Thursday, April 12, 2012

உலக அளவில் தோல்வியடைந்த மோனோ இரயில் திட்டத்தை கைவிட வேண்டும்: ராமதாஸ்

உலக அளவில் தோல்வியடைந்த மோனோ இரயில் திட்டத்தை கைவிட்டு மெட்ரோ இரயிலை விரிவுப்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் 12.04.2012 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,


உலக அளவில் தோல்வியடைந்த மோனோ இரயில் திட்டத்தை சென்னை மாநகரில் செயல்படுத்தக்கூடாது என்று பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.


சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ இரயில் திட்டப் பணிகளை நேற்று ஆய்வு செய்த தில்லி மெட்ரோ இரயில் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஸ்ரீதரனும் இதே கருத்தை தெரிவித்திருக்கிறார்.


60 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகையை கொண்ட சென்னை மாநகரின் போக்குவரத்து தேவையை நிறைவேற்ற மெட்ரோ இரயில் திட்டம்தான் சிறந்தது என்றும் மோனோ இரயில் திட்டம் சென்னை மாநகருக்கு ஏற்றதல்ல என்றும் ஆதாரங்களுடன் ஸ்ரீதரன் விளக்கியுள்ளார்.


கடந்த 2001ஆம் ஆண்டில் ஆட்சிப் பொறுப்பேற்றதுமே சென்னையில் மோனோ இரயில் திட்டத்தை செயல்படுத்த முதலமைச்சர் ஜெயலலிதா முயற்சி செய்தார். ஆனால் பாமக தொடர்ந்த வழக்கு காரணமாக அத்திட்டம் கைவிடப்பட்டது.


அப்போது கைவிடப்பட்ட திட்டத்தை மீண்டும் செயல்படுத்த தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஆனால் வெற்றிப் பெறுவதற்கு வாய்ப்பில்லாத இத்திட்டத்தை செயல்படுத்த எந்த நிறுவனமும் முன்வரவில்லை. இதுவரை இரண்டு முறை ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டும் திட்டத்தை செயல்படுததுவற்கான நிறுவனத்தை தமிழக அரசால் தேர்வு செய்ய முடியவில்லை.


சென்னை நகரில் 4 பாதைகளில் மோனோ இரயில் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், வண்டலூரிலிருந்து புழல் வரை 54 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்படவிருந்த மோனோ இரயில் பாதை பொருளாதார அடிப்படையில் சாத்தியமற்றது என்பதை உணர்ந்து அத்திட்டத்தை தமிழக அரசு கைவிட்டுள்ளது.


மற்ற பாதைகளும் பொருளாதார அடிப்படையில் சாத்தியமற்றவை என்பது தமிழக அரசுக்கு தெரியும் என்றபோதிலும், இதை ஒரு கவுரவப் பிரச்சனையாக எடுத்துக்கொண்டு எப்படியும் செயல்படுத்திவிட வேண்டும் என்பதில் தமிழக அரசு தீவிரமாக உள்ளது.


தமிழக அரசு உணர வேண்டும்


பயனில்லாத மோனோ இரயில் திட்டத்தை செயல்படுத்துவதால் பொருளாதார இழப்புதான் ஏற்படுமே தவிர, சென்னையில் போக்குவரத்து நெரிசல் சற்றும் குறையாது என்பதை தமிழக அரசு உணர வேண்டும்.


மோனோ இரயில்களை மெட்ரோ இரயில் திட்டத்திற்கான இணைப்பு சேவையாக நடத்தலாமே தவிர, அதையே முதண்மை போக்குவரத்து சேவையாக நடத்த முடியாது. இதை உணர்ந்து கொண்டு கவுரவம் பார்க்காமல் மோனோ இரயில் திட்டத்தை கைவிட்டு, மெட்ரோ இரயில் திட்டம் விரிவுப்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.


மெட்ரோ இரயில் திட்டத்தின் முதல் கட்டப் பணிகள் அடுத்த ஆண்டு இறுதிக்குள் முடிவடைந்து சேவை தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தக்கட்ட மெட்ரோ இரயில் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்ய குறைந்தது 12 முதல் 18 மாதங்கள் தேவை.


எனவே முதல் கட்ட பணிகள் முடிவடைந்ததும், இரண்டாம் கட்ட மெட்ரோ இரயில் திட்டப் பணிகளை தொடங்குவதற்கு வசதியாக அதற்கான ஆய்வுப் பணிகளை இப்போதே தொடங்க தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: