Sunday, October 4, 2009

அதிமுக தொடர்ந்த வழக்கால் கோபம் - கூட்டணியை முறித்தது பாமக!

தைலாபுரம்: கடந்த லோக்சபா தேர்தலின்போது, பொதுக்குழுவில் வாக்கெடுப்பு நடத்தி அதிமுகவுடன் கூட்டணி அமைத்த பாமக, தற்போது அக் கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கை தடுத்து நிறுத்த ஜெயலலிதா தவறியதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக பாமக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தெரிவிக்கிறது.

கடந்த லோக்சபா தேர்தலின்போது திமுக கூட்டணியில் சேருவதா, அதிமுகவுடன் புதுக் கூட்டணி அமைப்பதா என்ற குழப்பத்தில் சிக்கித் தவித்தது பாமக. இதையடுத்து கூட்டப்பட்ட பொதுக்குழுவில், வாக்கெடுப்பு நடத்தினார் டாக்டர் ராமதாஸ். அதில் பெருவாரியான ஆதரவு அதிமுகவுடன் சேர வேண்டும் என்று இருந்ததால் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதாக அறிவித்தார்.

அப்போதே அதிமுகவுடன் சேருவது குறித்து டாக்டர் அன்புமணி உள்ளிட்ட சில தலைவர்கள் அதிருப்தி தெரிவித்ததாக தெரிகிறது. இருந்தாலும் வம்படியாக அதிமுகவுடன் கூட்டணி வைத்தார் டாக்டர் ராமதாஸ்.

லோக்சபா தேர்தலில் பெரும் தோல்வியைச் சந்தித்தது பாமக. தங்களது கோட்டை என்று அது கூறி வந்த தொகுதிகளிலேயே மோசமான தோல்வியைத் தழுவியதால், பாமகவின் அஸ்திவாரம் ஆடிப் போய் காணப்படுகிறது.

லோக்சபா தேர்தல் தோல்வியோடு ஜெயலலிதா கொடநாடு எஸ்டேட்டுக்குப் போய் விட்டார். தோல்விக்கான காரணம் என்ன என்பது குறித்து தனது கட்சித் தலைவர்களுடன் மட்டும் ஆலோசனை (அது கூட முழுமையாக இல்லை) நடத்திய அவர், கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

மேலும், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சிலர்-ராமதாஸ் உள்பட, ஜெயலலிதாவை சந்திக்க விரும்பியும் கூட அவர்களுக்கு அப்பாயின்ட்மென்ட் தரப்படவில்லை என்று கூறப்பட்டது. இதனால் டாக்டர் ராமதாஸ் அப்செட்டாகவே இருந்தார்.

இருந்தாலும் முன்பு போல தடாலடியாக கூட்டணியை முறித்துக் கொண்டு வெளியேற முடியாத நிலையில் கட்சி இருப்பதால், பொறுமை காத்து வந்தார்.

இந்த நிலையில் இன்று திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் பாமகவின் நிர்வாகக் குழுக் கூட்டம் கூட்டப்பட்டது.

இந்தக் கூட்டம் குறித்து நேற்று கருத்து தெரிவித்திருந்த டாக்டர் ராமதாஸ், இக்கூட்டத்தில் அதிமுகவுடன் கூட்டணியைத் தொடருவதா, இல்லையா என்பது குறித்து விவாதிக்கப்படும் என்று கூறியிருந்தார். இதனால் அதிமுக கூட்டணியை விட்டு பாமக விலகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

அதற்கேற்ப இன்றைய கூட்டத்தில் அதிமுகவுடனான கூட்டணியை முடித்துக் கொள்ளத் தீர்மானிக்கப்பட்டது.

அதிமுக உறவை முறித்துக் கொள்வதற்கான காரணத்தை விளக்கி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கொலை வழக்கில் ராமதாஸ் குடும்பத்தினர்...

அதில் கூறப்பட்டிருப்பதாவது...

2006ம் ஆண்டு நடந்த ஒரு கொலை வழக்கில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி ராமதாஸ், பரசுராமன் (ராமதாஸின் மருமகன்), சீனிவாசன் (சகோதரர்) மற்றும் சீனிவாசனின் பேரன் உள்ளிட்டோரின் பெயர்களை சேர்க்க வேண்டும் என்று கோரி அதிமுக முன்னாள் அமைச்சரும், முக்கியஸ்தருமான சி.வி.சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இது பொய்யான குற்றச்சாட்டு. இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிடம் பலமுறை எடுத்துக் கூறப்பட்டது. இருப்பினும் அதையும் மீறி சி.வி.சண்முகம் தனது மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

சில வாரங்களுக்கு முன்பு பாமக தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் எம்.பி. தன்ராஜ் ஆகியோர் நேரடியாக கொடநாடு சென்று அதிமுக பொதுச் செயலாளரை நேரில் சந்தித்தும் இதுகுறித்து முறையிட்டனர். அவரது கவனத்திற்குக் கொண்டு வந்தனர்.

இருப்பினும் அது வாபஸ் பெறப்படவில்லை. இந்த நிலையில் அதிமுகவைச் சேர்ந்த ஒரு முக்கியப் பிரமுகர், முன்னாள் அமைச்சரின் செயலால் அசாதாரண நிலைமை ஏற்பட்டு விட்டது. அவரது செயல் கடுமையான கண்டனத்துக்குரியதாக மாறியுள்ளது.

இதற்கு மேலும் அதிமுகவுடன் தோழமை உறவை தொடர முடியாது என்று பாமக செயற்குழு கருதுகிறது. மேலும், அந்தக் கட்சியுடன் தொடர்ந்து கூட்டணியை நீடிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் செயற்குழு கருதுகிறது.

இனியும் ஒரு நிமிடம் கூட இந்த உறவு நீடிக்கக் கூடாது என்று அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் ஒரு மனதாக கருதுகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதை பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் டாக்டர் ராமதாஸ்.

2வது முறையாக விலகிய பாமக...

அதிமுகவுடனான உறவை பாமக முறித்துக் கொள்வது இது 2வது முறையாகும். கடந்த 2006ல் நடந்த சட்டசபைத் தேர்தலின்போது திமுகவுடன் கூட்டணி வைத்து சந்தித்தார் டாக்டர் ராமதாஸ். ஆனால் போகப் போக திமுகவை கடுமையாக விமர்சித்துப் பேசி வந்ததால், கடுப்பான திமுக, பாமகவை கூட்டணியை விட்டு நீக்கியது.

இந்த நிலையில் லோக்சபா தேர்தலில் மீண்டும் திமுகவுடன் கூட்டணி வைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தார் டாக்டர் ராமதாஸ்.

பாமகவுக்கு புதுச்சேரி உள்பட ஏழு சீட்களை ஒதுக்கியது அதிமுக. ஆனால் ஏழிலும் பாமக தோல்வியைத் தழுவியது.

மதிமுக மட்டுமே பாக்கி...

ஏற்கனவே சட்டசபை இடைத் தேர்தலுடன் அதிமுகவுடனான 'நல்லுறவிலிருந்து' விலகி விட்டன இடதுசாரி கட்சிகள் இரண்டும். தற்போது பாமகவும் போய் விட்டது. இந்த நிலையில் மிஞ்சியிருப்பது மதிமுக மட்டுமே.

இதனால் அதிமுக நிலவரம் பெரும் கலவரமாகியுள்ளது.

ராமதாஸை சந்தித்த நெடுமாறன்

முன்னதாக தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், தைலாபுரம் தோட்டத்திற்குச் சென்று டாக்டர் ராமதாஸை சந்தித்துப் பேசினார்.

தஞ்சையிலிருந்து செங்கல்பட்டு வந்த அவர் வழியில் தைலாபுரம் தோட்டத்திற்குச் சென்று ராமதாஸை சந்தித்து பேசினார். இலங்கைப் பிரச்சினை தொடர்பாக அவர்கள் ஆலோசித்ததாக தெரிகிறது.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: