Tuesday, November 24, 2009

பச்சையாக பணம் கொடுகிறார்கள்: இடைத்தேர்தல் ஒரு தமாஷ்- ராமதாஸ்

திருவண்ணாமலை: இடைத் தேர்தலில் பச்சையாக பணம் கொடுக்கிறார்கள். எனவே இடைத் தேர்தலை நாங்கள் தமாஷாகத்தான் பார்க்கிறோம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

கடந்த 3 ஆண்டுகளில் 8 இடைத்தேர்தல்கள் நடந்துள்ளன. தற்போது வந்தவாசி, திருச்செந்தூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை நடந்த இடைத்தேர்தல்கள் எப்படி நடந்தது என்பதை பார்க்க வேண்டும்.

வந்தவாசி, திருச்செந்தூர் தொகுதி இடைத்தேர்தல் எந்தவித புகாரும், எந்தவித குற்றச்சாட்டும் இன்றி சுதந்திரமாக நடக்கும் என்று முதல்வர் அறிவிக்க வேண்டும்.

இந்த தொகுதிகளில் வெளியூர் ஆட்கள் தங்கமாட்டார்கள், வெளி மாவட்ட அமைச்சர்கள் வரமாட்டார்கள், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படமாட்டாது என்று முதல்வர் உத்தரவாதம் கொடுக்க வேண்டும்.

அப்படி உத்தரவாதம் கொடுத்தால் இடைத்தேர்தலில் பா.ம.க. போட்டியிடும். பணம் கொடுத்து ஓட்டு வாங்குவது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. எனவே முதல்வர், அனைத்து அரசியல் கட்சிகளையும் அழைத்து எந்த கட்சியும் ஓட்டுக்கு ஒரு பைசாக்கூட கொடுக்கக் கூடாது என்ற ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும்.

ஓட்டுக்கு பணம் கொடுப்பதால் மக்கள் அடிக்கடி இடைத் தேர்தலை எதிர்பார்க்கின்றனர். இந்த சூழ்நிலையை மாற்ற வேண்டும். திருமங்கலம் இடை தேர்தலுக்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுப்பது வெட்டவெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இடைத்தேர்தலை நாங்கள் தமாஷாகத்தான் நினைக்கிறோம். இடைத்தேர்தலே கூடாது என்பதுதான் பாமகவின் கருத்து. ஆளும் கட்சி நபர் ஒருவரையே நியமித்துக் கொள்ளலாம். அரசியலில் சினிமாத்தனமும், சினிமாவில் அரசியலும் வேரூன்றிவிட்டது.

2011ம் ஆண்டு நடைபெற உள்ள மக்கள் தொகை கணக் கெடுப்பை சாதி வாரியாக நடத்தவேண்டும் என்று பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

அன்புமணி மத்திய அமைச்சராக இருந்த போது 178 எம்.பிக்களிடம் கையெழுத்து வாங்கி மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலிடம் கொடுத்தார். டெல்லியில் நான் கருத்தரங்கமும் நடத்தி இருக்கிறேன். பாமக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தது.

தமிழ்நாடு, இடஒதுக்கீட்டின் பிறப்பிடம், தாய்வீடு என்று சொல்லப்படுகிறது. எனவே மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடுதான் ஓங்கி குரல் கொடுக்க வேண்டும். ஆனால் மற்ற மாநிலங்கள் குரல் கொடுத்து அதற்கான நடவடிக்கையும் எடுத்து வருகிறது. 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரியாக எடுப்பதற்கு தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும், பொறுப்பேற்க வேண்டும்.

முல்லை பெரியாறு அணை வழக்கு 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடக்கத்தில் இருந்து ஆரம்பிக்கிறது. தீர்ப்பு வரப்போகிறது என்று இருக்கும்போது 3 நீதிபதிகளை கொண்ட பெஞ்ச் விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் விசாரணை தொடங்க பல வருடம் ஆகும். இந்த காலதாமதத்திற்கு முழுக்க முழுக்க தமிழ்நாடு முதல்வர்தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றார் ராமதாஸ்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: