Friday, April 26, 2013

வன்கொடுமை சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது-பாமக நிறுவனர் ராமதாஸ்

சென்னை : தமிழகத்தில் வன்கொடுமை சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டினார். வன்னியர் சங்க சார் பில் மாமல்லபுரத்தில் நேற்று முன்தினம் சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா நடந்தது. இதற்கு வன்னியர் சங்க தலைவர் ஜெ.குரு தலைமை தாங்கினார். பாமக மாநில துணை பொதுச்செயலாளர் திருக்கச்சூர் ஆறுமுகம் வரவேற்று பேசினார். இதில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:

இளைஞர்களை கட்டுப்பாட்டுடன் வழிநடத்தும் கட்சி பாமகதான். போதை, லாட்டரி, சினிமா ஆகியவற்றில் இருந்து இளைஞர்களை மீட்க போராடி வருகிறோம்.
வன்கொடுமை தடுப்பு சட்டம் தமிழகத்தில் தவறாக பயன்படுத்தப்படுகிறது. ஒரேயொரு சமுதாயத்தால் மற்ற அனைத்து சமுதாயங்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நாங்கள் எதிரிகள் அல்ல. நல்லிணக்கத்தோடு வாழவே விரும்புகிறோம். ஆனால், இந்த நிலை ஏற்பட காவல்துறைதான் காரணம். எனவே, நீங்கள் நடவடிக்கை எடுங்கள். இல்லையென்றால் எங்களை பாதுகாத்து கொள்ள நாங்களே நடவடிக்கை எடுப்போம். எங்களால் முடியாதது ஒன்றுமில்லை. காவல்துறை ஏன் அவர்களை பார்த்து பயப்படுகிறது.

கலவரம் இல்லாத சமூக நல்லிணக்கத்துடன் வாழக்கூடிய திட்டங்களை வகுத்து அனைத்து சமுதாய தலைவர்களையும் ஒருங்கிணைத்து 32 மாவட்டங்களில் கூட்டம் போட்டு பேசி வருகிறோம். இதற்கு காவல்துறை தடை விதிக்கிறது. என் வீட்டு பெண்ணுக்கு யார் மருமகனாக வரவேண்டும் என்பதை நான்தான் முடிவு செய்யவேண்டும். அந்த பிரச்னையை முன்வைத்து அனைத்து மாவட்ட தலைநகர்களில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். எங்களை இனி தடுக்க முடியாது. நாங்கள் பொறுத்தது போதும்.

இவ்வாறு ராமதாஸ் பேசினார். அன்புமணி பேசுகையில், ‘‘2016ல் பாமக ஆட்சிக்கு வந்தால் இலவச கல்வி, இலவச மருத்துவம், விவசாயிகளுக்கு இலவச விதைகள், உரங்கள் வழங்குவோம். எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். மதுவை ஒழிக்க இன்று யார், யாரோ நடைபயணம் செல்கின்றனர். பாமக ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு அமல்படுத்தத்தான் முதல் கையெழுத்து போடுவோம்’’ என்றார்.

தேசிய பார்வர்ட் பிளாக் கட்சி நிறுவனர் அரசகுமார், கொங்கு வேளாள கவுண்டர் தலைவர் ராஜ்குமார், நாடார் இளைஞர் பேரவை என்ஆர்.தனபால் உள்பட 20க்கு மேற்பட்ட சமுதாய தலைவர்கள் பேசினர். பாமக தலைவர் ஜிகே.மணி, மாநில துணை தலைவர் அம்பத்தூர் கேஎன்.சேகர், முன்னாள் மத்திய அமைச்சர் ஏகே.மூர்த்தி, ஏ.வேலு, மாவட்ட செயலாளர் வாசு, திருப்போரூர் தெற்கு ஒன்றிய செயலாளர் தட்சிணாமூர்த்தி, வடக்கு ஒன்றிய செயலாளர் ஏழுமலை, ஒன்றிய நிர்வாகிகள் காரணை தனுசு, பனங்காட்டு பாக்கம் அருண்குமார் கலந்துகொண்டனர்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: