவாய்த் துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி தலைமையில் உயர்நிலைக்குழு அமைத்தும் ஆணை பிறப்பித்தார்.

அதன்படி ஆய்வு செய்த ககன்தீப்சிங் பேடி குழு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த பரிந்துரைகளின் அடிப்படையில் நெல்லை, கன்னியாக்குமரி, மதுரை மற்றும் திருச்சி மாவட்டங்களில் செயல்பட்டு வந்த 71 தனியார் குவாரிகளிலும் தாது மணல் வெட்டி எடுக்க தடை விதிக்கப்பட்டது. அந்தத் தடை இப்போது வரை நீடிக்கும் நிலையில் தான் வி.வி. மினரல்ஸ், டிரான்ஸ்வேர்ல்ட் கார்னெட் ஆகிய இரு நிறுவனங்களுக்கு சொந்தமான குவாரிகளில் மட்டும் தாது மணல் வெட்டி எடுக்க தடை நீக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, இந்த நிறுவனங்கள் தொடர்பாக ககன்தீப்சிங் பேடி குழுவின் அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் அம்சங்கள் செல்லாது என்று கூறியுள்ள நீதிமன்றம், இந்நிறுவனங்கள் மீதான குற்றச்சாற்று குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி வி.கே. சர்மா தலைமையில் புதிய குழுவை அமைத்துள்ளது. இதற்காக கூறப்பட்டுள்ள காரணம்  மிகவும் வலுவில்லாத ஒன்றாகும்.


தாது மணல் கொள்ளை குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் ககன்தீப்சிங் பேடி 1997&98 ஆம் ஆண்டில், அதாவது 18 ஆண்டுகளுக்கு முன் நெல்லை மாவட்ட துணை ஆட்சியராக பணியாற்றினார். அப்போது, அவர் மீது தேசிய மனித உரிமை ஆணையத்தில் வைகுண்டராஜன் புகார் செய்ததாகவும், அதனால் ஏற்பட்ட பகையை மனதில் கொண்டு தங்களுக்கு எதிராக அவர் அறிக்கை அளித்திருப்பதாகவும் சம்பந்தப்பட்ட இரு நிறுவனங்களும் நீதிமன்றத்தில் வாதிட்டன. அதை உயர்நீதிமன்ற நீதிபதி இராஜா ஏற்றுக்கொண்டு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார். தாது மணல் கொள்ளைக்கு தடை விதிக்கப்பட்டது பொருளாதாரம் மட்டுமின்றி தேசப்பாதுகாப்புடனும் தொடர்புடைய விஷயமாகும்.மிகச் சாதாரணமான காரணத்தை காட்டி இத்தடையை அகற்ற தமிழக அரசு அனுமதித்திருக்கக் கூடாது. தாது மணல் குவாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டதன் பின்னணியிலுள்ள காரணங்களை முன்வைத்து வலுவாக வாதாடி வைகுண்டராஜனுக்கு சொந்தமாக வி.வி. மினரல்ஸ், டிரான்ஸ்வேர்ல்ட் கார்னெட் ஆகிய நிறுவனங்களின் மனுவை தள்ளுபடி செய்ய வைத்திருக்க வேண்டும்.

ஆனால், அவ்வாறு செய்ய தமிழக அரசு தவறியது பல்வேறு ஐயங்களை ஏற்படுத்துகிறது. பேடி குழு அதன் முதல் அறிக்கையை 17.09.13 அன்று தாக்கல் செய்தது. ஆனால், அதன்பின் 2 ஆண்டுகள் ஆகியும் அந்த அறிக்கை வெளியிடப்படவில்லை. பேடி குழு அதன் இரண்டாம் கட்ட விசாரணையை முடித்து 20 மாதங்களாகியும் அதன் அறிக்கையை அரசு பெற்றுக்கொள்ளவில்லை. வி.வி. மினரல்ஸ் நிறுவனத்திற்கு சாதகமாகத் தான் தமிழக அரசு இவ்வாறு நடந்து கொள்கிறது என்ற ஐயம்  வலுவாக  நிலவி வருகிறது. வி.வி. மினரல்ஸ் நிறுவனத்திற்கும் தமிழக ஆட்சியாளர்களுக்கும் உள்ள உறவு எவ்வளவு வலுவானது என்பதை முதலமைச்சரே ஒப்புக்கொண்டிருக்கிறார். அவ்வாறு இருக்கும் போது அந்நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட தடை மிக எளிதாக நீக்கப்பட்டதற்கு காரணம் இப்பிரச்சினையில் தமிழக அரசு ஒரு சார்பாக நடந்து கொண்டது தான் என்று சந்தேகிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

இந்தியக் கடற்பகுதியிலிருந்து கடந்த 2002 முதல் 2012 வரையிலான 10 ஆண்டுகளில் கொள்ளையடிக்கப்பட்ட மோனசைட் என்ற தாதுவின் மதிப்பு மட்டும் ரூ.60 லட்சம் கோடி ஆகும். கொள்ளையடிக்கப்பட்ட மோனசைட்டின் அளவு குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது. இதில் தமிழக கடலோரப் பகுதிகளில் கொள்ளையடிக்கப்பட்ட மோனசைட்டின் மதிப்பு மட்டும் ரூ.45 லட்சம் கோடிக்கும் அதிகம் என்று மதிப்பீடுகள் கூறுகின்றன. தமிழகத்தில் 90% தாது மணல் வணிகம் வி.வி. மினரல்ஸ் குழுமத்திடம் தான் உள்ளது. இது தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்று ஆளுனரிடம் பா.ம.க. மனு அளித்துள்ளது. தாது மணல் கொள்ளைக்கு எதிராக பா.ம.க எண்ணற்ற போராட்டங்களை நடத்தியுள்ளது. இந்த நிலையில், வி.வி. மினரல்ஸ் குழுமம்  எந்த தவறும் செய்யாத அப்பாவி என்பது போன்ற தோற்றத்தை நீதிமன்றத்தின் மூலமாக ஏற்படுத்த தமிழக அரசே துணைபோயிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

தாது மணல் கொள்ளை குறித்து விசாரணை நடத்திய ககன்தீப்சிங் பேடி அப்பழுக்கற்ற அதிகாரி; எந்த சர்ச்சைக்கும் இடம் தராதவர். சுனாமி, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்பட்ட காலத்தில் அவர் ஆற்றிய பணிகள் அனைத்துத் தரப்பினராலும் பாராட்டப்பட்டன. பழி வாங்கும் உணர்ச்சியுடன்  அவர் செயல்பட்டார் என்ற குற்றச்சாற்று இதுவரை எழுந்ததில்லை. இத்தகைய சூழலில் அவர் மீது அபாண்டமாக பழி சுமத்தி தாது மணல் கொள்ளையர்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீதிமன்றம் நீக்க தமிழக அரசு அனுமதித்தது மோசமான முன்னுதாரணமாகி விடும். இதேபோன்ற பழிவாங்கல் குற்றச்சாற்றை சகாயம் மீதும் சுமத்தி கிரானைட் கொள்ளை விசாரணையையும் முடக்கிவிட முடியும்.

எனவே, சென்னை உயர்நீதிமன்றத்தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். இடைப்பட்ட காலத்தில் தாதுமணல் கொள்ளைக்கான ஆதாரங்களை வி.வி.மினரல்ஸ், டிரான்ஸ்வேர்ல்ட் ஆகிய நிறுவனங்கள் அழிக்காமல் தடுக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதாரண வழக்குகளில் எல்லாம் உச்சநீதிமன்றத்தை அணுகும் தமிழக அரசு இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யவில்லை எனில் வி.வி. மினரல்ஸ் குழுமத்துக்கு ஆதரவாக செயல்படுவதாகவே மக்கள் கருதுவர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: