Tuesday, August 14, 2012

அனைத்து சமுதாய தலைவர்கள் கூட்டம்: ராமதாஸ்


பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,


தமிழக மக்களின் நலன் சம்மந்தப்பட்ட முக்கிய பிரச்சனைகளில் தமிழக அரசு தொடர்ந்து அக்கறையும், பொறுப்புமின்றி செயல்பட்டுவருகிறது. இதனால் சமுதாய உரிமைகளும், சமூக நீதியும் பறிபோகும் நிலை ஏற்பட்டிருப்பதுடன், இளைஞர் சமுதாயம் சீரழியும் ஆபத்தும் உருவாகியுள்ளது.

இந்த ஆபத்துகளை முறியடிப்பது குறித்தும், தமிழகம் எதிர்கொண்டுள்ள சவால்களை எதிர்கொள்வது குறித்தும் விவாதிப்பதற்காக மாநில அளவிலான அனைத்து சமுதாய தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் வரும் 18ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு சென்னையில் நடைபெறவுள்ளது. சென்னை தியாகராயர் நகர் தணிகாசலம் சாலையில் உள்ள ஹோட்டல் இராஜ்பேலஸ் விடுதியில் நடைபெறவிருக்கும் இந்த ஆலோசனை கூட்டத்திற்கு நான் தலைமை ஏற்கிறேன். இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு சமுதாயங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

தமிழ்நாட்டில் ஓராண்டிற்குள் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி 69 விழுக்காடு இடஒதுக்கீட்டை உறுதிசெய்யும்படி கடந்த 2010ஆம் ஆண்டில் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருந்தது. ஆனால் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தாமலேயே 69% இடஒதுக்கீடு தொடரும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பதால், அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. இதனால் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டிற்கு ஏற்பட்டுள்ள ஆபத்து குறித்தும், அதை முறியடிப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

தமிழகத்தில் நடத்தப்பட்டுவரும் சமூக, பொருளாதார சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பில் பல்வேறு குறைபாடுகள் நிலவுவதால் அதை இரத்து செய்துவிட்டு, புதிதாக சாதிவாரி கணக்கெடுப்பு மட்டும் நடத்தப்படவேண்டும் இளைஞர் சமுதாயம் சீரழிவதை தடுக்க தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளை மூடி முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்தவேண்டும் என்பன உள்ளிட்ட யோசனைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விரிவாக விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்

Monday, August 13, 2012

பா.ம.க. சார்பில் இடஒதுக்கீடு போராட்டம்: ராமதாஸ் பேச்சு



பா.ம.க. சார்பில் செப்டம்பர் 17ந் தேதி இடஒதுக்கீடு போராட்டம் நடைபெறும் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி பா.ம.க சார்பில், புதிய அரசியல் புதிய நம்பிக்கை' என்பதின் விளக்க பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் பா.ம.க. நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ், கலந்து கொண்டு பேசியதாவது:-

பா.ம.க. இனிமேல் தி.மு.க., அ.தி.மு.க.வோடு கூட்டு சேராது. தனித்தே போட்டியிடும். நாம் கூறுவது போல் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் போன்ற கட்சிகள் தனித்தே போட்டியிடுவோம் என்று கூறத்தயாரா? மது வேண்டுமா? வேண்டாமா? என்று பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.
செப்டம்பர் 17-ந்தேதி தியாகிகள் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இட ஒதுக்கீடு போராட்டம் நடைபெறும். டிசம்பர் 17-ந்தேதி மதுக்கடைகளுக்கு பூட்டு போடும், சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும். மதுராந்தகம் ஏரியை தூர் வார வேண்டும் என்று வலியுறுத்தி நானே முன்னின்று தூர் வாரும் மண்ணை தலையில் சுமந்து போராட்டத்தில் குதிப்பேன். இவ்வாறு கூறினார்.

Saturday, August 11, 2012

டாஸ்மாக் கடை முன் பாய் விரித்து படுத்து நூதன போராட்டம்: பா.ம.க. நிர்வாகி கைது






பாளையங்கோட்டை மேலப்பாளையம் சந்தை முக்கு ராஜா நகர் விலக்கு பகுதியில் பாருடன் கூடிய அரசு மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த மதுக்கடை பொது இடத்தில் இருப்பதால் பொதுமக்கள் மற்றும் மாணவ - மாணவிகளுக்கு இடையூறாக இருந்து வருவதாக கூறி, அவற்றை அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டங்களிலும் ஈடுபட்டார்கள். இந்நிலையில் ராஜாநகர் விலக்கில் உள்ள மதுக்கடையை மூடக்கோரி தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் நூதன போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி அந்த மதுக்கடையின் முன்பு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பாய் விரித்து படுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்தவரும், பா.ம.க. மாநில துணைப் பொதுச் செயலாளருமான வியனரசு தலைமை தாங்கினார். ம.தி.மு.க.வை சேர்ந்த அகஸ்டின் மற்றும் கிருஷ்ணன், மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்கள் 4 பேரையும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட மேலப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசேகரன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

Wednesday, August 8, 2012

இந்தி படிக்காத மாணவர்கள் இரண்டாம் தரமானவர்களா? ராமதாஸ் கேள்வி

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவன மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் பொதுநுழைவுத் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் அனைத்தும் தமிழ் உள்ளிட்ட பிறமாநில மொழிகளிலும் தயாரித்து வழங்கப்படவேண்டும் என பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் சார்பில் 4 நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் 45 வேளாண்மை சார்ந்த கல்வி நிறுவனங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் சேருவதற்கான அனைத்திந்திய  நுழைவுத்தேர்வுகளின் (அஐஉஉஅக்எ) வினாத்தாள்களை தமிழில் தயாரித்து வழங்கும் திட்டம் இல்லை என்று தகவல்பெறும் உரிமைச்சட்டத்தின் படி கோரப்பட்ட வினாவிற்கு இந்நிறுவனம் பதிலளித்துள்ளது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது. இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கான நுழைவுத்தேர்வுகள் கடந்த 2000மாவது ஆண்டு வரை ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்டுவந்தன. 2001ஆம் ஆண்டில் முதன்முதலாக இந்தியிலும் வினாத்தாள் அறிமுகம் செய்யப்பட்டது. இதனால் ஆங்கிலம் தெரியாத, இந்தி மொழி பேசும் மாணவர்கள் கூட இத்தேர்வுகளில் எளிதாக வெற்றிப்பெறமுடிகிறது. 2012ஆம் ஆண்டு நடைபெற்ற நுழைவுத்தேர்வுகளில் மொத்தமுள்ள 5832 இடங்களில் 1412 இடங்களை இந்தி வினாத்தாட்களை கொண்டு நுழைவுத்தேர்வு எழுதிய மாணவர்கள் பிடித்துள்ளனர்.

கோவை வேளாண் பல்கலைக்கழத்திலிருந்து 92 இடங்களும், சென்னையில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்திலிருந்து 6 இடங்களும், மத்திய தொகுப்புக்கு ஒதுக்கப்பட்டு, அனைத்திந்திய நுழைவுத்தேர்வுகளின் மூலமே  அவை நிரப்பப்படுகின்றன. ஆனால் வினாத்தாட்கள் தமிழில் வழங்கப்படுவதில்லை என்பதால் இவற்றில் ஓர் இடம் கூட தமிழகத்தை சார்ந்த மாணவர்களுக்கு கிடைக்கவில்லை என்பதுதான் வேதனை அளிக்கும் உண்மையாகும். மற்ற படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளிலும் இந்தி மொழிக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுகிறது.


இந்தியாவில் இந்தி, தமிழ் உள்ளிட்ட 9 இந்திய மொழிகள் மட்டுமே பயிற்று மொழிகளாக உள்ளன. அவ்வாறு இருக்கும்போது அனைத்திந்திய அளவில் நடைபெறும் பொதுநுழைவுத்தேர்வுகளுக்கான வினாத்தாட்களை இந்த 9 மொழிகளிலும் தேவைக்கேற்ப தயாரிக்காமல் இந்தியில் மட்டும் தயாரிப்பது மற்ற மொழி பேசும் மாணவர்களுக்கு , குறிப்பாக தமிழ் பேசும் மாணவர்களுக்கு இழைக்கப்படும் பெரும் துரோகம் ஆகும். இதன்மூலம் இந்தி படிக்காத மாணவர்களை இரண்டாம் தர மாணவர்களாக மாற்ற மத்திய அரசு முயல்கிறது.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8 இலட்சம் பேர் எழுதுகின்றனர். இவர்களில் 75 விழுக்காட்டினர், அதாவது 6 இலட்சம் பேர் தமிழ் வழியில் படித்தவர்கள் ஆவர். பொதுநுழைவுத் தேர்வுக்கான வினாத்தாட்கள் தமிழில் தயாரிக்கப்படாததால் இந்த மாணவர்களுக்கு உயர்கல்வி  வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இந்த நிலையை மாற்ற, அனைத்திந்திய அளவில் நடத்தப்படும் பொதுநுழைவுத் தேர்வுகளுக்கான வினாத்தாட்களை தமிழ் மொழியிலும் வழங்கவேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தவேண்டும்.

Monday, August 6, 2012

ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு ஆதரவானவர்களே உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்படுகிறார்கள் : ராமதாஸ்



பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ’’சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள 60 நீதிபதிகள் பணியிடங்களில் 8 இடங்கள் காலியாக உள்ளன.

மேலும் இரு நீதிபதிகள் விரைவில் ஓய்வு பெற இருப்பதால், அதனால் ஏற்படும் காலி இடங்க ளையும் சேர்த்து நிரப்புவதற்காக தகுதியுடைய 10 பேரின் பட்டியல் உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பட இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு அளவிற்கு வன்னியர்கள் உள்ளனர். மக்கள் தொகை அடிப்படையில் பார்த்தால் சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு, அதாவது 20 இடங்கள் வன்னியர் களுக்கு ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போதுள்ள நீதிபதிகளில் ஒரே ஒருவர் மட்டுமே வன்னியர் ஆவார்.

தமிழ்நாட்டில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் அந்த கட்சிக்கு ஆதரவான வழக்குறை ஞர்கள் மட்டு மே உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப் படுகிறார் கள் என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே எழுப்பப்பட்டு வருகிறது.

நீதிபதிகள் நியமனத்தில் சமுதாயத்தின் அனைத்து பிரிவினருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண் டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதன் பிறகாவது நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து சமுதாயங்களையும் சேர்ந்த தகுதியுடைய வழக்கறிஞர்களுக்கும், தலைமை நீதிபதிகளுக்கும் வாய்ப்பளிக்கப்பட வேண்டும்.

இதற்கு வசதியாக நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீட்டு முறையை அறிமுகம் செய்யவேண்டும். அதற்கு முன்பாக சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக 10 நீதிபதிகளை தேர்வு செய்யும்போது வன்னிய சமுதாயத்தை சேர்ந்த 3 பேருக்காவது வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்’’ என்று கூறப் பட்டுள்ளது.

Sunday, August 5, 2012

மதுரையைப் போல் கிருஷ்ணகிரி கிரானைட் குவாரிகளிலும் முறைகேடு நடந்துள்ளது: ராமதாஸ்


 

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் தர்மபுரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர்,    ‘’மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள கிரானைட் குவாரிகளில் ரூ. 16 ஆயிரம் கோடிக்கு முறைகேடு நடந்து இருப்பதாக மதுரை மாவட்ட முன்னாள் கலெக்டர் சகாயம் கூறி உள்ளார். அதுபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குவாரிகளில் நிறைய முறைகேடுகள் நடந்து இருக்கின்றன. இதை கண்காணித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் கிரானைட குவாரிகள், மணல் குவாரிகள், ஜல்லி குவாரிகள் ஆகியவற்றை முறைப்படுத்தி உரிய கட்டணம் வசூலித்தால் ஆண்டு ஒன்றுக்கு ரூ. 25 ஆயிரம் கோடி வரை வருமானம் வர வாய்ப்பு உள்ளது. வருமானத்துக்குத்தான் டாஸ்மாக் கடையை நடத்துகிறோம் என்று சொல்லும் அரசு குவாரிகளை முறைப்படுத்தினால் அதன் மூலம் வரும் வருமானத்தால் டாஸ்மாக் கடையை மூடி விடலாம்.


வருகிற டிசம்பர் மாதம் டாஸ்மாக் கடைகளுக்கு நிரந்தரமாக பூட்டு போடும் போராட்டத்தை நடத்த உள்ளோம். நேரமும், தேதியும் பின்னர் அறிவிக்கப்படும்.

பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து இருந்தால் மாணவ- மாணவிகள் உயிரிழப்பு சம்பவங்கள் நடந்து இருக்காது. மாணவர் உயிரிழந்தால் ஒரு லட்சம் நிதி கொடுப்பது போதாது. இந்த நிதி உதவியை உயர்த்த வேண்டும்.

ஓகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை முடக்க காநாடக அரசு சதி செய்து வருகிறது.

இந்த சதியை முறியடிக்க தமிழக அரசு முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டும். சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு என்ற எந்த நடவடிக்கையாக இருந்தாலும் அதை தமிழக அரசு விரைவாக எடுக்க வேண்டும்’’ என்று  கூறினார்.

Wednesday, August 1, 2012

ரெட்டி சகோதரர்களை மிஞ்சிய மதுரை கிரானைட் ஊழல்: சிபிஐ விசாரணை கோரும் ராமதாஸ்

சென்னை: கர்நாடகத்தில் ரெட்டி சகோதரர்களின் இரும்பு தாது சுரங்க ஊழலை மிஞ்சும் அளவிற்கு மதுரையில் கிரானைட் ஊழல் நடைபெற்று இருக்கக்கூடும் என்று தெரிகிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் சட்டவிரோதமாக குவாரி அமைத்து கிரானைட் கற்கள் வெட்டி கடத்தப்பட்டதில் அரசுக்கு சுமார் ரூ. 16,338 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக மதுரை மாவட்ட கலெக்டராக இருந்த சகாயம் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருக்கிறது.
மதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரி அமைக்க உரிமம் பெற்றவர்கள் ஆளும் கட்சியினரையும், அதிகாரிகளையும் அனைத்து வகைகளிலும் குளிர்வித்து, அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக கிரானைட் கற்களை வெட்டி கடத்துவதாக நீண்ட நாட்களாகவே குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன.
ஆனால் தற்போது அரசு புறம்போக்கு நிலங்கள், பொது நடைபாதைகள், தலித்துகளுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்கள் போன்றவற்றையும் கிரானைட் குவாரி உரிமையாளர்கள் ஆக்கிரமித்து கிரானைட் கற்களை வெட்டி எடுத்திருக்கிறார்கள் என்றும், இதைத் தடுக்க வேண்டிய வருவாய்த்துறை, கனிம வளத்துறை அதிகாரிகளே பயந்துக் கொண்டும், பணம் பெற்றுக்கொண்டும் இந்த கடத்தலுக்கு துணை போயிருக்கிறார்கள் என்றும் மாவட்ட கலெக்டரே குற்றம் சாட்டியிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
மாவட்ட கலெக்டர் வெளியிட்ட தகவல்களை வைத்து பார்க்கும்போது ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பெரும் அரசியல் புயலை ஏற்படுத்திய ரெட்டி சகோதரர்களின் இரும்பு தாது சுரங்க ஊழலை மிஞ்சும் அளவிற்கு கிரானைட் ஊழல் நடைபெற்று இருக்கக்கூடும் என்று தெரிகிறது.
முந்தைய ஆட்சியில் மேலூர் பகுதியில் நடைபெறும் கிரானைட் ஊழல் பற்றி அப்போதைய எதிர்க்கட்சி தலைவரான ஜெயலலிதா பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார்.
சட்டப்பேரவை தேர்தலின்போதும் கிரானைட் ஊழலை முன்வைத்து பிரசாரம் செய்தார். அதிமுக அரசு பதவி யேற்ற பின்னர் மேலூர் கிரானைட் ஊழல் தொடர்பாக திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை வெளியிட்ட அப்போதைய தொழில்துறை அமைச்சர், இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருந்தார்.
ஆனால் அதன் பின்னர் இந்த பிரச்சனை கிணற்றில் போட்ட கல்லாவிட்டதன் மர்மம் என்னவென்று தெரியவில்லை. மாநிலத்தின் நிதி நெருக்கடியை போக்குவதற்காக மக்கள் தலையில் ரூ. 20,000 கோடி வரிச்சுமை, குடும்பங்களை சீரழிக்கும் மது விற்பனை போன்ற செயல்களில் ஈடுபட்டு வரும் தமிழக அரசு, கண்ணுக்கு தெரிந்து நடைபெறும் கிரானைட் ஊழலையும், அதனால் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பையும் கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.
இந்த ஊழலை தடுத்து அரசின் வருவாயை பெருக்குவதற்காக அனைத்து குவாரிகளிலும் தமிழ்நாடு கனிமவள நிறுவனம் மூலமாக கிரானைட் கற்களை வெட்டியெடுத்து விற்பனை செய்ய வேண்டும்.
அரசுக்கு ரூ. 16,338 கோடி வருவாய் இழப்பை ஏற்படுத்திய கிரானைட் ஊழலில் உயர் அதிகாரிகளுக்கும், பெரும் புள்ளிகளுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுவதால், இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: