Sunday, January 24, 2010

பென்னாகரம் இடைத் தேர்தலை தள்ளிப் போட சதி - ராமதாஸ்

சென்னை: தேர்தலில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயத்தில் இருக்கும் திமுக, பென்னாகரம் இடைத் தேர்தலை தள்ளிப் போட முயற்சித்து வருவதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

2006 தேர்தலுக்கு பிறகு தி.மு.க. தலைமையிலான ஆட்சி அமைய பா.ம.க. ஆதரவு அளித்தது. இன்று வரை நாங்கள் கொடுத்த ஆதரவு கடிதத்தில் உறுதியாக இருக்கிறோம். எந்த மாற்றமும் இல்லை. ஆனால் தி.மு.க. தான் கூட்டணி தர்மத்தை மீறி தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாழ் யூனியன் தலைவரை நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து தோற்கடித்துள்ளார்கள்.

பென்னாகரம் தொகுதியில் பா.ம.க. வெற்றி பெறுவது உறுதி. தி.மு.க.வுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. எனவே தான் மே மாதம் தேர்தலை தள்ளி வைக்க முயற்சிப்பதாக கூறப்படுகிறது. நாங்கள் அடுத்த மாதம் தேர்தலை நடத்த வலியுறுத்தி உள்ளோம்.

நளினி விடுதலை விவகாரத்தில் அரசின் மரபுகளையும், விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். நளினியை போலவே வீரப்பனின் அண்ணன் மாதையன் 22 வருடங்களாக எந்தவித விசாரணையும் இல்லாமல் சிறையில் இருக்கிறார்.

மனிதாபிமான அடிப்படையில் நளினியை விடுதலை செய்வதில் தவறில்லை.

நாட்டில் நடக்கும் மிகப்பெரிய பகல் கொள்ளையாக கல்வி வணிக கொள்ளை நடந்து வருகிறது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியிலும், இப்போதைய தி.மு.க. ஆட்சியிலும் கல்வி வியாபாரத்தை தடுப்பதற்காக பா.ம.க. தொடர்ந்து போராடி வருகிறது.

இந்தியாவில் உள்ள 126 நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் 44 பல்கலைக்கழகங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 28 பல்கலைக்கழகங்களில் 16 நிகர்நிலைப்பல்கலைக் கழகங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நிகர்நிலை பல்கலைக் கழகங்களில் பெரும்பாலானவை அரசியல்வாதிகளால் நடத்தப்படுகிறது. இந்த பல்கலைக்கழகங்களை நடத்துபவர்களுக்கு பெரிய அந்தஸ்தும் கவுரவமும் கிடைக்கிறது.

நிகர்நிலை பல்கலைக் கழக வழக்கில் தேவைப்படும் பட்சத்தில் அரசு தன்னையும் ஒரு தரப்பாக இணைத்துக் கொள்ளும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

மாநில அரசு தனது பொறுப்பை தட்டிக் கழிக்க பார்க்கிறது. யாருக்கும் கட்டுப்படாமல் செயல்படுகிறது. கல்வி நிர்வாகத்தில் யாரும் தலையிட முடியாதது, அரசின் நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண்ணை மதிக்காதது, வரை முறை இல்லாமல் மாணவர்களை சேர்ப்பது உள்ளிட்ட காரணங்களால் கட்டுப்பாடற்ற அதிகாரத்துடனும், சுதந்திரத்துடனும் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த பல்கலைக்கழகங்களை அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும் என்றார் ராமதாஸ்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: